Pages

Tuesday, March 31, 2009

பஞ்ச கோசங்கள் நான் இல்லையானால் நான் யார்?



பின்ன? பஞ்ச கோசங்கள் நான் இல்லையானால் நான் யார்? இந்த அஞ்சு உறையையும் விட்டு வெளியே வாப்பா! யார் நீன்னு உனக்கே புரியும். சொல்லி தெரிகிற சமாசாரம் இல்லை இது!

எப்பவும் இருக்கிறது, அறிவாக இருக்கிறது, ஆனந்தமா இருக்கிறது. விருப்பு வெறுப்பு போல ரெட்டைகளை கடந்து எப்பவும் சமமா இருக்கிறது, யாரும் எதுவும் அசைக்க முடியாம ஸ்திரமா இருக்கிறது, நடக்கிறதா மத்தவங்க சொல்கிற விஷயங்களுக்கு வெறும் சாட்சியா இருக்கிறது, உன்னைத்தவிர வேறு யாரும் இல்லாம நீ மட்டுமே இருக்கிறது, அழிவே இல்லாம இருக்கிறது - இப்படிப்பட்ட ஆன்மாதான்பா நீ! சடமாயும் அறிவில்லாமலும் துக்கம் நிறைந்ததுமா இருக்கிற இந்த அஞ்சு உறைகளையும் விட்டு நீ வெளியே வந்த உனக்கு இது புரியும்.

69.
சத்தொடு சித்தாநந்தஞ் சமந்திரஞ் சாட்சியேகம்
நித்தியம் வியாபியான்மா நீயதுவா வறிந்து
பொத்தொடு சடந்துக்காதி பொருந்து பேதங்களான
குத்திர பஞ்ச கோசக் குகைவிட்டு வெளியிலாவாய்.

சத்தொடு சித்தாநந்தம் (சச்சிதானந்தமாய்) சமமாய், திரமாய், சாட்சியாய், ஏகமாய், நித்தியமாய் வியாபி[க்கும்] ஆன்மா நீ அதுவாக அறிந்து பொத்தொடு (பொய்யான) சட துக்காதி (துக்க முதலியதாய்) பொருந்து[கின்ற] பேதங்களான (ஆன்ம சுபாவத்துக்கு அன்னிய சுபாவங்களை உடையனவான) குத்திர (வஞ்சகமான) பஞ்ச கோசக் குகை விட்டு (பஞ்ச கோசங்களாகிய குகைகளில் ஆன்ம புத்தியை ஒழித்து) வெளியிலாவாய்.

PG
வந்தெனுடல் பொருளாவி மூன்றுந் தன்கை
வசமெனவே அத்துவா மார்க்க நோக்கி
ஐந்துபுலன் ஐம்பூதங் கரண மாதி
அடுத்தகுணம் அத்தனையும் அல்லை அல்லை
இந்தவுடல் அறிவறியா மையுநீ யல்லை

தாயுமானவர் -14. ஆகாரபுவனம் - சிதம்பர ரகசியம் -18

மூலவுடல் நீயல்ல என்று போனால் முரண் மேவும் அறிவு அறியாமைகள்தான் ஏது
மூலவுடல் நீயல்ல என்று போனால் முரண் பிரிய மோத பிரமோதமேது
மூலவுடல் நீயல்ல என்று போனால் முரண் மூட சட சூனியந்தாம் ஏது
மூலவுடல் நீயல்ல என்று போனால் முரண் ஆதிக்கு உயர் சாக்ஷி நீயாம் காணே - பரமானந்த தீபம்
(முதல் வரி மனோ மய கோசத்தையும் இரண்டாவது ஆனந்த மய கோசத்தையும் மூன்றாவது கோசங்கள் நீங்க பாழை பார்ப்பதையும் குறிக்கின்றன. சரிதானே)

கோசம் ஐந்தும் ஒவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்
குறித்தறியில் அன்னியமாய் இருக்கையாலே
கோசம் ஐந்தும் ஒவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்
குறித்தறியில் விக்ஷேபம் ஈன்றதாகும்
கோசம் ஐந்தும் ஒவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்
குறித்தறியில் நீ அறிவாய் அது நீ அல்ல
கோசம் ஐந்தும் ஒவ்வொன்றாய்ப் பிரித்து வேறாய்
குறித்தறியும் உயர் சாக்ஷி நீயாம் காணே - -பரமானந்த தீபம்

பஞ்ச கோசத்தை பகுத்தறிந்தோருக்கு
நெஞ்ச மிறந்ததென் றுந்தீ பற
நிட்டைய தாகு மென் றுந்தீ பற – திருவுந்தியார்.



உடம்பு



ஆன்மா அழியாதது; அறிவே வடிவமானது; எப்பவும் ஆனந்தமா இருக்கிறது.

ஆனா அன்ன கோசமான இந்த ஸ்தூல உடம்பு பஞ்சீகிருதம் பண்ண பஞ்ச மகா பூதங்களிலேந்து வந்தது. என்னிக்காவது ஒரு நாள் அழிஞ்சே தீரும். அதனால அநித்தியம். மேலும் சடம். அதுக்கா ஒண்ணும் தெரியாது. ஆன்மா இருந்தாதான் அதால எதுவும் செய்ய முடியும். செத்து போன பிறகு ஆன்மா அந்த உடம்பை விட்டு போயிடும். அப்ப அதுக்கு ஒண்ணும் தெரியலை இல்லையா? ஒத்தர் இறந்த பிறகு ¨அப்பா எங்களை விட்டு போயிட்டியே¨ ன்னு அழலை? உடம்பு அங்கேயேதானே இருக்கு? அப்ப போய்விட்டது நாம், உடம்பு இல்லை. அதனால நாம் உடம்பு இல்லை. இந்த நாம் உடம்பை விட்டு போய் வேற உடம்பு எடுப்போம். ஒரு நாள் அதுவும் போய் இன்னொரு உடம்பு. இப்படி உடம்புகள் போகப்போக வேற உடம்பு கணக்கில்லாத வந்துண்டே இருக்கும்!

இதை என் உடம்பு ன்னு சொல்கிறப்பவே உடம்பு நானில்லைன்னு புரிஞ்சுடுத்து. குடத்தை பார்க்கிறவன் இருக்கும்போது அவன் குடம் ஆகமாட்டான் என்பது போலே தேகத்தை காண்கிறவன் தேகமாக ஆகமாட்டான்.

உடம்பு நானில்லை சரி, ஆனா உடம்பு என்னுதுதானா? :-))

அப்படி சொல்கிறது வியவகார சத்தியம்.
மண்ணிலேந்து வந்தது மண்ணுக்கே என்கிறபடி....
உடம்புக்கு சாத்திரங்கள் படி அக்னியோ பூமியோதான் சொந்தக்காரன். கொஞ்ச நாளுக்கு நம்ம இச்சையிலே விட்டு வெச்சு இருக்கு. உயிர் பிரிந்ததும் குல வழக்கப்படி புதைக்க அல்லது பெரும்பாலும் அக்னியில் எரிக்கத்தான் வேண்டும். இதனாலேயே உடல் உறுப்புகளை தானம் செய்கிறது சாத்திர சம்மதமில்லை.

தயானந்த சரஸ்வதிகள் சிரிச்சுண்டே தமாஷ் பண்ணுவார். இந்த உடம்பு என்னுதுன்னு நினைக்கிறோம். ஆனா இதிலே நாம மட்டும் இல்லையே? கோடானு கோடி பாக்டீரியாக்கள் இருக்கு. குடல் புழுக்கள், அமீபா.... அமீபாக்கள் சொல்கிறனவாம், ¨எத்தனை தலை முறை தலை முறையா நாங்க இங்கேயே இருக்கோம்! இந்த உடம்பு எங்களுக்கு சொந்தம்! ¨ :-))

மீதி 4 கோசங்களிலே பிராண, மனோ, விஞ்ஞான கோசங்கள் ஆன்மா அவ்வப்போது பிராணங்கள், அந்தக்கரணங்களோட கூடி நிற்கிற நிலைமைதான்.

அந்தக்கரணமோ சூக்ஷ்ம பூத சத்வ குண சமஷ்டி. அது நம் தினசரி வாழ்க்கையிலே தூங்குகிற போது இல்லாமலும் போகும். அப்ப அநித்தியம்தானே? பூரண அறிவோட பிரகாசம் இல்லாம இவற்றுக்கு ஒண்ணும் தெரியாது. அதனால இவை சடமே! மனதோட செயல்களும் புத்தியோட செயல்களும் பல சமயம் துக்கத்தை கொடுக்கின்றன.
ஆக இவையும் ஆன்மா ஆகாது.
ஆன்மாவால அறியப்படுகிற எதுவும் ஆன்மா ஆகாது.

கண்டனவல்ல வன்றே கழித்திடும் இறுதிக்கண்ணே
கொண்டது பரமானந்தக் கோதிலா முத்தியதால்....

உள்ளது மில்லது மாய்முன் - உற்ற
உணர்வது வாயுன் னுளங்கண்ட தெல்லாந்
தள்ளெனச் சொல்லிஎன் ஐயன் - என்னைத்
தானாக்கிக் கொண்ட சமர்த்தைப்பார் தோழி - சங்கர 8.

பாராதி பூதநீ யல்லை-உன்னிப்
பாரிந் திரியங் கரணநீ யல்லை
ஆராய் உணர்வுநீ என்றான் -ஐயன்
அன்பாய் உரைத்த சொல் லானந்தந் தோழி - சங்கர 9.
(தாயுமானவர்: 56. ஆனந்தக்களிப்பு)

இந்த அந்தக்கரணத்தை நாம அறிஞ்சு நீக்கணும். என் மனம் என் புத்தி என் சித்தம் ன்னு சொல்கிறதாலே இவை வேறதானே?

அந்தக் கரண மறிந்து துறப்பார்க்குப்
பந்த மிறந்ததென் றுந்தீபற
பாழ்வெளி யுள்ளதென் றுந்தீபற

மீதி இருக்கிறது ஆனந்தமய கோசம். அது காரண சரீரம். அனுபவத்தில அது தூக்கம். ஆழ் தூக்கத்திலே கருவி கரணங்கள் எல்லாம் அடங்கி ஆன்மா அவித்தையான அந்தகாரத்திலே அமிழ்ந்து கிடக்கும். (ignorence is bliss?) எப்படி ஆன்மா ஸ்தூல சூக்ஷ்ம உடல்களோட சம்பந்தப்பட்டு ஜாக்ரத், ஸ்வப்பன (கனவு) நிலைகளை அனுபவிக்கிறதோ அப்படி காரண உடலோட சம்பந்தப்பட்டு சுசுப்தி யை அனுபவிக்கும். இந்த சுசுப்தியே ஆனந்த கோசம். ஆக இதுவும் நாமில்லை.



Monday, March 30, 2009

இந்த உடம்பு நானா?



முதலிலேஇந்த உடம்பு (அன்ன மய கோசம்) நானா?”ன்னு கேக்கணும்.
இல்லை அது ப்ரம்மத்தின் நிழலில் உள்ள வெறும் பஞ்சீகிருதம் செஞ்ச தமோ குண ஐம்பூதங்களால ஆனது ன்னு புரியும். (அப்பாடா! சுலபமா ஸ்தூல பஞ்ச பூதங்களால ன்னு சொல்லி இருக்கலாமோ?) அப்ப நான் அது இல்லை. இந்த உடம்பு பிணமாகி ஒரு நாள் அழிஞ்சு போயிடும்.

சரி, பிராண சக்திகள் இந்த உடம்பில ஓடுகிறதாலதானே நான் இருக்கேன்? (ப்ராண மய கோசம்) அப்ப அதான் நானா? இல்லை. அது ப்ரம்மத்தின் நிழலில் உள்ள ராஜச குண சமஷ்டியா இருக்கிறது. அதனால அதுவும் நான் இல்லை.

மனசே நான். நான் நினைக்கிறேன். அதனால நான் இருக்கிறேன் ன்னு ஒருத்தர் சொன்னார். ஆனால் ஆராய்ஞ்சு பாத்தா நமக்கு தெரியும்- மனசு, புத்தி இப்படி இருக்கிறதெல்லாம் (மனோ மய கோசம், விஞ்ஞான மய கோசம்) அந்தக்கரணம்தான். அது ப்ரம்மத்தின் நிழலில் உள்ள சூக்ஷ்ம பூத சத்வ குண சமஷ்டி.

