Pages

Friday, November 29, 2013

கடவுளுடன் லிங்க்- ஜபம்.




இந்த வலைப்பூவையெல்லாம் படித்துவிட்டு “சரி, சார் நான் ஜபம் பண்ண ரெடி, எதை ஜபம் செய்யணும், எவ்வளோ நேரம் செய்யணும்? என்ன கட்டுப்பாடு?” ந்னு கேட்டா…. என்னது? நீங்க கேட்கலையா? போனாப்போறது, அப்படி ஒரு கற்பனை வெச்சுக்கலாம், என்ன இப்ப?… மேலே படிக்கலாம்.

ப்ரம்ஹோபதேசம் – அதாவது காயத்ரி உபதேசம்- ஆனவர்களுக்கு வெகு சுலபம்; காயத்ரியை விட உயர்வான மந்திரமில்லை என்பதே அனைவரின் முதன்மையான கருத்தும். அதை விட்டு வேறு மந்திரம் தேடுவது கனி இருக்க காய் கவருவது போல ஆகும்!
அப்படி உபதேசம் இல்லை; ஆனால் வேறு மந்திரம் உபதேசம் ஆகியிருக்கிறது என்றால் அதையே எடுத்துக்கொள்ளலாம். அப்படியும் உபதேசம் ஏதும் இல்லை என்றால்  நமக்குப் பிடித்த நாமத்தையே எடுத்துக்கொள்ளலாம். ஒரு பிரச்சினையும் இல்லை.

முன்னேயே சொன்னது போல நாமமோ ரூபமோ இருக்கணும்ன்னு கூட அவசியம் இல்லை. இருந்தாலும் அது இருந்தால்தான் மனசு குவிகிறது என்கிறதால நமக்கு இஷ்டமான நாமத்தை சொல்லலாம்.

எவ்வளவு நேரம்?
எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம். இது அவரவருக்கான மற்ற வேலை, எத்தனை நேரம் ஒதுக்க முடியும் என்பதை எல்லாம் பொருத்தது. கோவில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை கேட்கப்போனால் எப்படி ஒரு தனவான் கொடுப்பதும் ஏழை கொடுப்பதுக்கும் மதிப்பு போடுவோமோ அப்படி! 

கஷ்டப்படுகிற ஏழை தானாக மனமுவந்து பத்து ரூபாய் கொடுப்பதும் ஐந்து நக்‌ஷத்திர ஹோட்டலுக்கு போய் சர்வ சாதாரணமாக ஒரு சாப்பாட்டுக்கு ஐந்தாயிரம் எடுத்து வீசுபவன் ஐம்பதாயிரம் கொடுப்பதும் ஒன்றே!

அது போல ஒரு நிமிஷம் கூட நேரமில்லை என்பவர் பத்து நிமிஷங்கள் ஒதுக்குவதும் ரிடையர் ஆன வேலை வெட்டி இல்லாத ஆசாமி ஒரு மணி நேரம் ஒதுக்குவதும் ஒண்ணா இருக்கலாம்.
இருந்தாலும் ஏதோ ஒரு கணக்கு சொல்ல வேணும் இல்லையா? இப்படி பார்க்கலாமா? நாம் வாழும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு நிமிஷம் ஒதுக்கலாமா? இதன்படி ஒரு நாளுக்கு 24 நிமிஷம். இந்த 24 நிமிஷம் ஏறத்தாழ ஒரு நாழிகை. இந்த 20-24 நிமிஷம் இன்னும் பல இடங்களில் சந்தித்து இருக்கேன். ட்ரான்சென்டண்டல் மெடிடேஷன், உடல் பயிற்சி போல பல இடங்களில். அதனால இதுல ஏதோ இருக்கணும்.

ஒரு நாளுக்கு 60 நாழிகைகள். ஆனால் இது சமமாக இல்லை. பகல் பொழுதை 30 பகுதியா பிரிச்சு 30 நாழிகைகள். இரவு பொழுதை 30 பகுதியா பிரிச்சு 30 நாழிகைகள். 2 நாழிகைகள் ஒரு முஹூர்த்தம். இது ஒவ்வொண்ணுக்குமே பெயர்கள் உண்டு.
(முழு லிஸ்டையும் இங்கே பார்க்கலாம்.)

இரவு நேரத்தை ஐந்தா பிரிச்சா, விடியும் முன் இருக்கிற ’இரவின் ஐந்தில் ஒரு பாகம்’ சிறப்பானது. இதுக்கு ப்ரஹ்ம முஹூர்த்தம் ந்னு பெயர். (அப்படி பேர் இருந்தாலும் இது 48 நிமிஷம் இல்லை. சுமார் 2 மணி, 24 நிமிஷ நேரம். வியவகாரத்துல நல்ல நேரம்ன்னு சொல்ல சுப முஹூர்த்தம் ந்னு சொல்கிறது போல சொல்கிறதுதான்!) இந்த நேரமே ஜபம் செய்ய மிகச்சிறப்பான நேரம். 

அட சூரிய உதயத்துக்கு முன்னாலயா? அதை பாத்ததே இல்லையே சார் ந்னா… நான் ஒண்ணும் சொல்லறதுக்கு இல்லை! இது நல்ல நேரம், முடிஞ்சா இந்த நேரத்துல செய்யுங்க. இல்லைன்னா எப்ப நேரம் கிடைக்குதோ செய்யுங்க. அவ்ளோதான்!

 அடுத்து இதை எபக்டிவ் ஆக செய்வதுன்னு பார்க்கலாம்.

No comments: