Pages

Monday, June 24, 2013

ஐயமிட்டு உண்


ஐயமிட்டு உண்:
கடேசியா ஏற்பது இகழ்ச்சி ன்னு பதிவு போட்டேனா? அப்பவே இன்னொரு வரியும் நினைவுக்கு வந்தது. ஐயமிட்டு உண். என் பாட்டி சின்ன வயசுல ஆத்திச்சூடி முதல் 12 ஐயும் வெச்சு கதை சொல்லுவாங்க. போகிற போக்கில அதையும் சொல்லிடறேன். பையன் பாடம் படிச்சுகிட்டு இருக்கான். வேறென்ன ஆத்திச்சூடிதான். அப்ப யாசகம் கேட்டுகிட்டு ஒத்தர் வராரு. வீட்டில இருக்கற பையனோட அப்பா அவர போன்னு விரட்டறாரு.
பையன் படிக்கிறான்.
"அறம் செய்ய விரும்பு.”
அப்பாவுக்கு கோபம் வருது. "ஏன்டா நீ எனக்கு புத்தி சொல்லறியா?”
"ஆறுவது சினம்.”
அப்பா யாசகன்கிட்ட: "இப்ப காசு இல்ல, போய் வா!”
"இயல்வது கரவேல்.”
சரின்னு காசு போட எடுக்கறார். "ஏன்னா நமக்கே கஷ்டமா இருக்கு" ன்னு அம்மா தடுக்கிறாங்க.
"ஈவது விலக்கேல்.”
அம்மா: "வீட்ல சல்லி காசு கூட இல்லே. கொஞ்சம் சாதம் இருக்கு, போடலாம்.”
"உடையது விளம்பேல்.”
சரி, இங்கே ஒண்ணும் தேறாதுன்னு யாசகன் யாசிக்கிறதை விட்டு நகரப்பார்க்கிறார்.
"ஊக்கமது கைவிடேல்.”
"என்னடா பாடம் சொல்லித்தராங்க உனக்கு"
"எண்ணெழுத்து இகழேல்.”
"சரி, சரி இந்தா" என்று அப்பா காசு கொடுக்கிறார். யாசகர் வாங்கிக் கொள்ளப் போகிறார்.
"ஏற்பது இகழ்ச்சி!”
யாசகர் பின் வாங்கிவிடுகிறார்.
அம்மா "சாப்பாடு ரெடி" என்கிறார். அப்பா சாப்பிட உள்ளே போகிறார்.
"ஐயமிட்டு உண்.”
அம்மா கொஞ்சம் சோறு எடுத்துப்போய் கொடுக்கபோகிறார். யாசகர் வாங்குவது வேண்டாமா என்று தயங்குகிறார்.
"ஒப்புரவொழுகு"
போதும்டா நீ படிச்சது
"ஓதுவது ஒழியேல்"
"இந்த பிள்ளை என்னமாத்தான் படிக்குது" என்கிறாள் வேலைக்காரி.
ஔவியம் பேசேல்.
யாசகர் கடைசியாக வாங்கிக்கொள்ள கொடுக்கும்போது அம்மா குறைவாக கொடுக்கிறார் .
"அஃக்கம் சுருக்கு.”
பாட்டி சொல்லும் விதத்தை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியாது.
[உங்களுக்கு ஆத்திச்சூடியோட பொருள் தெரியணும்ன்னா இங்கே போய் படிக்கலாம்.

இந்த ஐயமிட்டு உண் என்கிற தலைப்பிலநாஞ்சில் நாடன் ஒரு அருமையான கதை எழுதி இருக்காரு. கொடுக்க ரெடியா இருந்தா மட்டும் போதாது. அதுக்கும் கொடுத்து வெச்சிருக்கணும். http://tinyurl.com/lg2ku9u