ஆஹா! புரிஞ்சு போச்சு! மீதி இருக்கிறது ஆனந்த மய கோசம் ஒண்ணுதான். அதான் நான்! இல்லை, அதுவும் இல்லை!
அது அவித்தை அல்லது அஞ்ஞானமாகிய தமோ குணம்.
என்னப்பா இது எல்லாத்தையுமே இல்லை இல்லைனா என்ன பண்ணறது?

67.
வாச்சியார்த்தத்தை நீக்குவது எப்படி:

பிறிவதெப்படியென்றக்காற் பிணமாகுமுடனானென்னும்
அறிவினைக் கொல்லல் வேண்டு மைம்பூத விகாரமன்றோ
வெறியதோர் துருத்தி மூக்கின் விடுவது போலுன் மூக்கால்
எறிபிரா ணனுநீ யல்லை யிராசதகுணவி காரம்.

பிறிவதெப்படி என்றக்கால் (வாச்சியார்த்தத்தில் நின்று நான் வேறுபடுவது எப்படி என்றால்) பிணமாகும் உடல் (அன்னமய கோசத்தை) நான் என்னும் (பிராந்தி) அறிவினைக் கொல்லல் வேண்டும். [ஏனென்னில் அது] ஐம் பூத விகாரம் (பஞ்சீ கிருதம் செய்யப்பட்ட பஞ்ச பூதங்களால் ஆனது) அன்றோ. வெறியது (வெறுமையான) ஓர் துருத்தி மூக்கின் விடுவது போல் உன் மூக்கால் எறி[யும்] பிராணனும் (பிராணமய கோசம்) நீ அல்ல. [அது பஞ்சீ கிருதம் செய்யப்படாத பூதங்களின்] இராசத குண விகாரம். (காரியம்)

68
கரணமா மனது புத்தி கருத்தாவா மவையான் மாவோ
தரமுள விரண்டு கோசஞ் சத்துவ குணவி காரம்
வரமறு துயிலா னந்த மயனையு நானென் னாதே
விரவிய தமவஞ் ஞான விருத்தியின் விகார மாமே

கரணமா[கிய] மனது, கருத்தாவாம் (கர்த்தா = செய்பவன் ஆகிய) புத்தி அவை ஆன்மாவோ? தரமுள இரண்டு கோசம் (சங்கற்ப ரூபம், நிச்சய ரூபம் என தாரதம்மியம் உள்ள மனோமய, விஞ்ஞானமய கோசங்கள்) சத்துவ குண விகாரம்.
வரமறு (உயர்வில்லாத) துயில் ஆனந்த மயனையும் (சுழுத்தியில் உள்ள ஆனந்த மயனையும்) நான் என்னாதே. விரவிய (பொருந்திய) தம (தமோ ரூபமான) அஞ்ஞான விருத்தியின் விகாரமாமே.
(ஆக 5 கோசங்களையும் ஆன்மா அல்ல என நிராகரித்தார்.)

ஆன்மா அழியாதது; அறிவே வடிவமானது; எப்பவும் ஆனந்தமா இருக்கிறது.



Friday, March 27, 2009

ஈசன் - ஜீவன்


அப்ப ஆனந்தமே பிரம்மம்!
இப்படி ஒவ்வொண்ணா விசாரிச்சு இதுவே பிரம்மம்ன்னு முடிவுக்கு வருவதற்கு பார்கவீ வாருணீ வித்யைன்னு பெயர்.
இது தைத்திரீய உபநிஷத்திலே வருகிறது.
.....
இங்கே கூட விசாரம் பூர்த்தி ஆகலை.
பிரம்மத்தை அறியறதுல இது ஒரு படிதான். ப்ரம்மத்தை இதுதான்னு அறுதியிட்டு சொல்ல முடியாது. அது மனசையும் வாக்கையும் கடந்தது! ¨யதோ வாசோ நிவர்த்தந்தே; அப்ராப்ய மனசா சஹ¨ என்கிறது இதே உபநிஷத்.மனசும் வார்த்தைகளும் பிரம்மத்தை எட்டப்போய் முடியாமல் திரும்பிடறதாம்!

சரி நம்ம கேசுக்கு வரலாம்.
பிரம்மம் எதுன்னு தெரியாட்டாலும் எது இல்லைன்னு புரிஞ்சுக்கலாம்.

ஜீவனும் ஈசனும் மாய சம்பந்தமுடையவர்கள்.
ஈசன் சத்வ குண மாயை.
ஜீவன் ரஜோ குண மாயை. அதாவது அசுத்த மாயை.
ஈசன் மாயையை தன் வசப்படுத்தினவன். ஜீவன் மாயை வசப்பட்டவன். இரண்டு பேரும் மாயா சம்பந்தம் உடையவர்களே! ஈசனுக்கும் ஜீவனுக்கும் என்ன ஏணி வெச்சாலும் எட்ட முடியாது! அதாவது என்ன ஆன்ம முன்னேற்றம் கண்டாலும் ஈசனுக்கு ஜீவன் சமமா ஆக முடியாது. ஒப்பிடவே முடியாது! ஈசனுடைய சர்வத்துவம் கிட்ட அணுகக்கூட ஜீவனால் முடியாது!
ஜீவன் பிண்டத்திலே இருக்கன். ஈசன் அண்டத்திலே!
ஜீவன் காரிய உபாதி ஈசன் காரண உபாதி! (அதாவது ஈசன்தான் பிறப்பிக்கிறான்; உண்டாக்குபவன். சீவன் பிறக்கிறான்; உண்டாகிறவன்.)
ஜீவன் வியக்தி தேகம் உள்ளவன். ஈசன் சமஷ்டி தேகம் உள்ளவன்.
ஜீவன் அற்ப ஞானம் உள்ளவன். ஈசன் சர்வஞ்ஞன். எல்லாம் தெரியும்!

ஆனால் கூடஸ்தனும் பிரம்மமும் மாயா சம்பந்தமில்லாதவை. பாலில் இருக்கிற நெய் போல கலந்தே இருக்கும்.
நாம் அஞ்ஞானிகளாக இருப்பதால ஜீவனும் ஜீவ சாட்சியான கூடஸ்தனும் ஒண்ணேன்னு நினைக்கிறோம். அதனாலதான் மத்தால கடைஞ்சு நெய்யை தனியா எடுக்கிறாப் போல விவேகமாகிய மத்தால கடைஞ்சு உன்னை சீவ சாட்சியேன்னு அறிஞ்சு கொள்ன்னு ஆசிரியர் சொன்னார்.

திருமுறை 5. பதிகம் : 090 பொது: பாடல் எண் : 10

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

பொழிப்புரை:

விறகில் தீப்போலவும். பாலிற்பொருந்திய நெய்போலவும், மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான்.
அப்பர் சொன்னது!

மாயையான மனசோட இருக்கிறோம். ஆதனால சீவனா இருக்கோம். அது நம்மோட உண்மையா நிலை இல்லை. மனசை எப்போ அழிச்சு அல்லது பிரிஞ்சு மனசோட சேட்டைகளை பாக்கிறோமோ அப்ப கூடஸ்தனா இருப்போம். அதுவே நம்மோட உண்மையா சொரூபம். இதை பார்க்க கத்துக்கொண்டா நமக்குள்ள மறைஞ்சு இருக்கிற பரமாத்ம சொரூபம் தெரியும். அதை உணர முடியும்.

இது என்னவோ ரொம்ப கஷ்டம்ன்னு தோணினாலும் உண்மையில் அவ்வளவு கஷ்டமில்லை.
ஒரு இடத்தில சௌகரியம் போல உக்காருங்க. ஆழந்த மூச்சு எடுத்து விடுங்க - நாலஞ்சு தரம்.
இப்ப மனசை கவனியுங்க! அது என்ன நினைக்குது? எங்கே போகுது? எங்கிருந்து வந்தது? வேடிக்கை பாருங்க.
மனசு கொஞ்ச கொஞ்சமா நின்னுடும்!

அட! இவ்வளோ சுலபம்னா ஏன் நிறைய ஞானிகள் இல்லை?
ஏன்னா நம்மாலே இதை அப்படியே நிறுத்த முடியாது. மனசு கொஞ்ச கொஞ்சமா நின்னுடும்- அப்படி சொன்னேன் இல்லையா? இப்ப ¨அட! மனசு நின்னுடுச்சு¨ன்னு ஒரு எண்ணம் வரும்!
நம்மையே அறியாம இன்னொரு எண்ணம் கிளர்ந்து மனசை ஆக்கிரமிச்சுடும்! இல்லை, எந்த எண்ணத்தை பாத்தோமோ அதை தொடர்ந்தே இன்னொன்னு வந்துடும். வேடிக்கை பாக்கிறதே இன்னொரு எண்ணத்தை தோற்றுவிக்கும். அதான் வாசனைகளோட சக்தி! விலகி நின்னு நெடு நேரம் மனசை பாக்கிறதை ரொம்ப நாள் பயிற்சிக்கு அப்புறம் செய்ய முடியுமோ என்னவோ!
ஆனா ஒண்ணு. இதை பண்ணிப்பாத்தா மனசு வேற நாம் வேறன்னு புரிஞ்சுடும்!

இந்த தத்வமஸி என்கிற மஹா வாக்கியத்தை சரியா புரிஞ்சுக்கணும்.
இது நீயே கடவுள் ன்னு சொல்லலை. (சமீப சினிமா ஒண்ணுக்கு பெயரிலே அப்படி அர்த்தம் பண்ணி போட்டு இருக்காங்க; அஹம் பிரம்மாஸ்மி- நான் கடவுள்).

சரியான பொருள் என்ன?

¨நீ பிரம்மத்தின் ஒரு அம்சமே. பிரம்மத்தைப்போல சத் சித் ஆனந்தம் உள்ளவனே! அதாவது ஒரே இனமே. ஆகயால் நான் பிரம்மமே என்ர திடமான சித்த்தோட அந்த பரம் பொருளிலே கலந்து நான் என்கிற நினைப்பை நீக்கினால் அந்த அகண்டமான சொரூபம் உன்னை தன் வயப்படுத்திக்கும். அதாவது தானாக்கிக்கும். நீயும் பிரம்மமா ஆவாய்.¨

இந்த ¨நான்¨ ஒழிந்து எப்போ நான் பிரம்மம் ன்னு திடசித்தம் வருமோ அது வரை முக்தி இல்லை.
PG:
தானே சிவன்சிவனை நானென்று நாடி வெறுந்
தானாகி நின்றநிலை தானன்றோ- வானாப்
பவசலதி நீந்திவரும் பண்புடைய மாணா
சிவலோக மென்றே தெளி
(உபதேச மாலை- சிவயோகம்)

சிவத்தோ மசியுண்ணி னைந்துசிவ யோகநிட்டை
சவுக்கியதா னத்தேறித் தான் (சித்தாந்த தரிசனம்- சிவ யோகவியல்)
சிவம் தோம் அசி (நீ சிவமாய் இருக்கிறாய்) உள் நினைந்து சிவ யோகநிட்டை....

சீவனத்தால் சீவனென்னல் சீலகிறந்தாலிந்தச் சீவனே யந்த சிவம்
அந்த சிவநம்மை யன்றியிலை யென்றேர்தலுந்துஞ் சிவயோக மோர் (சித்தாந்த தரிசனம்- பாப விமோசனவியல்)

சிவன் வேறு, சீவன் வேறு என்று இரண்டாய்ச் செப்பும்
அவன் சிவனை என்றும் அறியாதான் -தவமில்லா
உள்ளத்தார்க்கு எய்துமோ ஊர்குருவி ஆகாசம்
எள்ளப் பறந்து அறியுமே. (சிந்தனை வெண்பா -தக்ஷிணா மூர்த்தி துதி)

அதுவே நீயாம் என்று அரு மறைகள் சொல்லும்.
எதிர் சிவனே நீயானாய் என்னும் முது சைவம்.
வேறோ வேறன்றோ சொல் வேதியனே! விண் விசும்பும்
வேறோ வேறன்றோ விளம்பு (சிந்தனை வெண்பா)

Thursday, March 26, 2009

ஞான விசாரணை



கையினால் பிரிக்க முடியாத நெய்யை மத்தால் கடைந்து எடுப்பது போல, வாச்சியார்தத்தில் (சீவனில்) கலந்து கர்ம பந்தத்தினால் பிரிக்க முடியாது உள்ள இலட்சியார்த்த சொரூபத்தை (ஆத்மா) சிரவணம் (கேட்டல்) முதலானவற்றால் பிரித்து அறிய வேண்டும்.



தத்
வாச்சிய அர்த்தம் : மாயை, மாயைக்கு அதிஷ்டான சேதனத்துடன் உள்ள ஆபாச ரூபமான ஈசன்
இலட்சிய அர்த்தம் : அதிஷ்டான சேதனமான பிரமம்.

த்வம்
வாச்சிய அர்த்தம் : அவித்தை, அவித்தைக்கு அதிஷ்டான சேதனத்துடன் உள்ள ஆபாச ரூபமான சீவன்
இலட்சிய அர்த்தம் : அதிஷ்டான சேதனமான கூடஸ்தன்.

தாத்பர்யம்: தத்பத த்வம் பத வாச்சியார்த்தம் பர சீவர்கள், இலட்சியார்த்தம் பிரம கூடஸ்தர்கள். அத்தியாசத்தால் (மயக்கத்தால்) இரண்டு வாச்சியார்த்தங்களும் இரண்டு லட்சியார்த்தத்தில் கலந்து இருக்கும். இதில் வாச்சியார்த்தத்தை நீக்கி இலட்சியார்த்தத்தை அறிய வேண்டும்.

சீவனாகிய நீ கூடஸ்தன் என்று புரிஞ்சு கொண்டு பிரமத்தோட ஐக்கியமாகலாம். இப்படி முதல்லேயே பாத்தோம். இப்ப விவரமா பாக்கலாம்.
ஞான விசாரணையாலதான் இது நடக்கும்.

ப்ருகு ன்னு ஒத்தர் இருந்தார். (இவர்தான் பிருகு மகரிஷியான்னு கேட்டக்கூடாது. ஒரே பேரிலே பலர் இருந்திருப்பாங்க இல்லையா?) அவர் வருணன் என்பவரோட புத்திரன். (அதே. வருணன் தேவர்கள்ல ஒத்தரா இருக்கிறவரா இல்லாம இருக்கலாம்.)

அவர் அப்பாகிட்டே போய் ப்ரம்மம் னா என்ன உபதேசம் பண்ணுங்க ன்னார்.

வருணன் சொன்னார். அப்பா நல்ல கேள்வி கேட்டே! ரொம்ப சந்தோஷம். அன்னம், பிராணன், கண், காது, மனசு, பேச்சு இதெல்லாமே பிரம்மம் ன்னார். ப்ருகுவுக்கு ஒண்ணும் புரியலை. குழம்பி போயிட்டார்.

சரின்னு வருணன் சொன்னார். குழந்தாய், எதுலேந்து உயிரினங்கள் எல்லாம் தோன்றித்தோ, எதனால எல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கோ, எதில எல்லாம் ல‌ய‌மாகி முடிவ‌டையுமோ அது எதுன்னு கண்டு பிடி. அதுவே ப்ரம்மம். போய் தபஸ் பண்ணு ப்ரம்மன்னா என்னன்னு புரியும் னார்.

ப்ருகுவும் போய் தபஸ் பண்ணார். தபஸ்னா? மனசையும் புலன்களையும் கட்டுப்படுத்தி விசாரணை பண்ணார். வெகு காலம் பண்ணிவிட்டு ¨அட நான் அன்னத்தாலதான் நான் உருவானேன், வளந்தேன், ஜீவித்து இருக்கேன். செத்துப்போனா உடம்பை நிலத்திலே புதைக்கவோ எரிச்சு சாம்பலை நிலத்திலேயே போட்டு விடவோ செய்வாங்க. அது திருப்பியும் அன்னமா விளையும். அதனால அன்னம்தான் பிரம்மம்.

