Pages

Monday, September 12, 2016

அந்தணர் ஆசாரம் - 7




பலவித ஸ்னானங்கள்:
ஸ்னானம் கௌணம் முக்கியம் என இரு விதம். நீரில் முழுகி செய்வது முக்கியம். மற்ற விதங்கள் கௌணம்.
முக்கிய ஸ்னானத்தில் ஆறு வகைகள்: நித்தியம் விதிக்கப்பட்ட காலை, மாத்யான்னிக ஸ்னானங்கள். ஏதேனும் ஒரு நிமித்தத்தால் ஏற்படுவது நைமித்திகம். தொடக்கூடாததை தொட்டால் ஸ்னானம் செய்யச்சொல்லுகிறார்கள் இல்லையா? அது போல.
ஜ்யோதிடர்கள் இன்ன பலனுக்கு இன்ன இடத்தில் இன்ன காலத்தில் ஸ்னானம் செய் என்று சொல்கிறார்கள் இல்லையா? அல்லது ஒரு பலனை விரும்பி ஸ்னானம் செய்தால் அது காம்ய ஸ்னானம். இந்த விருப்பம் இல்லாதவர்கள் இதை செய்ய வேண்டியது இல்லை. ஒரு கர்மாவை செய்ய ஆரம்பிக்கும் போது கிரமத்தில் /சூத்திரத்தில் ஸ்னானம் விதித்து இருந்தால் அது கார்யாங்க ஸ்னானம். உடல் சுத்தியை வேண்டி எண்ணை தேய்த்துக்கொண்டு ஸ்னானம் செய்வது மலகர்ஷண ஸ்னானம். புண்ய தீர்த்தங்களிலோ நதிகளிலோ, தேவர்களால் வெட்டப்பட்ட குளங்களிலோ ஸரஸ்களிலோ ஸ்னானம் செய்வது க்ரியா ஸ்னானம். இதில் ஸ்னானமேதான் கிரியை.
அசக்தனாக இருக்கும் பக்‌ஷத்தில் தலையை தவிர்த்து நீரில் முழுகுவது; இடுப்பளவு முழுகுவது; ஈரத்துணியால் உடலை துடைத்துக்கொள்வது போன்றவை செய்யலாம் இவை கௌண ஸ்னானம் ஆகும்.
ஆக்னேயம், வாருணம், ப்ராம்மம், வாயவ்யம், திவ்யம், மானஸம், பார்த்திவம், காபிலம், ஸாரஸ்வதம் என ஒன்பது விதமும் உண்டு.
முன் சொன்னபடி நீரில் முழுகி தேவ பித்ரு தர்பணம் கொடுப்பது வாருணம்.
ஆக்னேய ஸ்னானம் என்பது நீர் இல்லாத நேரத்தில் செய்யக்கூடியது. இதில் அக்னிஹோத்ர பஸ்மாவாலோ வேறு பஸ்மாவாலோ உடல் முழுதும் பூசிக்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் ஏதோ நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு பஸ்ம ஸ்னானம் செய்து விட்டேன் என்கிறார்கள். அது சரியில்லை. பின் வரும் மந்திரங்களால் குறிப்பிட்ட இடத்தில் பஸ்மாவை பூச வேண்டும். ஈசான மந்திரத்தால் - சிரஸ்; தத் புருஷாய – முகம்; அகோர – ஹ்ருதயம்; வாமதேவ – குஹ்யம்; ஸத்யோஜாதம்- பாதங்கள்; பிரவணத்தால் மீதி அங்கங்கள் அனைத்தும்.
குசங்களின் நுனிபாகங்களால் ஆபோஹிஷ்டா எனும் மந்திரம் சொல்லி ப்ரோக்‌ஷணம் செய்து கொள்வது ப்ராம்ம ஸ்னானம் அல்லது மந்திர ஸ்னானம்.
சூர்ய அஸ்தமன நேரத்தில் கொட்டிலுக்கு திரும்பும் பசுமாடுகளின் குளம்புகளால் எழுப்பப்பட்ட புழுதி நம் உடலில் விழுவது வாயவ்ய ஸ்னானம்.
உத்தராயண காலத்தில் வெய்யில் காயும் போது மழை ஏற்பட்டால் அதில் நனைவது திவ்ய ஸ்னானம்.
ஸங்கு சக்ர கதா தரனாக நான்கு புஜங்களோடு மஹாவிஷ்ணுவை த்யானம் செய்வது மானஸம்.
சுத்தமான பூமியில் இருந்து மண்ணை எடுத்து உடலில் பூசிக் கொள்வது பார்த்திவ ஸ்னானம்.
ஈரத்துணியால் துடைத்துக்கொள்வது காபிலம்.

மஹான்களுடைய வாக்காலோ உபதேசத்தாலோ ஏற்படும் சுத்தி ஸாரஸ்வதம்.

Friday, September 9, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 13





அப்ப கொல்லறது தப்பில்லங்கறீங்களா?”
இளைஞன் பெரியவரை பார்த்து கேட்டான்.
நிதானமாக டீயை உறிஞ்சியவர் முகத்தில் ஒரு சிறு புன்னகை.
அது நேரம், சந்தர்பம், ஆளை பொறுத்தது!”
என்ன சொல்றீங்க? அதெப்படி பொறுத்தது? புரியலையே!”
உன் குழந்தை நடக்கிறப்ப ஒரு எறும்பை மிதிச்சுது; அது செத்துப்போச்சு. குழந்தையோட தப்பா?”
உம்... இல்லைதான்”
நீயே வண்டி ஓட்டிகிட்டு இருக்கே. ஒரு நாய்க்குட்டி குறுக்கே திடுதிப்புன்னு வந்துடுத்து; நிறுத்தப்பாத்து மோதிட்டே. அது செத்து போச்சு. அது உன் தப்பா?”
ஹும்ம்ம்ம்ம்”
அதான் சொன்னேன். இதுக்கு ஒரு பொதுவான பதில் இருக்க முடியாது. தேசம் காலம் சூழ்நில பொருத்து மாறும். பனி மட்டுமே இருக்கிற ஐஸ்லாந்து மாதிரி ஊர்ல என்ன சாப்பிடுவாங்க? அங்கே கிடைக்கற மீன் முதலான அசைவ உணவுதான் இருக்கும். வேற வழி? இவங்க பாபம் செய்யறதா சொல்ல முடியுமா? ”
செடி கொடிகளுக்கும் உசிரு இருக்கே? அதை சாப்பிடறது?”
வெண்டக்கா, கத்திரிக்காயை பிச்சா செடி சாகறதில்லையே!”
சரி, கீரை? அதை முழுக்க பிச்சுத்தானே சாப்பிடறோம். அது போல கிழங்குகள். கொய்யாக்காவை நல்லா அரைச்சு சாப்டா எத்தனை எத்தனை விதைகள் சாகுது!”
இதுல எல்லாம் பாபம் இல்லையான்னு கேட்டா, ஆமாம் இருக்கு. இப்ப காணாமப்போய்கிட்டு இருக்கற அக்னிஹோத்ரம் என்கிற கர்மாவை செய்யறவங்க இஷ்டி ந்னு ஒரு ஹோமம் ஒவ்வொரு பாட்டிமைக்கும் செய்வாங்க.”
தசரதர் செஞ்சாரே புத்ர காமேஷ்டி அது மாதிரியா? ”
அட! ஆமாம். சரியா பிடிச்சுட்டே, புத்திர காம இஷ்டி - குழந்தையை விரும்பி செய்கிற இஷ்டி அதான் அது! இது ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமிக்கும் அப்பறம் வரது. அதுல நெல்லை கொண்டு வந்து குத்துவாங்க, அரிசியாகும்; அதை திருப்பி மாவாக்க இடிப்பாங்க. இந்த நெல் முளைக்காம இப்படி செஞ்சிட்டதால இது ஒரு பாபம்ன்னு சொல்லி இதுக்கு ப்ராயச்சித்தம் செய்வாங்க! குடும்பஸ்தன்னா இருந்தா இப்படி பாபம் செய்யறதை தவிர்க்க முடியாது!
ப்ரம்மச்சாரி பத்தி விஷயம் இல்லே. அவன் மாணவன்; கத்துக்கறப்ப தவறுகள் நடக்கும். க்ருஹஸ்தன் பாவம், அவன் செய்யக்கூடிய பல விஷயங்களும் ஏதோ ஒரு வகையில் ஜீவ ஹிம்சை செய்யத்தான் செய்யும். இதை ஒத்துகிட்டு இதுக்குன்னு பிராயச்சித்தங்கள் விதிச்சு இருக்காங்க பெரியவங்க, அதுக்கு வைஶ்வதேவம்ன்னு பேரு.
இதெல்லாம் வழக்கு ஒழிஞ்சுகிட்டு இருக்கு. க்ருஹஸ்தன் இல்லாம உலகம் இயங்காதே! அதனால ப்ராயச்சித்தங்கள் சொல்லி இருக்கு.”
அது சரி! நீங்க பாட்டுக்கு எல்லாம் பாபம்; ப்ராயச்சித்தம் பண்ணு ந்னு சொல்லிட்டா எப்படி? யாரும் கடுமையா அஹிம்சை கடைபிடிக்க வேண்டாமா?”
சரிதான். இப்பவும் கடுமையா அஹிம்சை கடை பிடிக்க வேண்டியது சந்நியாசிகள்தான்.
இவங்களுக்கு முதன்மையான தர்மம் அஹிம்சைதான். இவங்க எந்த அக்னி காரியத்திலேயும் சம்பந்தப்படக்கூடாது. இவங்க ஹோமங்கள் செய்யக்கூடாது. சமைச்சு சாப்பிடக்கூடாது. இப்படி பல கட்டுப்பாடுகள்.”
ஜைன துறவிகள் உயிர் கொல்லாமைந்னு செய்யறது எல்லாம் கேள்விப்பட்டு இருப்பியே?
தெருவில நடக்ககூட பெருக்கிண்டே நடப்பாங்க.
அந்த காலத்து காட்டில ஜபம் செய்யற துறவிகள் தினசரி மூணு முறை ஆறுக்கு போய் குளிப்பாங்க. இன்னைக்கு காலை போறார். வழில மரத்துலேந்து ஒரு பழம் கீழே விழுந்து இருக்கு. அதை எடுத்து சாப்பிடலாம் இல்லே? மாட்டார். அது வேற யாருக்கும் தேவைப்படலாமே? அடுத்த தரம் அடுத்த தரம்… அடுத்த நாள் மாலை வர அது அங்கேயே இருந்தா அதை எடுத்து சாப்பிடுவார்.
எது கொல்லப்படுது என்கிறதுலேயும் விஷயம் இருக்கு. அந்த காலத்து யாகங்களில காட்டு மிருகங்கள் நாட்டு மிருகங்கள்ன்னு வகைப்படுத்துவாங்க. நாட்டு மிருகங்கள் என்பது கிராமங்களில் வளர்க்கப்படுவது. இவைதான் பலி கொடுக்கப்படும். காட்டு மிருகங்கள் அழியும் (endangered species ஆகும்) வாய்ப்பு இருக்கு; அதை நெருப்பால தலை மூணு தரம் சுத்தி காட்டுக்குள்ள விரட்டி விட்டுடுவாங்க.”
என்னென்னவோ சொல்றீங்க. இப்ப நான் என்ன செய்யணும்? சொல்லுங்க!”
அத நீயேதான்பா முடிவு செய்யணும்! நீ எங்கே நிக்கப்போறே? கொசு கடிச்சா ரிப்லெக்ஸ்ல அடிப்பியா, மெதுவா ஊதி விரட்டுவியா இல்ல கடிச்சுட்டு போகட்டும்ன்னு விடப்போறியா? இல்லை கொசு பேட்டை எடுத்து தேடி தேடி அடிக்கப்போறியா?
வீட்டில ஆடு கோழின்னு வளத்து கொன்னு சாப்பிடப்போறியா? கடையில் வாங்கி சாப்பிடுவியா? இல்லை அசைவமே தொடபோறதில்லையா?
முழு அஹிம்சையில இருந்து ப்ராக்டிகல் அஹிம்ஸை வழியா ஹிம்ஸை வரை தேர்வு இருக்கு. நீயேதான் முடிவு செய்யணும்! ஏதானாலும் நீ முடிவு பண்ணு கடைபிடி. உன் வீட்டு மனுஷாளுக்கு இது நல்லதுன்னு சொல்லலாம். அல்லது வந்து கேட்கிறவங்களுக்கு சொல்லலாம். மத்தபடி வலிஞ்சு யார்கிட்டேயும் இப்படி இருன்னு சொல்லப்போனாத்தான் வம்பு! அது சரியில்லை. யோசி! ”
இளைஞன் யோசிக்கலானான்.


Thursday, September 8, 2016

அந்தணர் ஆசாரம் - 6




ஸ்னானம் செய்யும் முறை:
ஸ்னானம் செய்ய உசிதமான காலம் உதயத்துக்கு முன்பான 4 நாழிகைகள். இதற்கு அருணோதய காலம் எனப்பெயர். உதயத்துக்கு முன் கீழ்வானம் சிவக்கிறது இல்லையா? இதுவேதான்.
நித்ய ஸ்னானம், நைமித்திக ஸ்னானம், காம்ய ஸ்னானம் என 3 விதம் உண்டு. நித்யம் என்பது தினசரி செய்வது. நைமித்திகம் என்பது குறித்த காலத்தில் அவ்வப்போது செய்வது. உதாரணமாக சவரம் செய்துகொண்ட பின்; தீட்டு சம்பவித்தால். இப்படிப்பட்ட சந்தர்பங்களில் இரண்டு முறை ஸ்னானம் செய்ய வேண்டும். ஒரு முறை செய்து உடலை துடைத்துக்கொண்டு பின் மீண்டும் செய்யும்போது தர்பணாதிகளும் சேர்த்து செய்ய வேண்டும்.
குடுமியை முடிந்து ஆசமனம் செய்து, கரையை அலம்பி தர்பத்தை வைத்துவிட்டு பவித்ரத்தை அணிந்துகொண்டு ஸங்கல்பம் செய்க. அஞ்சலி செய்து, வருண ஸூக்தம் ஜபம் செய்து ஜல தேவதையை நமஸ்கரித்து, தலையில் ஆபோஹிஷ்டா மந்திரத்தால் ப்ரோக்‌ஷணம் செய்துகொண்டு, நீரில் இறங்கி முழுகி அக்குள்களை துடைத்துக்கொண்டு, இரு முறை ஆசமனம் செய்து., மீண்டும் முழுகி அகமர்ஷணம் ஜபித்து முழுகி, இரு ஆசமனம் செய்து தர்ப்பணம் செய்க. தர்ப்பணத்தை ஈர வேட்டியுடனேயே செய்ய வேண்டும். கிழக்கு முகமாக உபவீதியாக நின்று தேவர்களுக்கும்; வடக்கு முகமாக நிவீதியாக ரிஷிகளுக்கும்; ப்ராசீனாவீதியாக தெற்கு நோக்கி நின்று பித்ருக்களுக்கும் இரண்டு கைகளாலும் தர்ப்பணம் செய்யவேண்டும்.
ஜலத்தை நம் சரீரத்தின் அழுக்கு அசுத்தப்படுத்தியது இல்லையா? இந்த தோஷத்துக்காக யக்ஷ்மா என்ற தேவதையை குறித்து கரையில் ஒரு தர்ப்பணத்தை செய்ய வேண்டும்.
பின் ப்ராசீனாவீதியாக உடம்பின் மேலுள்ள நீர் வடியும் படி மௌனமாக நிற்க வேண்டும்.இதனால் எல்லா ப்ராணிகளூம் த்ருப்தியடைகின்றன. சிகையை முன்புறமாக தள்ளி மந்திரம் சொல்லி சிகோதகம் கொடுக்க பித்ருக்கள் த்ருப்தி அடைகிறார்கள். மேலும் த்ருப்தி தரும் பொருட்டு நிவீதியாக மேல் வேட்டியை நான்காக மடித்து துணியின் நுனி வழியாக ஜலத்தை கீழே விடவும். கீழ் வேட்டியின் நுனியை பற்றி மந்திரம் சொல்லி பிழியவும். இவற்றுக்கான மந்திரங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
பின் உபவீதியாக ஆசமனம் செய்யவும்.

கடைசியாக இரண்டு தனி துண்டுகளால் தலையையும் உடம்பையும் துடைத்துக்கொள்ளவும்.

Tuesday, September 6, 2016

விநாயகர் விசர்ஜனம் - மீள்பதிவு





இதன் முக்கியத்துவம் கருதி மறு பதிவு, சிறு திருத்தங்களுடன் : 
https://anmikam4dumbme.blogspot.in/2012/09/blog-post_3061.html

விநாயக சதுர்த்தி முடிந்திருக்கும், அனேகமாக எல்லா இடங்களிலும் விசர்ஜன ஏற்பாடுகள் நடந்து முடிந்திருக்கும். வருஷா வருஷம் சில விஷயங்கள் இந்த சமயத்தில் அடிபடும். நீர்நிலைகள் மாசு படுகிறது என்பதொன்று. விநாயகரை தடியால், காலால் அடித்து/ உதைத்து உடைத்து விசர்ஜனம் செய்கிறார்கள் என்பதொன்று.
என்னதான் அரசு ப்ளாஸ்டர் ஆஃப் பாரீசில் பிள்ளையார் உருவங்களை செய்யாதீர்கள் என்றாலும் நாம் கேட்கிறோமா? என்றைக்கு அரசு உத்தரவை / வேண்டுகோளை – அது என்னதான் நல்லது என்றாலும் செயல்படுத்தி இருக்கிறோம்? மின் சிக்கனம் ன்னு சொல்லி அலங்கார விளக்குகள் வேண்டாம் ன்னு சொன்னா என்ன, கரடியா கத்தினா என்னஎல்லா திருமண மண்டபங்களிலேயும் எக்கச்சக்கமாத்தான் எரியுது. கிடக்கட்டும்.
அடுத்து விநாயகரை உடைக்கிற விஷயம்.
இதுலதான் கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கிறேன்.
உடைக்கிறது விநாயகரையா அல்லது அப்படிப்பட்ட ஒரு உருவத்தையா? நாம கடையில் விநாயகர் பொம்மைய வாங்கும் போது அதுல விநாயகர் இருக்காரா? பிள்ளையார் பொம்மை வேணும்ன்னு கேட்டே பார்த்து வாங்குகிறோம். அதுல எப்ப பிள்ளையார் வருவார்?
நாம் பூஜை செய்ய ப்ராணப்ரதிஷ்டை செய்யும்போது வருவார். அப்படி செய்யும்போது என்ன சொல்கிறோம்? “அப்பா பிள்ளையாரே பூஜை செய்யும் வரை எங்களிடம் ப்ரீதியுடன் இருப்பா” என்கிறோம். பூஜை முடியும் வரை – இது முக்கியம். ப்ராணப்ரதிஷ்டை ன்னு இல்லாட்டாலும் பூஜை கிரமத்துல ஸுமுகம்/ ஸித்திவிநாயகம் அல்லது பிள்ளையாரின் ஏதோ ஒரு பெயரை சொல்லி "த்யாயாமி, ஆவாஹயாமி" என்னும் போது வருவார். அப்படி இல்லைன்னா அந்த படிக்கு அர்த்தமே இல்லையே?
சரி இப்படி ஆரம்பிச்சு பூஜை செய்கிறோம். சாதாரணமா இப்படி மற்ற பூஜைகள் செய்யும்போது பல நாட்கள் வைத்து இருக்க மாட்டோம். அப்படி வைக்கிறதானால் வேளா வேளைக்கு பூஜை செய்யணும். அதனால பூஜை முடிந்த உடனே அல்லது அடுத்த நாள்  பூஜை செய்து முடிந்த பிறகு புனர் பூஜை ன்னு செய்து :…. யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. க்‌ஷேமாய புனராகமனாய ச” என்போம். அதாவது “உன்னை உன் இடத்துக்கு அனுப்பி வைக்கிறேன். நலத்தோடு மீண்டும் வருவாய்” என்கிறோம். அதாவது அதன் பின் ப்ரதிஷ்டை செய்த பிம்பத்திலே/ படத்திலே அந்த தெய்வ சக்தி இல்லை. அது சாதாரணமாக எங்கே இருக்குமோ அங்கே அனுப்பி விட்டோம். பிள்ளையார் ஊர்வலங்களிலேயும் நீர் நிலைக்கு போன பின் சூடம் காட்டி அவரை அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
