Pages

Thursday, September 8, 2016

அந்தணர் ஆசாரம் - 6




ஸ்னானம் செய்யும் முறை:
ஸ்னானம் செய்ய உசிதமான காலம் உதயத்துக்கு முன்பான 4 நாழிகைகள். இதற்கு அருணோதய காலம் எனப்பெயர். உதயத்துக்கு முன் கீழ்வானம் சிவக்கிறது இல்லையா? இதுவேதான்.
நித்ய ஸ்னானம், நைமித்திக ஸ்னானம், காம்ய ஸ்னானம் என 3 விதம் உண்டு. நித்யம் என்பது தினசரி செய்வது. நைமித்திகம் என்பது குறித்த காலத்தில் அவ்வப்போது செய்வது. உதாரணமாக சவரம் செய்துகொண்ட பின்; தீட்டு சம்பவித்தால். இப்படிப்பட்ட சந்தர்பங்களில் இரண்டு முறை ஸ்னானம் செய்ய வேண்டும். ஒரு முறை செய்து உடலை துடைத்துக்கொண்டு பின் மீண்டும் செய்யும்போது தர்பணாதிகளும் சேர்த்து செய்ய வேண்டும்.
குடுமியை முடிந்து ஆசமனம் செய்து, கரையை அலம்பி தர்பத்தை வைத்துவிட்டு பவித்ரத்தை அணிந்துகொண்டு ஸங்கல்பம் செய்க. அஞ்சலி செய்து, வருண ஸூக்தம் ஜபம் செய்து ஜல தேவதையை நமஸ்கரித்து, தலையில் ஆபோஹிஷ்டா மந்திரத்தால் ப்ரோக்‌ஷணம் செய்துகொண்டு, நீரில் இறங்கி முழுகி அக்குள்களை துடைத்துக்கொண்டு, இரு முறை ஆசமனம் செய்து., மீண்டும் முழுகி அகமர்ஷணம் ஜபித்து முழுகி, இரு ஆசமனம் செய்து தர்ப்பணம் செய்க. தர்ப்பணத்தை ஈர வேட்டியுடனேயே செய்ய வேண்டும். கிழக்கு முகமாக உபவீதியாக நின்று தேவர்களுக்கும்; வடக்கு முகமாக நிவீதியாக ரிஷிகளுக்கும்; ப்ராசீனாவீதியாக தெற்கு நோக்கி நின்று பித்ருக்களுக்கும் இரண்டு கைகளாலும் தர்ப்பணம் செய்யவேண்டும்.
ஜலத்தை நம் சரீரத்தின் அழுக்கு அசுத்தப்படுத்தியது இல்லையா? இந்த தோஷத்துக்காக யக்ஷ்மா என்ற தேவதையை குறித்து கரையில் ஒரு தர்ப்பணத்தை செய்ய வேண்டும்.
பின் ப்ராசீனாவீதியாக உடம்பின் மேலுள்ள நீர் வடியும் படி மௌனமாக நிற்க வேண்டும்.இதனால் எல்லா ப்ராணிகளூம் த்ருப்தியடைகின்றன. சிகையை முன்புறமாக தள்ளி மந்திரம் சொல்லி சிகோதகம் கொடுக்க பித்ருக்கள் த்ருப்தி அடைகிறார்கள். மேலும் த்ருப்தி தரும் பொருட்டு நிவீதியாக மேல் வேட்டியை நான்காக மடித்து துணியின் நுனி வழியாக ஜலத்தை கீழே விடவும். கீழ் வேட்டியின் நுனியை பற்றி மந்திரம் சொல்லி பிழியவும். இவற்றுக்கான மந்திரங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
பின் உபவீதியாக ஆசமனம் செய்யவும்.

கடைசியாக இரண்டு தனி துண்டுகளால் தலையையும் உடம்பையும் துடைத்துக்கொள்ளவும்.

No comments: