Pages

Tuesday, November 10, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-6



ஏறத்தாழ ஆரம்ப நாட்களில் இருந்து பதிவு செய்து ஜபம் செய்பவர்களில் ஒருவர் ஸ்ரீ பா. இவரும் இப்போது விடுப்பு பெற்ற பின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

வருடா வருடம் லட்சம் முடித்துவிடுவார். விபத்து ஒன்றில் சிக்கி காலில் ஊனம் இருப்பதால் வெகு நேரம் உட்கார முடியாது. தன் மகனை தனக்கு பதில் உட்கார்ந்து ஹோமம் செய்ய சொல்லுவார்.

இவர் மாப்பிள்ளை இப்போது இருக்கும் வழக்கப்படி வெளிநாட்டில் இருக்கிறார். கைக்குழந்தையுடன் ஊருக்கு வந்து விடுமுறையை கழித்த  தன் பெண்ணை விமானம் ஏற்றி விடபோனார்.

பாகேஜ் செக் இன் எல்லாம் முடிந்து அறிவிப்பு வர காத்து இருந்தார்கள். இவர்களது விமானத்துக்கு முந்தைய விமானம் கிளம்ப இருப்பதாகவும் பயணிகள் வர வேண்டும் என்று அறிவிப்பு வந்தது. அப்போது திடீரென்று குழந்தை அழ ஆரம்பித்தது. என்ன செய்தும் அழுகை நிற்கவில்லை. செய்வது அறியாமல் திகைத்தனர். விமானம் ஏறும் திட்டம் கைவிடப்பட்டது. இவருக்கு வேறு இஷ்ட தெய்வமில்லை. காயத்திரியை மனசில் வேண்டிக்கொண்டார்.

முந்தைய விமானம் ஏற அறிவிப்பு வந்திருந்ததாக சொன்னேன் இல்லையா? அதற்கு விரைந்து கொண்டிருந்தவர்கள் இந்த அழுகிற குழந்தையை திரும்பி பார்த்துக்கொண்டே போனார்கள். விரைகின்ற பயணிகளில் இருவர் -சகோதரிகள்-  வடக்கத்தி பெண்கள் பாதை பிரிந்து வந்து இவர்களை பார்த்து ஏன் குழந்தை அழுகிறது என்று கேட்டனர். இவர்களும் ஒன்றும் புரியவில்லை என்று சொன்னார்கள். அவர்கள் இவர்களுடைய பக்கத்தில் இருந்தவர் மூலமாக இந்த குழந்தைக்கு உரம் விழுந்துடுத்து என்கிட்டே கொடுங்க சரி செய்கிறோம் என்றார்கள். முன் பின் தெரியாதவர்கள். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விமானம் ஏறவோ நேரம் ஆகிக்கொண்டு இருந்தது. இருவரில் ஒரு பெண்மணி ஏறத்தாழ வலுக்கட்டயமாக குழந்தையை பிடுங்கிக்கொண்டு படிக்கட்டு அருகில் போனார். ஏதோ செய்தார். சட் என்று அழுகை நின்றது. திரும்பி வந்து குழந்தையை கொடுத்துவிட்டு சரியாகிவிட்டது, இன்னும் பத்து நிமிடங்கள் கழித்து பால் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு விமானத்தை பிடிக்க ஓட்டமும் நடையுமாக விரைந்து காணாமற்போயினர்.! குழந்தை சிரித்துக்கொண்டு இருந்தது!

இவருக்கே இரண்டு வருடங்கள் முன் இன்னொரு அனுபவம்.
தன் மகனை பொறியியல் கல்லூரியில் சேர்க்க சென்றார். ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் சேர்க்க விருப்பம். மார்க் ஷீட் கிடைத்த உடன் விரைந்து சென்றும் அலுவலகத்துக்கு சென்ற போது எல்லா இடங்களும் நிறைந்துவிட்டது என்றும், இனி வாய்ப்பே இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள்.

சரி கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று வெளியே வந்தார்கள். அங்கே அவர்கள் வாடகைக்கு அமர்த்தி சென்று இருந்த கார் ஓட்டுனர் சார் ஒரு சக்கரம் பஞ்சர் ஆகிவிட்டது. இதோ மாற்று சக்கரம் பொருத்திவிடுகிறேன், பிறகு போகலாம் என்று சொல்ல இவருக்கு இன்னும் கஷ்டம் அதிகமாகி விட்டது.

அம்மா காயத்ரி ஏன் இப்படி சோதிக்கிறாய் என்று பிரார்த்தனை செய்துவிட்டு சக்கரம் மாற காத்து இருந்தார்கள். பத்து நிமிடங்கள் கழித்து சரி செய்துவேறு சக்கரம் பொருத்திய பின் வண்டி ஏறப்போன அதே நேரம் அலுவலகத்தில் இருந்து பணியாளர் ஓடி வந்து "சார் உங்களை ஆபீசிலே கூப்பிடறாங்க!" என்றார்.

குழப்பத்துடன் திரும்பி போனால். "சார்! இப்போதுதான் ஒரு போன் வந்தது ஏற்கெனெவே இடம் ஒதுக்கிய ஒருவர் வேறு இடத்தில் சீட் கிடைத்ததால் வரவில்லை என்று தெரிவித்தார்கள் . நீங்கள் விரும்பினால் பணம் கட்டி பையனை சேர்த்துவிடலாம்" என்றனர்!
காயத்ரிக்கு நன்றி சொல்லிக்கொண்டே பணம் கட்டினார்கள்.


No comments: