Pages

Monday, November 25, 2013

இன்னொரு கோளாறான சிந்தனை - 3



சில நாட்களுக்கு முன் ஒரு விவாதத்தில் ஒருவர் சொல்லிக்கொண்டு இருந்தார்யார் கடவுள் என்கிறதிலேயே நிக்கிறேன். சாதாரணமாக யாருக்கும் வலிந்து நானாக எதையும் சொல்வது பழக்கம் இல்லை என்பதால் அதை அங்கேயே விட்டுவிட்டேன். 

ஆனால் பொதுவாக சொல்லலாம் இல்லையா?

யார் கடவுள் என்பதற்கு ஒரு விளக்கம் அவசியம்தான். ஒவ்வொருவருக்கும் ஒரு கான்சப்ட் இது குறித்து இருக்கிறது. 

சிலர் ஒரு பெயரை சொல்லி அவரே கடவுள் என்பர்.  சிலருக்கு குறிப்பிட்ட கோவிலில் அது இருக்கிறது. சிலர் நமக்கு மீறிய ஒரு சக்தி என்பார்கள். என் பேத்தியை கேட்டால் ஆனை உம்மாச்சிதான் உம்மாச்சி என்பாள்!

இஸ்லாமியர் அல்லா என்பர். கிறிஸ்துவர்கள் பிதா என்பர். சிலர் மேக்கர் – maker- என்பர். 
யார் எப்படி சொன்னாலும் அந்தப் பெயரையும் உருவத்தையும் தவிர்த்துவிட்டு பார்த்தால் ஒரே விஷயம்தான் எஞ்சுகிறது.

கடவுள் எல்லா காலத்திலும் இருப்பவராக இருக்க வேண்டும். அவர் எங்கும் நிறைந்தவராக இருக்க வேண்டும். அவர் எல்லாம் வல்லவராக இருக்க வேண்டும்.
யோசித்து பார்த்தால் இதில் இறைவனிடம் நாம் எதிர்பார்க்கக்கூடிய எல்லாம் அடங்கிவிடுகிறது. 

கடவுளிடம் நாம் ஒன்றை வேண்டிப்பெற்று அதை தர நாளை அவர் இருக்க மாட்டார் என்றால் பயனில்லை. நேற்று அவர் இல்லை இன்று இருக்கிறார் என்றால் அதிலும் சாரமில்லை. 

சமீபத்தில் வலையில் படித்த ஒரு குட்டிக்கதை. இரண்டு பேர்கள் ஒரு சிறுவனிடம்  ஜீசஸ்தான் கடவுள். அதனால நீ அவர்கிட்ட வந்துடு என்றனர். பையன் கேட்டான். ஜீசஸ் எப்ப பொறந்தார்?
டிசம்பர் 25 ஆம் தேதி.
அப்ப டிசம்பர் 24 ஆம் தேதி யார் கடவுள்?

ஆக கடவுளுக்கு ஆரம்பம் இருக்கக்கூடாது. இருந்தால் அவரை படைத்தது யார்? அந்த படைத்தவரை படைத்தது யார் என்ற கேள்வி முடிவில்லாமல் எழும்!

அதே போல கடவுளுக்கு அப்பாற்பட்டு ஒரு விஷயம் இருக்க முடியும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. அப்படி இருந்தால் அது கடவுளின் ஆதீனத்துக்கு உட்பட்டு இருக்காதே?

ஆகவே அவர் எங்கும் நிறைந்தே இருக்க வேண்டும்.

இது இரண்டும் இருந்தும் எல்லாம் வல்லவராக இருக்கவில்லை என்றால் நமக்கு பிரயோசனமில்லையே? எங்கும் நிறைந்து இருப்பது தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் இருக்காதே? கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்றால் எதையும் செய்ய முடிய வேண்டுமே?

ஆக கடவுள் முக்காலத்திலும் இருக்கும் எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல வஸ்துவாகும்.
எங்கும் நிறைந்த என்றால் என்னிலும் இருக்க வேண்டுமே? அப்படி இருந்தால் ஏன் என்னிடம் எல்லாம் வல்லத் தன்மை இல்லை? என் சிறு சிறு ஆசைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அல்லவா இருக்கிறேன்?

விடையை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

No comments: