ஆறு வயது பெண் குழந்தை தங்கள் வீட்டுத்தோட்டத்தில் விளைந்த இரண்டு கொய்யாப்பழங்களை கொண்டு வந்து சமர்ப்பித்தாள். பகவான் மகிழ்ந்தார். “இதை வீட்டுக்கு எடுத்துப்போம்மா. கொண்டு போய் வெட்டி ஒவ்வொரு துண்டையும் 'இது பகவானுக்கு இது பகவானுக்கு' ன்னு சொல்லி எல்லாருக்கும் கொடுத்து 'இது பகவானுக்கு'ந்னு சொல்லி நீயும் சாப்பிடு! எல்லாருக்குள்ளேயும் பகவான் இருக்கார். எல்லாரும் சாப்பிட்டா இந்த பகவானும் சாப்பிட்ட மாதிரி இல்லையா?” என்று சொல்லி அனுப்பினார்.
சின்ன ஸ்வாமி பகவானை தக்ஷிணாமூர்த்தி
போல ஒரு காலை ஊன்றி ஒன்றை மடக்கி அமர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டுமென நினைத்தார். பகவானிடம் இதற்கு சம்மதமும்
பெற்றார்கள். டாக்டர் க்ருஷ்ணஸ்வாமி வரும்போதெல்லாம் பகவானை
படமெடுப்பார். அவரிடம் இந்த வேண்டுகோளை கூறினார். அவரும் அதற்கு இசைந்தார். அருணாசலம் பின் புலத்தில்
இருக்கும்படி ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு பாறையையும் நகர்த்தி வைத்தனர்.
பகவான் பாறையில் உட்காரும்போது இவர்களை
பார்த்து ஒரு கேள்வி கேட்டார். தக்ஷிணாமூர்த்தி எந்த காலை தரையில வெச்சுண்டு எதை மடக்கி வெச்சிருப்பார்?
யாருக்கும் பதில் சொல்லத்தெரியவில்லை! முழித்தனர்.
பகவான் “பரவாயில்லே! ரெண்டு
மாதிரியும் போட்டோ எடுத்துக்கோங்கோ” என்றார்.
கே.ஆர். க்ருஷ்ணமூர்த்தி மின்சார
வாரிய தலைமைப்பொறியாளர். பகவானைப்பற்றி செய்தித்தாளில்
படித்து இருந்தார். அப்போது யாரோ அவரிடம் “ரமணரால யாருக்கும் பிரயோசனம் கிடையாது. அவர்
எப்பவும் சும்மா உக்காந்து இருப்பார்” என்றார். ஆனாலும் நாளடைவில் கிடைத்த செய்திகள் மூலம் ஈர்க்கப்பட்டு அவர் பகவானை
வந்து தரிசித்தார். இவருக்கு நீண்ட நாளாக இடது கையில்
நடுவிரலில் வலி இருந்து வந்தது. பகவான் எதிரில்
உட்கார்ந்துஇருந்த போது பகவான் தன் இடது கை நடுவிரலை வலது கையால் பிடித்து
விட்டுக்கொண்டு இருந்ததை கவனித்தார். அப்போது அதிசயமாக தன்
வலி நீங்கி விட்டதை உணர்ந்தார். அன்று முதல் நிரந்தரமாக அந்த
வலி இல்லவே இல்லை!
No comments:
Post a Comment