Pages

Saturday, May 28, 2022

காஶி_யாத்திரை - 4




 

தனுஷ் கோடியிலிருந்து அக்னி தீர்த்தத்துக்கு போனோம். உச்சரிப்பு பிழையுடன் நகராட்சி மாஸ்க் போட்டுக்கொள்ள மக்களை வலியுறுத்திக்கொண்டு இருந்தது. கேட்பார்தான் இல்லை. போட்டுக்கொள்ளாவிட்டால் அபதாரம் வசூலிப்பார்களாம். யாரும் சட்டை செய்யவில்லை.

படத்தில்: தனுஷ்கோடியில் பூஜை செய்த அத்தி ஆஞ்சனேயர் கோவில் அக்னி தீர்த்தம் போகும் வழியில்...

வாத்தியார் அங்கே மற்றவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு போய்விட்டார். அவர் அங்கே சங்கல்பாதிகள் செய்து வைத்து விட்டு எங்களை தீர்த்தங்களில் ஸ்நாநம் செய்து வைக்க இன்னொருவரிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு போய்விட்டார். அக்னி தீர்த்தம் என்பது இப்போதைய கடல் எல்லைக்கு உள்ளேஏஏஏ இருந்ததாகவும் கடல் உள்ளே வந்துவிட்டதால் அதையே அக்னி தீர்த்தம் என்பதாகவும் சொல்கிறார்கள். புதிய வாத்தியார் எங்க்ளை அழைத்துப்போய் ஒவ்வொரு தீர்த்தமாக நீர் முகர்ந்து எங்களுக்கு அபிஷேகம் செய்தார். எல்லா ஸ்நானமும் முடிந்து வாத்தியாரின் வீட்டுக்குப்போனோம். மணி ஒண்ணரையோ என்னவோ. சில ப்ராம்ஹணர்கள் காத்திருந்தார்கள். மாத்யான்ஹிகம் முடித்து என்னப்பா என்றால் இன்னும் ரெண்டு பேர் வரணும் என்றார்கள்.

அன்றைக்கு ஷன்னவதி ஶ்ராத்த நாள். நான் அப்போது அவற்றை தர்ப்பணமாக செய்ய ஆரம்பித்து இருந்தேன். ஆகவே அதை செய்து விட்டு பார்த்தால் இன்னும் அந்த 2 பேரை காணவில்லை. ஒருவர் ஆரம்பத்தில் இருந்து எப்போ ஆரம்பிக்கப்போறோம் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். இதோ இதோ என்று போக்கு காட்டிக்கொண்டே இருந்தார் வாத்தியார்.

ஹிரண்ய ஶ்ராத்தம் என்பதால் முதலில் பிண்ட ப்ரதானம் முடித்தோம். அந்த ரெண்டு பேரை இன்னும் காணவில்லை. ஒருவர் தர்ப்பணம் பண்ணிக்கொண்டு இருக்கேன்; தோ வரேன் என்றார். அந்த நேரம் அந்த இன்னொருவர் வந்து சேர்ந்தார். ஆரம்பிக்கப் போறோமா என்று கேட்டால் 'இல்லை, அந்த இன்னோருத்தர் வரட்டும், எனக்காக கொஞ்சம் காத்திருங்க' என்றார் வாத்தியார்.

இவ்வளவு நேரம் காத்திருந்த அந்த ப்ராம்ஹணருக்கு கோபம் வந்துவிட்டது. வெளியே போய் தன் வண்டியை எடுத்துக்கொண்டு போயே விட்டார்! என்னப்பாது என்றாலும் ஒண்ணும் செய்ய முடியாது என்றார் வாத்தியார்

 இன்னும் காத்திருந்து காத்திருந்து .... என்னப்பா மணி ரெண்டரை ஆகிறது; இவ்வளவு லேட்டாக செய்யக்கூடாது என்றே இருக்கே? என்று நான் கேட்க ஒரு வழியாக இரண்டு கூர்ச்சங்கள் போட்டு ஆரம்பித்தார். இதை முதலிலேயே செய்திருக்கலாம்.

வஸ்த்ரங்கள் உட்பட்ட உபசாரங்கள் ஆரம்பித்து நடக்கும்போது அந்த ப்ராம்ஹணர் வந்து சேர்ந்தார். வாத்தியார் சொன்னபடி அவர் சார்பாக போட்ட கூர்ச்சத்தை எடுத்து அவரிடன் கொடுத்தேன். கோபித்துக்கொண்டு போய்விட்ட ப்ராம்ஹணர் ஸ்தானத்தில் வாத்தியாரே உட்கார்ந்துவிட்டார். பித்ரு வர்க்கம், மாதா வர்க்கம், சபத்னீக மாதாமஹ வர்க்கம், காருண்ய பித்ரு, ஶ்ராத்த சம்ரக்‌ஷக மஹா விஷ்ணு என ஒருவர் - இப்படியாக ப்ராம்ஹணர்கள். பார்வண ஶ்ராத்தத்தை பார்க்கில் குறைந்த உபசாரங்கள் என்றாலும் நிறைய பேர் இருப்பதால் கூடுதல் நேரம் ஆகிவிடுகிறது. அவர்கள் சாப்பிட்டு முடித்து உபசாரங்கள் செய்து வழியனுப்பி விட்டு நாங்கள் சாப்பிட உட்காரும்போது மணி 4.

சர்க்கரை வியாதி இருக்கிற மனுஷன் என்ன செய்வது? காலை ஒரு கஞ்சி, பின் ஒரு காபி தவிர ஒன்றுமில்லை. காலையில் மருந்து சாப்டாமல் தவிர்த்துவிட்டேன். சாப்பிட்ட பின் காலை மதியம் டோஸ் இரண்டைஉ ஒன்றாக போட்டுக்கொண்டு இரவு தவிர்த்துவிட்டேன். 4 மணிக்கு சாப்பிட்டு விட்டு இரவு என்னத்தை சாப்பிட? பால் மட்டும் குடித்தேன் என்று நினைக்கிறேன்.

செம வெயில். வேணி மாதவரை உலர்த்தி துணியில் முடிந்து வைத்துவிட்டேன். ஊருக்குப்போனதும் பித்தலை சம்புடம் வாங்கி அதில் வைத்துக்கொள்ள சொன்னார்கள்.

முந்தைய நாள் மாலை ஔபாசனம் செய்ய முடியாமல் விச்சின்னம் ஆகிவிட்டது. காலை முதலில் அதை புதுப்பித்துக்கொண்டேன். தொடர்ந்து வைத்துக்கொள்வது சிரமம் என்பதால் ஸமித்தில் ஆரோபணம் செய்து பயன்படுத்தினேன்.

ஜன்னலை சாத்தினால் புழுக்கம் திறந்தால் பூச்சிக்கடி என்று இருந்தாலும் அயற்ந்து தூங்கிப்போனேன்.

இப்படியாக முதல் நாள் கர்மா நடந்து முடிந்தது.


No comments: