Pages

Monday, May 18, 2009

ஆத்ம சொரூபமே நீ!
அடுத்து இந்த பிரபஞ்சம் முழுவதும் அநித்தியம். அதனால மாயைதான் அசத்தியம்தான். ஞான ரூபமான பிரம்மம் மட்டுமே உண்மை. இதை என்னிக்கும் மறக்காம இரு என்கிறார் தாண்டவராய ஸ்வாமிகள்.

நல்ல வெயில் ஆரம்பிச்சாச்சு. தார் ரோடில போனா ரோடிலே தண்ணீர் இருக்கா மாதிரி தோணுது. விவரம் தெரிஞ்சவங்க அது தண்ணி இல்லே கானல் நீர் ன்னு சொல்லுவாங்க. அது கானல் நீர் ன்னு தெரிஞ்சாக்கூட அந்த தோற்றம் இல்லாம போகாது.


பீச்சுக்கு போறோம். தூரத்தில ஏதோ பளபளக்குது. வெள்ளியில செய்தது ஏதோ கிடக்குன்னு நினைக்கிறோம். கிட்டப்போனா அது கிளிஞ்சல் ன்னு தெரியுது. அடுத்த நாள் நம்ம நண்பரோட பீச்சுக்குப் போறோம். நாம ஏமாந்த மாதிரியே அவரும் வெள்ளின்னு ஏமாறுகிறார். ஆனா நாம சிரிச்சுகிட்டே சொல்கிறோம் "நல்லா பாரு, அது கிளிஞ்சல்" ன்னு. நேத்து வெள்ளியா தெரிஞ்சது இப்ப அப்படி தெரியலை. ஏன்னா இப்ப விஷயம் தெரியும்.


மெஸ்மெரிசம், ஹிப்நாடிஸம் என்கிற வித்தை நமக்கு புதுசு இல்லை. முன் காலத்திலேயே கண்கட்டு வித்தைக்காரன் ஒரு நகரத்தையே உருவாக்கி காட்டுவான். அங்கே கந்தர்வர்கள் பறப்பாங்க; அப்சரஸ்கள் டான்ஸ் ஆடுவாங்க.... மந்திரவாதி ச்சூ! ன்னதும் எல்லாம் காணாம போயிடும்.

இதெல்லாம் இல்லாம மேலே வானத்தை பாத்தா நீல வண்ணமா குடை கவுத்தாப்போல தெரியறதும் கயிற்றிலே பாம்புன்னு பிரமை தோன்றுகிறதும் பருத்த கட்டையிலே மனிதன் போல தோன்றுகிறதும் பாத்து இருக்கோம்.


மலடியின் சேய், முயலின் கொம்பு ன்னு சொல்கிறது உண்டு. யோசனை பண்ணி பாத்தா அது ரெண்டும் இருக்கவே முடியாது.

இதெல்லாம் பலவிதமான மாயைகள்.


மலடியின் சேய், முயலின் கொம்பு போல அசத்து - பிரம்மத்தை தவிர வேற ஒண்ணு இருக்கிறது. (அசத்து = இருப்பு இல்லாதது)

பின்னே எனக்கு பிரபஞ்சம்ன்னு ஒண்ணு தோணுதேன்னா அது கிளிஞ்சில் வெள்ளி, கயிற்றிலே பாம்புன்னு பிரமை தோன்றுகிறதும்; பருத்த கட்டையிலே மனிதன் போல தோன்றுகிறதும்; மந்திரவாதி தோற்றுவிக்கிற கந்தர்வ நகரம் என்றது போல பொய்யான தோற்றமாம். இது தப்பு, இல்லைன்னு தெளிவு வந்துட்டா அதெல்லாம் அப்புறமா தோணுகிறதில்லை.

என்னதான் தியரி படிச்சு சரிதான் ன்னு ஒத்துண்டாலும் இன்னும் பிரபஞ்சம் தோணுதேன்னால் அது கானல் நீர் போல; கானலில் நீரில்லை, ஆகாயத்தில் நீல நிறம் இல்லை. இப்படி தெளிந்தபின்னும் அவை தோன்றினாலும் அவை அநுபவத்துக்கு வருவதில்லை. தியரி தெரிஞ்சு இது தப்புன்னாலும் அது தோன்றி கொண்டேதான் இருக்கும். பிரபஞ்சம் பொய்ன்னு உணர்ந்த பின்னும் சொப்பனப் பிரபஞ்சம் போல அநுபவத்துக்கு வரும்.

108.
சத் அசத்தின் தன்மை கூறி முன் சொல்லியபடி அநுபவித்து இருப்பாய் என்றது:

கானனீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்ப்ப நகர்க னாவூர்
வானமை கயிற்றிற் பாம்பு மலடி சேய் முயலின் கோடு
பீனமாந்தறி புமானிற் பிரபஞ்ச மெல்லாம் பொய்யே
ஞானமெய் மகனே யுன்னை நம்மாணை மறந்திடாதே

கானல் நீர், கிளிஞ்சில் வெள்ளி, கந்தர்ப்ப நகர், கனாவூர், வான மை (ஆகாயத்தில் நீல வண்ணம்) கயிற்றில் பாம்பு, மலடி[யின்] சேய், முயலின் கோடு (கொம்பு), பீனமாம் (பருத்த) தறி[யில்] (கட்டையில்)- புமான் (மனிதன்) [போல] இப் பிரபஞ்சம் எல்லாம் பொய்யே. ஞானம் மெய் மகனே, நம்மாணை (நம் மேல் ஆணை) உன்னை (நீ பிரமம் என்பதை) மறந்திடாதே.

--
மலடியின் சேய், முயலின் கோடு என்றது சீவேஸ்வர ஜகத் அத்யந்தம் அசத்து; பிரமமே உள்ளது என்றதாம். “பிரமமே உள்ளது, பிரபஞ்சம் அத்யந்தம் அசத்தானால்” மலடியின் சேய், முயலின் கோடு போல தோன்றாமலே இருக்க வேண்டும். அப்படி இல்லாது தோன்றுவதால் எப்படி கூடும்? பிரபஞ்சம் அசத்து என்பதற்கு மட்டுமே மலடியின் சேய், முயலின் கோடு என்றதாகவும், பிரபஞ்ச தோற்றம் கிளிஞ்சில் வெள்ளி, கயிற்றில் பாம்பு, பீனமாம் தறிபுமான், கந்தர்வ நகரம் என்றது போல பொய்யான தோற்றம் என்றார். கிளிஞ்சலை தவிர வெள்ளியும், கயிற்றைத்தவிர பாம்பும், கட்டையைத்தவிர மனிதனும், சூன்யத்தைத் தவிர கந்தர்வ நகரமும் இல்லை என தெளிந்தபின் வெள்ளி, பாம்பு ஆகியன தோன்றா. அப்படி இல்லாமல் மண்ணையன்றி குடத்தின் பொருள் இன்னதென்று ஆய்ந்து அறிய முயன்றால் அது பெயர்த்தும் தோன்றும். அது போல பிரபஞ்சம் காரணமான பிரமத்தை தவிர இல்லை என உணரினும் அது தோன்றுகிறபடியால், இது எப்படிக்கூடும்? பிரபஞ்சம் பொருள் அன்று என்பதற்கு மாத்திரம் கிளிஞ்சில் வெள்ளி ஆகிய திட்டாந்தங்கள் சொல்லப்பட்டது. பிரபஞ்சம் பொய், பொருளற்றது என உணரினும் அது மறுபடி கானல் நீர் போல தோன்றும். கானலில் நீரில்லை, ஆகாயத்தில் கரு நிறம் இல்லை. இப்படி தெளிந்தபின்னும் அவை தோன்றினாலும் அவை அநுபவத்துக்கு வருவதில்லை. பிரபஞ்சம் அப்படி இல்லாது சப்த ஸ்பரிசம் முதலானவற்றால் அநுபவிக்கப்படுகிறது. பிரபஞ்சம் அசத்து என உணரினும் பெயர்த்தும் தோன்றும். இதற்கே கானல் நீர் ஆகிய திட்டாந்தங்கள் சொல்லப் பட்டது. பிரபஞ்சம் பொய் என உணர்ந்த பின்னும் சொப்பனப் பிரபஞ்சம் போல அநுபவத்துக்கு வரும் எனக் கொள்க.

தாத்பர்யம்:
த்ருஷ்யமாய் அசத்தான சகத்துக் காலத்ரயத்திலும் த்ருக்காய், சத்தா மாத்திரமான ஆத்மா த்ரி காலத்திலும் உள்ளது. அவ்வாத்ம சொரூபமே தான் என்ற அநுபவம் விட்டு நீங்காதிருப்பாய் என்றதாம்.

தத்துவ விளக்கப்படலம் நிறைவுற்றது.
சிவோஹம்


Post a Comment