Pages

Wednesday, June 5, 2013

அதனால் என்ன - 2


எல்லாமே இப்படி சுலபமாக முடிந்துவிடாது....
சில சமயம் இழப்பு இருக்கவே இருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன் சிலர் அவர்களுடைய 91 வயது தந்தையிடம் 'எங்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன' என்று கேட்டனர். அவர் சற்று யோசித்துவிட்டு "எப்போதுமே என்ன நடக்க வேண்டுமோ அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் இப்படி நடந்துவிட்டதே என்று வருத்தப்படுவதிலும் எப்படி நடக்குமோ என்று பதட்டப்படுவதிலும் அர்த்தமில்லை. அதற்கென்று ஒன்றுமே யோசிக்க வேண்டாம், செய்ய வேண்டாம் என்றில்லை. அவ்வப்போது என்ன செய்ய வேண்டுமோ அது தெளிவாகவே தெரியும் அதை செய்யுங்கள். இப்போது இந்த குழந்தை அழுதது. அதை சமாதானப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அது செய்யப்பட்டது. அது போலவே” என்றார்.

எப்போது என்ன எப்படி நடக்க வேண்டுமோ அது அப்போது அப்படி நடந்து கொண்டுதான் இருக்கிறது. கூடவே கூடாதது என்பது என்ன முயற்சி செய்தாலும் கூடுவதில்லை. சிலது முயற்சி செய்ய 'மெய் வருத்த கூலி' மட்டும் கிடைக்கிறது. சில சமயம் வேண்டாம் என்று உதறினாலும் தானாக சிலது வந்து சேருகிறது.

ஆக இரண்டு விஷயங்கள். முன்னே செய்த கர்மா கொடுக்கும் சூழலும் பலனும். இப்போதைய முயற்சியின் தீவிரமும் பலனும். இரண்டுமேதான் ஒரு விஷயம் நடக்குமா நடக்காதா என்பதை நிர்ணயிக்கின்றன.

இதை நன்றாக உள்ளே வாங்கிக்கொண்டால் அடுத்தது சரியாக புரியும்.
அதனாலென்ன கேட்டுக்கொண்டு போகும் போது எப்போதுமே சுமுகமாக முடிந்துவிடாது. பரிட்சைக்கு படிக்கவில்லை. அதனாலென்ன? பரிட்சையில் பெயில் ஆவோம். அதனாலென்ன? ஒரு வருடம் வீணாகும். அதனாலென்ன? அதனால் பல விஷயங்கள் பின்னால் வாழ்கையில் இழப்பு ஏற்படும். கிடைக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் தள்ளிப்போகும். இதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி சில இழப்புக்களை நம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா இல்லையா என்பது விஷயம். இழப்புதான், பரவாயில்லை, தாங்கிக்கொண்டு அடுத்த வேலையை பார்க்கிறேன் (வேற வழி? அதுதானே புத்திசாலித்தனம்?) என்று எப்போது சிந்திக்க ஆரம்பிக்கிறோமோ அப்போது முன்னேற ஆரம்பித்துவிடுவோம். யோசித்துப்பார்த்தால் நடந்ததை ஒப்புக்கொள்ளாமல் வீம்புக்கு அதை வளர்ப்பதில் இன்னும் அதிக நஷ்டம் இருக்கும்
 
வாழ்கையில் மேடு பள்ளங்கள் இயற்கையானவை. வெற்றி தோல்விகள் இயற்கையானவை. வெற்றியே எப்போதும் கிடைக்க வேண்டும் என்பது நடவாது. நமக்கு சூழ்நிலை எப்போது சாதகமாக இருக்கிறது, எப்போது ஆரம்பித்தால் வினைகள் வெற்றிகரமாக நிகழும் என்பது ஜோதிடத்தின் பாற்பட்டது. நல்ல ஜோதிடர்கள் சரியாக சொல்லிவிடுவார்கள். சில சமயம் நேரம் சரியில்லை, கொஞ்சம் அடக்கி வாசி என்பார்கள். சில சமயம் என்னதான் நடக்கமுடியாத காரியம் போல் தோன்றினாலும் கோ அஹெட் என்பார்கள். நடந்துவிடும். ஆனால் நல்ல ஜோதிடர் என்று சொன்னேனே, அது கொஞ்சம் பிரச்சினையான விஷயம். படிப்பே ஏறாது ன்னு சொல்லப்பட்ட நபர், வெற்றிகரமாக தணிக்கைத்துறையில் பிரகாசிப்பது தெரியும்! சில சமயம் நல்ல பெரியவர்களின் ஆசி கிடைத்துவிட்டால் விதி கூட மாறிவிடுகிறது போலிருக்கிறது! ..... கிடக்கட்டும்.

ஒரு அப்ஜெக்ஷன் வரலாம். அதனாலென்ன என்று கேட்டுக்கொண்டே போனால் சில சமயம் 'அதனால் நான் செத்துப்போய்விடுவேன் என்று வருகிறதே, என்ன செய்வது?' என்று.
சர்வ நிச்சயமாக பிறந்த போதே நம் இறப்பும் நிச்சயம். அதனால் ஒரு நாள் போகத்தான் போகிறோம். அதுக்கு ஏன் பயப்படணும்? சரி சரி, கேள்வி சுலபம், ஆனால் பலருக்கும் இது பயம்தான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால் யார் இதையும் முன்னரே விசாரித்து சரிதான் என்று முடிவுக்கு வந்துவிட்டால் அவரை எதுவுமே அசைக்க முடியாது. இறப்பைவிட ஒருவருக்கு எது பயத்தை கொடுக்க முடியும்? அதுக்கும் துணிந்துவிட்டால் அவரை எது பதட்டப்பட வைக்க முடியும்?

ஆனால் இந்த அதனாலென்ன கேள்வி சமாசாரத்தில் ஒரு சின்ன ரிஸ்க் இருக்கிறது. அதை பதட்டப்படாமல் கேளுங்கள். அடுத்த பதிவில்.....

No comments: