Pages

Sunday, March 17, 2013

ரமணர் -1 அர்த்தநாரீ



ரமணர் குறித்த சில புத்தகங்கள் படித்து வருகிறேன். ஆச்சரியமான சுவையான தகவல்கள் கிடைக்கின்றன. மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் வாழ்ந்து காட்டி இருக்கிறார். ஆங்காங்கே சில மிகவும் பிடித்த விஷயங்களை பதிவாக்கப்போகிறேன். புத்தகங்களை வாங்கிப்படியுங்கள்.

ஒரு நாள் ஜகதீஸ்வர சாஸ்த்ரி என்பவர் பகவானுடன் அருணாசல மகிமை பற்றி பேசிக்கொண்டு இருந்த போது "சிவன் பார்வதிக்கு பாதி சரீரத்தை எதற்காக கொடுத்தார்” என்று கேட்க பகவானும் உற்சாகமாக கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஒரு முறை சிவன் கைலாயத்தில் சுகமாக உட்கார்ந்து இருந்த போது பார்வதி விளையாட்டாக அவர் பின்னாலிருந்து வந்து அவர் கண்களை பொத்தினாள். உடனே ஈஸ்வரனின் இரு கண்களான சூரிய சந்திரர்கள் ஒளி இழக்கவே லோகங்கள் எல்லாம் இருளில் மூழ்கின. ப்ரஜைகள் அல்லற்பட்டார்கள். தேவர்கள் "ஹே ஈஸ்வரா, இதென்ன அகால ப்ரலயம்” என்று முறையிட்டார்கள். உடனே சிவன் சமயோசிதமாக நெற்றிக்கண்ணை திறந்து ப்ரகாசம் உண்டாக்கி ப்ரஜைகளின் கஷ்டத்தை நீக்கினார். பார்வதி பயந்து போய் கைகளை அகற்றினாள். பரமேஸ்வரர் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் தேவி நடுங்கினாள். ஸ்வாமி நயத்துடன், “தேவீ, இது நமக்கு வேடிக்கையே தவிர என் கண்களை மூடினதால் ப்ரஜைகள் எவ்வளவு தவித்துப்போனார்கள் பார்த்தாயா? நமக்கு ஒரு க்ஷணம்தானே என்றாலும் ப்ரஜைகளுக்கு ஒரு யுகமல்லவா? இது என்ன காரியம்?” என்று பிரியத்துடன் கடிந்து கொண்டார். 

பரமேஸ்வரனின் அந்த நயமான கண்டனத்தை கேட்ட பார்வதி தன் அபராதத்தை உணர்ந்து வெட்கி "இந்த பாபத்துக்கு பரிஹாரமாக தவம் செய்ய வேண்டும். அனுமதி கொடுங்கள்” என்று வேண்டிக்கொண்டாள். “நீ ஜகன்மாதா. உனக்கு பாபமேதுமில்லை. நீ தவம் செய்யத்தேவையில்லை” என்றார் பரமேஸ்வரன். அவளுக்கு த்ருப்தி ஏற்படவில்லை. உலகத்துக்கு வழி காட்டியாய் நான் தவம் செய்கிறேன் என்று ப்ரார்த்தித்து அனுமதி பெற்று தவம் செய்ய தென் முகமாக புறப்பட்டாள்.

அப்போது காசியில் மழையில்லாமல் பஞ்சமேற்பட்டு ஜனங்கள் உணவின்றி கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார்கள். அந்த வழியே வந்த தேவி அதைப்பார்த்து கருணை கொண்டு, நினைத்த மாத்திரத்தில் ஒரு மாளிகையை எழுப்பி, அன்ன பூர்ணா என்ற பெயரில் அங்கே அக்ஷய பாத்திரத்துடன் ஆயிரக்கணக்கில் ஜனங்களுக்கு அன்ன தானம் செய்து கொண்டு இருந்தாள். சில நாட்களிலேயே அவர் கீர்த்தி எல்லா திக்குகளிலும் பரவிவிட்டது. காசி ராஜா தன் பண்டாரத்தில் எல்லா தான்யங்களும் தீர்ந்து போன நிலையில் தவித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெண் இப்படி அன்ன தானம் செய்வது தெரிய வந்தது. நம்மால் முடியாதது எப்படி இந்த பெண்ணால் சாத்தியமாகிறது என்றூ ஆச்சரியப்பட்டு, சோதித்து பார்க்கலாம் என்று ஒரு ஆளை அனுப்பி கொஞ்சம் அரிசி கடனாகத்தர வேண்டும் என்று கேட்கச்சொன்னார். தான்யம் கொடுப்பதற்கில்லை; வந்தால் அன்னமிடுகிறேண் என்று பதில் வந்தது.

சரி நாமே போய் பார்க்கலாம் என்று மந்திரிமார்களுடன் மாறு வேஷத்தில் போய் அவள் மாளிகையில், பந்தியில் உட்கார்ந்தார்கள். எவ்வளவு பறிமாறினாலும் குறையாமல் வளர்ந்துகொண்டிருந்த போஜன வகைகளை பார்த்த ராஜா, விவேகியானதால் இது மனிதர்களால் முடிகிற காரியமில்லை; இவள் ஒரு தேவதையே என்று தீர்மானித்தான். சாப்பாடு முடிந்ததும் அவளை பக்தியுடன் நமஸ்கரித்து, "தாயே நீ எங்களுடனேயே இருந்து எங்களை கடை தேர்த்த வேண்டும்" என்று பிரார்த்தித்தான். அம்பாள் அவனது பக்தியை கண்டு மகிழ்ந்து, “அப்பனே உன் பக்திக்கு மகிழ்ந்தேன். நான் இத்தனை நாட்கள் உன் நாட்டில் வசித்ததால் மழை இல்லாத குறை தீர்ந்து போகும். இப்போது மழையும் பெய்யும். இனி இங்கு பஞ்சமிராது. நான் இனியும் இங்கு தாமதிக்க முடியாது. தென் திசை நோக்கிப்போய் தவம் செய்ய வேண்டும். நீ சுகமாக ஜனங்களை பரிபாலித்து வா” என்றாள். ராஜா "எங்கள் பூஜையை ஏற்கத்தக்கவாறு இங்கேயும் அம்பாள் சாந்நித்தியம் கொள்ள வேண்டும்" என்று வேண்டினான். தேவியும் சரி என அனுக்ரஹித்து விட்டுப்போனாள். உடனே மழை பெய்து தேசம் சுபிட்சமானது. அம்பாள் தங்கி இருந்த இடமே இப்போழுதும் அன்னபூர்ணாலயம் என்று சொல்லப்படுகிறது....
(தொடரும்)
 

3 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

சகலம் ரமணார்ப்பணமஸ்து...!

Jayashree said...

ம..அப்புறம் ..?
காமாக்ஷியா அருணாசலத்தில் தவம் பண்ணி பாதியானது வேறையா??

அருணா அசலா = சக்தி சிவம் = அத்வைத BHAவம்= ரமணம்:)) = 8!!!

திவாண்ணா said...

ஸ்வாமி, நன்றி!
ஜெயஸ்ரீக்கா, அடுத்த பகுதியும் போட்டாச்சு!