சரி சரி இங்கே ஏன் இதை இழுத்தேன்னா, இன்னைய டாபிக் ஐயமிட்டு உண். அருமையான கதை ஒண்ணையும் இங்கே படிக்கலாம்.
அதாவது மத்தவங்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டு நீ சாப்பிடு என்கிறாள் ஔவை பாட்டி.
க்ருஹஸ்தர்களுக்கு தர்ம சாஸ்திரம் வித்திச்ச கடமைகளில மனுஷ யக்ஞம் ஒண்ணு. அதிதி போஜனம்.
மத்த தானம் போல இல்லை இது.
யாரும் பணம் கொடுத்தா இன்னும் வந்திருக்கலாமேன்னு வாங்கறவர் நினைக்கலாம். வேறு பொருள் எதாவது கொடுத்தாலும் இன்னும் இன்னும் ன்னு மனசு ஏங்கிகிட்டுத்தான் இருக்கும். ஆனா யாரும் சோறு போட்டாங்கன்னா ஒரு அளவுக்கு மேலே சாப்பிடவே முடியாது. பாயசம் இருந்திருக்கலாம் என்கிற ரீதியில வேணா ஆசை இன்னும் இருக்கலாம். ஆனா போதலைன்னு நினைக்கவே முடியாது.
இந்த வரிசையில் ஏற்பது இகழ்ச்சின்னு சொன்ன பாட்டி அடுத்த வரியிலேயே ஐயமிட்டு உண் ன்னு சொல்லி இருக்கா. நெடுந்தூரம் பயணம் செய்பவருக்கு அந்த காலத்தில ஓட்டல் எல்லாம் இல்லை. எல்லா இடங்களிலேயும் சமைத்து சாப்பிடவும் எல்லாராலும் முடியாது. இதுக்காக இப்படி ஒரு ஏற்பாடு ஆரம்பித்து இருக்கலாம். எப்படி இருந்தாலும் அதிதிக்கு வரவேற்று பூஜை செய்து உணவளிக்கறதை ஒரு மிகப்பெரிய தர்மமா விதிச்சு இருக்காங்க. பால் கறக்கற நேரம் வாசலில் காத்திருந்து யாரும் வரலைன்னா இன்னிக்கு பாக்கியம் இல்லைன்னு நொந்து கொண்டு பிறகே சாப்பிட போகணும்.
மத்த தானம் செய்கிறப்ப நாள், வாங்கிக்கொள்கிற ஆள் ன்னு தகுதி பாக்கிற சமாசாரம் இருக்கும். ஆனா இங்கே அப்படி இல்லை. பசித்த ஆசாமி, சாப்பிடும் நேரத்துக்கு வந்தா அதுவே தகுதி!
இதே போலவே யாரும் பிக்ஷை கேட்க வந்தாலும் கொடுக்கணும். படிக்கிற பிரம்மசாரிக்கும், அக்னியில் எந்த காரியமும் செய்யக்கூடாத சன்யாசிக்கும் சமைத்த உணவும், மற்றவர்களுக்கு அரிசியும் கொடுப்பது வழக்கம். வயித்துப்பாட்டை கவனிச்சுட்டா பெரும்பாலும் வேறு தவறான வழிக்கு மனுஷன் போக மாட்டான்ன்னு நினைச்சிருப்பாங்க போலிருக்கு.
ஆக பாட்டி சொன்ன ஐயமிட்டு உண் உணவுக்குத்தான். வேற பொருளுக்கு இல்லை.


Friday, June 21, 2013

கோ.எ- ஏற்பது இகழ்சி

 
ஏற்பது இகழ்சி
ஔவையோட ஆத்திச்சூடி.
பல பேருக்கும் தெரியலை. அதான் பல வருஷங்களுக்கு முந்தியே நல்ல விஷயங்களை எல்லாம் பாடத்திலேந்து பகுத்தறிவோட எடுத்தாச்சே! எப்படித் தெரியும்?
ப்ரீயா என்ன கிடக்குதுன்னு தினசரி காலையில எழுந்ததும் யோசிக்கிற சமுதாயமா ஆகிட்டோம். என்ன கொடுக்கலாம்ன்னு யோசனை எங்கே வரப்போகுது?
ஒத்தர்கிட்டிருந்து ஒரு பொருளை வாங்கறோம்ன்னா ரொம்ப யோசிச்சே வாங்கணும். இதை முன்னேயே உணவு பத்தின பதிவில எழுதி இருக்கேன்.
ப்ரீயான்னா ரொம்ப ரொம்ப யோசிக்கணும். எது ப்ரீயா வருதோ அது கொடுக்கறவரோட பாபங்களையும் சுமந்துகிட்டேதான் வருது. சகட்டுமேனிக்கு வாங்கினவங்க நிலையை பாத்து இருக்கேன். இறுதி சடங்கு செய்கிற இடங்களில பாத்தா தெரியும். தானம் வாங்குவதுக்குன்னே சிலர் அங்கே இருப்பாங்க. அவங்க காலை பாத்தா தெரியும்... கருப்பா, சிரங்கும் சீழுமா இருக்கும். இந்த மாதிரி ஆசாமிகளுக்கு கொடுத்து பிரயோசனமில்லே.
எல்லா சுப/ அசுப நிகழ்ச்சிகளுக்கும் முன்னே தானம் தருவது உண்டு. ஒரு நல்ல காரியம் செய்ய முனையும் போது தன்னிடம் இருக்கிற பாபங்களை கொஞ்சம் நீக்கிக்கொண்டு செய்ய பலன் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்பது தியரி. ஆமாம், இப்படி கொஞ்சம்தான் நீக்க முடியும். முழுக்க நீக்க முடியவே முடியாது. தானே ப்ராயச்சித்தங்கள் செய்தோ, அனுபவிச்சோதான் தீர்க்கணும்.
கொடுக்கிறவங்க வாங்கறவங்களோட தார தம்மியம் தெரிஞ்சு கொடுக்கணும். வாங்குகிறவர்கள் கூடிய வரை பாபம் செய்யாதவரா இருக்கணும்; சேருகிற பாபத்தை அப்பப்ப தகுந்த முறையில நீக்கிக்கொள்ளுகிறவரா இருக்கணும். அப்படி இல்லைன்னா கொடுக்கிற நபருக்கு பாபம் போகாததோடு வாங்கின நபரை இன்னும் கஷ்டத்தில ஆழ்த்தின பாபமும் சேரும் போல தோணுது.
கொடுக்கிற த்ரவ்யத்தின் மூலமா கொஞ்சம் பாபம் இடம் மாறும். வாங்குகிற நபர் இதை தெரிஞ்சு இருந்தால் அதுக்கு தகுந்தபடி காயத்ரி, ப்ராணாயாமம், புண்ணிய தீர்த்த ஸ்நாநம் ன்னு எதையாவது செய்து தீர்த்துப்பார். ம்ம்ம்ம் ஆனா 99.99% பேருக்கு தெரியலை. அப்படி தியரியா தெரிஞ்சவங்களிலேயும் சரி செய்துக்க தோணுவது கொஞ்சம் பேருக்குத்தான்.
இப்படி வாங்குகிறதுல இருக்கற பிரச்சினை உடனடியா தெரிஞ்சு தொலைச்சாலாவது பரவாயில்லை என்கிறார் ஒரு தம்பி. என்ன செய்யறது? அது மெதுவாத்தான் தெரியறது. பல சமயம் வெளியே தெரியறதும் இல்லை.
இப்படி இருக்கறதாலேயே பலரும் லஞ்சம் வாங்க தயங்கறதில்லை. இப்படித்தானே இருக்கும் ன்னு சகஜமா எடுத்துக்கற லெவலுக்கு போயாச்சு! அடுத்த தலை முறைகளுக்கு இது தப்புன்னு தெரியாமலே போயிடும்ன்னு நினைக்கிறேன். ஹும்!
இப்ப என் முன்னே நிக்கிற கேள்வி, வலையில நிறையவே இலவச சமாசாரங்கள் கிடைக்குது. இதை எல்லாம் ஏத்துக்கலாமா கூடாதா???

Friday, June 14, 2013

புத்து மாரியம்மன்

 
புற்றைத்தேடிக்கொண்டு போனோம். பையர் அக்னிஹோத்ரம் செய்யும் போது பாலை காய்ச்சிக்கொண்டு இருக்கையில் ஏடு படிந்தயிற்றா என்று பார்த்துக்கொண்டு இருந்த குழந்தையின் தலைமுடி பாலில் பட்டுவிட்டது. விதிப்படி அது அசுத்தம் என்பதால் வேறு பாலை 'கறந்து' காய்ச்சி ஹோமம் செய்யப்பட்டது. அசுத்தமான பாலை என்ன செய்வது? மகரிஷிகள் ஏறக்குறைய எல்லா தவறுகளுக்கும் ப்ராயச்சித்தங்கள் வைத்து இருக்கிறார்கள். நாம் என்னவெல்லாம் தவறு செய்வோம் என்று அவர்களுக்கு தெரியும் போலிருக்கிறது. த்ரிகால ஞானிகள் அல்லவா?
அசுத்தமான பாலை மந்திரம் சொல்லி ஒரு புற்றில் விட வேண்டும். அதற்காகத்தான் புற்றை தேடிக்கொண்டு போனோம். இந்த புற்று கடற்கரைக்கு செல்லும் பாதையில், இருக்கிறது. நான் சிறுவனாக இருந்த போது கடற்கரைக்கு நடந்து செல்கையில் சாலை ஓரமாக இருந்த இதை பார்த்து இருக்கிறேன். அப்போது அது வெறும் புற்றுதான். பின்னால் அருகில் இருந்த அலுவலகத்தில் வேலை செய்வோர் இங்கே ஒரு கோவில் கட்டி புற்று மாரியம்மன் வந்துவிட்டாள். இப்போது தினசரி பலர் வந்து செல்கின்றனர்.
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட பலரே கூட இப்படி இருப்பதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர். வெறும் புற்று, வெறும் கல் இதில் எங்கே இறைவனின் சாந்நித்தியம் வந்தது என்று அவர்களது எண்ணம்.
ரொம்ப சிம்பிள்! எங்கும் இருக்கும் எதிலும் நிறையும் இறைவன் இதில் இல்லாமல் போவானா?
வேதம் புற்றை ப்ரஜாபதியின் பிரதிநிதியாக சொல்கிறது.

பொதுவாகவே வட இந்தியாவில் இருப்போருக்கு தென் இந்தியர்களை விட இறை நம்பிக்கை அதிகம். அழகான சிற்பங்களையும் அருமையான அலங்காரங்களையும் பார்த்து பழகிய நம் கண்கள் நொட்டை நொள்ளை சொல்லிக்கொண்டு இருக்கும். அங்கேயோ தும்பிக்கை மாதிரி கொஞ்சம் தெரிந்தாலும் கணபதி பப்பா என்று உருகிவிடுவார்கள். புரி ஜகன்நாத் கோவிலுக்குப் போனபோது அங்கே சந்நிதியில் கொஞ்சம் ஏமாற்றமே. ஆனால் அங்கே வரும் வட இந்தியர்களை பார்த்தால்..... நமக்கெல்லாம் பக்தியே கிடையாது என்று தோன்றியது.
எதிலும் இறைவனை காண்பது ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை. இந்த சிலையில் படத்தில் மட்டும் இறைவன் இருக்கிறான் என்று நினைப்பது கொஞ்சம் தாழ்ந்த நிலையானாலும் ஆரம்ப அடியார்களுக்கு அது நல்லதே. அந்த நம்பிக்கையை கெடுக்க வேண்டாம்.

Wednesday, June 12, 2013

Creative Commons உரிமம்.


இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் Creative Commons உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது

இன்று முதல் இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன். இதன் மூலம்,
  • இந்த வலைப்பதிவின் உள்ளடக்கத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
  • திருத்தி மேம்படுத்தலாம்.
  • விற்கலாம்.
  • முழுக்கட்டுரையாக இன்னொரு தளத்தில் இடலாம்.
  • அச்சிட்டோ, ஒலிப்பதிவாகவோ, EPUB, PDF, MOBI போன்ற வடிவங்களிலோ பகிரலாம்
இவற்றைச் செய்ய என்னுடைய முன் ஒப்புதல் தேவையில்லை. ஆனால், அவ்வாறு பயன்படுத்தும் போது, நீங்கள் வெளியிடும் உள்ளடக்கமும் மேற்கண்ட அனைத்து உரிமங்களையும் அதனைப் பயன்படுத்துபவருக்குத் தர வேண்டும். உள்ளடக்கத்தின் மூலமாக இந்த இணையத்தளத்தின் முகவரியையும் கட்டுரையையும் குறிப்பிட வேண்டும். இணையத்தை அணுகவல்ல ஊடகமாக இருப்பின், சொடுக்கவல்ல இணைப்பு ஒன்றைத் தருவதும் வரவேற்கப்படுகிறது.
 தமிழில் கட்டற்ற நூல்களை வழங்குவதற்கான முயற்சியைக் கண்ட பிறகு இதனை உடனே செய்ய வேண்டும் என்று தோன்றியது.
உங்கள் ஆக்கங்களையும் இவ்வாறு பொதுப்பயன்பாட்டுக்கு ஏற்ற உரிமத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 

குரு கவசம்


 தோழி அவர்கள் அரிய குரு கவசம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தேவையானவர்கள் படித்து பயன்பெறுக!
http://www.siththarkal.com/2013/06/blog-post_7.html

Thursday, June 6, 2013

அதனாலென்ன - 3

 
ரிஸ்க் பத்தி சொல்லி முடிக்கு முன் இந்த இறப்பைப்பார்த்து அஞ்சாமல் இருக்கிறதைப்பத்தி கொஞ்சம் சொல்லணும். இது பத்தி முன்னேயே எழுதி இருந்தாலும்....

சாவை நினைச்சு பயப்படுறதுல லாஜிக் இல்லை.
இதை அனலைஸ் செய்யும் முன்னே மறு பிறவி பத்தி ஒரு விஷயத்தை தெளிவாக்கிக்கலாம். ஒண்ணு நமக்கு மறு பிறவி இருக்கு. இரண்டாவது இல்லை. இந்த இரண்டு கருத்துதான் இருக்க முடியும்.
மறு பிறவி இருக்குன்னா பயப்பட என்ன இருக்கு? அதான் திருப்பி பிறப்போமே? ஸ்லேட்டை துடைச்சு புதுசா ஆக்கிகிட்டு திருப்பி எழுதறா மாதிரி. புது உறவுகள், புது இடங்கள், புது பழக்கங்கள்...... சுவாரசியமாத்தானே இருக்க முடியும்?
மறு பிறவி இல்லைன்னா.... சரி நாமே இருக்க மாட்டோம்ன்னா யார், எதை பாத்து பயப்படணும். உயிர் இருக்கும் வரை சாவு வரவில்லை என்பதால் பயமில்லை. போன பிறகு பயப்பட நாம் இருக்க மாட்டோம். சிம்பிள்!
அதான் லாஜிக் இல்லைன்னு சொன்னேன்.

சாவு என்கிறதுக்கு யாரும் உண்மையில் பயப்படவில்லை. அதன் விளைவை கற்பனை செய்துதான் பயப்படுகிறார்கள். Fear of unknown! நான் செத்து போனால் எங்கே போவேன்? என்ன ஆவேன்? புராணங்களில சொல்லி இருக்கிற மாதிரி நரகத்துக்கு போவேனோ? தண்டனைகள் அனுபவிப்பேனோ! ஒழுங்கா இருக்கிற ஆசாமி ஏன் இதுக்கெல்லாம் பயப்படணும்? அப்புறம் ஏன் அடுத்த உலகைப்பத்தி கற்பனை? இந்த உலகிலேயே நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்று நிச்சயமில்லை! இதை ரிசால்வ் செய்துவிட்டு, அப்புறம் தெரியாத புரியாத உலகைப்பத்தி யோசிக்கலாம்.

அடுத்து நான் செத்துப்போனால் என் பிள்ளைக்குட்டி என்ன ஆகுமோ! மனைவி /கணவன் என்ன செய்வார்களோ என்ற ரீதியில் மனக்கவலை ஏற்படுகிறது. என்னமோ தான்தான் குடும்பத்தை தாங்கிக்கொண்டு இருக்கிறதாக நினைப்பு! உண்மையில் இறைவனே அவரவர் கர்மாவைப்பொருத்து படியளக்கிறான். இன்றைக்கு என் மூலமாக படியளப்பவன் நாளைக்கு நான் இல்லை எனும்போது வேறு வழியில் படியளப்பான். அதுக்கு அவனுக்கு சாமர்த்தியம் இல்லையா என்ன?
ரைட்! இதை யோசித்து புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் சாவைக் குறித்த பயம் போய்விடும். அதுவே எல்லாருக்கும் பெரிய பயமாக இருக்கக்கூடியது. அதுவும் கடந்துவிட்டால் அப்புறம் ஒண்ணுமே பெரிசில்லை.

அதனாலென்ன என்கிற கேள்வி கேட்பதில் உள்ள சின்ன ரிஸ்க், செயலின்மை. ஒரு வேலை செய்ய வேண்டுமென்று இருக்கிற போது செய்ய மாட்டேன், அதனாலென்ன, நடப்பது நடக்கும் என்று மனப்பாங்கு வந்துவிட்டால் அதற்கேற்ற பலன்களே கிடைக்கும். செயலால் காரியம் நடப்பது போல 'செயலின்மையாலும் கெடும்' என்று பெரியவர்கள் சொல்லி இருப்பதை நினைவில் வைக்க வேண்டும். எப்போதுமே நம் கடமையில் இருந்து தவறக்கூடாது. அதை செய்த பின் நம் முயற்சி, நம் கர்மா, காலம், இறையருள் பொருத்து பலன் கிடைக்கும். அது எதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த மனப்பக்குவம் வர வேண்டும். 'அதனால் என்ன' என்ற ஆய்வு காரியங்களை செய்ய முனைகையில் ஏற்படும் மன இறுக்கத்தை குறைக்கவே! மன இறுக்கம் இல்லை என்றால் தேவை படாமலும் போகலாம்.
 அதனாலென்ன!

Wednesday, June 5, 2013

அதனால் என்ன - 2


எல்லாமே இப்படி சுலபமாக முடிந்துவிடாது....
சில சமயம் இழப்பு இருக்கவே இருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன் சிலர் அவர்களுடைய 91 வயது தந்தையிடம் 'எங்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன' என்று கேட்டனர். அவர் சற்று யோசித்துவிட்டு "எப்போதுமே என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் இப்படி நடந்துவிட்டதே என்று வருத்தப்படுவதிலும் எப்படி நடக்குமோ என்று பதட்டப்படுவதிலும் அர்த்தமில்லை. அதற்கென்று ஒன்றுமே யோசிக்க வேண்டாம், செய்ய வேண்டாம் என்றில்லை. அவ்வப்போது என்ன செய்ய வேண்டுமோ அது தெளிவாகவே தெரியும் அதை செய்யுங்கள். இப்போது இந்த குழந்தை அழுதது. அதை சமாதானப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அது செய்யப்பட்டது. அது போலவே” என்றார்.

எப்போது என்ன எப்படி நடக்க வேண்டுமோ அது அப்போது அப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது. கூடவே கூடாதது என்பது என்ன முயற்சி செய்தாலும் கூடுவதில்லை. சிலது முயற்சி செய்ய 'மெய் வருத்த கூலி' மட்டும் கிடைக்கிறது. சில சமயம் வேண்டாம் என்று உதறினாலும் தானாக சிலது வந்து சேருகிறது.

ஆக இரண்டு விஷயங்கள். முன்னே செய்த கர்மா கொடுக்கும் சூழலும் பலனும். இப்போதைய முயற்சியின் தீவிரமும் பலனும். இரண்டுமேதான் ஒரு விஷயம் நடக்குமா நடக்காதா என்பதை நிர்ணயிக்கின்றன.

இதை நன்றாக உள்ளே வாங்கிக்கொண்டால் அடுத்தது சரியாக புரியும்.
அதனாலென்ன கேட்டுக்கொண்டு போகும் போது எப்போதுமே சுமுகமாக முடிந்துவிடாது. பரிட்சைக்கு படிக்கவில்லை. அதனாலென்ன? பரிட்சையில் பெயில் ஆவோம். அதனாலென்ன? ஒரு வருடம் வீணாகும். அதனாலென்ன? அதனால் பல விஷயங்கள் பின்னால் வாழ்கையில் இழப்பு ஏற்படும். கிடைக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் தள்ளிப்போகும். இதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி சில இழப்புக்களை நம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா இல்லையா என்பது விஷயம். இழப்புதான், பரவாயில்லை, தாங்கிக்கொண்டு அடுத்த வேலையை பார்க்கிறேன் (வேற வழி? அதுதானே புத்திசாலித்தனம்?) என்று எப்போது சிந்திக்க ஆரம்பிக்கிறோமோ அப்போது முன்னேற ஆரம்பித்துவிடுவோம். யோசித்துப்பார்த்தால் நடந்ததை ஒப்புக்கொள்ளாமல் வீம்புக்கு அதை வளர்ப்பதில் இன்னும் அதிக நஷ்டம் இருக்கும்
 
வாழ்கையில் மேடு பள்ளங்கள் இயற்கையானவை. வெற்றி தோல்விகள் இயற்கையானவை. வெற்றியே எப்போதும் கிடைக்க வேண்டும் என்பது நடவாது. நமக்கு சூழ்நிலை எப்போது சாதகமாக இருக்கிறது, எப்போது ஆரம்பித்தால் வினைகள் வெற்றிகரமாக நிகழும் என்பது ஜோதிடத்தின் பாற்பட்டது. நல்ல ஜோதிடர்கள் சரியாக சொல்லிவிடுவார்கள். சில சமயம் நேரம் சரியில்லை, கொஞ்சம் அடக்கி வாசி என்பார்கள். சில சமயம் என்னதான் நடக்கமுடியாத காரியம் போல் தோன்றினாலும் கோ அஹெட் என்பார்கள். நடந்துவிடும். ஆனால் நல்ல ஜோதிடர் என்று சொன்னேனே, அது கொஞ்சம் பிரச்சினையான விஷயம். படிப்பே ஏறாது ன்னு சொல்லப்பட்ட நபர், வெற்றிகரமாக தணிக்கைத்துறையில் பிரகாசிப்பது தெரியும்! சில சமயம் நல்ல பெரியவர்களின் ஆசி கிடைத்துவிட்டால் விதி கூட மாறிவிடுகிறது போலிருக்கிறது! ..... கிடக்கட்டும்.

ஒரு அப்ஜெக்ஷன் வரலாம். அதனாலென்ன என்று கேட்டுக்கொண்டே போனால் சில சமயம் 'அதனால் நான் செத்துப்போய்விடுவேன் என்று வருகிறதே, என்ன செய்வது?' என்று.
சர்வ நிச்சயமாக பிறந்த போதே நம் இறப்பும் நிச்சயம். அதனால் ஒரு நாள் போகத்தான் போகிறோம். அதுக்கு ஏன் பயப்படணும்? சரி சரி, கேள்வி சுலபம், ஆனால் பலருக்கும் இது பயம்தான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால் யார் இதையும் முன்னரே விசாரித்து சரிதான் என்று முடிவுக்கு வந்துவிட்டால் அவரை எதுவுமே அசைக்க முடியாது. இறப்பைவிட ஒருவருக்கு எது பயத்தை கொடுக்க முடியும்? அதுக்கும் துணிந்துவிட்டால் அவரை எது பதட்டப்பட வைக்க முடியும்?

ஆனால் இந்த அதனாலென்ன கேள்வி சமாசாரத்தில் ஒரு சின்ன ரிஸ்க் இருக்கிறது. அதை பதட்டப்படாமல் கேளுங்கள். அடுத்த பதிவில்.....

Tuesday, June 4, 2013

அதனால் என்ன?

 
What if?
நம்மில் பலருக்கும் வாழ்கை அழுத்தம் நிறைந்ததாக இருக்கிறது. சுமார் 40-50 வருஷங்களில் உலகம் வெகுவாக மாறிப்போய்விட்டது. நிதானமாக பல்லைத்தேய்த்துக்கொண்டே காலால் மடையை உடைத்துத்திறந்து நீர் பாய்ச்சி விவசாயம் பார்த்த காலம் போய்விட்டது. எதிலும் வேகம் வேகம் வேகம். காலை எழுந்து குழதையையும் பள்ளிக்குபோக எழுப்பிவிட்டு அவசர அவசரமாக குளித்து சமையல் செய்து காலை டிபன் மதிய உணவு ஸ்நாக்ஸ் கட்டிக்கொடுத்து தானும் ஆபீஸுக்கு ஓடி உழன்று என்றாகிவிட்டது. என் நிலை எதிரிக்கும் வர வேண்டாம் என்று ஸ்டேடஸ் போடும் அளவு போகிறது.

இப்படியே போனால் கூடிய சீக்கிரம் டென்ஷனில் சுரக்கும் அட்ரினலினால் எடை கூடி சர்க்கரை வியாதி, பி.பி இன்ன பிற வியாதிகளும் நம்மை பிடித்துக்கொண்டு ஆட்ட ஆரம்பிக்கும். அதற்கு மருந்து என்றெல்லாம் ஆரம்பித்து வாழ்கையே துன்ப மயமாகிறது.
என்ன செய்வது?
டாக்டரிடம் போனால் டென்ஷன் படாதீர்கள், கூலாக இருங்கள் என்பார்.
சொல்லறது சுலபம்தான், அதை செய்ய முடியனுமே?
அதுக்கு என்ன செய்யறது?
கூடிய வரை இந்த சூழலில் மாட்டிக்கொள்ளக்கூடாது.
முக்கியமாக நமக்கு அயர்ச்சி தருவது எதிர்காலத்தைப்பற்றிய பதட்டம்தான். அது நீண்ட எதிர்காலமோ அல்லது குறுகிய எதிர்காலமோ...
பதட்டத்தால் சாதிக்கக்கூடியது எதுவுமில்லை. எதையும் தீர்க்கமாக ஆலோசிக்கப் பழகிவிட்டால் இந்த பதட்டம் போய்விடும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பழகப்பழக இது சுலபமாகிவிடும். மனசு தானாக இப்படி யோசிக்க ஆரம்பித்துவிடும். அப்புறம் பதட்டமே வராது.
அது எப்படி தீர்க்கமாக யோசிப்பது?
ரொம்ப சுலபமே. தீர்க்கம் என்றால் நீளம் என்று பொருள். தொடர்ந்து நீள யோசிக்கணும். முதலில் நிதானமாக உட்கார்ந்து இதை யோசித்து பழகிவிட்டால் அப்புறம் எப்போதும் எங்கேயும் இப்படி யோசித்துக்கொள்ளலாம்.
கேள்வி கேட்டு விடை கண்டு பிடிக்க பழக வேண்டும். ஒரே கேள்விதான் திருப்பித்திருப்பி...
what if? அதனால் என்ன?
உதாரணம் சொன்னால் புரியும். என் பிறந்த ஊருக்குப்போய் ஒருவரை, அவர் அலுவலகத்துக்கு கிளம்பும் முன் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பேருந்து நிலையம் போய் அங்கிருந்து வண்டி பிடித்து இன்னொரு ஊரில் வண்டி மாறி போக வேண்டும். அடிக்கடி பேருந்துகள் போகிற வழித்தடமாக இருந்தால் பெரிய பிரச்சினை இராது. இந்த வழித்தடத்திலோ அதிக வண்டிகள் இல்லை. வீட்டில் இருந்து கிளம்பும் போதே தாமதமாகிவிடுகிறது. இந்த மாதிரி சமயத்தில்தானே என்னவெல்லாம் தாமதிக்கச் செய்யும் சமாசாரங்கள் உண்டோ அது எல்லாமே நடக்கும்? :-) போகட்டும்!

இப்போது எனக்கு பதட்டம் வந்துவிடுகிறது. சரியான நேரத்துக்கு பேருந்து நிலையத்துக்குப் போய் சேர முடியுமா? முதல் பஸ்ஸை பிடிக்க முடியுமா? அது நேரத்துக்குப்போய் அடுத்த பஸ்ஸை பிடிக்க முடியுமா? அப்படி பிடித்தாலும் நேரத்துக்கு ஊர் போய் சேருமா? நான் பார்க்கப்போகும் நபர் அலுவலகத்துக்கு கிளம்பாமல் இருப்பாரா? இதெல்லாம் எனக்கு வரக்கூடிய பதட்டம்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுடைய கற்பனா சக்தி இன்னும் அதிகமானது. மேலே சொன்ன விஷயங்களுடன் அவர்களுடைய பதட்டம் நிற்காது. பஸ் போகும் போது பஞ்சர் ஆகாமல் இருக்குமா? வழியில் ரோட் ரோகோ ன்னு யாராவது தடை செய்யாமல் இருப்பார்களா? எந்த கட்சியாவது வழியில் ஊர்வலம் விடாமல் இருக்க வேண்டுமே! அடுத்த பஸ் கிராமத்து பஸ் ஆச்சே! எதாவது வழி சரியில்லைன்னு கான்சல் செய்யாமல் இருக்கணுமே! சந்திக்கப்போகிற நபர் கொஞ்சம் சென்சிடிவ் ஆச்சே! அவர் நல்ல மூடில் இருப்பாரா? இப்படி அவர்களுடைய கற்பனை பெருத்துக்கொண்டே போகும்!
யோசிக்கலாம். இந்த மாதிரி முன்னால் நமக்கு நடக்கவில்லையா என்ன? அப்போது என்ன செய்தோம்?

அட, இப்போது பஸ்ஸை தவற விட்டுவிடுகிறோம். அதனால் என்ன? அடுத்த பஸ்ஸை பிடிக்க வேண்டும். அதனால் என்ன? அதுக்கு அடுத்த பஸ்ஸை பிடிக்க இன்னும் தாமதமாகும். அதனால் என்ன? சந்திக்கப்போகிற நபர் அலுவலகத்துக்கு கிளம்பிவிடுவார். அதனால் என்ன? அவரை வீட்டில் சந்திக்க முடியாமல் போகலாம். அதனால் என்ன? அவரை அலுவலகத்துக்கு சென்றுதான் சந்திக்க வேண்டும். அதனால் என்ன? அதனால்.. அதனால் ஒன்றுமில்லை. வீட்டிலேயே சந்தித்தால் நல்லது என்று நினைத்தேன். அப்போதுதான் சாவகாசமாக பேசலாம். அப்புறம் என்ன? ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. பார்க்கவே முடியாது என்றால்... அதனால் என்ன? ஒன்றும் இல்லை. இன்னொரு நாள் திரும்பி போய் கொள்ளலாம். இப்படி இந்த 'அதனால் என்ன?' என்ற கேள்வியை திருப்பி திருப்பி கேட்டால் பல பிரச்சினைகள் பிரச்சினைகளே இல்லை என்று புரியும்.

எல்லாமே இப்படி சுலபமாக முடிந்துவிடாது....