Pages

Monday, February 7, 2022

#ஶ்ராத்தம் - 33 - உண்ணும் முன்னும் பின்னும்




 

பின் போக்தாக்களுக்கு அவரவருக்கான பாணியில் பூணூலை மாற்றிக்கொண்டு ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும். பின் ப்ராசீனாவீதியாக சர்வத்ர அம்ருதம் பவது ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும்.

சாதாரணமாக நாம் பரிசேஷணம் செய்து பின் பஞ்ச ப்ராணன்களுக்கும் ‘ப்ராணாய ஸ்வாஹா’ என்று துவங்கி ப்ராணாக்னிஹோத்ரம் செய்கிறோம் இல்லையா? இங்கே அப்படி போக்தாக்கள் செய்வதில்லை. இதற்கு கர்த்தா மந்திரம் சொல்ல வேண்டும். (ஶ்ரத்தாயாம் ப்ராணே). அதே போல மந்திரம் முடிந்ததும் பூமியில் நீர் விட்டு, அதை தானே மார்பில் தொட்டு, கை அலம்ப வேண்டும். பின் ‘ஸ்வாமிகளே! என் சக்திக்கு ஏற்ப விஷ்ணு சம்பந்தமானதும் ராக்‌ஷசர்களை அகற்றுவதும் மற்றபடி பவித்ரமானதுமான மந்திரங்களையும் இதிஹாஸ புராணங்களையும் ப்ராம்ஹணர்கள் மூலம் நீங்கள் கேட்கும் படி செய்கிறேன். காலம் கடந்துவிட்டது. இரவு பசி எடுக்காதவாறு உங்களுக்கு பிரியமானதை மௌனமாக உண்ணுங்கள்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இது வேத மந்திரமில்லை.

இதன் பின் உண்டு முடிக்கும் வரை அபிஶ்ரவணம் என்னும் வேத மந்திரங்களின் தொகுப்பை பாராயணம் செய்ய வேண்டும். அனேகமாக நடப்பதில்லை. சிரத்தை உள்ளவர் குறைந்த பக்‌ஷம் புருஷ சூக்தம், ஸஹஸ்ரசீர்ஷம் என்னும் அனுவாகம் ஆகியவற்றைச் சொல்லலாம். உண்டு முடிக்கும் தருவாயில் ‘அஹமஸ்மி’ என்னும் அன்ன சூக்தத்தை முடிந்தால் சொல்லலாம். இவை நீளமானவை. ஆதலால் பொருள் சொல்லவில்லை.

உண்டு முடித்ததும் விக்ரான்னத்தை ப்ராம்ஹணர் அருகில் வைக்க வேண்டும். அதாவது பரிமாறி மிகுதியான அன்னத்தில் ஒரு பிண்டம் பிடித்தும் உதிரி அன்னமாக கொஞ்சமும் ஒரு தட்டில் கொண்டுவந்து பூமியில் ஜலம் விட்டு அதன் மீது அதை வைக்க வேண்டும். வைத்துவிட்டு திருப்தி கேட்க வேண்டும். அதற்கு முன் பத்னி ‘சந்தேகத்திற்கு அன்னம் வேண்டுமா?’ என்று ஒரு முறை அன்னத்துடன் வந்து கேட்டு விடுவார். அவரிடம் ‘அன்னம் பானீயம்’ (அன்னமும் பானமும் போதுமா?) என்று கேட்க அவர் ‘ஸர்வம் ஸம்பூர்ணம்’ என்பார். ‘மதுவாதா’ என்னும் மந்திரம் சிலர் சொல்வர். பிறகு விஸ்வேதேவரை பார்த்து ‘மது மது சம்பன்னம்’ என்று கேட்க அவர் ‘ஸுசம்பன்னம்’ என்பார். ‘த்ருப்தாஸ்த்த’ என்று கேட்க ‘திருப்தாஸ்மஹ’ என்று சொல்வார்.

பிறகு பூணூலை இடம் செய்து கொண்டு பித்ரு பிராமணரை பார்த்து முன்போல அன்னம் பானீயம் கேட்டு ‘அக்‌ஷன்ன’ என்னும் மந்திரம் சொன்ன பின் ‘மது மது சம்பன்னம்’ என்று கேட்க அவர் ஸுசம்பன்னம் என்பார். த்ருப்தாஸ்த என்று கேட்க அவர் ‘த்ருப்தாஸ்மஹ’ என்பார்.

அடுத்து மகாவிஷ்ணுவிடம் உப வீதியாக இந்த மூன்றும் கேட்கப்படும். மதுவாதா என்னும் மந்திரம் சொல்லப்படும். முதலிரண்டு அதே கேள்விகள்- பதில்கள். மூன்றாவது கொஞ்சம் மாறும். விஷ்ணு ஒருவர்தான் என்பதால் இலக்கணப்படி த்ருப்தோஸ்தி - த்ருப்தோஸ்மி என்று மாறும்.



No comments: