Pages

Saturday, November 2, 2013

தீபாவளி நல்வாழ்த்துகள்!

நமஸ்காரம் எல்லோருக்கும்! கங்கா ஸ்நாநம் ஆச்சா?
நீண்ட கால இடைவெளிக்குப்பின் சந்திக்கிறேன்!

நபர் அஷ்வின் கூகுள் ப்ளஸ் இல் ஒரு பதிவு இட்டு இருந்தார்!


மனதை கவர்ந்த பதிவு.
சற்றே யோசித்துப்பார்த்தால் இதில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்று உணரலாம்.

பெரும்பாலோருக்கு தங்களிடம் உள்ள குறை தனக்கே தெரிந்துதான் இருக்கிறது!  மனம் நம்மை அப்படி ஆட்டிப்படைக்கிறது! கோபப்படுதல், சோம்பேறித்தனம் என்று பெரிய பட்டியலே தயாரிக்கலாம். இது எல்லாம் இருக்கக்கூடாது என்றும் நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் நம்மால் சாதாரணமாக அப்படி மாற்றிக்கொண்டு இருக்க முடியவில்லை. வெகு கால ப்ரயாசைக்குப்பிறகு சற்றே மாற்றிக்கொள்ள முடிகிறது. இது இப்படி இருக்க நாம் சொன்னபடி மற்றவர்கள் தம்மை மாற்றிக்கொள்ளவில்லை என்று புகார் செய்கிறோம்! கோபப்படுகிறோம்; திட்டுகிறோம்; சண்டை போடுகிறோம்! அதிலும் அநியாயம் குழந்தைகளை இந்த காரணத்துக்காக திட்டுவது! பலருக்கும் அதை மென்மையாக சொல்லி புரியவைத்து பழக்கத் தெரிவதில்லை!

ஏன் நம்மால் புத்திக்கு தெரிந்த ’நல்ல’ வழியில் நடந்துகொள்ள முடிவதில்லை?
இதற்கு காரணம் வாசனை!
வாசனைன்னா தீபாவளி பலகார வாசனை இல்லை! :-)
கொஞ்சமே கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

புதிதாக ஒரு காரியம் செய்கிறோம். புரியாத விஷயம் என்பதால் ஆரம்பத்தில் ஜாக்கிரதையாக கவனமாக செய்வோம். அதை திருப்பித்திருப்பிச்செய்ய அதில் ஒரு ’ப்லூயன்ஸி’ ஏற்படுகிறது. பல முறை செய்ததை ’அசால்டாக’ முழு கவனம் கொடுக்காமலே கூட செய்து விடுவோம். அதாவது செய்கையில் ஒரு பழக்கம் உண்டாகிவிட்டது! இதை பண்புப்பதிவு - சம்ஸ்க்ருதத்தில் சம்ஸ்காரம்- என்போம். இதுவே நாளாக ஆக உள்ளே ஊறிப்போய்விடுகிறது. இப்படி பலப்பட்ட சம்ஸ்காரம்தான் வாசனை. இது அந்த ஜன்மத்தில் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த ஜன்மங்களிலும் வருகிறது.

புரிவதற்காக ஒரு மோசமான உதாரணத்தை பார்க்கலாம். ஒருவன் ஏதோ அவசியம் ஏற்பட்டு திருடுகிறான். முதல் முறை பயந்து கொண்டே திருடுவான். அடுத்த முறை அவ்வளவு பயமில்லாமல்; சில முறை ஆனதும் பயமே இல்லாமல்; இன்னும் சில காலம் சென்றபின் ஆட்டோமேடிக் ஆக!

இதுதான் சிலர் சில விஷயங்களை ஏன் சட்டென்று பிடித்துக்கொண்டு சிறப்பாக செய்கிறார்கள் என்பதற்கான விளக்கம். சிலருக்கு பாட்டு பாடுவது சட்டென்று வருகிறது. சிலருக்கு நடனம். சிலருக்கு திருடுவது! :-))

இந்த வாசனை பலமானது. இதன் படி ஒரு விஷயத்தை செய்யாமல் இருக்க முடியாது. ஒன்றுமில்லாத விஷயத்துக்கு கோபப்பட்டே பழகியவர் அப்படி கோபப்பட்டுக் கொண்டேதான் இருப்பார். அப்படி இல்லாமல் அவர் இருப்பது ஏறத்தாழ இயலாத காரியம்.

இயலாது என்றால் அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா?
இல்லை. மாற்ற வேண்டிய வாசனை என்று நன்றாகத் தெரிந்தால் அதை மாற்ற முயற்சிகள் செய்தே ஆக வேண்டும். மரத்தில் அடித்த ஆணியை பிடுங்க, அடித்த திசைக்கு எதிர் திசையில் சக்தியை செலுத்த வேண்டும். அது எப்போது பிடுங்கப்படும்? தேவையான சக்தியை பயன்படுத்திய பின்! தேவையான சக்தி எது? அது ஆளுக்கு ஆள் மாறுபடும்! ஆணி அடிக்கப்பட்ட மரத்திந்தன்மை; ஆணி பதிந்து இருக்கும் ஆழம் ஆகியவற்றை பொருத்தது!

இதை நடைமுறை வாழ்கையில் கொண்டு வருவது எப்படி?
எதானாலும் உடனே பழக்கப்பட்ட வழியில் காரியத்தை செய்யாமல் “நோ” என்று சொல்லிவிட வேண்டும்!
அப்புறம் புத்தியை பயன்படுத்தி இந்த வழி சரிதானா என்று பரிசீலனை செய்து காரியத்தை செய்ய வேண்டும். இப்படி செய்ய செய்ய இந்த வாச்னைகள் தேய்ந்து காணாமல் போகும்!
இதையே வாசனா க்‌ஷயம் என்கிறார்கள்!

நம்மில் இருக்கும் அகந்தையும் அசுரத்தனமும் பல விஷயங்களை இந்த வாசனைகள்படி செய்து கொண்டுப்போக காரணம். இதை நினைவுறுத்தவும் அந்த அகந்தையை அழித்துக்கொல்லவுமே சில பண்டிகைகள் வருகின்றன. அவறுக்கு சில வழி முறைகள் சொல்லப்பட்டுள்ளன. தீபாவளியும் அது போன்ற ஒரு பண்டிகையே. அகந்தை அழிந்து நாம் நலம் பெற ஆண்டவனை வேண்டுவோம்! அவர் நம் எல்லோருக்கும் நலம் அளிப்பாராக!


 

No comments: