Pages

Saturday, February 5, 2022

ஶ்ராத்தம் - 31- உண்ணும் முன்.




 
இவர்கள் மந்திரங்களை சொல்லி முடித்த பிறகு விஸ்வேதேவரிடம் சென்று பாத்திரத்தை தொட்டுக்கொண்டு வலது காலை மடக்கி இடது காலை செங்குத்தாக வைத்து முட்டியிட வேண்டும். விஸ்வேதேவரின் பாத்திரத்தை வலது கையால் தொட்டுக் கொள்ள வேண்டும். மனைவி அன்னத்தை பரிமாறி அதன் மீது செய்யும் வார்ப்பார். பின் நாம் இடதுகையால் இந்த பாத்திரத்தை தொட்டுக்கொண்டு வலதுகையால் பஞ்ச பாத்திரத்திலிருந்து நீர் எடுத்து பிரதட்சிணமாக பரிசேஷனம் செய்ய வேண்டும். அன்னத்தை காயத்ரியால் ப்ரோக்ஷணம் செய்து அடுத்த பரிசேஷசனமும் செய்ய வேண்டும். பிறகு போக்தா கையில் நீர் அளித்து, பாத்திரத்தை முன்னே பிடித்துக்கொண்டு இலையின் கீழ் இடது கையை மேல் நோக்கியதாகவும் வலது கையை மேலே கீழ் முகமாகவும் வைத்துக் கொண்டு மந்திரம் ஜபம் செய்ய வேண்டும். நடைமுறையில் ஒரு தர்பத்தால் அன்னத்தையும் மற்ற முழு உணவையும் தொட்டுக்கொண்டு சொல்வதாக இருக்கிறது .
இங்கே ‘ப்ருதிவீ தே பாத்ரம்’ மந்திரம் சொல்லப்படுகிறது. அதன் பொருள்: அன்னமே! உனக்கு பூமியே ஆதாரமான இடம். த்யு லோகம் மேல் மூடி. பிரம்மாவின் முகத்தில் உன்னை ஹோமம் செய்கிறேன். பிராமணர்களின் திருப்திக்காக பிராண அபானங்களில் உன்னை ஹோமம் செய்கிறேன். நீ இங்கு அவர்களுக்கு குறைவற்று இருக்கிறாய். பரலோகத்திலும் குறையாமல் இரு.’
பின் பிராமணரின் வலது கட்டை விரலால் இலையில் எல்லாவற்றையும் தொடும்படி செய்ய வேண்டும். இங்கே ‘இதம் விஷ்ணு’ என்ற மந்திரம் பயன்படுகிறது. தீர்த்தத்துடன் அட்சதை துளசிகளை எடுத்து பத்னி கர்த்தா கையில் நீர் வார்க்க ‘இதமிதம் ஹவ்யம்’ என்ற மந்திரம் சொல்லப்படுகிறது. இதன் பொருள்: இந்த ஹவ்யம் ஆனது அம்ருத வடிவம். போதும் என்ற திருப்தி உண்டாகும் வரை கொடுத்ததும் கொடுக்கப் போகின்றதும் அன்னமும் நானும் உண்பவரும் பிரம்மம்; இந்த இடம் கயை. போக்தா கதாதரர். பொன்மயமான இந்த பாத்திரம் அக்ஷய்ய வடத்தின் நிழலில் கயையில் விஷ்ணு பாதம் முதலிய எல்லா பாதங்களிலும் கொடுக்கப்பட்டது.’
பிறகு அக்ஷதை நீர் துளஸி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு புக்த தக்ஷிணையும் சேர்த்து கோத்திரம் சர்மா ஆகியன சொல்லி ‘விஸ்வேதேவர் திருப்திக்காக காய்கறிகள் பக்ஷணங்கள் போஜ்யங்கள் உடன் வேண்டிய அளவு விஸ்வே தேவர்களுக்கு கொடுக்கிறேன்’ என்று சொல்லி வலது பக்கம் கீழே போட்டு, பின் எடுத்து அவரிடம் கொடுக்க வேண்டும். ஸ்வாஹா என ஹோமம் செய்வது போல் கூறி நமஸ்காரம் சொல்லப்பட்டுள்ளது. என்னுடையது அல்ல என்பது உத்தேச தியாகம். பரிசேஷனம் போக்தாவின் கடமை ஆனதால் உமது சௌகரியம் போல பரிசேஷனம் செய்துகொள்ளுங்கள் என்று போக்தாவிடம் சொல்லி, பத்னி அவருடைய தீர்த்த பாத்திரத்தில் தீர்த்தம் விட வேண்டும். (பிராம்ஹணர்களுக்கு அன்னமிட்டால், ஏற்று உண்டு நமக்கு உபகாரம் செய்ததற்கு கூடவே தக்ஷிணை கொடுத்தால்தான் முழு பலன் கிடைக்கும். இதுவே புக்த தக்ஷிணை)


 

No comments: