Pages

Friday, September 9, 2016

டீக்கடை ஆன்மிகம் - 13

அப்ப கொல்லறது தப்பில்லங்கறீங்களா?”
இளைஞன் பெரியவரை பார்த்து கேட்டான்.
நிதானமாக டீயை உறிஞ்சியவர் முகத்தில் ஒரு சிறு புன்னகை.
அது நேரம், சந்தர்பம், ஆளை பொறுத்தது!”
என்ன சொல்றீங்க? அதெப்படி பொறுத்தது? புரியலையே!”
உன் குழந்தை நடக்கிறப்ப ஒரு எறும்பை மிதிச்சுது; அது செத்துப்போச்சு. குழந்தையோட தப்பா?”
உம்... இல்லைதான்”
நீயே வண்டி ஓட்டிகிட்டு இருக்கே. ஒரு நாய்க்குட்டி குறுக்கே திடுதிப்புன்னு வந்துடுத்து; நிறுத்தப்பாத்து மோதிட்டே. அது செத்து போச்சு. அது உன் தப்பா?”
ஹும்ம்ம்ம்ம்”
அதான் சொன்னேன். இதுக்கு ஒரு பொதுவான பதில் இருக்க முடியாது. தேசம் காலம் சூழ்நில பொருத்து மாறும். பனி மட்டுமே இருக்கிற ஐஸ்லாந்து மாதிரி ஊர்ல என்ன சாப்பிடுவாங்க? அங்கே கிடைக்கற மீன் முதலான அசைவ உணவுதான் இருக்கும். வேற வழி? இவங்க பாபம் செய்யறதா சொல்ல முடியுமா? ”
செடி கொடிகளுக்கும் உசிரு இருக்கே? அதை சாப்பிடறது?”
வெண்டக்கா, கத்திரிக்காயை பிச்சா செடி சாகறதில்லையே!”
சரி, கீரை? அதை முழுக்க பிச்சுத்தானே சாப்பிடறோம். அது போல கிழங்குகள். கொய்யாக்காவை நல்லா அரைச்சு சாப்டா எத்தனை எத்தனை விதைகள் சாகுது!”
இதுல எல்லாம் பாபம் இல்லையான்னு கேட்டா, ஆமாம் இருக்கு. இப்ப காணாமப்போய்கிட்டு இருக்கற அக்னிஹோத்ரம் என்கிற கர்மாவை செய்யறவங்க இஷ்டி ந்னு ஒரு ஹோமம் ஒவ்வொரு பாட்டிமைக்கும் செய்வாங்க.”
தசரதர் செஞ்சாரே புத்ர காமேஷ்டி அது மாதிரியா? ”
அட! ஆமாம். சரியா பிடிச்சுட்டே, புத்திர காம இஷ்டி - குழந்தையை விரும்பி செய்கிற இஷ்டி அதான் அது! இது ஒவ்வொரு அமாவாசை, பௌர்ணமிக்கும் அப்பறம் வரது. அதுல நெல்லை கொண்டு வந்து குத்துவாங்க, அரிசியாகும்; அதை திருப்பி மாவாக்க இடிப்பாங்க. இந்த நெல் முளைக்காம இப்படி செஞ்சிட்டதால இது ஒரு பாபம்ன்னு சொல்லி இதுக்கு ப்ராயச்சித்தம் செய்வாங்க! குடும்பஸ்தன்னா இருந்தா இப்படி பாபம் செய்யறதை தவிர்க்க முடியாது!
ப்ரம்மச்சாரி பத்தி விஷயம் இல்லே. அவன் மாணவன்; கத்துக்கறப்ப தவறுகள் நடக்கும். க்ருஹஸ்தன் பாவம், அவன் செய்யக்கூடிய பல விஷயங்களும் ஏதோ ஒரு வகையில் ஜீவ ஹிம்சை செய்யத்தான் செய்யும். இதை ஒத்துகிட்டு இதுக்குன்னு பிராயச்சித்தங்கள் விதிச்சு இருக்காங்க பெரியவங்க, அதுக்கு வைஶ்வதேவம்ன்னு பேரு.
இதெல்லாம் வழக்கு ஒழிஞ்சுகிட்டு இருக்கு. க்ருஹஸ்தன் இல்லாம உலகம் இயங்காதே! அதனால ப்ராயச்சித்தங்கள் சொல்லி இருக்கு.”
அது சரி! நீங்க பாட்டுக்கு எல்லாம் பாபம்; ப்ராயச்சித்தம் பண்ணு ந்னு சொல்லிட்டா எப்படி? யாரும் கடுமையா அஹிம்சை கடைபிடிக்க வேண்டாமா?”
சரிதான். இப்பவும் கடுமையா அஹிம்சை கடை பிடிக்க வேண்டியது சந்நியாசிகள்தான்.
இவங்களுக்கு முதன்மையான தர்மம் அஹிம்சைதான். இவங்க எந்த அக்னி காரியத்திலேயும் சம்பந்தப்படக்கூடாது. இவங்க ஹோமங்கள் செய்யக்கூடாது. சமைச்சு சாப்பிடக்கூடாது. இப்படி பல கட்டுப்பாடுகள்.”
ஜைன துறவிகள் உயிர் கொல்லாமைந்னு செய்யறது எல்லாம் கேள்விப்பட்டு இருப்பியே?
தெருவில நடக்ககூட பெருக்கிண்டே நடப்பாங்க.
அந்த காலத்து காட்டில ஜபம் செய்யற துறவிகள் தினசரி மூணு முறை ஆறுக்கு போய் குளிப்பாங்க. இன்னைக்கு காலை போறார். வழில மரத்துலேந்து ஒரு பழம் கீழே விழுந்து இருக்கு. அதை எடுத்து சாப்பிடலாம் இல்லே? மாட்டார். அது வேற யாருக்கும் தேவைப்படலாமே? அடுத்த தரம் அடுத்த தரம்… அடுத்த நாள் மாலை வர அது அங்கேயே இருந்தா அதை எடுத்து சாப்பிடுவார்.
எது கொல்லப்படுது என்கிறதுலேயும் விஷயம் இருக்கு. அந்த காலத்து யாகங்களில காட்டு மிருகங்கள் நாட்டு மிருகங்கள்ன்னு வகைப்படுத்துவாங்க. நாட்டு மிருகங்கள் என்பது கிராமங்களில் வளர்க்கப்படுவது. இவைதான் பலி கொடுக்கப்படும். காட்டு மிருகங்கள் அழியும் (endangered species ஆகும்) வாய்ப்பு இருக்கு; அதை நெருப்பால தலை மூணு தரம் சுத்தி காட்டுக்குள்ள விரட்டி விட்டுடுவாங்க.”
என்னென்னவோ சொல்றீங்க. இப்ப நான் என்ன செய்யணும்? சொல்லுங்க!”
அத நீயேதான்பா முடிவு செய்யணும்! நீ எங்கே நிக்கப்போறே? கொசு கடிச்சா ரிப்லெக்ஸ்ல அடிப்பியா, மெதுவா ஊதி விரட்டுவியா இல்ல கடிச்சுட்டு போகட்டும்ன்னு விடப்போறியா? இல்லை கொசு பேட்டை எடுத்து தேடி தேடி அடிக்கப்போறியா?
வீட்டில ஆடு கோழின்னு வளத்து கொன்னு சாப்பிடப்போறியா? கடையில் வாங்கி சாப்பிடுவியா? இல்லை அசைவமே தொடபோறதில்லையா?
முழு அஹிம்சையில இருந்து ப்ராக்டிகல் அஹிம்ஸை வழியா ஹிம்ஸை வரை தேர்வு இருக்கு. நீயேதான் முடிவு செய்யணும்! ஏதானாலும் நீ முடிவு பண்ணு கடைபிடி. உன் வீட்டு மனுஷாளுக்கு இது நல்லதுன்னு சொல்லலாம். அல்லது வந்து கேட்கிறவங்களுக்கு சொல்லலாம். மத்தபடி வலிஞ்சு யார்கிட்டேயும் இப்படி இருன்னு சொல்லப்போனாத்தான் வம்பு! அது சரியில்லை. யோசி! ”
இளைஞன் யோசிக்கலானான்.


Post a Comment