Pages

Sunday, December 14, 2008

சமம்


மூணாவதா சமாதி ஷட்சம்பத்தி.

முதல்ல சமம்.
சமம் என்பது அகக்கரண தண்டம். அதாவது உள்ளே இருக்கிற கருவியை கண்டிக்கிறது - கருவி மேல கன்ட்ரோல். அட அதென்னப்பா உள்ளே இருக்கிற கருவி?

மனம், புத்தி, சித்தம், அகங்காரம், உள்ளம் இது ஐந்தும் சேர்ந்ததுதான். அதுக்கு அந்தக்கரணம்ன்னு பேரு. தமிழ்ல அகக்கரணம்.

இதை கட்டுப்படுத்தறதே சமம். இந்த மனம் இச்சையால அலைஞ்சு கொண்டே இருக்கு. இதோட நிறைவேறாத ஆசைகளாலதான் அடுத்த பிறவியே வருது. அதனால இத அதோட இஷ்டப்படி அலைய விடாமல் தடுக்கணும்.

இந்த அஞ்சும் உண்மைல ஒண்ணே -வேற வேற வடிவம். தண்ணீரையே அது இருக்கிற விதத்தை பாத்து ஐஸ் கட்டி, மூடுபனி, தண்ணி, நீராவி ன்னு வேறு வேறா சொல்கிறோம் இல்லையா? அது போல ஒரே விஷயம் அஞ்சா வடிவம் பெற்று இருக்கு. அதனால இவை ஒண்ணுக்கொண்ணு உதவி பண்ணி நிக்கும்.

உதாரணமா காலை சீக்கிரம் எழுந்திருக்க நினைக்கிறோம். நாலு மணிக்கெல்லாம் எழுந்தாதான் சரிப்பட்டு வரும்ன்னு புத்தி சொல்லுது. அப்படியே நினைச்சுகிட்டு படுக்கிறோம். காலை அலாரம் அடிக்குது. புத்தி எழுதிரிடான்னு சொல்லுது. மனசு ஒத்துக்கலை. இன்னும் அஞ்சு நிமிஷம்ன்னு சொல்லுது. புத்திக்கு தெரியும் - அப்படியே விட்டா திருப்பி தூங்கிடுவோம், எழுந்திரிக்க மாட்டோம்ன்னு. இருந்தாலும் அது பேசாம விட்டுவிடும். காலை மெதுவா எழுந்தபிறகு ¨அடடா இப்படி தூங்கிட்டோமே¨ன்னு தோணுமா! அப்ப ஏன் சீக்கிரம் எழுந்துக்க முடியலைன்னு புத்தி அருமையான விளக்கம் கொடுத்து மனசை குற்ற உணர்ச்சிலேந்து காப்பாத்திடும்! ரொம்ப குளிரா இருந்தது, படுக்கவே லேட்டா போச்சு. ஆறு மணி நேரமாவது தூங்கலைனா உடம்புக்கு நல்லது இல்லை- இப்படி ஏதோ ஒண்ணு!

சாதாரணமா இப்படி புத்தி மனசுக்கு துணை போகும். ஆனா நாம் பெரிய முயற்சி பண்ணி புத்தி சொல்கிறது போல நடக்கணும். புத்தியும் நல்ல புத்தியா இருக்கணுமே? சின்ன வயசுல சாமிக்கிட்ட வேண்டிக்க அம்மா சொல்லி தந்தப்ப ¨சாமி நல்ல புத்தி கொடு¨ ன்னுதான் சொல்லி கொடுத்தாங்க! இப்ப எப்படின்னு தெரியலே! நல்லதையே யோசிச்சு நல்லதையே படிச்சு நல்லதையே செஞ்சு நல்லதையே பேசி இந்த நல்ல புத்தியை வளத்துக்கணும். ஒரு போதும் கெட்ட விஷயங்களுக்கு இது துணை போகக்கூடாது. மூர்க்கமான புத்தி மனசு வேணா வேணான்னு அடிச்சிகிட்டாக்கூட பிடிவாதமா கெட்ட செயலை செய்யும். ஏன் செய்யணும்ன்னு சரியான காரணம் கற்பிக்கவும் அதுக்குத்தெரியும்.

சித்தம். அதையும் கட்டுப்படுத்தணும். புத்தி சொல்லுது ஜபம் நல்லதுன்னு. மனசும் இடங்கொடுத்தாச்சு. ஜபத்துக்கு உக்காருகிறோம். முதல்ல சிந்தனை ஜபத்திலே நல்லா போகுது. கொஞ்ச நேரம் கழிச்சு வேற எங்கேயோ போகுது. ஏதேதோ சிந்தனைகள். திடுதிப்புன்னு நமக்கு ஞாபகம் வர ¨அடடா ஜபம் பண்ண உக்காந்து வேற எங்கேயோ போயிட்டோமே¨ ன்னு நினைச்சு வருத்தப்படறோம். இது சித்தத்து மேலே கட்டுப்பாடு இல்லைன்னு காட்டுது.

அகங்காரம் எல்லாத்தையும் போட்டு கவுக்கிற திறமை கொண்டது. அடங்கறா மாதிரி அடங்கி மெதுவா கள்ளத்தனமா மேலே வந்து முழு கண்ட்ரோலும் பிடிச்சுடும். ¨என்னடா நல்லபடியாதானே இருந்தாரு, ஜபம், பூஜை எல்லாம் பண்ணி ஆசாமிய பாத்தாலே கும்புடுற மாதிரி இல்லே ஒரு நிலைல இருந்தாரு. இப்ப என்ன போல ஜபம் தவம் பண்ண ஆசாமி உண்டான்னு சொல்லிகிட்டு திரியறாரே. அவ்ளோ அகங்காரமா¨ ன்னு மக்கள் யோசிப்பாங்க.
அவருக்கோ எப்ப இப்படி ஒரு நிலை வந்ததுன்னே தெரியாது.


**

திடீர்ன்னு மனசு ன்னு ஆரம்பிச்சு அஞ்சு விஷயம் சொல்லி குழப்பறேனா? முன்னாலேயே ஒரு தரம் குழப்பியாச்சு!
சரி. இப்ப இதை தெளிவு படுத்திக்கலாம்.
பஞ்சீகரணம் என்கிற நிகழ்வு பற்றி பின்னால வரப்போகுது. இப்ப அனாவசியமா அதைப்பத்தி வேண்டாம். அந்த சமயத்தில இன்னும் விரிவா சொல்றேன். இப்ப கொஞ்சம் மட்டும் தெரிஞ்சுக்கலாம்.
இந்த பஞ்சீகரணத்தால அந்தக்கரணம் உண்டாகும். இது 5 வகையாக காட்சி அளிக்கும்.
உள்ளம் என்கிறது ஆகாய தத்துவம். அதனால் மற்றா எல்லா அந்தக்கரண காட்சிகளுக்கும் இடம் கொடுக்கும். அதான் அதோட வேலை.
மனம் என்கிறது வாயுவின் தத்துவம். அதனால சலித்து (நிலையா இல்லாம அலைபாய்ந்து) கொண்டே இருக்கும்.
புத்தி அக்னி தத்துவம். அதனால அது விஷயங்களை வெளிச்சம் போட்டு தெளிவா, பிரகாசமா காட்டிகிட்டே இருக்கும்.
சித்தம் நீர் தத்துவம். அதனால் அது ஒண்ணுலேந்து ஒண்ணை பற்றிகிட்டு போய்கிட்டே இருக்கும். எண்ண ஓட்டம் என்கிறது இதுதான். சித்தத்தை சிவன் பால் வைத்து என்கிறதும் இதனாலதான். அவனைப்பத்தியே எண்ணம் போகணும்னு அப்படி சொல்கிறது. சாதாரணமா அப்படி இல்லை நமக்கு. ஒரு பேப்பர் எடுத்துக்கிட்டு 5 நிமிஷம் முன்னால என்ன நினைச்சுகொண்டு இருந்தோம் ன்னு எழுதி அப்புறம் அப்புறம்ன்னு போய்கிட்டே இருந்தா செஸ் குதிரை கணக்கா அது எங்கெங்கோ போறதை பாக்கலாம்.
கடைசியா அகங்காரம். இது நில தத்துவம். அதோட குணம் எதையும் கடினமா எதிர்த்து நிக்கிறது. அதே போல அகங்காரம் மத்த யார் சொல்கிறதையும் கேக்காம எனக்கு நிகர் யாரும் இல்லைன்னு சொல்லிகிட்டு பிடிவாதமா நிக்கும். இதை நீக்க செய்கிற எல்லா முயற்சிகளையும் அது கடுமையா எதிர்க்கும்.
**




9 comments:

கபீரன்பன் said...

பஞ்சகரணங்களை பஞ்ச பூதத்தோடு சம்பந்தபடுத்திய விளக்கம் நன்றாக இருக்கிறது.

நன்றி

திவாண்ணா said...

நன்றி கபீரன்பன்!இந்த லெவல் கொஞ்சம் தயக்கமா இருந்தது. இப்ப இல்லை. :-))

jeevagv said...

அருமை, எளிமையா எல்லோருக்கும் புரியும்படியா இருக்கு.

geethasmbsvm6 said...

விளக்கம் நல்லா இருக்கு, எளிமையாவும்.

ஆனால் நான் காலம்பர 4 மணிக்கோ, இல்லை 5 மணிக்கோ எழுந்துக்க நினைச்சால் சரியா அதுக்கு பத்து நிமிஷம் முன்னாலேயே முழிச்சுப்பேன். இதை என்னனு சொல்லலாம்?? அலாரம் மனசிலேயா? இல்லை புத்தியிலேயா? இல்லைனா இரண்டும் சேர்ந்து இம்மாதிரி செய்ய வைக்குதா?? இது வரைக்கும் கடிகார அலாரம் எழுப்பி எழுந்துக்கணும்னு இல்லை. இனிமேல் தெரியாது. இதுவும் ஒரு மனக் கட்டுப்பாடா??????????

geethasmbsvm6 said...

மத்த இரண்டும் படிச்சுட்டு வரேன்.

திவாண்ணா said...

கீதா அக்கா,
முன்னாலேயே முழுச்சுகிட்டா அதை எப்படி அலாரம்ன்னு சொல்லறது? :-))
இருக்கட்டும். இதை மனப்பயிற்சின்னு சொல்லலாம். நேரம் ஆச்சுன்னு பிரகாசிப்பிக்கிறது புத்தியோட வேலைதானே? அப்ப அந்தக்கரணம் புத்தி நிலைலதான் இருக்கு.

Geetha Sambasivam said...

//இருக்கட்டும். இதை மனப்பயிற்சின்னு சொல்லலாம். நேரம் ஆச்சுன்னு பிரகாசிப்பிக்கிறது புத்தியோட வேலைதானே? அப்ப அந்தக்கரணம் புத்தி நிலைலதான் இருக்கு.//

ம்ம்ம்ம் புரியுது.

Kavinaya said...

எனக்குக் கூட புரிஞ்ச மாதிரிதான் இருக்கு :)

குமரன் (Kumaran) said...

அருமையான விளக்கம் ஐயா. மிகத் தெளிவா இருந்தது விளக்கம். (ஆனா நாளைக்கு வந்து நான் என்ன சொன்னேன் இந்த இடுகையிலன்னு கேக்கக்கூடாது. மண் புத்தி மறந்து போயிடுது.)