Pages

Sunday, June 5, 2022

காஶி யாத்திரை - 7



கூடிய சீக்கிரத்தில் காசி யாத்திரையும் முடித்துவிட வேண்டும் என்று நினைத்தாலும் சில தடைகள் இருந்தன. வசந்த நவராத்திரி வந்துவிட்டது. பெரியவா முகாமிட்டு இருந்த இடத்துக்கு பையரை வரச் சொல்லிவிட்டார். ஹோஸ்பெட் இல் வித்யாரண்யர் வித்யா பீடத்தில் முகாம். முதலில் இரண்டு மூன்று நாட்கள் இருந்து விட்டு சீக்கிரம் கிளம்பி விடுவதாக திட்டமிட்டாலும் கடைசியில் நவராத்திரி முடிந்த பிறகு திரும்புவதாக திட்டமிட வேண்டியது  இருந்தது. ஆகவே நாங்கள் செல்வதும் தாமதமாயிற்று.  காசியாத்திரை சுமார் மூன்று முறை திட்டமிட்டு மாற்றி என்று செய்ய வேண்டியிருந்தது. பையர் ஹோஸ்பேட் முடித்துக்கொண்டு கடலூர் வந்து,  நாங்கள் கடலூரில் இருந்து காலை சென்னைக்கு காரில் போய், விமானத்தில் கல்கத்தா போவதாகவும் அன்று இரவு ராஜதானி ரயிலேறி த்ரிவேணி போவதாக திட்டமிடப்பட்டது. இரண்டு நாட்கள் திரிவேணியில்.  முதல் நாள் தீர்த்த சங்கல்ப ஸ்நானம். அத்துடன் தீர்த்த ஶ்ராத்தம். அடுத்தநாள் திரிவேணியில் தர்சிக்கக்கூடிய கோவில்களை பார்த்துவிட்டு காசிக்கு ரயில். அன்றைக்கு பர்வா ஆனதால்  அன்று மாலை அக்னிஹோத்திரம் அடுத்த நாள் காலை அக்னிஹோத்ரம்,  ஸ்தாலீபாகம், மாலை பக்‌ஷ ஹோமம்; மூன்றாம் நாள் காலை பக்‌ஷஹோமம் என்று திட்டமிடப்பட்டது. மாலையில் சப்தரிஷி பூஜை. காசியில் முதல் நாள் யாத்திரை சங்கல்பம், சங்கல்ப ஸ்நானம் மணிகர்ணிகா கட்டத்தில். அடுத்த நாள் மணிகர்ணிகா தீர்த்த ஶ்ராத்தம். அடுத்த நாள் பஞ்ச கட்ட ஶ்ராத்தம். அதற்கடுத்த நாள்  சமாராதனை, தம்பதி பூஜை, கங்கா பூஜை, மாலை கங்கா ஹாரத்தி தரிசனம். அடுத்த நாள் விடிகாலையில் விஸ்வநாதர் கோவிலில் ஆரத்தி மங்கள தரிசனம் மாலையில் கயாவுக்கு ரயில் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி அப்படியே என்றைக்கு நடக்கிறது? பல விஷயங்கள் நம் கையில் இல்லாமல்தான் போகிறது.

கயையில் மூன்று நாட்களுக்கு ஶ்ராத்தம் திட்டமிட்டிருந்தார்கள். முதலாவது பல்குனி நதி தீர்த்த ஶ்ராத்தம். இரண்டாவதாக  விஷ்ணு பாத ஶ்ராத்தம்.  மூன்றாவது நாள் அக்ஷய வட ஶ்ராத்தம்.

அன்றிரவு ரயிலில் கல்கத்தா சென்று அடுத்த நாள் சென்னைக்கு விமானத்தை பிடிப்பதாக திட்டம்.  விமானம் மலையில் போய் சேரும், காரை நேரடியாக விமான நிலையத்துக்கு வரச்சொல்லி அப்படியே கடலூர் வந்துவிடுவதாக யோசனை செய்திருந்தோம்.  எல்லாம் எவ்வளவு தூரம் நடந்ததென்று போகப்போக தெரிந்துகொள்ளலாம். 

இதில் நான் வைத்த கோரிக்கைகள் இரண்டு.

  1. த்ரிவேணி - காசி - முடிந்தால் வந்தே பாரத் ரயில் பயணம். 

  2. கயா - கொல்கத்தா முடிந்தால் விமான பயணம். 

முதலாவது, நமது நாட்டின் ப்ரீமியர் ட்ரெய்ன் அல்லவா? எப்படி பயணம் இருக்கிறது என்று அனுபவிக்க ஒரு ஆர்வம். இரண்டாவது பயணத்தின் இறுதி கட்டத்தில் இன்னொரு ரயில் பயணம் வேண்டாம் என்று.

முதல் விருப்பம் நிறைவேறியது. முதலில் த்ரிவேணி ஸ்னானமும் ஶ்ராத்தமும் இரண்டு நாட்களாகத்தான் திட்டம். ஶ்ராத்தம் முடிய நேரமாகும் என்பதால் வந்தே பாரத் கிடையாது என்று இருந்தது. பின் ட்ரெய்ன் டிக்கட் புக் செய்யும்போது அது இரவே சீக்கிரம் போய்விடுகிறது என்பதால் ஒரே நாளில் இரண்டும் என்று மாறியது. அதனால் வந்தே பாரத் ஐ பிடித்துவிடலாம் என்று முடிவாகி டிக்கட் வாங்கியாகிவிட்டது.

இரண்டாவது நிறைவேறவில்லை. இருந்தாலும் (அப்போது ) விமானம் மாலை நாலரைக்கு என்பதாலும் விமான நிலையம் 9 கி.மீ தூரம் என்பதாலும் நடக்கும் என்றூ நினைத்தேன். காசி வாத்தியாரை கடைசி நாள் ஶ்ராத்தம் முடிந்து விமானம் இத்தனை மணிக்கு பிடித்துவிடலாமா என்றூ கேட்டால் அவர் “அவசியமா பிடிச்சுடலாம்ன்னா. ஆனா கடைசி நாள் ஶ்ராத்தம் நேரமாகும், பிண்டங்கள் அதிகம்.” என்று குழப்பினார். கடைசியில் ரிஸ்க் வேண்டாம் என்று ரயில் பயணம் முடிவாயிற்று.




Wednesday, June 1, 2022

காஶி யாத்திரை - 6




ஒருவழியாக பிராமணர்கள் சாப்பிட்டு முடித்ததும் உபசாரங்களை முடித்து அடுத்து தனுஷ்கோடியில் எடுத்த மண்ணை பாகம் செய்தோம். சேது மாதவர் பிந்து மாதவர் வேணி மாதவர் என்று பிரித்து எல்லோருக்கும் பூஜை செய்து பிந்து மாதவரை வாத்தியாரிடம் கொடுத்துவிட்டேன். சேது மாதவரை கடலில் கரைக்க சொல்லி அவர் என் பிள்ளையிடம் கொடுத்துவிட்டார். வேணி மாதவரை கொண்டுபோய் உலர்த்தி வைத்துக்கொள்ள சொன்னார். நீங்கள் சாப்பிட்டு வாருங்கள் நான் போய் படுக்கிறேன் என்று படுக்கப் போய்விட்டார். பாவம். நாங்கள் சாப்பிட்டு முடித்து மணி 2 போல் ஆகிவிட்டது என்பதால் அவரை எழுப்பி தானங்களை ஆரம்பித்தோம். முந்தைய நாள் தீர்த்த ஸ்நானம் செய்த ஒவ்வொன்றுக்கும் சாத்குண்யமாக ஒவ்வொரு தீர்த்தத்துக்கு ஒவ்வொரு விஷயம் தானம் சொல்லியிருக்கிறது. அதன் பட்டியல் பின்வருமாறு:

அக்னி தீர்த்தம் - ஜல பாத்திரம்
மஹாலக்‌ஷ்மி தீர்த்தம் - முத்து மாலை
சாவித்ரி, காயத்ரி, ஸரஸ்வதி தீர்த்தங்கள் - சந்தனம் மஞ்சள் குங்குமம்
ஶங்க தீர்த்தம் - ஶங்கு
சக்ர தீர்த்தம் - பவள மாலை
சேது மாதவ தீர்த்தம் -ஶாலக்ராமம்
நள, நீல, கவ, கவாக்‌ஷ, கந்தமான தீர்த்தங்கள் - தக்‌ஷிணை
ப்ரம்ஹஹத்தி விமோசன தீர்த்தம் - தில பூரித (எள் நிரப்பிய) பாத்திரம்
சாத்யாம்ருத தீர்த்தம் - நெய் நிரப்பிய வெண்கல பாத்திரம்
ஸர்வ தீர்த்தம் -அன்ன தானம்
ஶிவ தீர்த்தம் - ஶிவலிங்கம்
கங்கா தீர்த்தம் -சந்தனம் நிரப்பிய வெள்ளி பாத்திரம்
யமுனா தீர்த்தம் - துகூல வஸ்த்ரம் (நீலம் அல்லது சிவப்பு வஸ்த்ரம்)
கயா தீர்த்தம் -தேன் நிரப்பிய வெண்கல பாத்திரம்
ஸூர்ய, சந்த்ர தீர்த்தங்கள் - நவக்ரஹ தான்யங்கள்
கோடி தீர்த்தம் - பாதுகை
தனுஷ் கோடி தீர்த்தம் - தங்கம்


இப்படியாக தானங்களை செய்து முடித்தோம். சிலதுக்கு பிரதிநிதியாக தக்‌ஷிணை கொடுத்தோம். பையர் போய் கடலில் போட வேண்டியவைகளை போட்டு விட்டு வந்தார். பித்ரு சேஷம் முதலியவற்றை அப்படி செய்ய சொல்லி இருக்கிறது.
ஒருவழியாக ராமேஸ்வரம் யாத்திரை பூர்த்தி ஆயிற்று. உடம்பு முடியாமல் போய் படுத்துக் கொண்டேன். பையரும் நாட்டுப்பெண்ணும் 4 மணி போல ரயில் ஏறி அவர்கள் ஊர் நோக்கி போய்விட்டனர். நாங்கள் இரவு 8 மணி போல் ரயில் ஏறி அதிகாலை 4 மணிக்கு விழுப்புரம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து காரில் வீட்டுக்கு.
முதல் கட்டம் முடிந்தது.


Tuesday, May 31, 2022

காஶி_யாத்திரை - 5



இப்படியாக முதல் நாள் கர்மா நடந்து முடிந்தது.

அடுத்த நாள் காலை வழக்கம் போல எழுந்திருக்க முடிந்தது. ப்ராணக்ரியா முடித்து காலை அனுஷ்டானங்களை முடித்தேன். அடுத்த வீட்டில் இருந்து அருமையான காபி கிடைத்தது. மனைவியும் மருமகளும் சமையலுக்கு தேவையானவற்றை கோசாலைக்கு நகர்த்தி வாங்கிக்கொண்டு அங்கே போய்விட்டனர். இன்று பார்வண ஶ்ராத்தம் மட்டுமே முக்கிய கர்மா என்பதால் பிரச்சினை இல்லை. வழக்கம் போல் 9 மணிக்கு ஹவிஸ் வைக்கப்போனேன். அடுப்பு இருந்தது; ஆனால் எரிக்க விறகுதான் இல்லை. இந்தாங்க என்று அவர்கள் காட்டியது நிச்சயம் போதாது என்று தோன்றியது. வீட்டில் மாசிகம் போன்றவற்றுக்கு வைத்த அளவு நிச்சயம் போதாது, பிண்டங்களே அதிகம். (தீர்த்த ஶ்ராத்தம் குறித்த பதிவில் எழுதி இருக்கிறேன். ) ஸ்வதேயம் என்று வைக்க பித்ருக்கள் அதிகம். முன் காலத்தில் வீடுகளில் சாதம் வைக்கும் வெங்கலப்பானையைத்தான் எடுத்து வந்திருந்தோம்.

தர்ம பத்னி சமையலுக்கு மாமி யாரேனும் தேவை என்று சொல்லி வைத்து இருந்தாலும் யாரும் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். ராமேஸ்வரத்தில் பார்வண ஶ்ராத்தம் செய்ய விரும்புவோர் செலவை பார்க்காமல் உங்கள் இடத்தில் இருந்தே யாரையாவது அழைத்துப்போவதே நல்லது. கோசாலை உரிமையாளரின் மனைவி உதவுவார் என்று சொன்னார்கள். அப்படி ஒன்றும் உதவிகரமாக இல்லை. அவருக்கு ஏக வேலைகள். அவர் வந்து இங்கே நாங்கள் கரி போட்டு கும்முட்டி அடுப்புதான் பயன்படுத்துகிறோம் என்று சொல்லி வைத்துக்கொடுத்துவிட்டு போய்விட்டார். எனக்கு அது பழக்கமில்லை. விசிறி கேஎட்டால் ரீசார்ஜ் செய்யும் யூஎஸ்பி மின்விசிறி ஒன்றை கொடுத்தனுப்பினார்கள். விளைவு நல்லதாக இல்லை. நேரம் எடுத்துக்கொண்டாலும் ஒரு வழியாக அது ஆகிவிட்டது. அடுப்பு பிடித்துக்கொண்டால் போது; நீங்கள் பாட்டுக்கு நகரலாம், அது தானாக ஆகிவிடும் என்றார்கள். எங்கே நகர?

பெரிய ஸ்டீல் பெஞ்ச் ஒன்றை சமைக்க கொடுத்தார்கள். அது பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. மெனக்கெட்டு கடலூரில் இருந்து கொண்டு போன பலாப்பழத்தை (! ஹும்! ) வாத்தியாரின் உதவியாளர் பாதி அரிந்து சுளைகளை எடுத்து வைத்தார். காக்காய்கள் நேரம் பார்த்து லவட்டிக்கொண்டு போயின! “ப்ரீபெய்ட் சர்வீஸ் தானாக எடுத்துக்கொள்கின்றன. மீதி பாதியை அரிந்து சுளைகளை பத்திரப்படுத்துங்கள்” என்றேன்.

நானும் பையரும் எல்லாருக்குமாக வஸ்திரங்களை நனைத்து உலர்த்தினோம். அடித்த வெய்யிலில் காய்வது பிரச்சினையாக இல்லை.

இன்று முன்னாலிருந்து கூப்பிட்டு கூப்பிட்டு ப்ராம்ஹனர்களை சேர்த்துவிட்டார்கள். 

விசாலமான இடமாதலால் சௌகரியமாக எல்லாவற்றையும் செய்ய முடிந்தது. நடுவில் வாத்தியார் ஏதோ தப்பாக சொல்லப்போக பிராமணராக உட்கார்ந்திருந்தவர் அதை சரியாக சொல்ல ஆரம்பித்து நாக்கை கடித்துக்கொண்டு பேசாமல் இருந்தார். ஆனால் நான் அதை பார்த்து விட்டதால் ஏதோ தப்பு நடந்தது என்று தெரிந்து கொண்டேன். சரி செய்து கொண்டேன்.

 காரணம் காரணம் வாத்தியார் தப்பு செய்வதற்கு காரணம் இருந்தது. அவர் மார்பில் ஒரு பெரிய கட்டி ஏறக்குறைய பழுக்கும் நிலையில் இருந்தது. அதுபற்றி அவர் என் தர்மபத்தினி இடம் சொல்லி இருந்திருக்கிறார். அவரும் மாத்திரை சொல்லி அதை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். நன்றாக பழுத்த நிலையில் இருந்ததால் வலி அதிகமாக தெரிந்திருக்க வேண்டும். இந்த கட்டிகளை ஆரம்ப நிலையில் கவனிக்காது போனால் பிரச்சினைதான். பழுத்துவிட்டால் வெட்டி வெளியே சீழ் வர வழி செய்தே ஆகவேண்டும்.

காக்காவுக்கு வாயச பிண்டம் வைப்பதற்கு இடம் கேட்டால் பக்கத்தில் இருந்த தோட்டத்தில் நட்ட நடுவில் இருந்த கருங்கல்  தூணை காட்டினார்கள். சுவற்றின் மேல் வைத்து விடலாம் என்று சொன்னதை ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு மணி வெய்யிலிலே ஒரு காக்காவும் கருங்கல் மீது உட்காராது என்று தெரியும். அது உட்கார நினைத்தால்கூட ஒத்தைக் காலில் தான் உட்கார வேண்டும்! 

 ஒருவழியாக பிராமணர்கள் சாப்பிட்டு முடித்ததும் உபசாரங்களை முடித்து அடுத்து தனுஷ்கோடியில் வசித்த மண்ணை பாகம் செய்தோம்.


Saturday, May 28, 2022

காஶி_யாத்திரை - 4




 

தனுஷ் கோடியிலிருந்து அக்னி தீர்த்தத்துக்கு போனோம். உச்சரிப்பு பிழையுடன் நகராட்சி மாஸ்க் போட்டுக்கொள்ள மக்களை வலியுறுத்திக்கொண்டு இருந்தது. கேட்பார்தான் இல்லை. போட்டுக்கொள்ளாவிட்டால் அபதாரம் வசூலிப்பார்களாம். யாரும் சட்டை செய்யவில்லை.

படத்தில்: தனுஷ்கோடியில் பூஜை செய்த அத்தி ஆஞ்சனேயர் கோவில் அக்னி தீர்த்தம் போகும் வழியில்...

வாத்தியார் அங்கே மற்றவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு போய்விட்டார். அவர் அங்கே சங்கல்பாதிகள் செய்து வைத்து விட்டு எங்களை தீர்த்தங்களில் ஸ்நாநம் செய்து வைக்க இன்னொருவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு போய்விட்டார். அக்னி தீர்த்தம் என்பது இப்போதைய கடல் எல்லைக்கு உள்ளேஏஏஏ இருந்ததாகவும் கடல் உள்ளே வந்துவிட்டதால் அதையே அக்னி தீர்த்தம் என்பதாகவும் சொல்கிறார்கள். புதிய வாத்தியார் எங்க்ளை அழைத்துப்போய் ஒவ்வொரு தீர்த்தமாக நீர் முகர்ந்து எங்களுக்கு அபிஷேகம் செய்தார். எல்லா ஸ்நானமும் முடிந்து வாத்தியாரின் வீட்டுக்குப்போனோம். மணி ஒண்ணரையோ என்னவோ. சில ப்ராம்ஹணர்கள் காத்திருந்தார்கள். மாத்யான்ஹிகம் முடித்து என்னப்பா என்றால் இன்னும் ரெண்டு பேர் வரணும் என்றார்கள்.

அன்றைக்கு ஷன்னவதி ஶ்ராத்த நாள். நான் அப்போது அவற்றை தர்ப்பணமாக செய்ய ஆரம்பித்து இருந்தேன். ஆகவே அதை செய்து விட்டு பார்த்தால் இன்னும் அந்த 2 பேரை காணவில்லை. ஒருவர் ஆரம்பத்தில் இருந்து எப்போ ஆரம்பிக்கப்போறோம் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். இதோ இதோ என்று போக்கு காட்டிக்கொண்டே இருந்தார் வாத்தியார்.

ஹிரண்ய ஶ்ராத்தம் என்பதால் முதலில் பிண்ட ப்ரதானம் முடித்தோம். அந்த ரெண்டு பேரை இன்னும் காணவில்லை. ஒருவர் தர்ப்பணம் பண்ணிக்கொண்டு இருக்கேன்; தோ வரேன் என்றார். அந்த நேரம் அந்த இன்னொருவர் வந்து சேர்ந்தார். ஆரம்பிக்கப் போறோமா என்று கேட்டால் 'இல்லை, அந்த இன்னோருத்தர் வரட்டும், எனக்காக கொஞ்சம் காத்திருங்க' என்றார் வாத்தியார்.

இவ்வளவு நேரம் காத்திருந்த அந்த ப்ராம்ஹணருக்கு கோபம் வந்துவிட்டது. வெளியே போய் தன் வண்டியை எடுத்துக்கொண்டு போயே விட்டார்! என்னப்பாது என்றாலும் ஒண்ணும் செய்ய முடியாது என்றார் வாத்தியார். 

 இன்னும் காத்திருந்து காத்திருந்து .... என்னப்பா மணி ரெண்டரை ஆகிறது; இவ்வளவு லேட்டாக செய்யக்கூடாது என்றே இருக்கே? என்று நான் கேட்க ஒரு வழியாக இரண்டு கூர்ச்சங்கள் போட்டு ஆரம்பித்தார். இதை முதலிலேயே செய்திருக்கலாம்.

வஸ்த்ரங்கள் உட்பட்ட உபசாரங்கள் ஆரம்பித்து நடக்கும்போது அந்த ப்ராம்ஹணர் வந்து சேர்ந்தார். வாத்தியார் சொன்னபடி அவர் சார்பாக போட்ட கூர்ச்சத்தை எடுத்து அவரிடன் கொடுத்தேன். கோபித்துக்கொண்டு போய்விட்ட ப்ராம்ஹணர் ஸ்தானத்தில் வாத்தியாரே உட்கார்ந்துவிட்டார். பித்ரு வர்க்கம், மாதா வர்க்கம், சபத்னீக மாதாமஹ வர்க்கம், காருண்ய பித்ரு, ஶ்ராத்த சம்ரக்‌ஷக மஹா விஷ்ணு என ஒருவர் - இப்படியாக ப்ராம்ஹணர்கள். பார்வண ஶ்ராத்தத்தை பார்க்கில் குறைந்த உபசாரங்கள் என்றாலும் நிறைய பேர் இருப்பதால் கூடுதல் நேரம் ஆகிவிடுகிறது. அவர்கள் சாப்பிட்டு முடித்து உபசாரங்கள் செய்து வழியனுப்பி விட்டு நாங்கள் சாப்பிட உட்காரும்போது மணி 4.

சர்க்கரை வியாதி இருக்கிற மனுஷன் என்ன செய்வது? காலை ஒரு கஞ்சி, பின் ஒரு காபி தவிர ஒன்றுமில்லை. காலையில் மருந்து சாப்டாமல் தவிர்த்துவிட்டேன். சாப்பிட்ட பின் காலை மதியம் டோஸ் இரண்டைஉ ஒன்றாக போட்டுக்கொண்டு இரவு தவிர்த்துவிட்டேன். 4 மணிக்கு சாப்பிட்டு விட்டு இரவு என்னத்தை சாப்பிட? பால் மட்டும் குடித்தேன் என்று நினைக்கிறேன்.

செம வெயில். வேணி மாதவரை உலர்த்தி துணியில் முடிந்து வைத்துவிட்டேன். ஊருக்குப்போனதும் பித்தலை சம்புடம் வாங்கி அதில் வைத்துக்கொள்ள சொன்னார்கள்.

முந்தைய நாள் மாலை ஔபாசனம் செய்ய முடியாமல் விச்சின்னம் ஆகிவிட்டது. காலை முதலில் அதை புதுப்பித்துக்கொண்டேன். தொடர்ந்து வைத்துக்கொள்வது சிரமம் என்பதால் ஸமித்தில் ஆரோபணம் செய்து பயன்படுத்தினேன்.

ஜன்னலை சாத்தினால் புழுக்கம் திறந்தால் பூச்சிக்கடி என்று இருந்தாலும் அயற்ந்து தூங்கிப்போனேன்.

இப்படியாக முதல் நாள் கர்மா நடந்து முடிந்தது.