Pages

Monday, September 12, 2016

அந்தணர் ஆசாரம் - 7




பலவித ஸ்னானங்கள்:
ஸ்னானம் கௌணம் முக்கியம் என இரு விதம். நீரில் முழுகி செய்வது முக்கியம். மற்ற விதங்கள் கௌணம்.
முக்கிய ஸ்னானத்தில் ஆறு வகைகள்: நித்தியம் விதிக்கப்பட்ட காலை, மாத்யான்னிக ஸ்னானங்கள். ஏதேனும் ஒரு நிமித்தத்தால் ஏற்படுவது நைமித்திகம். தொடக்கூடாததை தொட்டால் ஸ்னானம் செய்யச்சொல்லுகிறார்கள் இல்லையா? அது போல.
ஜ்யோதிடர்கள் இன்ன பலனுக்கு இன்ன இடத்தில் இன்ன காலத்தில் ஸ்னானம் செய் என்று சொல்கிறார்கள் இல்லையா? அல்லது ஒரு பலனை விரும்பி ஸ்னானம் செய்தால் அது காம்ய ஸ்னானம். இந்த விருப்பம் இல்லாதவர்கள் இதை செய்ய வேண்டியது இல்லை. ஒரு கர்மாவை செய்ய ஆரம்பிக்கும் போது கிரமத்தில் /சூத்திரத்தில் ஸ்னானம் விதித்து இருந்தால் அது கார்யாங்க ஸ்னானம். உடல் சுத்தியை வேண்டி எண்ணை தேய்த்துக்கொண்டு ஸ்னானம் செய்வது மலகர்ஷண ஸ்னானம். புண்ய தீர்த்தங்களிலோ நதிகளிலோ, தேவர்களால் வெட்டப்பட்ட குளங்களிலோ ஸரஸ்களிலோ ஸ்னானம் செய்வது க்ரியா ஸ்னானம். இதில் ஸ்னானமேதான் கிரியை.
அசக்தனாக இருக்கும் பக்‌ஷத்தில் தலையை தவிர்த்து நீரில் முழுகுவது; இடுப்பளவு முழுகுவது; ஈரத்துணியால் உடலை துடைத்துக்கொள்வது போன்றவை செய்யலாம் இவை கௌண ஸ்னானம் ஆகும்.
ஆக்னேயம், வாருணம், ப்ராம்மம், வாயவ்யம், திவ்யம், மானஸம், பார்த்திவம், காபிலம், ஸாரஸ்வதம் என ஒன்பது விதமும் உண்டு.
முன் சொன்னபடி நீரில் முழுகி தேவ பித்ரு தர்பணம் கொடுப்பது வாருணம்.
ஆக்னேய ஸ்னானம் என்பது நீர் இல்லாத நேரத்தில் செய்யக்கூடியது. இதில் அக்னிஹோத்ர பஸ்மாவாலோ வேறு பஸ்மாவாலோ உடல் முழுதும் பூசிக்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் ஏதோ நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு பஸ்ம ஸ்னானம் செய்து விட்டேன் என்கிறார்கள். அது சரியில்லை. பின் வரும் மந்திரங்களால் குறிப்பிட்ட இடத்தில் பஸ்மாவை பூச வேண்டும். ஈசான மந்திரத்தால் - சிரஸ்; தத் புருஷாய – முகம்; அகோர – ஹ்ருதயம்; வாமதேவ – குஹ்யம்; ஸத்யோஜாதம்- பாதங்கள்; பிரவணத்தால் மீதி அங்கங்கள் அனைத்தும்.
குசங்களின் நுனிபாகங்களால் ஆபோஹிஷ்டா எனும் மந்திரம் சொல்லி ப்ரோக்‌ஷணம் செய்து கொள்வது ப்ராம்ம ஸ்னானம் அல்லது மந்திர ஸ்னானம்.
சூர்ய அஸ்தமன நேரத்தில் கொட்டிலுக்கு திரும்பும் பசுமாடுகளின் குளம்புகளால் எழுப்பப்பட்ட புழுதி நம் உடலில் விழுவது வாயவ்ய ஸ்னானம்.
உத்தராயண காலத்தில் வெய்யில் காயும் போது மழை ஏற்பட்டால் அதில் நனைவது திவ்ய ஸ்னானம்.
ஸங்கு சக்ர கதா தரனாக நான்கு புஜங்களோடு மஹாவிஷ்ணுவை த்யானம் செய்வது மானஸம்.
சுத்தமான பூமியில் இருந்து மண்ணை எடுத்து உடலில் பூசிக் கொள்வது பார்த்திவ ஸ்னானம்.
ஈரத்துணியால் துடைத்துக்கொள்வது காபிலம்.

மஹான்களுடைய வாக்காலோ உபதேசத்தாலோ ஏற்படும் சுத்தி ஸாரஸ்வதம்.

No comments: