மூன்றவது வருட யக்ஞத்தில் கொஞ்சம் சுதாரித்துகொண்டோம். இரண்டாம் வருட
மெத்தனத்தை நீக்க கூடுதல் உழைப்பு கொடுத்து மேலும் ஒருங்கிணைப்பாளர்களை
சேர்த்து கொஞ்சம் சமாளித்துவிட்டோம்.
கடலூரில் மொத்த அந்தணர் குடும்பங்களே குறைவான எண்ணிக்கையில் இருந்ததால்
பக்கத்தில் விழுப்புரம், நெய்வேலி ஆகிய ஊர்களையும் எங்கள் திட்டத்தில்
சேர்த்து இருந்தோம்.
இந்த வருடம் நெய்வேலிக்கு ஸ்ரி நா. ஒருங்கிணைப்பளராக அகப்பட்டார்.
முன்னால் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் உடல் நிலை சரியில்லாமல் போக அவரே
நா. வை பார்த்து பேசி பொறுப்பை கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.
நா. சத்தான மனிதர். நல்ல உழைப்பாளி. சேர்ந்த முதல் வருடம் பொறுப்பு
தாமதமாக வந்து சேர நேரம் அதிகம் இல்லாததால் சரியாக செயல்பட முடியவில்லை.
64 பேர்களை சேர்த்தார். அடுத்த வருடம் 108 இலக்காக வைத்து முடித்தார்.
நாங்களும் நெய்வேலிக்கே போய் கூட்டங்கள் நடத்தி உற்சாகப்படுத்தினோம். நா.
கொஞ்சம் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டதில்லையாகையால் ஆரம்ப காலங்களில்
கொஞ்சம் வருத்தப்பட்டார். மீட்டிங்க் இருக்கிறது என்று தெரிவிப்பார்.
பதிவு செய்தவரும் ஆஹா வருகிறேன் என்பார். ஆனால் வர மாட்டார். இது நா.
வுக்கு மிகுந்த வருத்தம் தந்தது. "மாமரத்தில் எவ்வளவு பூ பூக்கிறது?
எல்லாமே பிஞ்சாகிவிடுகிரதா? எல்லா பிஞ்சும் காயாகி விடுமா? எல்லா காயும்
பழமாகிவிடுமா? பழுக்கும் அத்தனை பழமும் நமக்கு உண்ண கிடைக்குமா?
இயற்கையில் இப்படி ஒரு நியதி இருக்கிறது. கவலைப்படாதீர்கள். யாருக்கு
கொடுப்பினை இருக்கிறதோ அவர் பயன்பெறுவார். அவர்கள் யார் என்று
தெரியாததால் நாம் பலரையும் சந்தித்து பேச வேண்டி இருக்கு" என்று
சமாதானப்படுத்தினோம்.
உள்ளூரில் நடந்த மீட்டிங்க் ஒன்றில் எவ்வளவு ஜபம் ஆகி இருக்கிறது என்றூ
விசாரித்து கொண்டு இருந்தோம். தொய்வு இருந்தால் என்ன பிரச்சினை என்று
கேட்டு இயன்றால் உதவி வந்தோம்.
மூன்றாம் வருடம் ஒருவர் 3 இலட்சம் முடித்ததாக சொன்னேன் இல்லையா! இவர்
பெயர் ஜெ. இந்த முறை எவ்வளவு என்று கேட்ட போது 11 லட்சம் முடித்து
அப்புறம் எண்ணுவதை நிறுத்திவிட்டேன் என்றார். ஆஹா! வித்தியசமான ஆசாமியாக
இருக்கார் என்று எண்ணி எப்படி இவ்வளவு ஜபம் செய்கிறீர்கள் என்று
கேட்டேன்.
"நான் எங்கே செய்கிறேன்? ஜபம் பாட்டுக்கு ஓடுகிறது; நான் வேடிக்கை
பார்க்கிறேன்" என்றார்! அப்போது எனக்கு இது அவ்வளவு சரியா புரியவில்லை.
மனதில் பல லேயர் இருக்கு. இது பழகியவர்களுக்கு புரியும். மேலோட்டமாக
இருப்பது ஒன்று. இதில அன்றாட சமாசாரங்கள் ஓடும். ஜபம் செய்ய
உக்காருகிறோம். கொஞ்சம் மனசை குவித்து செய்ய ஆரம்பிக்கிறோம். கொஞ்ச நேரம்
ஆச்சு. ஏதேதோ சிந்தனைகள். திடீரென்று "அட! ஜபம் செய்யும் போது இதெல்லாம்
எதுக்கு?" என்று வெட்கப்படுகிறோம். திருப்பி ஜபம் செய்ய நினைக்கிறோம்.
என்ன ஆச்சரியம்! அது பாட்டுக்கு ஓடிக்கொண்டே இருக்கு. நிற்கவேயில்லை.
அதாவது மேலோட்ட சிந்தனைகள் இருக்கும்போதும் அடி மனதில் ஒரு அடுக்கில்
ஜபம் ஓடுகிறது. இப்படி பயிற்சியால் செய்ய முடியும். இந்த ஜபத்தை சும்மா
வேடிக்கை பார்க்கலாம். அது பாட்டுக்கு ஒரு வேகத்தில் லயத்தில் ஓடும்.
இப்படி வேடிக்கை பார்க்க பழகினால் அது மேலே மேலே கொண்டு போய் சாட்சி
பாவத்தில் விடும்.
ஜெ செராமிக்ஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த துறையில்
இவர் நல்ல படிப்பு படித்து இருந்தார்.
ஹோமம் முடிந்த பின் ஒரு நாள் இவருடைய தம்பி இவருடன் என்னை பார்க்க வந்தார்.
என்ன விஷயம்?
ஒரே பிரச்சினை.
.......
6 comments:
ஜபம் செய்வது கொண்டு சேர்ப்பது அஜபா என்ற நிலைக்கு! இதை இன்னமும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே!
/* "நான் எங்கே செய்கிறேன்? ஜபம் பாட்டுக்கு ஓடுகிறது; நான் வேடிக்கை
பார்க்கிறேன்" என்றார்! அப்போது எனக்கு இது அவ்வளவு சரியா புரியவில்லை. */
"கல் ஆலின் புடை அமர்ந்து .."
பாடலில் வரும் ஒரு வாக்கியம்
"நினையாமல் நினைந்து ..."
அது இது தாம்.
சாட்சி அனுபவமும் (Witness experience)
அதுவே.
இஃது த்யானத்தின் ஒரு மேம்பட்ட
நிலை (முடிவு நிலை இல்லை).
இஃது அத்துணை சுலபம் இல்லை
(முடியாதது என்று அர்த்தம் இல்லை).
சுலபமாக செய்தால் சுலபம் !!
நினையாமல் நினைவது போல :)
பர்சனல் ஆக நான் (முதல கமெண்ட் இல்)
கேட்டது இது போன்ற அனுபவங்கள் தாம்.
அழகாக இருக்கிறது ...
மேலே சொல்லுங்கள்!!
காயத்ரி பிரச்சனைகளை எல்லாம் தீர்க்கும்
என்பதில் சந்தேகம் இல்லை.
கீதையில் சொன்னது போல பிரச்சனைகளுக்காக
ஜபிப்பது என்பது ரஜோ வகையில் போய்விடும்.
அது முடிவான விஷயம் இல்லை.
Chaos Theory இல் சொல்லுவது போல நீங்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக இதை எழுத, எனக்குள் ஒரு உந்துதல் (induction) உருவாகிறது. இந்த அனுபவங்கள் எல்லாம் கிடைத்தும், நான் ஜபத்தை தொடர வில்லை எனும் போது மனஸ் வலிக்கிறது.
என் குரு சொன்னது போல,
" காயத்ரி மாதா தான் பிள்ளைகள்
சரியான உணவு போடாமல், மிகவும்
இளைத்து, கந்தல் துணி அணிந்து,
ஒரு மூட்டையுடன் எப்பொழுது என் மகன் அழைப்பான் என வாசலில் நின்று கொண்டு காத்திருப்பாளாம். தன் மகன் எல்லா தவறுகளையும் உணர்ந்து திரும்ப அழைக்கும் போது உடனே (அனந்தரம்) அவனிடம் போய்ச் சேருவாளாம்!!"
அழைக்கிறேன்!!
அன்பின் கிமு.
தியரி வேணது எழுதியாச்சு. இனி அனுபவம் மட்டுமே எழுதலாமோன்னு யோசனை.எழுதியதைத்தவிர வேறு அனுபவம் இல்லை.
நன்னி விஜய்!
//அழைக்கிறேன்!!//
ஆஹா. பதிவு பலனை பெற்றது!
///"மாமரத்தில் எவ்வளவு பூ பூக்கிறது?
எல்லாமே பிஞ்சாகிவிடுகிரதா? எல்லா பிஞ்சும் காயாகி விடுமா? எல்லா காயும்
பழமாகிவிடுமா? பழுக்கும் அத்தனை பழமும் நமக்கு உண்ண கிடைக்குமா?
இயற்கையில் இப்படி ஒரு நியதி இருக்கிறது.///
பொதுநலக் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த Probability approach மிகவும் அவசியம்.அழகாக எடுத்து சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி
Post a Comment