இப்படியாக முதல் நாள் கர்மா நடந்து முடிந்தது.
அடுத்த நாள் காலை வழக்கம் போல எழுந்திருக்க முடிந்தது. ப்ராணக்ரியா முடித்து காலை அனுஷ்டானங்களை முடித்தேன். அடுத்த வீட்டில் இருந்து அருமையான காபி கிடைத்தது. மனைவியும் மருமகளும் சமையலுக்கு தேவையானவற்றை கோசாலைக்கு நகர்த்தி வாங்கிக்கொண்டு அங்கே போய்விட்டனர். இன்று பார்வண ஶ்ராத்தம் மட்டுமே முக்கிய கர்மா என்பதால் பிரச்சினை இல்லை. வழக்கம் போல் 9 மணிக்கு ஹவிஸ் வைக்கப்போனேன். அடுப்பு இருந்தது; ஆனால் எரிக்க விறகுதான் இல்லை. இந்தாங்க என்று அவர்கள் காட்டியது நிச்சயம் போதாது என்று தோன்றியது. வீட்டில் மாசிகம் போன்றவற்றுக்கு வைத்த அளவு நிச்சயம் போதாது, பிண்டங்களே அதிகம். (தீர்த்த ஶ்ராத்தம் குறித்த பதிவில் எழுதி இருக்கிறேன். ) ஸ்வதேயம் என்று வைக்க பித்ருக்கள் அதிகம். முன் காலத்தில் வீடுகளில் சாதம் வைக்கும் வெங்கலப்பானையைத்தான் எடுத்து வந்திருந்தோம்.
தர்ம பத்னி சமையலுக்கு மாமி யாரேனும் தேவை என்று சொல்லி வைத்து இருந்தாலும் யாரும் கிடைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். ராமேஸ்வரத்தில் பார்வண ஶ்ராத்தம் செய்ய விரும்புவோர் செலவை பார்க்காமல் உங்கள் இடத்தில் இருந்தே யாரையாவது அழைத்துப்போவதே நல்லது. கோசாலை உரிமையாளரின் மனைவி உதவுவார் என்று சொன்னார்கள். அப்படி ஒன்றும் உதவிகரமாக இல்லை. அவருக்கு ஏக வேலைகள். அவர் வந்து இங்கே நாங்கள் கரி போட்டு கும்முட்டி அடுப்புதான் பயன்படுத்துகிறோம் என்று சொல்லி வைத்துக்கொடுத்துவிட்டு போய்விட்டார். எனக்கு அது பழக்கமில்லை. விசிறி கேஎட்டால் ரீசார்ஜ் செய்யும் யூஎஸ்பி மின்விசிறி ஒன்றை கொடுத்தனுப்பினார்கள். விளைவு நல்லதாக இல்லை. நேரம் எடுத்துக்கொண்டாலும் ஒரு வழியாக அது ஆகிவிட்டது. அடுப்பு பிடித்துக்கொண்டால் போது; நீங்கள் பாட்டுக்கு நகரலாம், அது தானாக ஆகிவிடும் என்றார்கள். எங்கே நகர?
பெரிய ஸ்டீல் பெஞ்ச் ஒன்றை சமைக்க கொடுத்தார்கள். அது பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. மெனக்கெட்டு கடலூரில் இருந்து கொண்டு போன பலாப்பழத்தை (! ஹும்! ) வாத்தியாரின் உதவியாளர் பாதி அரிந்து சுளைகளை எடுத்து வைத்தார். காக்காய்கள் நேரம் பார்த்து லவட்டிக்கொண்டு போயின! “ப்ரீபெய்ட் சர்வீஸ் தானாக எடுத்துக்கொள்கின்றன. மீதி பாதியை அரிந்து சுளைகளை பத்திரப்படுத்துங்கள்” என்றேன்.
நானும் பையரும் எல்லாருக்குமாக வஸ்திரங்களை நனைத்து உலர்த்தினோம். அடித்த வெய்யிலில் காய்வது பிரச்சினையாக இல்லை.
இன்று முன்னாலிருந்து கூப்பிட்டு கூப்பிட்டு ப்ராம்ஹனர்களை சேர்த்துவிட்டார்கள்.
விசாலமான இடமாதலால் சௌகரியமாக எல்லாவற்றையும் செய்ய முடிந்தது. நடுவில் வாத்தியார் ஏதோ தப்பாக சொல்லப்போக பிராமணராக உட்கார்ந்திருந்தவர் அதை சரியாக சொல்ல ஆரம்பித்து நாக்கை கடித்துக்கொண்டு பேசாமல் இருந்தார். ஆனால் நான் அதை பார்த்து விட்டதால் ஏதோ தப்பு நடந்தது என்று தெரிந்து கொண்டேன். சரி செய்து கொண்டேன்.
காரணம் காரணம் வாத்தியார் தப்பு செய்வதற்கு காரணம் இருந்தது. அவர் மார்பில் ஒரு பெரிய கட்டி ஏறக்குறைய பழுக்கும் நிலையில் இருந்தது. அதுபற்றி அவர் என் தர்மபத்தினி இடம் சொல்லி இருந்திருக்கிறார். அவரும் மாத்திரை சொல்லி அதை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். நன்றாக பழுத்த நிலையில் இருந்ததால் வலி அதிகமாக தெரிந்திருக்க வேண்டும். இந்த கட்டிகளை ஆரம்ப நிலையில் கவனிக்காது போனால் பிரச்சினைதான். பழுத்துவிட்டால் வெட்டி வெளியே சீழ் வர வழி செய்தே ஆகவேண்டும்.
காக்காவுக்கு வாயச பிண்டம் வைப்பதற்கு இடம் கேட்டால் பக்கத்தில் இருந்த தோட்டத்தில் நட்ட நடுவில் இருந்த கருங்கல் தூணை காட்டினார்கள். சுவற்றின் மேல் வைத்து விடலாம் என்று சொன்னதை ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு மணி வெய்யிலிலே ஒரு காக்காவும் கருங்கல் மீது உட்காராது என்று தெரியும். அது உட்கார நினைத்தால்கூட ஒத்தைக் காலில் தான் உட்கார வேண்டும்!
ஒருவழியாக
பிராமணர்கள் சாப்பிட்டு
முடித்ததும் உபசாரங்களை
முடித்து அடுத்து தனுஷ்கோடியில்
வசித்த மண்ணை பாகம் செய்தோம்.
No comments:
Post a Comment