Pages

Wednesday, November 11, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-7




சுமார் ஏழு வருடங்கள் டவுண் ஹாலில் கொட்டகை போட்டு நடத்தி வந்தோம்.
அதே சமயம் முக்கால் வாசி சாதகர்கள்  திருப்பாதிரிப்புலியூர் பகுதி, அதைத்
தாண்டிய பகுதிகளில் இருந்து வந்து கொண்டு இருந்ததாலும், நெய்வேலி மக்கள்
திருப்பாதிரிப்புலியூருக்கு பேருந்தில் வருவது சுலபம் என்பதாலும் இடத்தை
மாற்றிவிட தீர்மாணித்தோம். அங்கே இருக்கிற பள்ளி ஒன்றில் கொட்டகை அமைத்து
நடத்தினோம்.

அடுத்த வருடம்  கும்பகோணத்தில் தீ விபத்து நடக்கவே கொட்டகைகள் போட தடை
விதிக்கப்பட்டது. ஷீட் போட்டு கொட்டகை அமைத்தால் சூடும் உள்ளே
இருப்பவர்களுக்கு தாங்காது, புகையும் வாங்காது.

அப்போது திருப்பாபுலியூரில் இருக்கும் சங்கர பக்த ஜன சபா கமிட்டியினர்
அவர்களாகவே வந்து அவர்களுடைய ஹாலில் நடத்தும்படி கேட்டுக்கொண்டார்கள்.
சில காரணங்களால் அந்த இடம் சரியாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.

ஹால் என்றால் எப்படி குழி தோண்டி ஹோமம் செய்வது?

பரவாயில்லை வருடா வருடம் தோண்டிக்கொள்ளலாம். நாங்களே சரி செய்து
கொள்கிறோம் என்றார்கள்.
மனசாகவில்லை.
எங்கள் வீட்டுக்கு வரும் நண்பரை கலந்தாலோசித்ததில் அவர் ஒரு வகையில்
செங்கல் வைத்து ஹோமம் செய்ய கற்றுக்கொடுத்தார். இந்த முறையில்
பயமில்லாமல் தரைக்கு ஒரு பாதகமும் வராமல் ஹோமம் செய்யலாம். அக்னியும்
நன்றாக ஜ்வாலை விட்டு எரியும்.
இப்படியே செய்து பார்க்க முடிவு செய்தோம்.

எங்களுக்கு வீடு கட்டிக்கொண்டு இருந்த மேஸ்த்ரியை கூப்பிட்டு செங்கல்
வேண்டும் என்று  கேட்டோம்.அவரும் தருகிறேன் என்றார். அப்புறம் இன்னொரு
பிரச்சினை. ஹோமம் முடிந்தபின் இத்தனை செங்கல்லையும் என்ன செய்வது?
யோசித்து மேஸ்த்ரியை நீங்களே இதை எடுத்துபோய் கட்டிடம் கட்ட உபயோகிக்க
முடியுமா என்றோம்? அவரும் செய்யலாம் சார் என்றார்.
அதே போல ஹோமத்துக்கு முன் தினம் வந்து எங்கள் வழி காட்டுதலில் ஹோமம்
குண்டம் தயார் செய்து கொடுத்துவிட்டு போய்விட்டார்.

ஆரம்பத்தில் இருந்து எங்கள் நிதி நிலை இப்படி அப்படிதான் இருந்தது.
அதனால் மேஸ்த்ரி என்ன பணம் வேண்டும் என்றூ கேட்டேன்.அவரோ ஒண்ணும்
வேண்டாம் சார். இது என் பங்காக இருக்கட்டும் என்றார்.

அடுத்த வருடம் அவரே எப்போ சார்  ஹோமம் என்று  விசாரித்தார்.

குண்டம் அமைத்து கொடுத்தார். அந்த வருஷம் கையில் கொஞ்சம் பணம் தேறியது.
அதனால் கூலி கொடுக்க முன் வந்தேன்.
"வேண்டாம் சார்! என்றார்.
"ஏன் மேஸ்த்ரி?"
சார், இந்த ஹோமம் முடிஞ்ச பிறகு அந்த கல்லை வெச்சு கட்டிடம் கட்ட
ஆரம்பிச்சா ஸ்டாப் ஆகாம வேல ஓடிப்போகுது சார். அதிலே அவ்வளொ பவர்
இருக்குது என்றார்!

