Pages

Wednesday, February 9, 2022

ஶ்ராத்தம் - 34 - உண்ட பின் -விகிரான்னம், வாயஸ பிண்டம்




கிழக்கு பார்த்து உண்ட விஸ்வேதேவர் எதிரில் மண்டியிட்டு தெற்கே ஆரம்பித்து வடக்கே முடியும்படி நீரால் ஒரு கோடு போல போட வேண்டும். இதற்கு கிண்டி இருந்தால் சௌகரியம். ‘அஸோமபா’ என்னும் மந்திரம் சொல்லி அன்னத்தை இந்த நீர் மீது தெற்கிலிருந்து வடக்காக உதிர்க்க வேண்டும். இதன்மீது முன்போலவே நீர் விட வேண்டும். பிறகு பூணூலை இடம் மாற்றிக்கொண்டு பித்ரு இலை எதிரில் மண்டியிட்டு கிழக்கே ஆரம்பித்து மேற்கே முடியும்படி பித்ரு தீர்த்தத்தால் நீர் விட்டு அதன் மீது பித்ரு தீர்த்தம் விடுவது போல அன்னத்தை வைத்து ‘அஸம்ஸ்கிருத’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இதன் மீது கிழக்கிலிருந்து மேற்காக எள்ளும் ஜலமும் பித்ரு தீர்த்தத்தால் விட வேண்டும். பிறகு உபவீதியாக விஷ்ணு இலை எதிரில் மண்டியிட்டு விஸ்வ தேவர் போலவே இதை செய்ய வேண்டும். மந்திரம்: ‘அஸம்ஶயோ பவேத்’.

பிறகு பவித்ரத்தை காதில் வைத்துக்கொண்டு கை அலம்பி இரண்டு முறை ஆசமனம் செய்ய செய்து பவித்ரம் அணிந்து பூணூலை இடம் மாற்றிக்கொண்டு தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நடுவே பூமியில் எள்ளை தெளித்து அதன் மீது தெற்கு நுனியாக சில தர்பங்களை பரப்ப வேண்டும். இடதுகாலை முட்டியிட்டு பிண்டத்தை எடுத்து மந்திரம் சொல்லி வைக்க வேண்டும். (யே அக்னி தக்தா..) இதன் மீது எள்ளும் நீரும் விட வேண்டும். இது முடிந்த பிறகு போக்தாக்களுக்கு உணவை முடித்துவைக்க ‘அமிர்தாபிதானமசி’ என்று என்று அவரவருக்கு தகுந்தபடி அருகே சென்று கையில் தீர்த்தம் போட வேண்டும். பிறகு பூணூலை இடம் மாற்றிக்கொண்டு இந்த பிண்டத்தை எடுத்துப் போய் காக்கைக்கு வைக்க வேண்டும். பின்னர் கை அலம்பிக்கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.

அஸோமபா மந்திர அர்த்தம்: யக்ஞத்தில் பாகம் இல்லாத சோமயாகம் செய்யாத தேவர்களுக்கு விஸ்வே தேவர்கள் சம்பந்தம் உள்ள உதிரி அன்னத்தை கொடுக்கிறேன்.

அஸம்ஸ்கிருத: சம்ஸ்காரம் இல்லாமல் பிறந்தவர்களுக்கும் தியாகம் செய்த குலப்பெண்களுக்கும் பித்ரு சம்பந்தமான உதிரி அன்னத்தை கொடுக்கிறேன்.

அஸம்ஶயோ: மகாவிஷ்ணு அறிவற்ற மோக்ஷ சாதனமானவர் என்பதில் சந்தேகமில்லை. பித்ருக்களுக்கு விஷ்ணு சம்பந்தமான விகிரான்னம் உயர்ந்ததாகும்.

யே அக்னி தக்தா: எனது குலத்தில் பிறந்து அக்னியால் எரிக்கப்பட்டவர்களும் எரிக்கப்படாதவர்களுமான பித்ருக்கள் பூமியில் வைக்கப்பட்ட இந்தப் பிண்டத்தால் மகிழ்ச்சி அடைந்து சிறந்த கதியை அடையட்டும். விதிப்படி அக்னியில் எரிந்தவர் விதிப்படி அக்னி இன்றி தெரிந்தவர், நமது குலத்தில் பிறந்து இறந்தவர் இவர்களுக்கு இந்த பிண்டம்.

பிராமணர்கள் கை கால் அலம்பி கொண்டு வந்து ஆசமனம் செய்து அமர்ந்த பிறகு இன்னொரு முறை திருப்தியா என்று கேட்க வேண்டும்.


No comments: