Pages

Friday, March 6, 2009

மீள் பார்வை - பஞ்சீகரணம்.



கொஞ்சம் கவனமா பாத்துகிட்டே வாங்க.
பஞ்ச பூதம் 10 ஆச்சு. அதாவது எல்லாம் பாதி பாதியா பிரிஞ்சது. 50% -50%
இதில ஒரு பாதி நாலா பிரிஞ்சது. ஒவ்வொண்ணும் 12.5 %. 12.5 *4 =50% சரிதானே!
இப்ப ஒவ்வொரு பூதமும் தன்னோட 50% + மத்த நாலிலே ஒவ்வொண்ணிலேந்தும் 12.5% சேத்துகிட்டு ஸ்தூல பூதமாகும். ரிசல்ட் டுக்கு எது 50% இருக்கோ அதோட பேர் வரும்.
ரிசல்ட் என்னன்னு பாக்கலாமா?
ஸ்தூல பூதத்திலே இருக்கிற தமோ குண சூக்ஷ்ம பூதம்:

From 5


கணக்கு சரியா போச்சா? ஒவ்வொண்ணுத்திலேயும் 100% சரியா இருக்கு.
ஐந்தும் மத்ததோட சேந்து சமஷ்டியா இருக்கு.

பட்டியலிலே தலைப்பை பாருங்க. முதல் வரி முதல் பத்தியிலே (column) இருக்கிற ஸ்தூல பூதம் என்கிறது மேலிருந்து கீழே உள்ள எல்லாத்துக்கும் தலைப்பு. முதல் வரில (row) இருக்கிற மீதி அதே போல ஒவ்வொரு பத்தியிலேயும் (column) இருக்கிற சூக்கும பூத பாகத்துக்கான தலைப்பு.

உதாரணமா ஆகாச ஸ்தூல பூதத்தை எடுத்துக்கலாம். அதாவது நம்ம கண்ணுக்கு தெரியற ஆகாசம். அதிலே என்ன இருக்கு? அது 100% ஆகாச சூக்ஷ்ம பூதம் இல்லை. 50% தான். மீதி 50% வாயு, அக்னி, நீர், நிலம் நாலும் சமமா இருக்கும். இதைதான் அட்டவணையிலே இரண்டாவது வரி சுட்டிக்காட்டுது.

உதாரணமா சூக்ஷ்ம பூதமான மண் எப்படி எல்லாம் பிரிஞ்சு விரவி இருக்கு?
அது ஸ்தூல (அதாவது நாம பாக்கக்கூடிய) மண்ணிலே 50% உம், ஸ்தூலமா இருக்கிற மத்த நாலிலே (ஆகாசம், வாயு, அக்னி, நீர்) மீதி சமமாயும் பிரிஞ்சு இருக்கு. இதைதான் கடைசி பத்தி காட்டுது.

இந்த பஞ்ச பூதங்கள்தான் சாதாரணமா நம்ம வாழ்க்கையிலே அடிபடறவை. அதாவது நாம கண்ணாலப்பாக்கிற ஆகாயம், வீசி அடிக்கிற வாயு, சுடுகிற அக்னி, குடிக்கிற தண்ணீர், பயிர் செய்கிற மண், இப்படி.
(இதை ரொம்ப ஸ்டிரிக்ட்டா எடுத்துக்கக்கூடாது. நீர் ன்னா தண்ணீர் மட்டுமில்லே. எல்லா திரவங்களும்தான். மண்ணுனா மண் மட்டுமில்லே. கல், மணல் போல எல்லாமும்தான். அக்னி சமைக்கிற நெருப்பு மட்டுமில்லே மின்னலும்தான்.)

இவற்றிலேந்து நாலு வகை யோனி - பிறப்பிடம், ஏழு வகை தோற்றமா தூல (solid) உடம்புகள் வந்தன.
நாலு வகை யோனி?
1. சராயுஜம். ஒரு கர்பப்பை. அதில இருந்து வளர்ந்து உரிய காலத்திலே பிறக்கிறது. பாலூட்டிகள்.
2. அண்டஜம். முட்டையிலேந்து பிறக்கிறது. பறவைகள், மீன்கள் போல
3. ஸ்வேதஜம் வேர்வையிலேந்து பிறக்கிறது. இது கொஞ்சம் புதிராதான் இருக்கு. விஞ்ஞான ரீதியா பாத்தா வியர்வை சுரப்பிகள்ள இருக்கிற சில பாக்டீரியாதான் சொல்லலாம். பேன் போன்றதுன்னு நான் பாக்கிற உசாதுணை நூல்லே இருக்கு. சில உயிரினங்கள் இருந்து காலப்போக்கிலே மறைந்து போயிடுத்தோ என்னவோ!
4. உத்பிஜம் - விதையிலேந்து வருபவை. தாவரங்கள்.

ஏழு வகை பிறப்பு?
1.தேவர்
2.மனிதர்
3.விலங்குகள்
4.பறவைகள்
5.ஊர்வன
6.நீர் வாழ்வன
7.தாவரங்கள்

இவை அனைத்தும் உத்தம ஜாதி, (1,2) மத்திம ஜாதி (3,4,5) மற்றும் அதம ஜாதி(7) ன்னு பிரியும்.

இவை எல்லாம் எங்கே நிலை பெறும்? அதாவது இருக்கும்? ஈரேழு பதினாலு லோகம்ன்னு நாம் கேள்விப்பட்ட 14 உலகங்களிலே. இவற்றை மேல் லோகங்கள் - பூ, புவ, சுவ, சன, தபோ, மகா, சத்திய லோகம்) + அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதால ஆகிய7 கீழ் உலகங்கள் ன்னு வகைப்படுத்தி இருக்காங்க. இந்த 14 உலகங்களும் இதே பஞ்ச பூதங்களிலிருந்துதான் வரும்.

அது சரி வந்தாச்சு. இவை எப்படி உயிர் வாழும்? இதே பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகிற அன்னம் முதலான பல அனுபவிக்கிற பொருட்களால உயிர் வாழும்.

41.
ஐந்து பூதமும் பத்தாக்கி யவைபாதி நன்னான் காக்கி
நந்துதம் பாதிவிட்டு நான்கொடு நான்குங்கூட்ட
வந்தன தூலபூத மகாபூத மிவற்றினின்றுந்
தந்தன நான்காந்தூல தநுவண்ட புவனபோகம்.

ஐந்து பூதமும் பத்தாக்கி (ஒவ்வொன்றையும் இரண்டாக்கி) அவை பாதி நன்னான்காக்கி (அவற்றின் ஒரு பாதியை வைத்து மற்ற பாதியை ஒவ்வொன்றையும் நான்கு ஆக்கி) நந்து தம் பாதி விட்டு (பெரிய அரைப்பாகங்களில் தத்தம் பாகத்தை விட்டு ) நான்கொடு நான்கும் கூட்ட (மற்ற 4 பூதங்களின் அரைக்கால் பாகத்துடன் கூட்ட) வந்தன தூல பூதம். மகாபூதம் இவற்றினின்றும் தந்தன (சிருட்டிக்கப்பட்டன) நான்காம் (சராயுசம், அண்டசம், சுவேதசம், உற்பீசம் ஆகிய 4 யோனிகளில் பிறக்கும்) தூல தநு (பரு உடல்) அண்ட (பிரமாண்டங்கள்) புவன (பூ, புவ, சுவ, சன, தபோ, மகா, சத்திய ஆகிய7 மேல் உலகங்கள் + அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதால ஆகிய7 கீழ் உலகங்கள்) போகம் (அன்னம் முதலானவை).




Thursday, March 5, 2009

மீள் பார்வை - தன் மாத்திரையின் தமோ குணம்



இன்னும் தமோ குணம் பாக்கி இருக்கு. கொஞ்சம் நிதானமா பாத்தா இதுவும் புரிஞ்சுடும்.

சத்வம் ன்னாலே அறிவு. ராஜஸம்னாலே செயல். அது போல தாமசம்னாலே மந்தம்.

சத்வம்னா சூக்ஷ்மம். ராஜசமும் அப்படிதான். ஆனா வெளிப்பாடு இருக்கும். தாமசம்ன்னா கண்ணுக்கே தெரியும்.

கண்ணுக்கு தெரியறது அன்னத்தாலே வளர்ந்த அன்ன மய கோசம். அதனாலே இது தாமசமாதானே இருக்கணும்?

செயலா இருக்கிறது 1. ப்ராண வாயு உலாத்தற ப்ராணமய கோசமும் 2. செயல்கள் நடக்கிற விக்ஞான மய கோசமும் 3. அல்லல் படும் மனசு இயங்கற மனோ மய கோசமும். சரிதானே? அதனால இது அத்தனையும் ராஜசம்.

ஞானத்தோட ஆனந்தமா எப்பவுமிருக்கிறது ஆனந்த மய கோசம். இது சத்வம்.
சரியா?

இப்ப இந்த சரீரங்கள், கோசங்கள், தன் மாத்திரைகள் - இதுக்கெல்லாம் ஒரு தொடர்பு தெரியுது இல்லையா?

சத்வம்- ஆனந்த மய கோசம்- காரண சரீரம்
ரஜஸ் - பிராண, மனோ, விஞ்ஞான மய கோசங்கள் - சூக்ஷ்ம சரீரம்.
இப்ப வரது தமஸ் - அன்ன மய கோசம் - ஸ்தூல சரீரம்.

ஒரே விஷயங்கள் வெவ்வேற மாதிரி- வார்த்தைகள்ளே சொல்லப்படுது. அவ்வ்ளோதான். இதை சரியா புரிஞ்சுகிட்டா இனிமே குழப்பம் இருக்காது.

தமோ குணத்து சமாசாரம் என்னன்னா ஈஸ்வரன் அதை ஒரு வடிவம் கொடுத்து நாம் பாக்கிறாப்பல செய்யறான். சூக்குமமா இருந்த அத்தனையும் இப்ப நாம பாக்கிறாப்போல ஸ்தூலமா இருக்கு.

என்னவா பாக்கிற மாதிரி ஆயிடுது?
ஆகாயம், வாயு, அக்னி, நீர், மண்.
அட இதையே முன்னால சொல்லல்லை?
அப்ப சொன்னது இதே பெயர்கள்தான். ஆனா அதெல்லாமே வெறும் தத்துவமா இருந்தது- சூக்ஷுமமா. பாக்கிறாப்பல இல்லை.
இப்ப தமோ குணத்திலேந்து பாக்கிறாப்பல வருது. ஆனா அதே பெயர்கள்தான்.

இது நடக்கிறது ஒரு ப்ராஸஸ்ஸாலே. அதுக்கு பஞ்சீகரணம் ன்னு பேர்.

40.
சூக்குமசகமிம் மட்டுஞ் சொல்லினோ மிப்பாற்றூலம்
ஆக்குமா ரோபந்தானு மடைவினின் மொழியக்கேளாய்
தாக்குமிவ் வுயிர்க்குத்தூல தநுவும்போகமு முண்டாகக்
காக்குமவ் வீசன்பஞ்சீ கரணங்கள் செய்தான்றானே

சூக்கும சகம் இம்மட்டும் (இது வரை) சொல்லினோம். இப்பால் தூலம் ஆக்கும் (தூல தேகம் முதலான பிரபஞ்சம் உண்டாகும்) ஆரோபந்தானும் (அத்தியாசத்தையும்) அடைவினில் (கிரமமாக) மொழிய கேளாய். [சூட்சும தேகத்தில்] தாக்கும் (சம்பந்தமான) இவ்வுயிர்க்கு (இந்த சீவர்களுக்கு) [கர்மத்துக்கு தக்க] தூல தநுவும் (தேகமும்) [விஷய] போகமும் உண்டாக, காக்கும் அவ்வீசன் (தமோ குண அம்சம் ஐந்தினையும்) பஞ்சீகரணங்கள் (ஐந்தாக பிரித்தல்) செய்தான்.



சூக்ஷ்ம சரீரம்.


நேத்து பப்ளிஷ் பண்ண இதை ப்ளாகர் வேதாளம் முழுங்கிடுத்து போல இருக்கு. எங்கே போஸ்ட் காணோம்னு மெயில் பாத்து இப்ப போஸ்ட் பண்ணி இருக்கேன்!
-----
அடுத்து போலாமா?
சீவனோட சூக்ஷ்ம சரீரத்துக்கு ஒரு பேர்: தைசதன் (ஸம்ஸ்க்ருதம்: தைஜஸன்)
ஈசனோட சூக்ஷ்ம சரீரத்துக்கு ஒரு பேர்: ஹிரண்ய கர்ப்பன். (அப்பாடா கொஞ்சம் தெரிஞ்ச பேரா இருக்கு!)
ஒரு பூர்த்திக்காக பாடலையும் புத்தகத்தில கொடுத்த பொருளையும் கொடுக்கிறேன். புரிஞ்சா நல்லது, புரியலைனா ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். கருத்து எப்படியும் பதிவிலே வந்துடும்.

39.
சூட்சும தேகத்தால் சீவ ஈஸ்வரர்களுக்கு உண்டாகும் பெயர்கள்:

இவ்வுடன் மருவுஞ் சீவனிலங்குதை சதனென் றாவன்
இவ்வுடன் மருவுமீசனிரணிய கர்ப்பனாவன்
இவ்வுட லிரண்டு பேர்க்கு மிலிங்கசூக்குமச ரீரம்
இவ்வுடற்கோச மூன்றாமிது கனாவவத் தையாமே

இவ்வுடல் [உடன்] மருவும் (சேரும்) சீவன் இலங்கு தைசதன் (ஸம்: தைஜஸன்) என்றாவன். இவ்வுடல் மருவும் ஈசன் இரணிய கர்ப்பன் ஆவன். இவ்வுடல் இரண்டு பேர்க்கும் இலிங்க சூக்கும சரீரம். இவ்வுடல் கோச மூன்றாம் (பிராணமய, மனோமய, விஞ்ஞானமய கோசங்கள்) இது கனா அவத்தையாமே.

வியட்டி (வியஷ்டி) சூட்சும சரீரத்தை அபிமானித்துக்கொண்டு பிரகாசமாக உள்ள அந்தக்கரணத்துடன் சம்பந்தப்பட்டவன் -தைசதன்; சமட்டி (சமஷ்டி) சூட்சும சரீரத்தை அபிமானித்துக்கொண்டு ஞான சக்தியுடன் கூடி சகல அந்தக்கரணத்தையும் பிரகாசிபிக்கிறவன் -ஹிரண்யகர்பன்;

இந்த சூக்ஷ்ம சரீரம் காரண சரீரம் போல தெரியாது இருக்காது, ஸ்தூல சரீரம் போல பிரத்தியட்சமாகவும் தெரியாது.

ஒரு கை தேர்ந்த சித்திரக்காரர் துணியில் ஒரு படம் வரையுமுன்னே என்ன செய்வார்? இங்கேயும் அங்கேயும் சில கோடுகளை கிழிப்பார். நாம அத பாத்து அட ஒரு ஆனை படம் போடப்போறார் ன்னு கண்டுபிடிச்சுடுவோம். கிழிக்கும் கோடுகள் வரையவிருக்கும் படத்தை அனுமானிக்க உதவுவது போல (-லாஞ்சன படம்): சூக்கும சரீரம் தெளிவா இருக்காது, ஆனா அது இருக்கணும் ன்னு அநுமானத்தால் அறியப்படுது.

நான் செயலாற்றுபவன், இச்சை உள்ளவன், பலமானவன், ஞானம் உள்ளவன், சங்கற்பம் செய்பவன், மதிமான் என பலவிதமாக சீவன் தன் யதார்த்த ஸ்வரூபம் தெரியாது சீவனிடத்தும், ஈஸ்வரன் இத்தகையவன் என சீவன் அறியாதவாறு ஈஸ்வரனிடத்தும் உள்ள பிராண, மனோ, விஞ்ஞான மறைப்பை 3 கோசங்களாக சொல்லப்பட்டது.

நான் செயல் செய்பவன்னு நினைச்சாலும் இந்த வெத்து உடம்பால -ஸ்தூல சரீரத்தால- அது நடக்காது; அதுல வேற ஏதோ சக்தி இருந்துதான் அதை செய்விக்கிறதுன்னு நமக்கு தெரியும். இது அனுமானம். இந்த சக்திகள் எங்கே இருக்கு? அதான் சூக்கும சரீரம். இந்த சூக்கும சரீரத்தில இருக்கிற மனசு செயலை செய்ய நினைக்கனும்; ப்ராணன் அதுக்கு ஒத்துழைச்சு சக்தி தரனும்; கை கால்கள் மனசு நினைச்ச வேலையை செய்யனும். இருந்தாலும் இதெல்லாம் ஈஸ்வரனால நடக்குது நம்மால இல்லைன்னு நமக்கு தெரியறது இல்லை. இதான் மறைப்பு.

வாசனா ரூபமாய் சூட்சுமமாயிருந்து மனோ ராஜ்யம் செய்தல் ஜீவ ஈஸ்வரர்களுக்கு ஸ்வப்னம் என்பதால் கனா அவத்தை எனப்பட்டது.

நினைவுறுத்தல்: சரீரங்கள் மூன்று: ஸ்தூல சரீரம் - நாம் பார்க்கக்கூடியது. சூக்சும சரீரம் = பார்க்க முடியாதது ஆனால் அநுமானிக்கூடியது. காரண சரீரம் = இவற்றுக்கு காரணமாக உள்ளது; ஆணவம், கன்மம், மாயை சேர்ந்தது.

இன்னும் தமோ குணம் பாக்கி இருக்கு. கொஞ்சம் நிதானமா பாத்தா இதுவும் புரிஞ்சுடும்.



Tuesday, March 3, 2009

மீள் பார்வை - தன் மாத்திரையின் ரஜோ குணம்



சரி, அப்ப தன் மாத்திரையின் ரஜோ குணம்?
ரஜோ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் கூடி இருந்து ப்ராணன் முதலான 5 வாயுக்களும் உண்டாகும்.
ரஜோ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் பிரிந்து இருந்து கர்ம இந்திரியங்கள் உருவாகும்.

ரஜோ குணம்னாலே செயல்தான் நினைவு வரணும்.
செயலுக்கு மூச்சு அவசியம் இல்லையா? அதாவது ப்ராண வாயு அவசியம். அதான் பஞ்ச ப்ராணன்கள்.
அதே போல செயலுக்கு கருவிகள் அவசியம். அதான் கர்ம இந்திரியங்கள்.
சரியா போச்சா?

பஞ்ச ப்ராணன்கள்.
பிராணன் முதலான வாயுக்கள் 5.
கூட்டால உண்டானாலும் அந்த அந்த தன் மாத்திரையோட குணம் இருக்கும்ன்னு பாத்தோம் இல்லையா?
1.வியானன் - ஆகாயத்தின் ரஜோ குணத்தில பிறந்த இது ஆகாயம் எல்லா இடத்திலேயும் வியாபித்து இருக்கிறது போல உடம்பு முழுக்க வியாபித்து, ரத்தத்தை பரவ செய்து உடம்பை தாங்கி நிற்கும்.
2.பிராணன் - வாயுவோட ரஜோ குணத்தில உற்பத்தியானது. அதனால எப்போதும் உள்ளும் வெளியும் போய் வந்து கொண்டே இருக்கும். ஹ்ருதயத்திலே தங்கி எப்பவும் நகர்ந்து கொண்டு பசி, தாகம் இதையெல்லாம் உண்டாக்கும். இன்னும் சாப்பிடவே இல்லை; பசி பிராணன் போகிறது ன்னு கேட்டு இருக்கோம் இல்லையா? வெளியேந்து காற்றை உள் வாங்குகிறதும் இதுவே. மொத்தத்திலே மெடபாலிஸம் கவனிக்கறது முக்கியமா இதே.
3.அபானன் - நெருப்பின் ரஜோ குணம். அதோட ஒரு குணம் எதானாலும் சுத்தப்படுத்தறது இல்லையா? அதே போல இது மல ஜலாதிகளை வெளியே தள்ளி சுத்தப்படுத்திடும். மலச்சிக்கல் வராம இருக்க இது சரியா வேலை செய்யணும்.
4.சமானன் - நீர் தத்துவம். இதோட இடம் நாபி (தொப்புள்). நாம சாப்பிட்ட உணவு, குடிச்ச நீர் இதை எல்லாம் உள்வாங்கி செரிக்க வைக்கும். இது சரியா இல்லைனா அஜீரணம்தான், உடம்பு சரியா வளரவும் வளராது.
5.உதானன் மண்ணோட ரஜோ குணத்திலேந்து வந்தது. கண்டம் (தொண்டை) யிலே இருந்து காத்து உள்ளே வெளியே போவதை கட்டுப்படுத்தும். அதுதான் பேச்சுக்கு முக்கியம் இல்லையா?

இந்த அஞ்சு தவிர இன்னும் அஞ்சு உபவாயு இருக்குன்னு ஒரு பார்வை.
நாகன் - உடம்பை முறுக்கி ஆவ் ன்னு கொட்டாவி விடறப்ப இது வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கலாம்.
கூர்மன் -விக்கலும் ஏப்பமும் வந்தா இதோட வேலைன்னு அறிவோம்.
கிரிகரன் - ஹச் (இல்லைங்க, செல் போன் கம்பெனி இல்லை, தும்மல்) உண்டாக்கறது இது.
தேவதத்தன் - சிரிக்கிறப்பவும், சோகப்படறப்பவும் சினிமாவிலே கதாநாயகி அழுது மூக்கை சிந்தி போடறப்பவும் - இது சுறுசுறுப்பா இருக்கு.
தனஞ்செயன்- நம்ம பிராணன் போன பிறகு உடம்பிலே தங்கி இருந்து 5 ஆவது நாள்ல அதை வீங்கி வெடிக்கப்பண்ணுவது.
இந்த 5 உபவாயுக்களும் பிராண வாயுவோடா வெவ்வேற நிலைதான், அதனால வாயுக்கள் அஞ்சுதான் ன்னும் சொல்கிறாங்க.

தனித்தனியா நின்னு வேலை செய்கிற தன் மாத்திரைகளோட ரஜோ குணம் என்ன ஆகுது?
கர்ம இந்திரியங்களா.
தனித்தனியா என்கிறதால வெவ்வேற இடங்கள்ல இருந்து கொண்டு வேலை செய்யும்.

கர்ம இந்திரியங்கள் ஐந்து:
1.வாக் - ஆகாய ரஜோ குணம். ஆதனால ஆகாயத்திலே பேச்சு பரவும்.
2.கை - வாயுவோட ரஜோ குணம். சலித்துகிட்டே இருக்கணும். ஏண்டா கை வெச்சுகிட்டு சும்ம இருக்க முடியாதுன்னா, ஆமாம்! அதோட இயபான குணம் அது!
3.கால் - அக்னியோட ரஜோ குணம்.
4.பாயுரு - ஜல மலம் கழிக்கிற வேலை. நீரோட குணம். ஓடிகிட்டே இருக்கணும். அதே போல கழிவுப்பொருள் வெளீயே போய்கிட்டே இருக்கணும். இல்லாட்டா பிரச்சினைதான்!
5.உபஸ்தம் - ஆண் குறி/ பெண் குறி : மண்ணோட ரஜோ குணம். ஆனந்தத்தை உண்டாக்கும்.


இந்த பதினேழும் அதாவது ஐந்து ஞானேந்திரியங்கள் + மனம் + புத்தி + ஐந்து வாயுக்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் = பதினேழு தத்துவங்களும், சுரர் அசுரர் நரர் விலங்குன்னு தோன்றி இருக்கிற உயிர்களுக்கு எல்லாம் (சீவர்க்கெல்லாம்) சூட்சும சரீரங்கள்.

முன்ன சொன்ன மாதிரியே இதெல்லாம் நாம பாக்கிற கை கால் இல்லை. அவற்றை இயக்கற சக்திகள்.

38.
இராசத குணத்தில் வேறிட் டெடுத்தகூ றைந்து மைந்தும்
பிராணவா யுக்களென்றும் பெருந்தொழிற் கருவியென்றும்
பராவிய பெயரா மிந்தப் பதினேழு மிலிங்க தேகம்
சுராசுரர்நரர் விலங்காய்த் தோன்றியவுயிர் கட்கெல்லாம்.

இராசத (ரஜோ) குணத்தில் எடுத்த (எடுத்து ஒன்றாக்கிய) கூறு ஐந்தும் பிராண வாயுக்கள் என்றும், வேறிட்டு எடுத்த (தனித்தனியே எடுத்து வைத்த) ஐந்தும் பெருந் தொழிற் கருவி (கர்மேந்திரியங்கள்) என்றும் பராவிய (பரவிய) பெயராம். இந்த பதினேழும் (ஞானேந்திரியங்கள் ஐந்து + மனம் + புத்தி + ஐந்து வாயுக்கள் + ஐந்து கர்மேந்திரியங்கள் = பதினேழு தத்துவங்களும்) சுரர் அசுரர் நரர் விலங்காய் தோன்றிய உயிர்கட்கு எல்லாம் (சீவர்க்கெல்லாம்) இலிங்கதேகம். (சூட்சும சரீரங்கள்)



Monday, March 2, 2009

மீள் பார்வை -சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகள் ஞான இந்திரியங்கள்



5 தன் மாத்திரைகளும் தனியாகவும் கூட்டாகவும் இருந்து வெவ்வேறு விதமா வெளிப்படும்.
தனியா நிக்கிறதை வியக்தி ன்னும் கூட்டு போட்டு இருக்கிறதை சமஷ்டி ன்னும் சொல்வாங்க.
அதாவது வியக்தி தனி மரம் போல; சமஷ்டி தோப்பு போல.