எங்கோ எப்படி அனுப்பி முடியும்? பகவான் எங்கேயும் இருக்கிறான்னா…. ஒத்துக்கறேன். பகவான் எங்கேயும் இருக்கிறான் என்பதே என்னோட தத்துவமும். அப்ப நாம இப்படி உதைக்கிறாங்களே ன்னு எல்லாம் வருத்தப்படறதுல நியாயமே இல்லை. உதைப்பதும் அவனே, உதை வாங்குவதும் அவனே, அப்புறம் என்ன?
ஆக சரியான லெவெல்லேந்து யோசிக்கணும். பகவான் எங்கும் இருக்கிறானா? இல்லை அழைத்தால் மட்டும் வருகிறானா? அழைத்தால் மட்டும் வருகிறான் னா, போய் வா ன்னு விடை கொடுத்தாலும் போய் விடுவான்தானே?
அப்படி போய் விட்ட பிறகு உடைக்கப்படுவது வெறும் பொம்மை, சிலை. அதுல ஒண்ணும் பிரச்சினை இல்லை.
இதை பெரும்பாலானவர் ஒத்துக்க கஷ்டப்படுவீங்கன்னு தோணுது. நமக்கு நெருங்கிய ஒத்தர் இறந்து போய்விட்டா… இருக்கிற உடல் வெறும் பஞ்சபூதங்களால ஆனதுதானே? அதனால அதை என்ன வேணுமானாலும் செய்யலாமா? முறைப்படி அடக்கம் செய்யறது இல்லையா?
இது சரியான கேள்வி. விநாயகரை கொண்டு நீர் நிலையில் கரைப்பதே ஒரு தத்துவத்தை உணர்த்த. மண்ணிலிருந்து வருவது மண்ணாகவே போய் விடுகிறது. பஞ்ச பூதங்களை பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணோடோ நெருப்போடோ ஐக்கியப்படுத்துகிறோம். அதே போல மண்ணாலான பிள்ளையாரை தெய்வ சக்தியை அனுப்பி விட்ட பின் மண்ணாகவே ஆனதை நீரில் கரைத்து விடுகிறோம்.
அப்ப ஒன்று செய்யலாம். அலங்காரத்துக்காக பெரிய பெரிய பிள்ளையாரை மனசுக்கு இதமா எல்லாரும் கண்டு களிக்க நிறுவி, அதன் அடியில் ஒரு சின்ன மண் பிள்ளையாரை நிறுவலாம். பூஜை எல்லாம் இந்த மண் பிள்ளையாருக்கே செய்ய வேண்டும். ஊர்வலமா எல்லா பிள்ளையாரையும் கொண்டு போகலாம். ஆனால் மண் பிள்ளையாரை கரைத்துவிட்டு பெரிய பிள்ளையாரை அதே வண்டியில் படுக்கப் போட்டு ஒரு இடத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும். அங்கே தகுந்தபடி டிஸ்போஸ் செய்து கொள்ளலாம். அல்லது வைக்க இடம் இருந்தால் அவரையே அடுத்த வருஷம் பெய்ண்ட் அடித்து புதுப்பித்து மறு சுழற்சி செய்து விடலாம். 

Monday, September 5, 2016

விநாயக சதுர்த்தி 2016





கொஞ்சம் தாமதமாயிடுத்து. இருந்தாலும் நம் வாசகர்கள் வெளிநாட்டிலதான் அதிகம் என்கிறதால இன்னும் பிரயொசனமாகும்ன்னு...



புதிதாக திருத்தி போட்டு விட்டேன்.

சித்தி விநாயக பூஜா கல்பம் 
சங்கல்பம் மாற்றும்.
து3ர்முகி2 நாம ஸம்ʼவத்ஸரே த³க்ஷிணாயனே வர்ஷருʼதௌ ஸிம்ஹ மாஸே சுக்ல பக்ஷே, சதுர்த்யாம் ஶுப⁴திதௌ² ஸோம வாஸரயுக்தாயாம்ʼ சித்ரா - நக்ஷத்ரயுக்தாயாம்ʼ, ப்ராம்ம நாம - யோக³யுக்தாயாம்ʼ, பத்ரா கரணயுக்தாயாம்  ஏவங்கு³ண விஶேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம்ʼ, சதுர்த்யாம்
என்று மாற்றிக்கொள்க.