Pages

Saturday, May 23, 2009

பிரமம் வாக்கு, மனசுக்கு எட்டுமா எட்டாதா?



6.
ஆகமப் பிரமாணத்தா லறியென்றும் வாக்குக்கெட்டா
தேகமாம் பிரமமென்று மிதயத்தா லுணர்வாயென்றும்
சோகமா மனத்திற்கெட்டா சுயஞ்சோதி யென்றுஞ்சொன்னீர்
மோகமா மிரண்டு சங்கை முளைத்தன பறித்திடீரே

ஆகம (ஸ்ருதி) பிரமாணத்தால் அறி என்றும், வாக்குக்கெட்டாது, ஏகமாம் (ஒன்றே) பிரமம் என்றும், இதயத்தால் உணர்வாய் என்றும், சோகமா(ன) மனத்திற்கு எட்டா சுயஞ்சோதி என்றும் சொன்னீர். மோகமாம் (மயக்கமாம்) இரண்டு சங்கை (சந்தேகங்கள்) முளைத்தன பறித்திடீரே (நிவர்த்தி செய்வீராக)

வேதத்து மேல நம்பிக்கை வெச்சு ஒண்ணேயான பிரம்மத்தை இதயத்தாலே உணரணும் ன்னு சொன்னீங்க. அது வாக்குக்கு எட்டாது மனசுக்கு பிடிபடாதுன்னும் சொன்னீங்க. இதுல எனக்கு ரெண்டு சந்தேகம். அதுக்கு விடை சொல்லுங்க. வேதம் வாக்குதானே? அதால தெரிஞ்சுக்கன்னு சொல்லி பின்னாலேயே வாக்குக்கு எட்டாதுன்னா என்ன அர்த்தம்?
முன்னே மஹா வாக்கியங்களைப்பத்தி சொன்ன போது "சுருதி பிரமாணத்தால உன்னோட நிஜ சொரூபம் என்னன்னு தெரிஞ்சுக்க"ன்னார். பின்னாலேயே "பிரம்மமானது துக்க மயமான மனதுக்கு எட்டாத சுயம் பிரகாசம்" னார்.
அப்ப பிரமம் மனசுக்கு எட்டுமா எட்டாதா? ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு முரணா இருக்கே!



Thursday, May 21, 2009

சந்தேகம்?




கொஞ்ச நாள் போனதும் நிழல் மாதிரி தன்னை தொடர்ந்து வர சீடனைப்பாத்து குரு கேக்கிறார். என்னப்பா உன் சாதனை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு? சாட்சி மாத்திரமா இருக்கப் பழகிட்டியா? சந்தேகம் ஒண்ணும் இல்லியே? தெளிவா இருக்கியா? உன்னோட அனுபவம் என்ன சொல்லுங்கிறார். குருவுக்கு சீடனோட நிலை தெரியாமலா இருக்கும்? இருந்தாலும் சீடன் குரங்கு நியாயப்படி நடந்துக்கிறதால ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கிறார்.

3.
ஆசிரியர் சீடரை அனுபவம் வினாவுதல்.
சந்ததம் புருடன் றன்னைச் சாயைபோல் விடாமலன்பாம்
மைந்தனை நோக்கிச்சாட்சி மாத்திரமாய் நின்றாயோ
சிந்தையிலைய மெல்லாந் தீர்ந்தவோ தெளிவுனுள்ளே
அந்தரங் கலந்ததுண்டோ வநுபவமுரை செய்வாயே

சந்ததம் (எப்போதும்) புருடன் தன்னைச் சாயை (நிழல்) போல் விடாமல், (நடந்து வந்த) அன்பாம் மைந்தனை (சீடனை) நோக்கி சாட்சி மாத்திரமாய் நின்றாயோ? சிந்தையில் ஐயம் எல்லாம் தீர்ந்தவோ? தெளிவுனுள்ளே அந்தரம் (விபரீத பாவனை) கலந்ததுண்டோ (உதித்துள்ளதோ)? அநுபவம் உரை செய்வாயே (சொல்லுவாயே).

4
மூன்று கேள்விகளுக்கும் சீடன் விடையாக விண்ணப்பம் செய்தல்.
எனவுரைத் தருளுமாசா னிருபதம் வணங்கியெந்தாய்
சனனவன் காட்டின்மோகத் தமத்தெழு பேதப்பேய்கள்
உனதரு ளுதயவெற்பி லுபதேச வருக்கன்றோன்றி
மனவிழி தெரியஞான வான்கதிர் பரந்தாலுண்டோ.

என உரைத்து அருளும் ஆசான் இருபதம் வணங்கி எந்தாய் (என் தந்தையே) சனன (பிறவி என்னும்) அவன் (கடத்தற்கரிய) காட்டின் மோகத் தமத்து (தமத்தில்= அஞ்ஞானத்தில்) எழு(ம்) பேத (விபரீத) பேய்கள், உனது அருள் உதய வெற்பில் (உதய கிரியில்) உபதேச அருக்கன் (சூரியன்) தோன்றி மனவிழி தெரிய ஞானவான் (ஞானமாகிய) கதிர் பரந்தால் உண்டோ (இருக்குமோ?).

சீடன் கால்ல விழுந்து வணங்கி சொல்கிறான்: "ஐயா பிறவி என்கிற காட்டில இருந்தாலும் உங்களோட உபதேசம் என்கிற சூரியனோட வெளிச்சம் இருந்தா கவலை இல்லியே. உங்க உபதேசத்தாலே அஞ்ஞானமான இருட்டும் சந்தேகம் என்கிற நிழலும் போயிட்டுது. இருந்தாலும் பேயை ஓட்டின மந்திரவாதி திரும்ப பிரச்சினை வராம இருக்க யந்திரம் எழுதி கட்டுகிறாப்போல சத்துவத்திலேயே மனசு நிக்கிறாப்போல என் அனுபவம் நிலையா நிக்க சில சந்தேகங்களை நிவர்த்தி செய்தா நல்லது!”

5.
சகசானுபவம் வரத்தையாய் உள்ளது குறித்து வினாவுதல்
மந்திர மூர்த்திதன்னான் மாற்றிய பேய்போனாலும்
எந்திர மெழுதிக்கட்டி யினிவராவகை செய்வார்போல்
முந்தியுன் னுபதேசத்தான் மோகம்போனாலு மையா
புந்திநின் றுறைக்கவின்னம் புகலும்விண்ணப்ப முண்டே

மந்திர மூர்த்தி தன்னான் (மூர்த்தியினால்) மாற்றிய (நீக்கிய) பேய் போனாலும் எந்திரம் எழுதிக்கட்டி இனி [அந்த பேய்கள்] வராவகை (வராதபடி) செய்வார்போல் முந்தி உன் உபதேசத்தால் மோகம் போனாலும், ஐயா புந்தி (சத்துவ மனம்) நின்று உறைக்க (ஆத்ம ஸ்வரூபத்தில் நின்று நிலைக்க) இன்னம் (மேலும்) புகலும் விண்ணப்பம் உண்டே.


Tuesday, May 19, 2009

சந்தேகந் தெளிதல்



அடுத்து வருவது கைவல்லிய நவநீதத்தில் சந்தேகந் தெளிதல் படலம்.

இது வரைக்கும் ஞானத்தை குறிச்ச தியரி என்னன்னு பாத்தோம். இனிமே இதிலே வரக்கூடிய சந்தேகங்கள் என்னென்ன அதுக்கு சமாதானம் என்னன்னு பாக்கலாம். சில விஷயங்களை கேட்கிறோம். அது நமக்கு புரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறோம். கொஞ்ச காலம் கழிந்த பிறகு அந்த விஷயத்திலே நமக்கு பல சந்தேகங்கள் வரும். எவ்வளவுக்கு எவ்வளவு நமக்கு தெளிவா தோணித்தோ அவ்வளவுக்கு அவ்வளவு இப்ப சந்தேகமா தோணும்! இப்படி ஆகக்கூடாதுன்னுதான் அந்த காலத்திலே பெரியவங்க ஒரு விஷயம் சொன்ன கையோட, கேட்டவங்க சந்தேகம் எழுப்பலைனா தானே அதை எல்லாம் எழுப்பி பதிலையும் சொல்லிடுவாங்க.

ஒரு கம்பத்தை நடணும். குழி பறிச்சு அதுல கம்பத்தை நடறோம். அப்படியே விட்டா அது நிலையா நிக்காது. அதை நட்ட இடத்து பக்கத்தில கொஞ்சம் சின்ன கல், மண் எல்லாம் போட்டு குத்தி கிட்டிச்சு விடனும். அப்பதான் கம்பம் பலமா நிக்கும். அது போல "பிரம்மத்தில நிலை பெற்ற மனசை உறுதியா ஆக்க சில விஷயம் சொல்லறேன் கேளு" ன்னு ஆரம்பிக்கிறார் தாண்டவராய ஸ்வாமிகள்.

1.
நரர்குழி பறித்துமெள்ள நாட்டிய நெடிய கம்பம்
உரமுறக் குத்திக்குத்தி யுறைப்பிக்கு முபாயம் போலே
பரமசிற் சொரூபதன்னிற் பற்றிய மனோவிருத்தி
திரநிலை பெறச்சந்தேகந் தெளிதலை மொழிகின்றேனே

நரர் = மானுடர் குழி பறித்து மெள்ள நாட்டிய = நிறுத்திய நெடிய கம்பம் உரமுற = வலிமையடைய; குத்திக்குத்தி உறைப்பிக்கும் உபாயம் போலே பரம (மேலான) சிற் (சின்மாத்திர ஆத்ம) சொரூபம் தன்னில் பற்றிய = பொருந்திய மனோவிருத்தி (அபேதமாய் பொருந்திய அகண்டாகார விருத்தி) ஸ்திரநிலை பெறச் சந்தேகந் தெளிதலை மொழிகின்றேனே.

நாம முன்னே பாத்து விட்ட கதை இன்னும் தொடருது. தனக்கு பிரபஞ்சம் உண்டானது முதல் விதேக முக்தியை அடைகிற வரை எல்லாம் விளக்கி சொன்ன குரு செய்யச்சொன்னதை குரங்குப்பிடியா பிடிச்சுக்கிட்டான். விடாமல் செய்கிறான் சீடன்.

குரங்குப்பிடின்னு சொல்கிறதுல ஒரு அர்த்தம் இருக்கு.

மர்கடநியாயம் மார்ஜாலி நியாயம் ன்னு ரெண்டு வித தத்துவம்.

மர்கடநியாயம்: குரங்கின் குட்டிதான் குரங்கை பிடித்துக் கொள்ளணும். குரங்கு பாட்டுக்கு அதோட வேலையை பாக்கும். கிளைக்கு கிளை தாவினாலும் கொண்டாலும் குட்டிதான் ஜாக்கிரதையா இருக்கணும். பிடியை விட்டு குட்டி கீழே விழுந்தா குரங்கு அதைப்பத்தி கவலையே படாது. அதுபோல் இறைவனை பக்தன்தான் பிடித்துக்கொள்ளவேண்டும்.

மார்ஜாலி நியாயத்திலே பூனைக்குட்டி சும்மாதானிருக்கும். என்ன ஆபத்து வந்தாலும் மியாவ் மியாவ் ன்னு கத்தி அம்மாவை கூப்பிடுமே தவிர ஒரு செயலிலேயும் இறங்காது. பூனைதான் வந்து அதை கவ்வி தூக்கிப்போகும். அது போல் பக்தன் பரி பூரண சரணாகதி செய்தால் இறைவன் தேவையானதை செய்வான்.

இந்த தத்துவ வித்தியாசம்தான் ஶ்ரீ வைஷ்ணவர்களிலே தென்கலை சம்பிரதாயத்துக்கும் வடகலை சம்பிரதாயத்துக்கும் உள்ள வித்தியாசம். இது புரியாமல் பலர் நாமம் இப்படி அப்படி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்!

இங்க சீடன் அவனோட முயற்சியிலே குரு சொன்னதை செய்கிறான்னு புரிஞ்சுக்கணும்.

2.
நற்கருத் துடையோனாகி ஞானவானாகி நின்றோன்
மர்கட நியாயம்போலே மகாபூத விகாரந்தொட்டு
நிற்குண விதேகமுத்தி நிலைபரி யந்தஞ் சொன்ன
சற்குரு வினைவிடாமற் சந்தத மநுசரித்தான்.

நற்கருத்து (சத்துவ விருத்தி) உடையோனாகி (அபரோட்ச) ஞானவானாகி நின்றோன் (நின்ற சீடன்) மர்கட (குரங்கு) நியாயம் போலே மகாபூத விகாரம் (ஸ்தூல சரீரம்) தொட்டு (முதலாக) நிற்குண விதேகமுத்தி நிலை பரியந்தம் (சத்துவ குணமும் இறந்த கைவல்ய நிலை வரை) சொன்ன சற்குருவினை விடாமல் சந்ததம் (எப்போதும்) அநுசரித்தான். (சேவை செய்து வந்தான்)


Monday, May 18, 2009

ஆத்ம சொரூபமே நீ!




அடுத்து இந்த பிரபஞ்சம் முழுவதும் அநித்தியம். அதனால மாயைதான் அசத்தியம்தான். ஞான ரூபமான பிரம்மம் மட்டுமே உண்மை. இதை என்னிக்கும் மறக்காம இரு என்கிறார் தாண்டவராய ஸ்வாமிகள்.

நல்ல வெயில் ஆரம்பிச்சாச்சு. தார் ரோடில போனா ரோடிலே தண்ணீர் இருக்கா மாதிரி தோணுது. விவரம் தெரிஞ்சவங்க அது தண்ணி இல்லே கானல் நீர் ன்னு சொல்லுவாங்க. அது கானல் நீர் ன்னு தெரிஞ்சாக்கூட அந்த தோற்றம் இல்லாம போகாது.


பீச்சுக்கு போறோம். தூரத்தில ஏதோ பளபளக்குது. வெள்ளியில செய்தது ஏதோ கிடக்குன்னு நினைக்கிறோம். கிட்டப்போனா அது கிளிஞ்சல் ன்னு தெரியுது. அடுத்த நாள் நம்ம நண்பரோட பீச்சுக்குப் போறோம். நாம ஏமாந்த மாதிரியே அவரும் வெள்ளின்னு ஏமாறுகிறார். ஆனா நாம சிரிச்சுகிட்டே சொல்கிறோம் "நல்லா பாரு, அது கிளிஞ்சல்" ன்னு. நேத்து வெள்ளியா தெரிஞ்சது இப்ப அப்படி தெரியலை. ஏன்னா இப்ப விஷயம் தெரியும்.


மெஸ்மெரிசம், ஹிப்நாடிஸம் என்கிற வித்தை நமக்கு புதுசு இல்லை. முன் காலத்திலேயே கண்கட்டு வித்தைக்காரன் ஒரு நகரத்தையே உருவாக்கி காட்டுவான். அங்கே கந்தர்வர்கள் பறப்பாங்க; அப்சரஸ்கள் டான்ஸ் ஆடுவாங்க.... மந்திரவாதி ச்சூ! ன்னதும் எல்லாம் காணாம போயிடும்.

இதெல்லாம் இல்லாம மேலே வானத்தை பாத்தா நீல வண்ணமா குடை கவுத்தாப்போல தெரியறதும் கயிற்றிலே பாம்புன்னு பிரமை தோன்றுகிறதும் பருத்த கட்டையிலே மனிதன் போல தோன்றுகிறதும் பாத்து இருக்கோம்.


மலடியின் சேய், முயலின் கொம்பு ன்னு சொல்கிறது உண்டு. யோசனை பண்ணி பாத்தா அது ரெண்டும் இருக்கவே முடியாது.

இதெல்லாம் பலவிதமான மாயைகள்.


மலடியின் சேய், முயலின் கொம்பு போல அசத்து - பிரம்மத்தை தவிர வேற ஒண்ணு இருக்கிறது. (அசத்து = இருப்பு இல்லாதது)

பின்னே எனக்கு பிரபஞ்சம்ன்னு ஒண்ணு தோணுதேன்னா அது கிளிஞ்சில் வெள்ளி, கயிற்றிலே பாம்புன்னு பிரமை தோன்றுகிறதும்; பருத்த கட்டையிலே மனிதன் போல தோன்றுகிறதும்; மந்திரவாதி தோற்றுவிக்கிற கந்தர்வ நகரம் என்றது போல பொய்யான தோற்றமாம். இது தப்பு, இல்லைன்னு தெளிவு வந்துட்டா அதெல்லாம் அப்புறமா தோணுகிறதில்லை.

என்னதான் தியரி படிச்சு சரிதான் ன்னு ஒத்துண்டாலும் இன்னும் பிரபஞ்சம் தோணுதேன்னால் அது கானல் நீர் போல; கானலில் நீரில்லை, ஆகாயத்தில் நீல நிறம் இல்லை. இப்படி தெளிந்தபின்னும் அவை தோன்றினாலும் அவை அநுபவத்துக்கு வருவதில்லை. தியரி தெரிஞ்சு இது தப்புன்னாலும் அது தோன்றி கொண்டேதான் இருக்கும். பிரபஞ்சம் பொய்ன்னு உணர்ந்த பின்னும் சொப்பனப் பிரபஞ்சம் போல அநுபவத்துக்கு வரும்.

108.
சத் அசத்தின் தன்மை கூறி முன் சொல்லியபடி அநுபவித்து இருப்பாய் என்றது:

கானனீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்ப்ப நகர்க னாவூர்
வானமை கயிற்றிற் பாம்பு மலடி சேய் முயலின் கோடு
பீனமாந்தறி புமானிற் பிரபஞ்ச மெல்லாம் பொய்யே
ஞானமெய் மகனே யுன்னை நம்மாணை மறந்திடாதே

கானல் நீர், கிளிஞ்சில் வெள்ளி, கந்தர்ப்ப நகர், கனாவூர், வான மை (ஆகாயத்தில் நீல வண்ணம்) கயிற்றில் பாம்பு, மலடி[யின்] சேய், முயலின் கோடு (கொம்பு), பீனமாம் (பருத்த) தறி[யில்] (கட்டையில்)- புமான் (மனிதன்) [போல] இப் பிரபஞ்சம் எல்லாம் பொய்யே. ஞானம் மெய் மகனே, நம்மாணை (நம் மேல் ஆணை) உன்னை (நீ பிரமம் என்பதை) மறந்திடாதே.

--
மலடியின் சேய், முயலின் கோடு என்றது சீவேஸ்வர ஜகத் அத்யந்தம் அசத்து; பிரமமே உள்ளது என்றதாம். “பிரமமே உள்ளது, பிரபஞ்சம் அத்யந்தம் அசத்தானால்” மலடியின் சேய், முயலின் கோடு போல தோன்றாமலே இருக்க வேண்டும். அப்படி இல்லாது தோன்றுவதால் எப்படி கூடும்? பிரபஞ்சம் அசத்து என்பதற்கு மட்டுமே மலடியின் சேய், முயலின் கோடு என்றதாகவும், பிரபஞ்ச தோற்றம் கிளிஞ்சில் வெள்ளி, கயிற்றில் பாம்பு, பீனமாம் தறிபுமான், கந்தர்வ நகரம் என்றது போல பொய்யான தோற்றம் என்றார். கிளிஞ்சலை தவிர வெள்ளியும், கயிற்றைத்தவிர பாம்பும், கட்டையைத்தவிர மனிதனும், சூன்யத்தைத் தவிர கந்தர்வ நகரமும் இல்லை என தெளிந்தபின் வெள்ளி, பாம்பு ஆகியன தோன்றா. அப்படி இல்லாமல் மண்ணையன்றி குடத்தின் பொருள் இன்னதென்று ஆய்ந்து அறிய முயன்றால் அது பெயர்த்தும் தோன்றும். அது போல பிரபஞ்சம் காரணமான பிரமத்தை தவிர இல்லை என உணரினும் அது தோன்றுகிறபடியால், இது எப்படிக்கூடும்? பிரபஞ்சம் பொருள் அன்று என்பதற்கு மாத்திரம் கிளிஞ்சில் வெள்ளி ஆகிய திட்டாந்தங்கள் சொல்லப்பட்டது. பிரபஞ்சம் பொய், பொருளற்றது என உணரினும் அது மறுபடி கானல் நீர் போல தோன்றும். கானலில் நீரில்லை, ஆகாயத்தில் கரு நிறம் இல்லை. இப்படி தெளிந்தபின்னும் அவை தோன்றினாலும் அவை அநுபவத்துக்கு வருவதில்லை. பிரபஞ்சம் அப்படி இல்லாது சப்த ஸ்பரிசம் முதலானவற்றால் அநுபவிக்கப்படுகிறது. பிரபஞ்சம் அசத்து என உணரினும் பெயர்த்தும் தோன்றும். இதற்கே கானல் நீர் ஆகிய திட்டாந்தங்கள் சொல்லப் பட்டது. பிரபஞ்சம் பொய் என உணர்ந்த பின்னும் சொப்பனப் பிரபஞ்சம் போல அநுபவத்துக்கு வரும் எனக் கொள்க.

தாத்பர்யம்:
த்ருஷ்யமாய் அசத்தான சகத்துக் காலத்ரயத்திலும் த்ருக்காய், சத்தா மாத்திரமான ஆத்மா த்ரி காலத்திலும் உள்ளது. அவ்வாத்ம சொரூபமே தான் என்ற அநுபவம் விட்டு நீங்காதிருப்பாய் என்றதாம்.

தத்துவ விளக்கப்படலம் நிறைவுற்றது.
சிவோஹம்


Friday, May 15, 2009

நாம் எப்பவுமே அகண்ட பிரம்ம சொரூபிகள்தான்




ஒரு கிணறு தோண்டுகிறோம்.

அதிலே ஒரு வெளி இருக்குன்னு நினைக்கறோம். பள்ளத்திலே ஸ்பேஸ்! இது இப்பதான் வந்ததுன்னு நினைக்கிறது மாயை. முன்னமேயே அங்கே ஆகாசம் இருந்தது. அதிலே அப்ப மண் இருந்தது. இப்ப காத்து இருக்கு. ஆகாசம் எப்பவுமேதான் இருக்கு.

அது போல பிரம்ம நிலை சிரவண, மனன, நிதித்யாசம் செய்து அப்ப வருகிறதுன்னு இல்லை. அப்பதான் நாம் பிரம்மம்; நாம் மட்டுமே இருக்கோம் என்கிற நினைப்புதான் வருது. அது எப்பவும் இருக்கிற நிலையை அறிகிறதேதானே ஒழிய புதுசா அப்படி ஆகலை.

கடலோரத்திலே ஒரு பெரிய பள்ளம் இருக்கு. அதிலே கடல் நீர் இருக்கு. கடல் கொஞ்சம் உள் வாங்குக்கிறதால அது கரைன்னு ஒண்ணாலே பிரிக்கப்பட்டு தனியா தோணுது. கடல் தன்னோட இயல்பு நிலையை அடைகிறபோது அதுவே கடலோட சேர்ந்து விடுகிறது. அந்த பள்ளத்திலே முன்னே இருந்ததும் கடல்தான். இப்ப இருக்கிறதும் கடல்தான். தனி என்கிற பாவனைதான் போச்சு!

அது போல நாம் எப்பவுமே அகண்ட பிரம்ம சொரூபிகள்தான். நான் என்கிற நினைப்பு அதை கெடுத்தது. "நான்" போகிற போது அதுவும் போய்விடுகிறது.

107.
சீடன் முன் (88 ஆம் செய்யுளில்) கூறிய அநுபவம் புதிதன்று எனல்.-

சொல்லிய மகனேயெங்குஞ் சூழ்வெளியிருக்க மண்ணைக்
கெல்லிய பின்புதோன்றுங் கிணற்றினா காசம்போலே
ஒல்லையாம் பிரமநூலா லுற்றதுபோலே தோன்றும்
எல்லையி னாமெப்போது மேகமென் றிருந்து வாழ்வாய்

[அநுபவம்] சொல்லிய மகனே, எங்கும் சூழ் வெளி (space, ஆகாசம்) இருக்க மண்ணைக் கெல்லிய பின்பு தோன்றும் கிணற்றின் ஆகாசம் போலே, (ஆகாசம் எப்போதும் எங்கும் உள்ளது என அறியாதவனுக்கு கிணற்றில் புதிதாக ஆகாசம் உள்ளதாக தோன்றுவது போல்) ஒல்லையாம் (அனாதியான) பிரமம் நூலால் (வேதங்களால்) உற்றது போலே தோன்றும் (புதிதாக அப்போது பிரத்யேக ஆத்மா நாம் மட்டுமே, நாம் என்றும் வியாபகமாக இருக்கிறோம் என்றும் அந்நிலை அப்போது அடையப்பட்டது போலவும் தோன்றும். அது பிராந்தியேயாம்.) எல்லையில்லா நாம் எப்போதும் ஏகம் என்றிருந்து வாழ்வாய்.