சரியா?
சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் கூடி இருந்து அந்தக்கரணம் உருவாகும்.
சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகளும் பிரிந்து இருந்து ஞான இந்திரியங்கள் - புலன்கள் உருவாகும்.

அந்தக்கரணம் பத்தி இங்கே பாத்தோம். இது ஒண்ணே ஆனாலும் செய்கிற வேலையின் தன்மை படி ஐந்தா இருக்குன்னு பாத்தோம். அதான் சமஷ்டி சமாசாரம்!

ஞான இந்திரியங்கள் அஞ்சு.
காதின் கேட்டல் ஆகாய சத்வ குணம்.
தோலின் தொடுணர்ச்சி வாயுவின் சத்வ குணம்.
கண்களோட பார்த்தல் அக்னியின் சத்வ குணம்.
நாக்கோட ருசித்தல் நீரோட சத்வ குணம்.
மூக்கின் நுகர்தல் மண்ணின் சத்வ குணம்.

நாம நினைவு வைக்க வேண்டியது இதெல்லாம் நாம் பார்க்கிர கண் காது மூக்கு இல்லை.
கண் இருந்தாலும் பாக்கமுடியாம இருக்கலாம். காது இருந்தாலும் கேட்க முடியாம இருக்கலாம். அதே போல வாசனை தெரிய முடியாம இருக்கலாம். இது பிறவிலேந்தும் இப்படி குறை இருக்கலாம். அல்லது பிற்காலத்திலும் ஏற்படலாம்.
பின்னே கண் காது மூக்கு இருந்தும் எப்படி அதெல்லாம் இயங்கலை?

நம் நாட்டு தத்துவப்படி கண் சும்மா பாக்காது. காது சும்மா கேட்காது. அந்தந்த புலன்கள்லேந்து ஒரு சக்தி கிளம்பி பொருளை தொடணும். தொட்டு திரும்பி அதே புலனுக்கு வரணும். அப்பதான் அந்த செயல் பூர்த்தி ஆகும்.
இந்த ஏதோ ஒரு சக்திதான் மேலே பார்த்தல் கேட்டல் ன்னு பாத்த சத்வ குண சக்தி.
ஞான புலன்கள் இந்த சக்திகள்தான்.

இந்த அந்தக்கரணங்களும் ஞான இந்திரியங்களும் சத்வ குணத்திலேந்து வந்ததாலே ஞானத்துக்கு சாதனமா - ஞானம் அடைய உதவுகிற கருவிகளா- ஆகும்.

37.
தன் மாத்திரையின் சத்துவ குணத்தில் அந்தக்கரண ஞானேந்திரிய உற்பத்தி:

ஆதிமுக் குணமிப் பூத மடங்கலுந் தொடர்ந்து நிற்கும்
கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவியாகும்
ஓதிய பின்னை யைந்து முளம்புத்தி யிரண்டா ஞான
சாதன மாமிவ் வேழுஞ் சற்குணப் பிரிவி னாலே

ஆதிமுக்குணம் (தன் மாத்திரைகளுக்கு காரணமான சத் ரஜஸ் தமஸ் முதலான 3 குணங்களும்) இப்பூத மடங்கலும் (இத் தன்மாத்திரைகள் ஐந்திலும்) தொடர்ந்து (கூடி) நிற்கும். கோதில் (குற்றமில்லாத) வெண் குணத்தில் (சத்துவத்தில்) ஐந்து கூறு உணர் கருவியாகும். (ஞானேந்திரியங்கள்). ஓதிய (சொல்லப்பட்ட) பின்னை ஐந்தும் உளம் புத்தி இரண்டாம் (மனம் புத்தி எனும் இரு பரிணாமம் உடைய அந்தக்கரணமாம்). இவ்வேழும் சற்குணப் பிரிவினாலே (சத்துவ குண அம்சமானதால்) ஞான சாதனமாம் (ஞானேந்திரியங்கள், அறி கருவிகள்).
--
நினைவுறுத்தல்: தன்மாத்திரைகள் ஐந்து- ஆகாயம், வாயு, அக்னி, நீர், மண். ஞானேந்திரியங்கள் ஐந்து- காது, மூக்கு, கண், நாக்கு, தோல்
--