Pages

Wednesday, February 9, 2022

ஶ்ராத்தம் - 34 - உண்ட பின் -விகிரான்னம், வாயஸ பிண்டம்




கிழக்கு பார்த்து உண்ட விஸ்வேதேவர் எதிரில் மண்டியிட்டு தெற்கே ஆரம்பித்து வடக்கே முடியும்படி நீரால் ஒரு கோடு போல போட வேண்டும். இதற்கு கிண்டி இருந்தால் சௌகரியம். ‘அஸோமபா’ என்னும் மந்திரம் சொல்லி அன்னத்தை இந்த நீர் மீது தெற்கிலிருந்து வடக்காக உதிர்க்க வேண்டும். இதன்மீது முன்போலவே நீர் விட வேண்டும். பிறகு பூணூலை இடம் மாற்றிக்கொண்டு பித்ரு இலை எதிரில் மண்டியிட்டு கிழக்கே ஆரம்பித்து மேற்கே முடியும்படி பித்ரு தீர்த்தத்தால் நீர் விட்டு அதன் மீது பித்ரு தீர்த்தம் விடுவது போல அன்னத்தை வைத்து ‘அஸம்ஸ்கிருத’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இதன் மீது கிழக்கிலிருந்து மேற்காக எள்ளும் ஜலமும் பித்ரு தீர்த்தத்தால் விட வேண்டும். பிறகு உபவீதியாக விஷ்ணு இலை எதிரில் மண்டியிட்டு விஸ்வ தேவர் போலவே இதை செய்ய வேண்டும். மந்திரம்: ‘அஸம்ஶயோ பவேத்’.

பிறகு பவித்ரத்தை காதில் வைத்துக்கொண்டு கை அலம்பி இரண்டு முறை ஆசமனம் செய்ய செய்து பவித்ரம் அணிந்து பூணூலை இடம் மாற்றிக்கொண்டு தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நடுவே பூமியில் எள்ளை தெளித்து அதன் மீது தெற்கு நுனியாக சில தர்பங்களை பரப்ப வேண்டும். இடதுகாலை முட்டியிட்டு பிண்டத்தை எடுத்து மந்திரம் சொல்லி வைக்க வேண்டும். (யே அக்னி தக்தா..) இதன் மீது எள்ளும் நீரும் விட வேண்டும். இது முடிந்த பிறகு போக்தாக்களுக்கு உணவை முடித்துவைக்க ‘அமிர்தாபிதானமசி’ என்று என்று அவரவருக்கு தகுந்தபடி அருகே சென்று கையில் தீர்த்தம் போட வேண்டும். பிறகு பூணூலை இடம் மாற்றிக்கொண்டு இந்த பிண்டத்தை எடுத்துப் போய் காக்கைக்கு வைக்க வேண்டும். பின்னர் கை அலம்பிக்கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.

அஸோமபா மந்திர அர்த்தம்: யக்ஞத்தில் பாகம் இல்லாத சோமயாகம் செய்யாத தேவர்களுக்கு விஸ்வே தேவர்கள் சம்பந்தம் உள்ள உதிரி அன்னத்தை கொடுக்கிறேன்.

அஸம்ஸ்கிருத: சம்ஸ்காரம் இல்லாமல் பிறந்தவர்களுக்கும் தியாகம் செய்த குலப்பெண்களுக்கும் பித்ரு சம்பந்தமான உதிரி அன்னத்தை கொடுக்கிறேன்.

அஸம்ஶயோ: மகாவிஷ்ணு அறிவற்ற மோக்ஷ சாதனமானவர் என்பதில் சந்தேகமில்லை. பித்ருக்களுக்கு விஷ்ணு சம்பந்தமான விகிரான்னம் உயர்ந்ததாகும்.

யே அக்னி தக்தா: எனது குலத்தில் பிறந்து அக்னியால் எரிக்கப்பட்டவர்களும் எரிக்கப்படாதவர்களுமான பித்ருக்கள் பூமியில் வைக்கப்பட்ட இந்தப் பிண்டத்தால் மகிழ்ச்சி அடைந்து சிறந்த கதியை அடையட்டும். விதிப்படி அக்னியில் எரிந்தவர் விதிப்படி அக்னி இன்றி தெரிந்தவர், நமது குலத்தில் பிறந்து இறந்தவர் இவர்களுக்கு இந்த பிண்டம்.

பிராமணர்கள் கை கால் அலம்பி கொண்டு வந்து ஆசமனம் செய்து அமர்ந்த பிறகு இன்னொரு முறை திருப்தியா என்று கேட்க வேண்டும்.


Monday, February 7, 2022

#ஶ்ராத்தம் - 33 - உண்ணும் முன்னும் பின்னும்




 

பின் போக்தாக்களுக்கு அவரவருக்கான பாணியில் பூணூலை மாற்றிக்கொண்டு ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும். பின் ப்ராசீனாவீதியாக சர்வத்ர அம்ருதம் பவது ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும்.

சாதாரணமாக நாம் பரிசேஷணம் செய்து பின் பஞ்ச ப்ராணன்களுக்கும் ‘ப்ராணாய ஸ்வாஹா’ என்று துவங்கி ப்ராணாக்னிஹோத்ரம் செய்கிறோம் இல்லையா? இங்கே அப்படி போக்தாக்கள் செய்வதில்லை. இதற்கு கர்த்தா மந்திரம் சொல்ல வேண்டும். (ஶ்ரத்தாயாம் ப்ராணே). அதே போல மந்திரம் முடிந்ததும் பூமியில் நீர் விட்டு, அதை தானே மார்பில் தொட்டு, கை அலம்ப வேண்டும். பின் ‘ஸ்வாமிகளே! என் சக்திக்கு ஏற்ப விஷ்ணு சம்பந்தமானதும் ராக்‌ஷசர்களை அகற்றுவதும் மற்றபடி பவித்ரமானதுமான மந்திரங்களையும் இதிஹாஸ புராணங்களையும் ப்ராம்ஹணர்கள் மூலம் நீங்கள் கேட்கும் படி செய்கிறேன். காலம் கடந்துவிட்டது. இரவு பசி எடுக்காதவாறு உங்களுக்கு பிரியமானதை மௌனமாக உண்ணுங்கள்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இது வேத மந்திரமில்லை.

இதன் பின் உண்டு முடிக்கும் வரை அபிஶ்ரவணம் என்னும் வேத மந்திரங்களின் தொகுப்பை பாராயணம் செய்ய வேண்டும். அனேகமாக நடப்பதில்லை. சிரத்தை உள்ளவர் குறைந்த பக்‌ஷம் புருஷ சூக்தம், ஸஹஸ்ரசீர்ஷம் என்னும் அனுவாகம் ஆகியவற்றைச் சொல்லலாம். உண்டு முடிக்கும் தருவாயில் ‘அஹமஸ்மி’ என்னும் அன்ன சூக்தத்தை முடிந்தால் சொல்லலாம். இவை நீளமானவை. ஆதலால் பொருள் சொல்லவில்லை.

உண்டு முடித்ததும் விக்ரான்னத்தை ப்ராம்ஹணர் அருகில் வைக்க வேண்டும். அதாவது பரிமாறி மிகுதியான அன்னத்தில் ஒரு பிண்டம் பிடித்தும் உதிரி அன்னமாக கொஞ்சமும் ஒரு தட்டில் கொண்டுவந்து பூமியில் ஜலம் விட்டு அதன் மீது அதை வைக்க வேண்டும். வைத்துவிட்டு திருப்தி கேட்க வேண்டும். அதற்கு முன் பத்னி ‘சந்தேகத்திற்கு அன்னம் வேண்டுமா?’ என்று ஒரு முறை அன்னத்துடன் வந்து கேட்டு விடுவார். அவரிடம் ‘அன்னம் பானீயம்’ (அன்னமும் பானமும் போதுமா?) என்று கேட்க அவர் ‘ஸர்வம் ஸம்பூர்ணம்’ என்பார். ‘மதுவாதா’ என்னும் மந்திரம் சிலர் சொல்வர். பிறகு விஸ்வேதேவரை பார்த்து ‘மது மது சம்பன்னம்’ என்று கேட்க அவர் ‘ஸுசம்பன்னம்’ என்பார். ‘த்ருப்தாஸ்த்த’ என்று கேட்க ‘திருப்தாஸ்மஹ’ என்று சொல்வார்.

பிறகு பூணூலை இடம் செய்து கொண்டு பித்ரு பிராமணரை பார்த்து முன்போல அன்னம் பானீயம் கேட்டு ‘அக்‌ஷன்ன’ என்னும் மந்திரம் சொன்ன பின் ‘மது மது சம்பன்னம்’ என்று கேட்க அவர் ஸுசம்பன்னம் என்பார். த்ருப்தாஸ்த என்று கேட்க அவர் ‘த்ருப்தாஸ்மஹ’ என்பார்.

அடுத்து மகாவிஷ்ணுவிடம் உப வீதியாக இந்த மூன்றும் கேட்கப்படும். மதுவாதா என்னும் மந்திரம் சொல்லப்படும். முதலிரண்டு அதே கேள்விகள்- பதில்கள். மூன்றாவது கொஞ்சம் மாறும். விஷ்ணு ஒருவர்தான் என்பதால் இலக்கணப்படி த்ருப்தோஸ்தி - த்ருப்தோஸ்மி என்று மாறும்.



Saturday, February 5, 2022

ஶ்ராத்தம் - 32 - உண்ணும் முன் -2




 

பிறகு பித்ரு இலைக்கு சென்று பூணூலை இடம் மாற்றிக்கொண்டு இடது காலை மடித்து முட்டி போட்டு,அன்னத்துக்கு அபிகாரம் செய்து இலை நுனியில் ஆரம்பித்து அப்பிரதட்சணமாக பரிசேஷனம் செய்து, அவர் கையில் நீர் விட வேண்டும். இங்கே சிலர் ‘ஏஷதே’ என்ற மந்திரம் சொல்கிறார்கள். பின் முன் போலவே செய்ய வேண்டும். முன்னே பொன்மயமான பாத்திரம் என்று சொன்ன இடத்தில் வெள்ளி மயமான பாத்திரம் என்று சொல்லப்படும். ஹவ்யம் என்பதற்கு பதில் ’கவ்யம்’. அட்சதை க்கு பதிலாக எள்ளும் தீர்த்தம் பயன்படுகிறது. அதை கீழே விடுவதற்கு நம் இடது (பாத்திரத்தை பிடித்துக்கொண்டு இருக்கும்) கைக்கு கீழாக வலது கையை கொண்டு போய் நமக்கு இடது பக்கம் பித்ரு தீர்த்தத்தால் விட வேண்டும். மற்றபடி கர்மா முன் போலவே.
விஸ்வேதேவருக்கு செய்தது போலவே விஷ்ணுவுக்கும் உபசாரம் செய்ய வேண்டும்.

இங்கே விஸ்வேதேவருக்கு வலது காலை மடக்கி, பித்ருக்களுக்கு இடது காலை மடக்கி முட்டி போட்டு செய்ய வேண்டும் என்று சொன்னேன். இது கடினம் போல தோன்றலாம். ஆனால் உண்மையில் வயதான காலத்தில் குனிந்து செய்வதைவிட இது சௌகரியம். முதுகும் வலி எடுக்காமல் இருக்கும். ஆரம்பத்தில் சில முறை இந்த மாதிரி செய்வது கஷ்டமாக இருக்கலாம். (குறிப்பாக முட்டி கீழே பதிவது. துண்டு போட்டுக் கொள்ளலாம்). ஆனால் சிராத்தம் அல்லாத இடங்களில் ஓரிரு முறை செய்து பழகி விட்டால் இதுவே சிலாக்கியம். உண்மையில் உபசாரங்களில் கூட இதே போல செய்யச் சொல்லி இருக்கிறது.
பிறகு எள் அட்சதை துளசி ஜலம் ஆகியவற்றை கையில் ஏந்திக்கொண்டு ‘ஏகோ விஷ்ணு’ என்ற மந்திரத்தை சொல்லி உபவீதியாக புரூரவ ஆர்த்ரவ சம்ஞக விஸ்வதேவ ஸ்வரூபி என்று விஸ்வேதேவரை பார்த்து; ப்ராசீனாவீதியாக வசு ருத்ர ஆதித்ய சொரூபான் அஸ்மத் பித்ரு பிதாமக ப்ரபிதாமகான் ஸ்வரூபி என்று பித்ருக்களை பார்த்து சொல்லி; மீண்டும் உபவீதியாக ஸ்ராத்த ஸம்ரக்ஷக மகாவிஷ்ணு சொரூபி என்று விஷ்ணுவை பார்த்தும் சொல்லி ப்ராசீனாவீதியாக ஸர்வாகாரோ பகவான் ஸ்ரீ ஹரி ஜனார்த்தன ப்ரீயதாம் என்று சொல்லி பித்ரு தீர்த்தத்தால் தர்ப்பங்களில் இவற்றை விட வேண்டும். பிறகு உபவீதியாக ‘ஈசான விஷ்ணு’ என்ற ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். இதில் ஈசானன், விஷ்ணு, பிரம்மா, குகன், ஆஹவனீயம் தக்ஷிணாக்கினி என்று மூன்று அக்னிகள், சூரியன், சந்திரன், பிள்ளையார், க்ரௌஞ்ச மலை, தேவ இந்திரன், அகஸ்தியர், கச்சியப்பர் இவர்களுடைய பாதங்களை பித்ருக்கள் முக்தி பெறுவதற்காக நமஸ்கரிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். (இந்த பாதங்கள் கயையில் சிலா ரூபமாக உள்ளன.) வடக்கு முகமாக நின்று கயா ஶ்ராத்தம் கயா ஶ்ராத்தம் கயா ஶ்ராத்தம், அக்‌ஷய வட: அக்‌ஷய வட: அக்‌ஷய வட: என்று மூன்று முறை ஜெபிக்க வேண்டும்.


 

ஶ்ராத்தம் - 31- உண்ணும் முன்.




 
இவர்கள் மந்திரங்களை சொல்லி முடித்த பிறகு விஸ்வேதேவரிடம் சென்று பாத்திரத்தை தொட்டுக்கொண்டு வலது காலை மடக்கி இடது காலை செங்குத்தாக வைத்து முட்டியிட வேண்டும். விஸ்வேதேவரின் பாத்திரத்தை வலது கையால் தொட்டுக் கொள்ள வேண்டும். மனைவி அன்னத்தை பரிமாறி அதன் மீது செய்யும் வார்ப்பார். பின் நாம் இடதுகையால் இந்த பாத்திரத்தை தொட்டுக்கொண்டு வலதுகையால் பஞ்ச பாத்திரத்திலிருந்து நீர் எடுத்து பிரதட்சிணமாக பரிசேஷனம் செய்ய வேண்டும். அன்னத்தை காயத்ரியால் ப்ரோக்ஷணம் செய்து அடுத்த பரிசேஷசனமும் செய்ய வேண்டும். பிறகு போக்தா கையில் நீர் அளித்து, பாத்திரத்தை முன்னே பிடித்துக்கொண்டு இலையின் கீழ் இடது கையை மேல் நோக்கியதாகவும் வலது கையை மேலே கீழ் முகமாகவும் வைத்துக் கொண்டு மந்திரம் ஜபம் செய்ய வேண்டும். நடைமுறையில் ஒரு தர்பத்தால் அன்னத்தையும் மற்ற முழு உணவையும் தொட்டுக்கொண்டு சொல்வதாக இருக்கிறது .
இங்கே ‘ப்ருதிவீ தே பாத்ரம்’ மந்திரம் சொல்லப்படுகிறது. அதன் பொருள்: அன்னமே! உனக்கு பூமியே ஆதாரமான இடம். த்யு லோகம் மேல் மூடி. பிரம்மாவின் முகத்தில் உன்னை ஹோமம் செய்கிறேன். பிராமணர்களின் திருப்திக்காக பிராண அபானங்களில் உன்னை ஹோமம் செய்கிறேன். நீ இங்கு அவர்களுக்கு குறைவற்று இருக்கிறாய். பரலோகத்திலும் குறையாமல் இரு.’
பின் பிராமணரின் வலது கட்டை விரலால் இலையில் எல்லாவற்றையும் தொடும்படி செய்ய வேண்டும். இங்கே ‘இதம் விஷ்ணு’ என்ற மந்திரம் பயன்படுகிறது. தீர்த்தத்துடன் அட்சதை துளசிகளை எடுத்து பத்னி கர்த்தா கையில் நீர் வார்க்க ‘இதமிதம் ஹவ்யம்’ என்ற மந்திரம் சொல்லப்படுகிறது. இதன் பொருள்: இந்த ஹவ்யம் ஆனது அம்ருத வடிவம். போதும் என்ற திருப்தி உண்டாகும் வரை கொடுத்ததும் கொடுக்கப் போகின்றதும் அன்னமும் நானும் உண்பவரும் பிரம்மம்; இந்த இடம் கயை. போக்தா கதாதரர். பொன்மயமான இந்த பாத்திரம் அக்ஷய்ய வடத்தின் நிழலில் கயையில் விஷ்ணு பாதம் முதலிய எல்லா பாதங்களிலும் கொடுக்கப்பட்டது.’
பிறகு அக்ஷதை நீர் துளஸி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு புக்த தக்ஷிணையும் சேர்த்து கோத்திரம் சர்மா ஆகியன சொல்லி ‘விஸ்வேதேவர் திருப்திக்காக காய்கறிகள் பக்ஷணங்கள் போஜ்யங்கள் உடன் வேண்டிய அளவு விஸ்வே தேவர்களுக்கு கொடுக்கிறேன்’ என்று சொல்லி வலது பக்கம் கீழே போட்டு, பின் எடுத்து அவரிடம் கொடுக்க வேண்டும். ஸ்வாஹா என ஹோமம் செய்வது போல் கூறி நமஸ்காரம் சொல்லப்பட்டுள்ளது. என்னுடையது அல்ல என்பது உத்தேச தியாகம். பரிசேஷனம் போக்தாவின் கடமை ஆனதால் உமது சௌகரியம் போல பரிசேஷனம் செய்துகொள்ளுங்கள் என்று போக்தாவிடம் சொல்லி, பத்னி அவருடைய தீர்த்த பாத்திரத்தில் தீர்த்தம் விட வேண்டும். (பிராம்ஹணர்களுக்கு அன்னமிட்டால், ஏற்று உண்டு நமக்கு உபகாரம் செய்ததற்கு கூடவே தக்ஷிணை கொடுத்தால்தான் முழு பலன் கிடைக்கும். இதுவே புக்த தக்ஷிணை)


 

Tuesday, February 1, 2022

ஶ்ராத்தம் - 30 மந்த்ர படனம்.




 

அடுத்ததாக ‘ரக்‌ஷாகும்ஸி’ என்று ஒரு மந்திரம் ஜெபிக்க வேண்டும். அதன் பொருள்: முன்னே ராக்ஷஸர்கள் உக்கிரமாக தவம் செய்தனர். அதனால் மகிழ்ந்த பிரஜாபதி உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றார். அந்த ராக்ஷஸர்கள் தினசரி சூரியன் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். பிரம்மாவும் அப்படியே ஆகட்டும் என்று சொன்னார். அதனால் இவர்கள் உதயமாகும் சூரியனுடன் சண்டையிட ஆரம்பிக்கின்றனர். அதே போல அஸ்தமனம் ஆகும் போதும் சண்டை போடுகின்றனர். இந்த ராக்ஷஸர்கள் காயத்ரியால் மந்திரித்த நீரால் அடங்குகிறார்கள். அதனால் வேதம் ஓதுவோர் காலையில் கிழக்கு முகமாக நின்று காயத்ரியால் மந்திரித்த நீரை மேலே விட்டு எறிகிறார்கள். அந்த நீரானது வஜ்ராயுதமாக ஆகி அந்த ராக்ஷஸர்களை ‘மந்தேஹர்’ என்னும் ராக்‌ஷஸர்களுக்கு இருப்பிடமான அருண த்வீபத்தில் (தீவில்) கொண்டு எறிகின்றது. இதனால் அந்தணர்களுக்கு பாவம் ஏற்படுகிறது. இதை போக்குவதற்காக இவர்கள் தம்மைத் தாமே பிரதட்சிணமாக சுற்றிக் கொள்ளுகிறார்கள். அதனால் ஏற்படும் பாவத்தை நீக்கி கொள்ளுகிறார்கள். (இந்த ஒரு இடம் தவிர மற்றபடி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளக் கூடாது) ‘எதிரில் தெரிகின்ற சூரியன் பிரம்மம்’ என்று உதயம் ஆகும் போதும் அஸ்தமனம் ஆகும் போதும் தியானம் செய்து பிரதக்ஷணம் செய்கிறவர்கள் சகலவிதமான க்ஷேமத்தையும் அடைகிறார்கள். ஆதித்யன் பிரம்மம் என்று அறிபவன் பிரம்மமாகவே ஆகி பிரம்மத்தை அடைகிறான்.

இந்த இரண்டு மந்திரங்களை ஜபம் செய்த பிறகு போக்தாக்கள் ‘ஆ பிரம்மன் பிரம்மனோ’, ‘கிக்குஸ்விதாஸீத்’ என்ற மந்திர ப்ராம்மணங்கள் ஆன இரண்டு அனுவாகங்களையும் ‘நமஸஹமானாய’ என்ற ருத்ர அனுவாகத்தையும் ஜபம் செய்ய வேண்டும். அனேகமாக இது நடப்பதில்லை. எஜமானனுக்கு ஆத்து வாத்தியார் சொல்லி வைத்து விடுகிறார். ஆனால் போக்தாக்களுக்கு யாரும் சொல்லி வைப்பதில்லை இவை கொஞ்சம் நீளமானவை. ஆகையால் சொல்லி வைத்து திருப்பி சொல்லுவது சிரம சாத்தியம்.