Pages

Thursday, March 1, 2012

அண்ணா -6


என் கதையையும் இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது!
தெய்வத்தின் குரலை படிக்க ஆரம்பித்து மனம் மாறிப்போனேன். எப்படி இருக்க வேண்டும் என்று பரமாச்சாரியார் சொல்லி, "நானும் யாரானா கேக்க மாட்டாளான்னு கரடியா கத்திண்டு இருக்கேன். கேட்கிறவாதான் கம்மி" என்று சொல்லி இருந்தது மனதை வெகுவாக பாதித்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவர் சொன்னபடி நடக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். சந்தியாவந்தனம் ரெகுலர் ஆயிற்று. பின் கோபால்ஜி சொல்லி தினசரி ஆயிரத்தெட்டு காயத்ரி ஜபம் என்று துவங்கியது. தெய்வத்தின் குரலே எனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்ததால் அண்ணாவை சென்று பார்த்து பேசத்துவங்கினேன். கடிதத்தொடர்பும் ஆரம்பித்தது. அவருடைய வழிகாட்டுதலிலேயே பல அனுஷ்டானங்கள் துவக்கினேன். இந்த சமயத்தில் பலதும் என் மனைவிக்கு உகப்பாக இல்லை. டாக்டராக இருந்துகொண்டு எதுக்கு இதெல்லாம் என்று நினைப்பு. நான் சொன்னால் கேட்க மாட்டார். சண்டை சச்சரவு வரும். அண்ணாவுக்கு அப்பீல் அனுப்புவேன். அண்ணா சமாதானமாக என் மனைவிக்கு கடிதம் எழுதுவார்; அல்லது போனில் பேசுவார். அப்புறம் சரி என்று என் மனைவி ஒத்துக்கொள்வார்.
இப்படியேத்தான் ஔபாசனம், அக்னி ஹோத்ரம் ஆகியவை ஆரம்பித்து தொடர்ந்து நடத்த வும் முடிந்தது. எதற்கு இதை இங்கே சொல்கிறேன் என்றால் புத்தகம் மூலம் கர்மா செய்ய புத்தியை தூண்டியது மட்டுமில்லாமல் அதை செய்யவும் எல்லா உதவிகளையும் செய்தார் என குறிப்பிடவே.
அண்ணாவை சந்திக்கும் எல்லாருமே அண்ணா தன் மீது மட்டுமே இவ்வளவு அன்பு பாராட்டுகிறார் என்று நினைப்பார்கள்! அவரவருக்கு தகுந்த மட்டத்தில் பேசிக்கொண்டு இருப்பார். பெரிய ஆன்மீக விஷயங்களில் இருந்து அக்கப்போர் வரை நபரை பொருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கும்.
சிலர் அவருடன் பேசும் போது தனக்கு இருந்த உடல் உபாதைகள் நீங்கியதாக சொல்வார்கள். நல்ல தலைவலியில் இருந்தேன், போய்விட்டது, ஆஸ்த்மாவில் அவதி பட்டுக்கொண்டு இருந்தேன் போய் விட்டது என்பர். எனக்கோ அண்ணாவை சந்திக்கும் ஒவ்வொரு சமயமும் மைக்ரேன் அதிகமாகிவிடும். கிளறிவிட்டு தீர்க்கிறார் என்று நினைத்துக்கொள்வேன்.
எனக்கு சாதாரணமாகவே மஹா கோபம் வரும். தப்பு என்று தெரிந்தாலும் அடக்க முடியாது. இதை எப்படி நீக்கலாம் என்று ஆலோசனை கேட்டேன். "திருக்களர் போய் அங்கே துர்வாசருக்கு சுப்ரமணியர் தரிசனம் கொடுத்து கோபத்தை நீக்கின ஸ்தலத்தில் ஈஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வா" என்று சொன்னார். உடனடியாக செய்யாவிட்டாலும் கோபம் பெரும்பாலும் போய்விட்டது. தெரியாத்தனமாக "அதான் பெரும்பாலும் போய்விட்டதே, திருக்களர் போகணுமா?” என்று கேட்டேன். ஆமாம் என்றார். அப்படியே போய் வந்தோம். பின்னால்தான் இதை ஒரு வ்யாஜ்யமாக வைத்துக்கொண்டு கோபத்தை தொலத்தவர் யார் என்று புரிந்தது!
ஒரு வருஷம் இளையாத்தங்குடியில் சதஸ் நடந்த பிறகு இவருக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. இவருடைய எழுத்துத்தொண்டை நினைவு கூறும் வகையில் இவருக்கு கையில் தங்கத்தில் ஒரு தோடா போட்டார்கள். ஜஸ்டிஸ் அருணாசலம் தலைமை தாங்கினார் என்று நினைவு. நான் போகும்போது நிகழ்ச்சி துவங்கிவிட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் இவரை பார்க்க முடிந்தது. "நல்ல காலம் நீ வந்திருக்கே! இதை எவ்வளவு தங்கம் இருக்குன்னு பாத்து கொஞ்ச கூட போட்டு பணம் அனுப்பு. இவாளுக்கு எப்படியாவது திருப்ப வேணும்!” என்று சொல்லி தோடாவை என் கையில் கொடுத்துவிட்டார். அதை மதிப்பு போட்டு பணத்தை அனுப்பிவிட்டு தோடாவை என் கையில் போட்டுக்கொண்டுவிட்டேன்! அப்புறம்தான் எழுத்தாளன் ஆனேன் போலிருக்கு! :-)
அவர் தனக்கு எந்தவித சக்தியும் இருப்பதாக காட்டிக்கொள்ளவே இல்லை. அம்பாளிடம் ப்ரார்த்தனை செய்கிறேன். அவள் அனுக்கிரம் பண்ணினாலும் பண்ணுவாள் என்பார். அப்படி 'அனுக்ரஹம்' நடந்த கதைகள் ஏராளம்!

Post a Comment