Pages

Thursday, March 5, 2009

சூக்ஷ்ம சரீரம்.


நேத்து பப்ளிஷ் பண்ண இதை ப்ளாகர் வேதாளம் முழுங்கிடுத்து போல இருக்கு. எங்கே போஸ்ட் காணோம்னு மெயில் பாத்து இப்ப போஸ்ட் பண்ணி இருக்கேன்!
-----
அடுத்து போலாமா?
சீவனோட சூக்ஷ்ம சரீரத்துக்கு ஒரு பேர்: தைசதன் (ஸம்ஸ்க்ருதம்: தைஜஸன்)
ஈசனோட சூக்ஷ்ம சரீரத்துக்கு ஒரு பேர்: ஹிரண்ய கர்ப்பன். (அப்பாடா கொஞ்சம் தெரிஞ்ச பேரா இருக்கு!)
ஒரு பூர்த்திக்காக பாடலையும் புத்தகத்தில கொடுத்த பொருளையும் கொடுக்கிறேன். புரிஞ்சா நல்லது, புரியலைனா ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். கருத்து எப்படியும் பதிவிலே வந்துடும்.

39.
சூட்சும தேகத்தால் சீவ ஈஸ்வரர்களுக்கு உண்டாகும் பெயர்கள்:

இவ்வுடன் மருவுஞ் சீவனிலங்குதை சதனென் றாவன்
இவ்வுடன் மருவுமீசனிரணிய கர்ப்பனாவன்
இவ்வுட லிரண்டு பேர்க்கு மிலிங்கசூக்குமச ரீரம்
இவ்வுடற்கோச மூன்றாமிது கனாவவத் தையாமே

இவ்வுடல் [உடன்] மருவும் (சேரும்) சீவன் இலங்கு தைசதன் (ஸம்: தைஜஸன்) என்றாவன். இவ்வுடல் மருவும் ஈசன் இரணிய கர்ப்பன் ஆவன். இவ்வுடல் இரண்டு பேர்க்கும் இலிங்க சூக்கும சரீரம். இவ்வுடல் கோச மூன்றாம் (பிராணமய, மனோமய, விஞ்ஞானமய கோசங்கள்) இது கனா அவத்தையாமே.

வியட்டி (வியஷ்டி) சூட்சும சரீரத்தை அபிமானித்துக்கொண்டு பிரகாசமாக உள்ள அந்தக்கரணத்துடன் சம்பந்தப்பட்டவன் -தைசதன்; சமட்டி (சமஷ்டி) சூட்சும சரீரத்தை அபிமானித்துக்கொண்டு ஞான சக்தியுடன் கூடி சகல அந்தக்கரணத்தையும் பிரகாசிபிக்கிறவன் -ஹிரண்யகர்பன்;

இந்த சூக்ஷ்ம சரீரம் காரண சரீரம் போல தெரியாது இருக்காது, ஸ்தூல சரீரம் போல பிரத்தியட்சமாகவும் தெரியாது.

ஒரு கை தேர்ந்த சித்திரக்காரர் துணியில் ஒரு படம் வரையுமுன்னே என்ன செய்வார்? இங்கேயும் அங்கேயும் சில கோடுகளை கிழிப்பார். நாம அத பாத்து அட ஒரு ஆனை படம் போடப்போறார் ன்னு கண்டுபிடிச்சுடுவோம். கிழிக்கும் கோடுகள் வரையவிருக்கும் படத்தை அனுமானிக்க உதவுவது போல (-லாஞ்சன படம்): சூக்கும சரீரம் தெளிவா இருக்காது, ஆனா அது இருக்கணும் ன்னு அநுமானத்தால் அறியப்படுது.

நான் செயலாற்றுபவன், இச்சை உள்ளவன், பலமானவன், ஞானம் உள்ளவன், சங்கற்பம் செய்பவன், மதிமான் என பலவிதமாக சீவன் தன் யதார்த்த ஸ்வரூபம் தெரியாது சீவனிடத்தும், ஈஸ்வரன் இத்தகையவன் என சீவன் அறியாதவாறு ஈஸ்வரனிடத்தும் உள்ள பிராண, மனோ, விஞ்ஞான மறைப்பை 3 கோசங்களாக சொல்லப்பட்டது.

நான் செயல் செய்பவன்னு நினைச்சாலும் இந்த வெத்து உடம்பால -ஸ்தூல சரீரத்தால- அது நடக்காது; அதுல வேற ஏதோ சக்தி இருந்துதான் அதை செய்விக்கிறதுன்னு நமக்கு தெரியும். இது அனுமானம். இந்த சக்திகள் எங்கே இருக்கு? அதான் சூக்கும சரீரம். இந்த சூக்கும சரீரத்தில இருக்கிற மனசு செயலை செய்ய நினைக்கனும்; ப்ராணன் அதுக்கு ஒத்துழைச்சு சக்தி தரனும்; கை கால்கள் மனசு நினைச்ச வேலையை செய்யனும். இருந்தாலும் இதெல்லாம் ஈஸ்வரனால நடக்குது நம்மால இல்லைன்னு நமக்கு தெரியறது இல்லை. இதான் மறைப்பு.

வாசனா ரூபமாய் சூட்சுமமாயிருந்து மனோ ராஜ்யம் செய்தல் ஜீவ ஈஸ்வரர்களுக்கு ஸ்வப்னம் என்பதால் கனா அவத்தை எனப்பட்டது.

நினைவுறுத்தல்: சரீரங்கள் மூன்று: ஸ்தூல சரீரம் - நாம் பார்க்கக்கூடியது. சூக்சும சரீரம் = பார்க்க முடியாதது ஆனால் அநுமானிக்கூடியது. காரண சரீரம் = இவற்றுக்கு காரணமாக உள்ளது; ஆணவம், கன்மம், மாயை சேர்ந்தது.

இன்னும் தமோ குணம் பாக்கி இருக்கு. கொஞ்சம் நிதானமா பாத்தா இதுவும் புரிஞ்சுடும்.



1 comment:

Geetha Sambasivam said...

//இன்னும் தமோ குணம் பாக்கி இருக்கு. கொஞ்சம் நிதானமா பாத்தா இதுவும் புரிஞ்சுடும்.//

எங்கே, இதே புரிஞ்சாப்பலே இல்லை, நெட் வேறே படுத்தல்!

தைஜஸன் = thejas????