Pages

Friday, July 3, 2015

அடியார்கள் - இலங்கை இளைஞன்

 
நாற்பதுகளில் இலங்கையின் தமிழ் சைவ ஆசாரம் பிரசித்தியானது. அத்தகைய ஆசாரமான சைவ குடும்பத்தை சேர்ந்து ஒரு சிறுவன் சிவ பக்தியிலேயே வளர்ந்தான். தேவாரமும் திருவாசகமும் அவன் நாவில் எப்போதும் இருந்தன.
இவன் இருபது வயதடைந்தபோது கேள்விகள் வந்தன. “ உலகத்தில் எல்லாரும் - மனிதனோ விலங்கோ துன்பத்தையே அனுபவிக்கிறார்களே! இந்த படைப்பே துன்பமயமாக இருக்கிறது. விதி விலக்காக எதுவுமே காணோம். ஆனந்தமயமான இறைவனா இப்படி படைத்தான்? இறைவனே உண்மையா, இல்லையா?” இப்படி பல கேள்விகள் அவனை வதைத்தன.
சிறு வேலை ஒன்றில் இருந்தான். சொல்ப சம்பாத்தியம். அவனது புண்ணுக்கு மருந்து திருவண்ணாமலையில் இருப்பதாக கேள்விப்பட்டான். இரண்டு ஆண்டுகள் உழைத்து சேமித்து அந்த பணத்தைக்கொண்டு திருவண்ணாமலை வந்து சேர்ந்தான். சின்னஸ்வாமி ஒரு வாரத்துக்கு ஆசிரமத்தில் தங்க அனுமதித்தார். பழைய ஹாலில் பகவான் அமர்ந்து இருந்தார். அங்கு சென்றான். பக்தர் கூட்டத்தைப்பார்த்து மிரட்சி ஏற்பட்டது. வணங்கிவிட்டு ஓரமாக அமர்ந்து கொண்டான்.
கேள்வி ஏதும் எழவில்லை. என்ன செய்வது என புரியாமல் அமர்ந்திருந்தபோது மெதுவாக திரும்பி பகவான் அவனைப் பார்த்தார். அந்த பார்வை அவனை ஏதோ செய்தது. கண்களை மூடிக்கொண்டான். சற்று நேரம் கழிந்து கண்களை திறந்தபோது பகவான் கண்களை மீண்டும் சந்தித்தான். மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். நேரம் பாட்டுக்கு கழிந்தது. உணவுக்கு அழைத்தார்கள், உணவுண்டான். இப்போது கேள்விகளே மனதில் இல்லை, ஆனந்தமாக இருந்தது. உலாவினான்; உண்டான்; உறங்கினான். நாட்கள் சென்றன. கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. மலையில் உலாவிவிட்டு வருகையில் பகவான் எதிரில் வந்தார். ஒதுங்கி நின்றான். இது வரை பகவானை அவன் ஏதும் கேட்கவில்லை. இப்போதும் தோன்றவில்லை. பகவான் அவன கடந்து போகும் போது நின்றார். இலங்கைத்தமிழில் எங்க வந்தது?” என்றார். இவன் பதில் சொல்ல முடியவில்லை. கைகளை கூப்பியபடி நின்றான்.
உமது காட்டுக்கு தீ வைத்தாகிவிட்டது. வெந்து சாம்பலாகிப்போகும். கவலையில்லாமல் வீட்டுக்கு போம்!”என்றார் பகவான்!

No comments: