Pages

Monday, July 6, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 36


ஆறு வயது பெண் குழந்தை தங்கள் வீட்டுத்தோட்டத்தில் விளைந்த இரண்டு கொய்யாப்பழங்களை கொண்டு வந்து சமர்ப்பித்தாள். பகவான் மகிழ்ந்தார். “இதை வீட்டுக்கு எடுத்துப்போம்மா. கொண்டு போய் வெட்டி ஒவ்வொரு துண்டையும் 'இது பகவானுக்கு இது பகவானுக்கு' ன்னு சொல்லி எல்லாருக்கும் கொடுத்து 'இது பகவானுக்கு'ந்னு சொல்லி நீயும் சாப்பிடு! எல்லாருக்குள்ளேயும் பகவான் இருக்கார். எல்லாரும் சாப்பிட்டா இந்த பகவானும் சாப்பிட்ட மாதிரி இல்லையா?” என்று சொல்லி அனுப்பினார்.

சின்ன ஸ்வாமி பகவானை தக்‌ஷிணாமூர்த்தி போல ஒரு காலை ஊன்றி ஒன்றை மடக்கி அமர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டுமென நினைத்தார். பகவானிடம் இதற்கு சம்மதமும் பெற்றார்கள். டாக்டர் க்ருஷ்ணஸ்வாமி வரும்போதெல்லாம் பகவானை படமெடுப்பார். அவரிடம் இந்த வேண்டுகோளை கூறினார். அவரும் அதற்கு இசைந்தார். அருணாசலம் பின் புலத்தில் இருக்கும்படி ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு பாறையையும் நகர்த்தி வைத்தனர்.
பகவான் பாறையில் உட்காரும்போது இவர்களை பார்த்து ஒரு கேள்வி கேட்டார். தக்‌ஷிணாமூர்த்தி எந்த காலை தரையில வெச்சுண்டு எதை மடக்கி வெச்சிருப்பார்?
யாருக்கும் பதில் சொல்லத்தெரியவில்லை! முழித்தனர்.
பகவான் பரவாயில்லே! ரெண்டு மாதிரியும் போட்டோ எடுத்துக்கோங்கோ என்றார்.

கே.ஆர். க்ருஷ்ணமூர்த்தி மின்சார வாரிய தலைமைப்பொறியாளர். பகவானைப்பற்றி செய்தித்தாளில் படித்து இருந்தார். அப்போது யாரோ அவரிடம் ரமணரால யாருக்கும் பிரயோசனம் கிடையாது. அவர் எப்பவும் சும்மா உக்காந்து இருப்பார் என்றார். ஆனாலும் நாளடைவில் கிடைத்த செய்திகள் மூலம் ஈர்க்கப்பட்டு அவர் பகவானை வந்து தரிசித்தார். இவருக்கு நீண்ட நாளாக இடது கையில் நடுவிரலில் வலி இருந்து வந்தது. பகவான் எதிரில் உட்கார்ந்துஇருந்த போது பகவான் தன் இடது கை நடுவிரலை வலது கையால் பிடித்து விட்டுக்கொண்டு இருந்ததை கவனித்தார். அப்போது அதிசயமாக தன் வலி நீங்கி விட்டதை உணர்ந்தார். அன்று முதல் நிரந்தரமாக அந்த வலி இல்லவே இல்லை!
 

Saturday, July 4, 2015

உள்ளது நாற்பது - 38


 என்னை யறியேனா னென்னை யறிந்தேனா
னென்ன னகைப்புக் கிடனாகு - மென்னை
தனைவிடய மாக்கவிரு தானுண்டோ வொன்றா
யனைவரனு பூதியுண்மை யால்.

என்னை அறியேன்நான் என்னை அறிந்தேன்நான்
என்னல் நகைப்புக்கு இடனாகும் - என்னை
தனைவிடயம் ஆக்க இருதான் உண்டோ ஒன்றாய்
அனைவர் அனுபூதி உண்மையால்.

நான் என்னை அறிந்தேன்; நான் என்னை அறியவில்லை என்றெல்லாம் சொல்லுவது நகைத்தலுக்கு உரியது. காரணம் என்ன? தன்னை அறிவதற்கு உரிய விஷயமாக ஆக்க தன்னைத்தவிர இன்னொரு நான் உண்டோ? அப்படி இல்லாமல் ஒரே 'தான்' மட்டுமே இருக்கிறது என்பது அனுபவப்பட்டவர்களின் கருத்து.

न वेद्म्यहं मामुत वेद्म्यहं मा- मिति प्रवादो मनुजस्य हास्यः ।
दृग्दृश्यभेदात् किमयं द्विधात्मा स्वात्मैकतायां हि धियां न भेदाः ॥ ३५ ॥

ந வேத்³ம்யஹம்ʼ மாமுத வேத்³ம்யஹம்ʼ மா- மிதி ப்ரவாதோ³ மனுஜஸ்ய ஹாஸ்ய: |
த்³ருʼக்³த்³ருʼஶ்யபேதா³த் கிமயம்ʼ த்³விதாத்மா ஸ்வாத்மைகதாயாம்ʼ ஹி தியாம்ʼ ந பேதா³: || 35 ||

Friday, July 3, 2015

அடியார்கள் - இலங்கை இளைஞன்

 
நாற்பதுகளில் இலங்கையின் தமிழ் சைவ ஆசாரம் பிரசித்தியானது. அத்தகைய ஆசாரமான சைவ குடும்பத்தை சேர்ந்து ஒரு சிறுவன் சிவ பக்தியிலேயே வளர்ந்தான். தேவாரமும் திருவாசகமும் அவன் நாவில் எப்போதும் இருந்தன.
இவன் இருபது வயதடைந்தபோது கேள்விகள் வந்தன. “ உலகத்தில் எல்லாரும் - மனிதனோ விலங்கோ துன்பத்தையே அனுபவிக்கிறார்களே! இந்த படைப்பே துன்பமயமாக இருக்கிறது. விதி விலக்காக எதுவுமே காணோம். ஆனந்தமயமான இறைவனா இப்படி படைத்தான்? இறைவனே உண்மையா, இல்லையா?” இப்படி பல கேள்விகள் அவனை வதைத்தன.
சிறு வேலை ஒன்றில் இருந்தான். சொல்ப சம்பாத்தியம். அவனது புண்ணுக்கு மருந்து திருவண்ணாமலையில் இருப்பதாக கேள்விப்பட்டான். இரண்டு ஆண்டுகள் உழைத்து சேமித்து அந்த பணத்தைக்கொண்டு திருவண்ணாமலை வந்து சேர்ந்தான். சின்னஸ்வாமி ஒரு வாரத்துக்கு ஆசிரமத்தில் தங்க அனுமதித்தார். பழைய ஹாலில் பகவான் அமர்ந்து இருந்தார். அங்கு சென்றான். பக்தர் கூட்டத்தைப்பார்த்து மிரட்சி ஏற்பட்டது. வணங்கிவிட்டு ஓரமாக அமர்ந்து கொண்டான்.
கேள்வி ஏதும் எழவில்லை. என்ன செய்வது என புரியாமல் அமர்ந்திருந்தபோது மெதுவாக திரும்பி பகவான் அவனைப் பார்த்தார். அந்த பார்வை அவனை ஏதோ செய்தது. கண்களை மூடிக்கொண்டான். சற்று நேரம் கழிந்து கண்களை திறந்தபோது பகவான் கண்களை மீண்டும் சந்தித்தான். மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். நேரம் பாட்டுக்கு கழிந்தது. உணவுக்கு அழைத்தார்கள், உணவுண்டான். இப்போது கேள்விகளே மனதில் இல்லை, ஆனந்தமாக இருந்தது. உலாவினான்; உண்டான்; உறங்கினான். நாட்கள் சென்றன. கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. மலையில் உலாவிவிட்டு வருகையில் பகவான் எதிரில் வந்தார். ஒதுங்கி நின்றான். இது வரை பகவானை அவன் ஏதும் கேட்கவில்லை. இப்போதும் தோன்றவில்லை. பகவான் அவன கடந்து போகும் போது நின்றார். இலங்கைத்தமிழில் எங்க வந்தது?” என்றார். இவன் பதில் சொல்ல முடியவில்லை. கைகளை கூப்பியபடி நின்றான்.
உமது காட்டுக்கு தீ வைத்தாகிவிட்டது. வெந்து சாம்பலாகிப்போகும். கவலையில்லாமல் வீட்டுக்கு போம்!”என்றார் பகவான்!

Thursday, July 2, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 35


பக்தர் ஒருவர் தன் நண்பரை அழைத்து வந்தார். வந்தவர் பகவானை நமஸ்கரிக்க மாட்டேன்; என்னை கட்டாயப்படுத்தாவிட்டால் வருகிறேன் என்று கூறியிருந்தார்.
பக்தரும் அதற்கு ஒப்புக்கொண்டு இருந்தார்.
நண்பர் ஹாலுக்குள் வரவே இல்லை. வெளியேவே அமர்ந்து இருந்தார். கொஞ்சம் அங்கே இங்கே என்று சுற்றித்திரிந்தார். மாலையில் வழக்கம் போல கிணற்றுக்கு பக்கத்தில் சேர் போடப்பட்டது. பகவான் வந்து அமர்ந்தார். பக்தர்கள் அவரைச் சுற்றி அமர்ந்தனர்.
அப்போது அங்கே அந்த நண்பர் வந்தார். பகவானைப் பார்த்தவுடன் தடாலென்று வீழ்ந்து வணங்கினார்.
பகவான் பலமாக சிரித்தார்! இருவரைத்தவிர மற்றவர்களுக்கு அதன் காரணம் தெரியவில்லை!

டெய்லர்ஸ் அமெரிக்க தம்பதியினர். டெய்லர் ஓய்வு பெற்ற பேராசிரியர். ஆசிரமத்துக்கு வந்து பகவானை தரிசித்தனர். பகவானிடம் மிகவும் நெருங்கியவர்களாக உணர்ந்தார்கள்.
ஒரு நாள் அவரது மனைவி பகவானிடம் உரிமையுடன் பகவானே! எனக்கு ஆத்ம ஞானம் கொடுங்கஎன்று கேட்டார்.
காலத்துலே எல்லாம் வரும். பொறுமையா இருங்க!”
இல்லை, இப்பவே வேணும்.”
நீங்க தயார் ஆகும்போது அது தானே வரும்.”
பகவானே நீங்க நினைச்சா இப்பவே தரலாம்!”
பகவான் ஒன்றும் பேசாமல் உற்று நோக்கினார்.
இரண்டே நிமிடங்களில் அவர் அழுது கதறியபடி ஹாலை விட்டு வெளியே ஓடினார்!
என்ன ஆயிற்று என்று யாரிடமும் சொல்லவில்லை!
 

Wednesday, July 1, 2015

உள்ளது நாற்பது -37


அதுநீயென் றம்மறைக ளார்த்திடவுந் தன்னை
யெதுவென்று தான்றேர்ந் திராஅ - ததுநா
னிதுவன்றென் றெண்ணலுர னின்மையினா லென்று
மதுவேதா னாயமர்வ தால்.

அதுநீ என்று அம்மறைகள் ஆர்த்திடவும் தன்னை
எதுஎன்று தான்தேர்ந்து இராது - அதுநான்
இதுஅன்று என்றுஎண்ணல் உரன் இன்மையினால்என்றும்
அதுவே தானாய் அமர்வதால்.

வேதங்கள் அதுவே நீ (தத்வமஸி) என்று உரக்கச்சொல்கின்றன. அந்த அது எது என்று விசாரித்து தான் அங்கேயே அமர்ந்திடாமல் 'நான் இந்த உடலல்ல; நான் அந்த பிரம்ம ஸ்வரூபம் என்று இன்னொரு இயல்பை கற்பித்தல் மனோதிடமென்னும் விவேக வலிமை இல்லாததால் நடக்கிறது. எப்போதும் ஆன்மாவாகிய அப்பிரம்மமே தானாக அமர்ந்திருக்கிறது.

आह स्फुटं तत्त्वमसीति वेद- स्तथाप्यसम्प्राप्य परात्मनिष्ठाम् ।
भूयो विचारो मतिदुर्बलत्वं तत्सर्वदा स्वात्मतया हि भाति ॥ ३४ ॥
ஆஹ ஸ்பு²டம்ʼ தத்த்வமஸீதி வேத³- ஸ்ததா²ப்யஸம்ப்ராப்ய பராத்மனிஷ்டா²ம் |
பூ⁴யோ விசாரோ மதிது³ர்ப³லத்வம்ʼ தத்ஸர்வதா³ ஸ்வாத்மதயா ஹி பா⁴தி || 34 ||