ஒருவழியாக பிராமணர்கள் சாப்பிட்டு முடித்ததும் உபசாரங்களை முடித்து அடுத்து தனுஷ்கோடியில் எடுத்த மண்ணை பாகம் செய்தோம். சேது மாதவர் பிந்து மாதவர் வேணி மாதவர் என்று பிரித்து எல்லோருக்கும் பூஜை செய்து பிந்து மாதவரை வாத்தியாரிடம் கொடுத்துவிட்டேன். சேது மாதவரை கடலில் கரைக்க சொல்லி அவர் என் பிள்ளையிடம் கொடுத்துவிட்டார். வேணி மாதவரை கொண்டுபோய் உலர்த்தி வைத்துக்கொள்ள சொன்னார். நீங்கள் சாப்பிட்டு வாருங்கள் நான் போய் படுக்கிறேன் என்று படுக்கப் போய்விட்டார். பாவம். நாங்கள் சாப்பிட்டு முடித்து மணி 2 போல் ஆகிவிட்டது என்பதால் அவரை எழுப்பி தானங்களை ஆரம்பித்தோம். முந்தைய நாள் தீர்த்த ஸ்நானம் செய்த ஒவ்வொன்றுக்கும் சாத்குண்யமாக ஒவ்வொரு தீர்த்தத்துக்கு ஒவ்வொரு விஷயம் தானம் சொல்லியிருக்கிறது. அதன் பட்டியல் பின்வருமாறு:
அக்னி தீர்த்தம் - ஜல பாத்திரம்
மஹாலக்ஷ்மி தீர்த்தம் - முத்து மாலை
சாவித்ரி, காயத்ரி, ஸரஸ்வதி தீர்த்தங்கள் - சந்தனம் மஞ்சள் குங்குமம்
ஶங்க தீர்த்தம் - ஶங்கு
சக்ர தீர்த்தம் - பவள மாலை
சேது மாதவ தீர்த்தம் -ஶாலக்ராமம்
நள, நீல, கவ, கவாக்ஷ, கந்தமான தீர்த்தங்கள் - தக்ஷிணை
ப்ரம்ஹஹத்தி விமோசன தீர்த்தம் - தில பூரித (எள் நிரப்பிய) பாத்திரம்
சாத்யாம்ருத தீர்த்தம் - நெய் நிரப்பிய வெண்கல பாத்திரம்
ஸர்வ தீர்த்தம் -அன்ன தானம்
ஶிவ தீர்த்தம் - ஶிவலிங்கம்
கங்கா தீர்த்தம் -சந்தனம் நிரப்பிய வெள்ளி பாத்திரம்
யமுனா தீர்த்தம் - துகூல வஸ்த்ரம் (நீலம் அல்லது சிவப்பு வஸ்த்ரம்)
கயா தீர்த்தம் -தேன் நிரப்பிய வெண்கல பாத்திரம்
ஸூர்ய, சந்த்ர தீர்த்தங்கள் - நவக்ரஹ தான்யங்கள்
கோடி தீர்த்தம் - பாதுகை
தனுஷ் கோடி தீர்த்தம் - தங்கம்
இப்படியாக தானங்களை செய்து முடித்தோம். சிலதுக்கு பிரதிநிதியாக தக்ஷிணை கொடுத்தோம். பையர் போய் கடலில் போட வேண்டியவைகளை போட்டு விட்டு வந்தார். பித்ரு சேஷம் முதலியவற்றை அப்படி செய்ய சொல்லி இருக்கிறது.
ஒருவழியாக ராமேஸ்வரம் யாத்திரை பூர்த்தி ஆயிற்று. உடம்பு முடியாமல் போய் படுத்துக் கொண்டேன். பையரும் நாட்டுப்பெண்ணும் 4 மணி போல ரயில் ஏறி அவர்கள் ஊர் நோக்கி போய்விட்டனர். நாங்கள் இரவு 8 மணி போல் ரயில் ஏறி அதிகாலை 4 மணிக்கு விழுப்புரம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து காரில் வீட்டுக்கு.
முதல் கட்டம் முடிந்தது.
No comments:
Post a Comment