அண்மையில் அவர் ஒரு - அவர் லெவல் க்கு மிகப்பெரிய கட்டிடம் -
மருத்துவ மனை கட்டி இருந்தார். அதனால் எனக்கு அது உண்மை என்று  தெரியும்.
சாதாரணமாக என்னதான் செல்வ சீமானாக இருந்தாலும் ஏதோ காரணமாக கட்டிட வேலை
தடை பெறுவது உண்டு. இதிலோ ஒரு தடையும் இல்லை. வேலை படு வேகமாக
நேர்த்தியாகவே முடிந்தது.

இதை கேள்வி பட்ட சிலர் அடுத்த வருடம் என்னிடம் வந்து அந்த ஹோமத்தில்
வைத்த செங்கல் தர முடியுமா என்று கேட்டர்கள். நான் கல் எல்லாமே
மேஸ்த்ரியுடையது., அவருக்கு கொஞ்சம் திரவியம் கொடுத்துவிட்டு
வாங்கிக்கொள்ளுங்கள் என்றேன். அவர்களும் அதே போல பணம் கொடுத்து
வாங்கிச்சென்றனர்.
எனக்கே நன்றாக தெரிந்த ஒரு ஆசிரியை அப்படி வாங்கிச்சென்று தடை இல்லாமல்
கட்டிட வேலை முடிந்தது. இத்தனைக்கும் அவர்கள் வருமானம் அப்படி ஒன்றும்
அதிகமில்லை.

கூட்டங்களில்  சொல்வதற்கு எனக்கு இன்னும் ஒரு விஷயம் அகப்பட்டது.
ஏன்பா காயத்ரியின் பெருமை ஒரு மேஸ்த்ரிக்கு தெரிகிறது. உனக்கு தெரியலையே? :-))

Tuesday, November 10, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-6



ஏறத்தாழ ஆரம்ப நாட்களில் இருந்து பதிவு செய்து ஜபம் செய்பவர்களில் ஒருவர் ஸ்ரீ பா. இவரும் இப்போது விடுப்பு பெற்ற பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

வருடா வருடம் லட்சம் முடித்துவிடுவார். விபத்து ஒன்றில் சிக்கி காலில் ஊனம் இருப்பதால் வெகு நேரம் உட்கார முடியாது. தன் மகனை தனக்கு பதில் உட்கார்ந்து ஹோமம் செய்ய சொல்லுவார்.

இவர் மாப்பிள்ளை இப்போது இருக்கும் வழக்கப்படி வெளிநாட்டில் இருக்கிறார். கைக்குழந்தையுடன் ஊருக்கு வந்து விடுமுறையை கழித்த  தன் பெண்ணை விமானம் ஏற்றி விடபோனார்.

பாகேஜ் செக் இன் எல்லாம் முடிந்து அறிவிப்பு வர காத்து இருந்தார்கள். இவர்களது விமானத்துக்கு முந்தைய விமானம் கிளம்ப இருப்பதாகவும் பயணிகள் வர வேண்டும் என்று அறிவிப்பு வந்தது. அப்போது திடீரென்று குழந்தை அழ ஆரம்பித்தது. என்ன செய்தும் அழுகை நிற்கவில்லை. செய்வது அறியாமல் திகைத்தனர். விமானம் ஏறும் திட்டம் கைவிடப்பட்டது. இவருக்கு வேறு இஷ்ட தெய்வமில்லை. காயத்திரியை மனசில் வேண்டிக்கொண்டார்.

முந்தைய விமானம் ஏற அறிவிப்பு வந்திருந்ததாக சொன்னேன் இல்லையா? அதற்கு விரைந்து கொண்டிருந்தவர்கள் இந்த அழுகிற குழந்தையை திரும்பி பார்த்துக்கொண்டே போனார்கள். விரைகின்ற பயணிகளில் இருவர் -சகோதரிகள்-  வடக்கத்தி பெண்கள் பாதை பிரிந்து வந்து இவர்களை பார்த்து ஏன் குழந்தை அழுகிறது என்று கேட்டனர். இவர்களும் ஒன்றும் புரியவில்லை என்று சொன்னார்கள். அவர்கள் இவர்களுடைய பக்கத்தில் இருந்தவர் மூலமாக இந்த குழந்தைக்கு உரம் விழுந்துடுத்து என்கிட்டே கொடுங்க சரி செய்கிறோம் என்றார்கள். முன் பின் தெரியாதவர்கள். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விமானம் ஏறவோ நேரம் ஆகிக்கொண்டு இருந்தது. இருவரில் ஒரு பெண்மணி ஏறத்தாழ வலுக்கட்டயமாக குழந்தையை பிடுங்கிக்கொண்டு படிக்கட்டு அருகில் போனார். ஏதோ செய்தார். சட் என்று அழுகை நின்றது. திரும்பி வந்து குழந்தையை கொடுத்துவிட்டு சரியாகிவிட்டது, இன்னும் பத்து நிமிடங்கள் கழித்து பால் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு விமானத்தை பிடிக்க ஓட்டமும் நடையுமாக விரைந்து காணாமற்போயினர்.! குழந்தை சிரித்துக்கொண்டு இருந்தது!

இவருக்கே இரண்டு வருடங்கள் முன் இன்னொரு அனுபவம்.
தன் மகனை பொறியியல் கல்லூரியில் சேர்க்க சென்றார். ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் சேர்க்க விருப்பம். மார்க் ஷீட் கிடைத்த உடன் விரைந்து சென்றும் அலுவலகத்துக்கு சென்ற போது எல்லா இடங்களும் நிறைந்துவிட்டது என்றும், இனி வாய்ப்பே இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள்.

சரி கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று வெளியே வந்தார்கள். அங்கே அவர்கள் வாடகைக்கு அமர்த்தி சென்று இருந்த கார் ஓட்டுனர் சார் ஒரு சக்கரம் பஞ்சர் ஆகிவிட்டது. இதோ மாற்று சக்கரம் பொருத்திவிடுகிறேன், பிறகு போகலாம் என்று சொல்ல இவருக்கு இன்னும் கஷ்டம் அதிகமாகி விட்டது.

அம்மா காயத்ரி ஏன் இப்படி சோதிக்கிறாய் என்று பிரார்த்தனை செய்துவிட்டு சக்கரம் மாற காத்து இருந்தார்கள். பத்து நிமிடங்கள் கழித்து சரி செய்துவேறு சக்கரம் பொருத்திய பின் வண்டி ஏறப்போன அதே நேரம் அலுவலகத்தில் இருந்து பணியாளர் ஓடி வந்து "சார் உங்களை ஆபீசிலே கூப்பிடறாங்க!" என்றார்.

குழப்பத்துடன் திரும்பி போனால். "சார்! இப்போதுதான் ஒரு போன் வந்தது ஏற்கெனெவே இடம் ஒதுக்கிய ஒருவர் வேறு இடத்தில் சீட் கிடைத்ததால் வரவில்லை என்று தெரிவித்தார்கள் . நீங்கள் விரும்பினால் பணம் கட்டி பையனை சேர்த்துவிடலாம்" என்றனர்!
காயத்ரிக்கு நன்றி சொல்லிக்கொண்டே பணம் கட்டினார்கள்.


Friday, November 6, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-5



ஒரே பிரச்சினை.

"என்ன பிரச்சினை?”
"வீட்டிலே ஜெ பாட்டுக்கு எப்ப பாத்தாலும் ஏதோ தியானத்திலே இருக்கான்.
எந்த வேலையை தேடவும் முனையலை. வாழ்க்கையிலே பிடிப்பே இல்லாத மாதிரி
இருக்கான்.”
ஏதோ பெரிய சமாசாரம் இது ன்னு தோன்றியது.
"அவரோட தினசரி வேலையை அவரே பாத்துக்கிறாரா?”
"பாத்துக்கிறார்.”
"அவரை அவர் போக்கிலேயே விட்டுங்க. மாத்த முயற்சி செய்ய வேணாம். தேவையானால் நான் வந்து உங்க அப்பா அம்மாகிட்டே பேசறேன்.”
வந்த தம்பி நான் வீட்டுக்கு வந்து ஜெ ஐ மாத்த முயற்சி செய்வேன்ன்னு நினைச்சார் போல இருக்கு. சரின்னு அரை குறை மனசோட கிளம்பி போனார். தொடர்பு
கொள்ளவே இல்லை.
அடுத்த வருடம் யக்ஞத்தில் ஜெ வெறும் பார்வையாளராக மட்டும் வந்து போனார்.
சிரித்துக்கொண்டே ஜபம் எல்லாம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். சில மாதங்களுக்குப்பின் ஜெ வுடன் அவர் தம்பி வந்து சேர்ந்தார்.
"என்ன விஷயம்?”
"இவர் பிரச்சினை அதிகமா இருக்கு.”
“????”
"சரி! இவன் ஆன்மீகத்திலேதான் போவான் போல இருக்குன்னு **** ஆசிரமத்திலே
கொண்டுவிட்டோம்.”
"ம்ம்ம்..”
"மூணு மாசத்துக்குள்ளே அவங்க போன் பண்ணி அழைச்சுண்டு போக சொல்லிட்டாங்க.”
"ஏன்!!!!!”
"இவர் பாட்டுக்கு உலாவ போயிடுவார். எங்கே போவார்ன்னு யாருக்கும் தெரியாது.
ஆளை காணோமேன்னு போய் தேடி அழைச்சுண்டு வரணும். ஆசிரம வளாகத்திலெ எங்கே வேணுமானால் இருப்பார். அங்கே எடுக்கிற வகுப்புகளிலேயும் கலந்துக்கிறதில்லை. ஒண்ணும் சரிப்பட்டு வரலை.
திடீர்ண்ணு பாத்தா கண்ணிலேந்ந்து கண்ணீர் வர மௌனமாக இருப்பார். ஆதனால்
அவர்கள் அழைத்து போக சொல்லிவிட்டார்கள். இப்ப என்ன செய்யறது?”
ஜெ வை "என்ன சமாசாரம்?"ன்னு கேட்டேன். அவர் சிரித்துகொண்டே எனக்கு ஒரு
பிரச்சினையும் இல்லை. இவர்கள்தான் கவலைப்படுக்கிறார்கள். என்னால் இவர்களுக்குத்தான் தொல்லை என்றார்.

"இதோ பாருங்கள்! இவரை என்ன செய்வது என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. நாளை **** போய் என் வழிகாட்டியை சந்திக்க இருக்கிறேன். அவரிடன் கேட்டு வருகிறேன். திங்கள் அன்று வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினேன்.

ஞாயிறு தாத்தாவை (யார் என்று தெரிகிறதல்லவா? என் வழி காட்டி) பார்க்கபோனேன். மற்ற விஷயங்கள் பேசிவிட்டு இவரை பற்றி சொன்னேன். அவர் "டேய்! அவர் என்ன ஸ்டேஜிலே இருக்கார் தெரியுமா? துரியத்திலே இருக்கார். அவருக்கு இப்போ மாத்ரு பாவத்துடன் ஒரு வழிகாட்டுதல் தேவை. **** ஐ போய் பாக்கச்சொல்" என்றார்.

கடலூர் திரும்பினேன். இரண்டு பேருமே மீண்டும் வந்தார்கள். சேதியை சொன்னேன்.
ஜெ சிரித்துக்கொண்டே "நான் **** இல் இருந்த போது சக பயணி ஒருவர் அவரிடம்
போகும்படித்தான் என்னிடம் சொன்னார்" என்றார். "சரி! அவரை சந்தியுங்கள்”
என்றேன்.
ஜெ கதை இத்துடன் முடிகிறது.
நீங்கள் கொஞ்சம் ஏமாந்து போவீர்கள் என்றூ தெரியும். இருந்தாலும் வேறு
வழியில்லை. அந்த குடும்பம் எங்கள் ஊரைவிட்டு போய்விட்டார்கள். பிறகு என்ன
ஆயிற்று என்று தெரியவில்லை.


Thursday, November 5, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-4

மூன்றவது வருட யக்ஞத்தில் கொஞ்சம் சுதாரித்துகொண்டோம்.  இரண்டாம் வருட
மெத்தனத்தை நீக்க கூடுதல் உழைப்பு கொடுத்து மேலும் ஒருங்கிணைப்பாளர்களை
சேர்த்து கொஞ்சம் சமாளித்துவிட்டோம்.
கடலூரில் மொத்த அந்தணர் குடும்பங்களே குறைவான எண்ணிக்கையில் இருந்ததால்
பக்கத்தில் விழுப்புரம், நெய்வேலி ஆகிய ஊர்களையும் எங்கள் திட்டத்தில்
சேர்த்து இருந்தோம்.
இந்த வருடம் நெய்வேலிக்கு ஸ்ரி  நா. ஒருங்கிணைப்பளராக அகப்பட்டார்.
முன்னால் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் உடல் நிலை சரியில்லாமல் போக அவரே
நா. வை பார்த்து பேசி பொறுப்பை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.
நா. சத்தான மனிதர். நல்ல உழைப்பாளி. சேர்ந்த முதல் வருடம் பொறுப்பு
தாமதமாக வந்து சேர நேரம் அதிகம் இல்லாததால் சரியாக செயல்பட முடியவில்லை.
64 பேர்களை சேர்த்தார். அடுத்த வருடம் 108 இலக்காக வைத்து முடித்தார்.
நாங்களும் நெய்வேலிக்கே போய் கூட்டங்கள் நடத்தி உற்சாகப்படுத்தினோம். நா.
கொஞ்சம் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டதில்லையாகையால் ஆரம்ப காலங்களில்
கொஞ்சம் வருத்தப்பட்டார். மீட்டிங்க் இருக்கிறது என்று தெரிவிப்பார்.
பதிவு செய்தவரும் ஆஹா வருகிறேன் என்பார். ஆனால் வர மாட்டார். இது நா.
வுக்கு மிகுந்த வருத்தம் தந்தது. "மாமரத்தில் எவ்வளவு பூ பூக்கிறது?
எல்லாமே பிஞ்சாகிவிடுகிரதா? எல்லா பிஞ்சும் காயாகி விடுமா? எல்லா காயும்
பழமாகிவிடுமா? பழுக்கும் அத்தனை பழமும் நமக்கு உண்ண கிடைக்குமா?
இயற்கையில் இப்படி ஒரு நியதி இருக்கிறது. கவலைப்படாதீர்கள். யாருக்கு
கொடுப்பினை இருக்கிறதோ அவர் பயன்பெறுவார். அவர்கள் யார் என்று
தெரியாததால் நாம் பலரையும் சந்தித்து பேச வேண்டி இருக்கு" என்று
சமாதானப்படுத்தினோம்.

உள்ளூரில் நடந்த மீட்டிங்க் ஒன்றில் எவ்வளவு ஜபம் ஆகி இருக்கிறது என்றூ
விசாரித்து கொண்டு இருந்தோம். தொய்வு இருந்தால் என்ன பிரச்சினை என்று
கேட்டு இயன்றால் உதவி வந்தோம்.
மூன்றாம் வருடம் ஒருவர் 3 இலட்சம் முடித்ததாக சொன்னேன் இல்லையா! இவர்
பெயர் ஜெ. இந்த முறை எவ்வளவு என்று கேட்ட போது 11 லட்சம் முடித்து
அப்புறம் எண்ணுவதை நிறுத்திவிட்டேன் என்றார். ஆஹா! வித்தியசமான ஆசாமியாக
இருக்கார் என்று எண்ணி எப்படி இவ்வளவு ஜபம் செய்கிறீர்கள் என்று
கேட்டேன்.
"நான் எங்கே செய்கிறேன்? ஜபம் பாட்டுக்கு ஓடுகிறது; நான் வேடிக்கை
பார்க்கிறேன்" என்றார்! அப்போது எனக்கு இது அவ்வளவு சரியா புரியவில்லை.

மனதில் பல லேயர் இருக்கு. இது பழகியவர்களுக்கு புரியும். மேலோட்டமாக
இருப்பது ஒன்று. இதில அன்றாட சமாசாரங்கள் ஓடும். ஜபம் செய்ய
உக்காருகிறோம். கொஞ்சம் மனசை குவித்து செய்ய ஆரம்பிக்கிறோம். கொஞ்ச நேரம்
ஆச்சு. ஏதேதோ சிந்தனைகள். திடீரென்று "அட! ஜபம் செய்யும் போது இதெல்லாம்
எதுக்கு?" என்று வெட்கப்படுகிறோம். திருப்பி ஜபம் செய்ய நினைக்கிறோம்.
என்ன ஆச்சரியம்! அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கு. நிற்கவேயில்லை.
அதாவது மேலோட்ட சிந்தனைகள் இருக்கும்போதும் அடி மனதில் ஒரு அடுக்கில்
ஜபம் ஓடுகிறது. இப்படி பயிற்சியால் செய்ய முடியும். இந்த ஜபத்தை சும்மா
வேடிக்கை பார்க்கலாம். அது பாட்டுக்கு ஒரு வேகத்தில் லயத்தில் ஓடும்.
இப்படி வேடிக்கை பார்க்க பழகினால் அது மேலே மேலே கொண்டு போய் சாட்சி
பாவத்தில் விடும்.

ஜெ செராமிக்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த துறையில்
இவர் நல்ல படிப்பு படித்து இருந்தார்.
ஹோமம் முடிந்த பின் ஒரு நாள் இவருடைய தம்பி இவருடன் என்னை பார்க்க வந்தார்.
என்ன விஷயம்?
ஒரே பிரச்சினை.
.......

Wednesday, November 4, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-3



லினக்ஸ் புதுசு நிறுவப்போய் பேக் அப்ப பண்ணது எல்லாம் எங்கேன்னு தேடறேன். அதானால தாமதம்.
------------------

முன்னே பணி இட மாற்றுதல் ஒருவர் மனைவிக்கு கிடத்ததாக சொன்னேன் இல்லையா? அவர்கள் ஏழு வருடங்களாக முயற்சி செய்து வந்ததை சொல்லாமல் விட்டு விட்டேன். ஆமாம் ஏழு வருட முயற்சியில் கிடைக்காததுதான் காயத்ரியால் கிடைத்தது.

முதல் வருஷம் காயத்ரி ஜபயக்ஞம் நடத்திய போது அதை வருடா வருடம் நடத்தும் கற்பனை ஏதும் இல்லை. நிகழ்ச்சி முடிந்த பின் என் ஆன்மீக வழிகாட்டியுடன் பேசிக்கொண்டு இருந்த போது இந்த நிகழ்ச்சிக்கு உழைத்தவர்களை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி இதைப்பற்றி யோசிக்கச்சொன்னார். நாங்களும் அப்படி செய்ததில் அவரவர் பகுதியில் யக்ஞத்தில் கலந்து கொண்டவர்களுடன் பேசியதில் அனைவரும் இதை வரவேற்றதாகவும் அடுத்தது எப்போ என்று கேட்பதாகவும் சொன்னார்கள். அடுத்த வருடமும் இதே கால கட்டத்தில் நிகழ்ச்சி நடத்துவதாக ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
நவம்பர் மாதம் வேலையை துவக்கினோம். இந்த முறை கொஞ்சம் அலட்சியம் வந்துவிடக்கூடும்,மெத்தனமாக இராதீர்கள் என்று எச்சரித்தும் ஒருங்கினைபாளர் பெரும்பாலானோர் அசட்டையாக இருந்துவிட்டனர். எல்லாரும் போன முறை போல ஜபம் செய்துவிடுவார்கள் என்று நம்பிவிட்டனர். களப்பணிதொய்ய அது பதிவு செய்தோர் எண்ணிக்கை ஜப எண்ணிக்கை இரண்டிலும் பிரதிபலித்தது.

இரண்டாம் ஹோமம் 18-06-2000 அன்று முன் போல டவுண்ஹாலிலேயே!

இந்த முறை 62 பேர்கள்தான். இருந்தாலும் மொத்த எண்ணிக்கை ரொம்பவும் குறையவில்லை. என்னடா என்று பார்த்தால் ஒருவர் 3 லட்சம் செய்து இருந்தார்!
இந்த ஜபகாலத்தில் ஒரு சில கூடுதல்கள் ஏற்பாடு செய்து ஜப காலத்தில் என்ன அனுபவம் என்று விசாரிக்க ஆரம்பித்தோம். அந்த கூட்டத்க்கு வந்தவர்களில் ஒருவர் ரெய்கீ மாஸ்டர் ஸ்ரீ பா. முன்னே பத்து பதினைந்து நிமிடம் ரெய்கி கொடுப்பதில் தெரிந்த எபெக்ட் 3-5 நிமிடங்களிலேயே தெரிவதாக சொன்னார்.


2005 ஆம் ஆண்டு ஜபத்தில் பதிவு செய்து தொடர்புக்கு வந்தவர் ஸ்ரீ ரெ. பதிவு காலம் முடிந்து ஜப காலம் துவங்கியதும் பகுதி வாரியாக கூடுதல்கள் நடத்துவோம். ஜப யக்ஞத்தைப்பற்றிய முழு விவரம் சந்தேகங்களுக்கு பதில்கள் ஜபம் செய்ய உற்சாகப்படுத்துதல் எல்லாம் நடைபெறும். அத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் அவரை சந்தித்தேன். திருமணம் ஆகவில்லை. ரயில்வே எஞ்சினீயராக வேலை. கூட்டம் நிகழ்ந்த இடத்துக்கு பக்கத்திலே வீடு இருந்ததால் தவிர்க்க முடியாமல் வர நேர்ந்தது போலும்.

எடுத்த எடுப்பிலேயே "பிராம்மணனைப்போல முட்டாள் இல்லை" என்று நான் சொல்ல கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார். அது நான் கவனத்தை கவர செய்யும் யுக்தி. "பின்னே, இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம் உபதேசம் ஆகி இருந்தும் அதை ஜபம் செய்து பயனடையாமல் நான் கஷ்டப்படுகிறேன் என்று புலம்புபவர்களை என்ன சொல்வது?" என்று காயத்திரியின் பெருமை பக்கம் பேச்சை கொண்டு போய் விடுவேன்.

ரெ சில நடைமுறை சந்தேகங்களை கேட்டார். அந்த வருட ஜப காலம் முடிந்து ஹோமம் நடந்து முடிந்தது. கொஞ்சம் தயக்கத்துடன் என்னை பார்க்க வந்தார். இந்த ஹோமத்துக்கு நீங்கள் நன்கொடை வசூலிப்பது இல்லை என்று தெரியும், ஆனால் கொடுத்தால் வாங்கிக்கொள்வீர்களா என்று கேட்டார். இசைவை தெரிவித்ததும் ஒரு நல்ல தொகையை கொடுத்தார். பின்னாலேயே ஒரு பத்திரிகையை நீட்டினார்.

"என்ன சமாசாரம்?" என்று விசாரித்தேன்.

"எனக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் ...அவசியம் வர வேணும்" என்று கேட்டுக்கொண்டார். வாழ்த்தி அனுப்பி வைத்தோம். பின்னால் விசாரித்ததில் சில விஷயங்கள் தெரிய வந்தன, இவர் ஆரம்பத்தில் ஒன்றும் ஆர்வமாக இல்லை. கூட்டத்தில் பிராமணனை திட்டப்போக அது இவரை கொஞ்சம் உசுப்பி விட்டது. கொஞ்சம் யோசித்தார். நாலு வருஷமாக பெண் பாத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒண்ணும் அமையவில்லை. இவர் ஏதோ சொல்கிறாரே, செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தார். வீட்டில் டிவி யை தூக்கி பரணில் போட்டார். "டிவி அவசியமாக பார்த்தே ஆக வேண்டும்!" என்ற தன் தாயை தன் அண்ணன் வீட்டுக்கு கொஞ்ச காலம் இருந்து வர அனுப்பினார். ஒரு லட்சம் பூர்த்தி செய்தே ஆக வேண்டும் என்று உறுதியுடன் செய்து பூர்த்தி செய்தார். திருமணமும் நிச்சயம் ஆகிவிட்டது.

ரெ இப்போது எங்கள் ஒருங்கிணைப்பாளர் குழுவில் முக்கிய அங்கத்தினர்!