Pages

Sunday, June 5, 2022

காஶி யாத்திரை - 7



கூடிய சீக்கிரத்தில் காசி யாத்திரையும் முடித்துவிட வேண்டும் என்று நினைத்தாலும் சில தடைகள் இருந்தன. வசந்த நவராத்திரி வந்துவிட்டது. பெரியவா முகாமிட்டு இருந்த இடத்துக்கு பையரை வரச் சொல்லிவிட்டார். ஹோஸ்பெட் இல் வித்யாரண்யர் வித்யா பீடத்தில் முகாம். முதலில் இரண்டு மூன்று நாட்கள் இருந்து விட்டு சீக்கிரம் கிளம்பி விடுவதாக திட்டமிட்டாலும் கடைசியில் நவராத்திரி முடிந்த பிறகு திரும்புவதாக திட்டமிட வேண்டியது  இருந்தது. ஆகவே நாங்கள் செல்வதும் தாமதமாயிற்றுகாசியாத்திரை சுமார் மூன்று முறை திட்டமிட்டு மாற்றி என்று செய்ய வேண்டியிருந்தது. பையர் ஹோஸ்பேட் முடித்துக்கொண்டு கடலூர் வந்துநாங்கள் கடலூரில் இருந்து காலை சென்னைக்கு காரில் போய், விமானத்தில் கல்கத்தா போவதாகவும் அன்று இரவு ராஜதானி ரயிலேறி த்ரிவேணி போவதாக திட்டமிடப்பட்டது. இரண்டு நாட்கள் திரிவேணியில்முதல் நாள் தீர்த்த சங்கல்ப ஸ்நானம். அத்துடன் தீர்த்த ஶ்ராத்தம். அடுத்தநாள் திரிவேணியில் தர்சிக்கக்கூடிய கோவில்களை பார்த்துவிட்டு காசிக்கு ரயில். அன்றைக்கு பர்வா ஆனதால்  அன்று மாலை அக்னிஹோத்திரம் அடுத்த நாள் காலை அக்னிஹோத்ரம்ஸ்தாலீபாகம், மாலை பக்‌ஷ ஹோமம்; மூன்றாம் நாள் காலை பக்‌ஷஹோமம் என்று திட்டமிடப்பட்டது. மாலையில் சப்தரிஷி பூஜை. காசியில் முதல் நாள் யாத்திரை சங்கல்பம், சங்கல்ப ஸ்நானம் மணிகர்ணிகா கட்டத்தில். அடுத்த நாள் மணிகர்ணிகா தீர்த்த ஶ்ராத்தம். அடுத்த நாள் பஞ்ச கட்ட ஶ்ராத்தம். அதற்கடுத்த நாள்  சமாராதனை, தம்பதி பூஜை, கங்கா பூஜை, மாலை கங்கா ஹாரத்தி தரிசனம். அடுத்த நாள் விடிகாலையில் விஸ்வநாதர் கோவிலில் ஆரத்தி மங்கள தரிசனம் மாலையில் கயாவுக்கு ரயில் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி அப்படியே என்றைக்கு நடக்கிறது? பல விஷயங்கள் நம் கையில் இல்லாமல்தான் போகிறது.

கயையில் மூன்று நாட்களுக்கு ஶ்ராத்தம் திட்டமிட்டிருந்தார்கள். முதலாவது பல்குனி நதி தீர்த்த ஶ்ராத்தம். இரண்டாவதாக  விஷ்ணு பாத ஶ்ராத்தம்மூன்றாவது நாள் அக்ஷய வட ஶ்ராத்தம்.

அன்றிரவு ரயிலில் கல்கத்தா சென்று அடுத்த நாள் சென்னைக்கு விமானத்தை பிடிப்பதாக திட்டம்விமானம் மலையில் போய் சேரும், காரை நேரடியாக விமான நிலையத்துக்கு வரச்சொல்லி அப்படியே கடலூர் வந்துவிடுவதாக யோசனை செய்திருந்தோம்எல்லாம் எவ்வளவு தூரம் நடந்ததென்று போகப்போக தெரிந்துகொள்ளலாம்

இதில் நான் வைத்த கோரிக்கைகள் இரண்டு.

  1. த்ரிவேணி - காசி - முடிந்தால் வந்தே பாரத் ரயில் பயணம்

  2. கயா - கொல்கத்தா முடிந்தால் விமான பயணம்

முதலாவது, நமது நாட்டின் ப்ரீமியர் ட்ரெய்ன் அல்லவா? எப்படி பயணம் இருக்கிறது என்று அனுபவிக்க ஒரு ஆர்வம். இரண்டாவது பயணத்தின் இறுதி கட்டத்தில் இன்னொரு ரயில் பயணம் வேண்டாம் என்று.

முதல் விருப்பம் நிறைவேறியது. முதலில் த்ரிவேணி ஸ்னானமும் ஶ்ராத்தமும் இரண்டு நாட்களாகத்தான் திட்டம். ஶ்ராத்தம் முடிய நேரமாகும் என்பதால் வந்தே பாரத் கிடையாது என்று இருந்தது. பின் ட்ரெய்ன் டிக்கட் புக் செய்யும்போது அது இரவே சீக்கிரம் போய்விடுகிறது என்பதால் ஒரே நாளில் இரண்டும் என்று மாறியது. அதனால் வந்தே பாரத் ஐ பிடித்துவிடலாம் என்று முடிவாகி டிக்கட் வாங்கியாகிவிட்டது.

இரண்டாவது நிறைவேறவில்லை. இருந்தாலும் (அப்போது ) விமானம் மாலை நாலரைக்கு என்பதாலும் விமான நிலையம் 9 கி.மீ தூரம் என்பதாலும் நடக்கும் என்றூ நினைத்தேன். காசி வாத்தியாரை கடைசி நாள் ஶ்ராத்தம் முடிந்து விமானம் இத்தனை மணிக்கு பிடித்துவிடலாமா என்றூ கேட்டால் அவர் “அவசியமா பிடிச்சுடலாம்ன்னா. ஆனா கடைசி நாள் ஶ்ராத்தம் நேரமாகும், பிண்டங்கள் அதிகம்.” என்று குழப்பினார். கடைசியில் ரிஸ்க் வேண்டாம் என்று ரயில் பயணம் முடிவாயிற்று.




No comments: