Pages

Tuesday, May 19, 2009

சந்தேகந் தெளிதல்



அடுத்து வருவது கைவல்லிய நவநீதத்தில் சந்தேகந் தெளிதல் படலம்.

இது வரைக்கும் ஞானத்தை குறிச்ச தியரி என்னன்னு பாத்தோம். இனிமே இதிலே வரக்கூடிய சந்தேகங்கள் என்னென்ன அதுக்கு சமாதானம் என்னன்னு பாக்கலாம். சில விஷயங்களை கேட்கிறோம். அது நமக்கு புரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறோம். கொஞ்ச காலம் கழிந்த பிறகு அந்த விஷயத்திலே நமக்கு பல சந்தேகங்கள் வரும். எவ்வளவுக்கு எவ்வளவு நமக்கு தெளிவா தோணித்தோ அவ்வளவுக்கு அவ்வளவு இப்ப சந்தேகமா தோணும்! இப்படி ஆகக்கூடாதுன்னுதான் அந்த காலத்திலே பெரியவங்க ஒரு விஷயம் சொன்ன கையோட, கேட்டவங்க சந்தேகம் எழுப்பலைனா தானே அதை எல்லாம் எழுப்பி பதிலையும் சொல்லிடுவாங்க.

ஒரு கம்பத்தை நடணும். குழி பறிச்சு அதுல கம்பத்தை நடறோம். அப்படியே விட்டா அது நிலையா நிக்காது. அதை நட்ட இடத்து பக்கத்தில கொஞ்சம் சின்ன கல், மண் எல்லாம் போட்டு குத்தி கிட்டிச்சு விடனும். அப்பதான் கம்பம் பலமா நிக்கும். அது போல "பிரம்மத்தில நிலை பெற்ற மனசை உறுதியா ஆக்க சில விஷயம் சொல்லறேன் கேளு" ன்னு ஆரம்பிக்கிறார் தாண்டவராய ஸ்வாமிகள்.

1.
நரர்குழி பறித்துமெள்ள நாட்டிய நெடிய கம்பம்
உரமுறக் குத்திக்குத்தி யுறைப்பிக்கு முபாயம் போலே
பரமசிற் சொரூபதன்னிற் பற்றிய மனோவிருத்தி
திரநிலை பெறச்சந்தேகந் தெளிதலை மொழிகின்றேனே

நரர் = மானுடர் குழி பறித்து மெள்ள நாட்டிய = நிறுத்திய நெடிய கம்பம் உரமுற = வலிமையடைய; குத்திக்குத்தி உறைப்பிக்கும் உபாயம் போலே பரம (மேலான) சிற் (சின்மாத்திர ஆத்ம) சொரூபம் தன்னில் பற்றிய = பொருந்திய மனோவிருத்தி (அபேதமாய் பொருந்திய அகண்டாகார விருத்தி) ஸ்திரநிலை பெறச் சந்தேகந் தெளிதலை மொழிகின்றேனே.

நாம முன்னே பாத்து விட்ட கதை இன்னும் தொடருது. தனக்கு பிரபஞ்சம் உண்டானது முதல் விதேக முக்தியை அடைகிற வரை எல்லாம் விளக்கி சொன்ன குரு செய்யச்சொன்னதை குரங்குப்பிடியா பிடிச்சுக்கிட்டான். விடாமல் செய்கிறான் சீடன்.

குரங்குப்பிடின்னு சொல்கிறதுல ஒரு அர்த்தம் இருக்கு.

மர்கடநியாயம் மார்ஜாலி நியாயம் ன்னு ரெண்டு வித தத்துவம்.

மர்கடநியாயம்: குரங்கின் குட்டிதான் குரங்கை பிடித்துக் கொள்ளணும். குரங்கு பாட்டுக்கு அதோட வேலையை பாக்கும். கிளைக்கு கிளை தாவினாலும் கொண்டாலும் குட்டிதான் ஜாக்கிரதையா இருக்கணும். பிடியை விட்டு குட்டி கீழே விழுந்தா குரங்கு அதைப்பத்தி கவலையே படாது. அதுபோல் இறைவனை பக்தன்தான் பிடித்துக்கொள்ளவேண்டும்.

மார்ஜாலி நியாயத்திலே பூனைக்குட்டி சும்மாதானிருக்கும். என்ன ஆபத்து வந்தாலும் மியாவ் மியாவ் ன்னு கத்தி அம்மாவை கூப்பிடுமே தவிர ஒரு செயலிலேயும் இறங்காது. பூனைதான் வந்து அதை கவ்வி தூக்கிப்போகும். அது போல் பக்தன் பரி பூரண சரணாகதி செய்தால் இறைவன் தேவையானதை செய்வான்.

இந்த தத்துவ வித்தியாசம்தான் ஶ்ரீ வைஷ்ணவர்களிலே தென்கலை சம்பிரதாயத்துக்கும் வடகலை சம்பிரதாயத்துக்கும் உள்ள வித்தியாசம். இது புரியாமல் பலர் நாமம் இப்படி அப்படி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்!

இங்க சீடன் அவனோட முயற்சியிலே குரு சொன்னதை செய்கிறான்னு புரிஞ்சுக்கணும்.

2.
நற்கருத் துடையோனாகி ஞானவானாகி நின்றோன்
மர்கட நியாயம்போலே மகாபூத விகாரந்தொட்டு
நிற்குண விதேகமுத்தி நிலைபரி யந்தஞ் சொன்ன
சற்குரு வினைவிடாமற் சந்தத மநுசரித்தான்.

நற்கருத்து (சத்துவ விருத்தி) உடையோனாகி (அபரோட்ச) ஞானவானாகி நின்றோன் (நின்ற சீடன்) மர்கட (குரங்கு) நியாயம் போலே மகாபூத விகாரம் (ஸ்தூல சரீரம்) தொட்டு (முதலாக) நிற்குண விதேகமுத்தி நிலை பரியந்தம் (சத்துவ குணமும் இறந்த கைவல்ய நிலை வரை) சொன்ன சற்குருவினை விடாமல் சந்ததம் (எப்போதும்) அநுசரித்தான். (சேவை செய்து வந்தான்)


4 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

தீர்ந்தது மார்கட-மார்ஜலி சந்தேகம் :)

Geetha Sambasivam said...

இது ஓகே, அடிக்கடி கேட்டதாலேயே என்னமோ! :)

திவாண்ணா said...

அப்பாடா, புரியாறப்பல எழுத கத்துக்கிட்டேனோ என்னவோ!

Kavinaya said...

பூனைக்குட்டி குரங்குக்குட்டி பத்தி ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னதால தெரியும். பதிவுகூட போட்டிருக்கேனே (அந்த காலத்துல :)