போய் அப்பாகிட்டே சொன்னார். வருணன் தப்பு சரின்னு ஒண்ணுமே சொல்லலை. தபஸே பிரம்மம். போய் இன்னும் தபஸ் பண்ணுனார்.

வருணன் திருப்பி தபஸ் பண்ணி இன்னுமொன்னை கண்டு பிடிச்சார்.
ப்ராணன்தான் பிரம்மம். அதுலேந்தே எல்லாம் தோன்றி வளர்ந்து, ஒடுங்கும்.

குழந்தை பிறந்து ப்ராணனை உள்ளே இழுத்தாத்தான் ஆஹா குழந்தை பிறந்தாச்சு என்கிறோம். மூச்சு உள்ளவரை நாம இருக்கோம். எப்ப ப்ராணன் போயிடுத்தோ அப்ப நாம இல்லை. அதனால ப்ராணனே பிரம்மம்.

போய் அப்பாகிட்டே சொன்னார். வருணன் தப்பு சரின்னு ஒண்ணுமே சொல்லலை. தபஸே பிரம்மம். போய் இன்னும் தபஸ் பண்ணுனார்.
வருணன் திருப்பி தபஸ் பண்ணி இன்னுமொன்னை கண்டு பிடிச்சார்.
மனசே பிரம்மம். அதுலேந்தே எல்லாம் தோன்றி வளர்ந்து, ஒடுங்கும்.

மனசு இருக்கறதால்தான் நாம் இருக்கோம். மனசு நாம சாப்பிடுற உணவை வைச்சு வளருது. ஏதாவது நினைச்சு கொண்டேதானே இருக்கோம். கொஞ்ச நேரமாவது ஏதேனும் எண்ணம் இல்லாம இருக்கோமா? எப்ப மனசு நிக்கிறதோ அப்போ நாம் போயிடுவோம்.
அதனால மனசே பிரம்மம்.
போய் அப்பாகிட்டே சொன்னார். ¨ப்ரம்மம் னா என்ன? உபதேசம் பண்ணுங்க!¨ வருணன் சொன்னார்: தபஸே பிரம்மம். போய் இன்னும் தபஸ் பண்ணுனார்.

வருணன் திருப்பி தபஸ் பண்ணி இன்னுமொன்னை கண்டு பிடிச்சார்.
புத்திதான் பிரம்மம். அதுலேந்தே எல்லாம் தோன்றி வளர்ந்து, ஒடுங்கும்.

அறிவே உசந்தது. அறிவுன்னு ஒண்ணாலதான் இந்த உலகத்தை என்னன்னு தெரிஞ்சுக்கிறோம். அதாலதான் நம்ம வாழ்க்கையை சுகமா அமைச்சுக்கிறோம்; வாழ்கிறோம். கடைசில அறிவிலேயே - எல்லாத்தைவிட பெரிய புத்தியிலேயே ஒடுங்கிடுவோம்.

அதனால புத்தியே பிரம்மம்.
போய் அப்பாகிட்டே சொன்னார். ¨ப்ரம்மம் னா என்ன? உபதேசம் பண்ணுங்க!¨ வருணன் சொன்னார்: தபஸே பிரம்மம். போய் இன்னும் தபஸ் பண்ணுனார்.
வருணன் திருப்பி தபஸ் பண்ணி இன்னுமொன்னை கண்டு பிடிச்சார்.

ஆனந்தமே பிரம்மம். அதுலேந்தே எல்லாம் தோன்றி வளர்ந்து, ஒடுங்கும்.

பிறக்கிறப்பவே ஆனந்தத்தோட பிறக்கிறோம். குழந்தை பிறந்தாச்சுன்னா எவ்வளொ பேர் சந்தோஷப்படறாங்க. சம்பந்தம் இருக்கோ இல்லையோ எந்த குழந்தை பிறப்பை கேட்டாலும் யாரும் சந்தோடப்படுவாங்க இல்லையா? இப்பதான் பிறந்த குழந்தையை பாருங்க. எவ்வளோ சந்தோஷமா தூங்குது! ஆதுக்கு என்ன உலக அனுபவம் இருக்கு ஆனந்தப்பட? சந்தோஷத்தையே தேடிதான் வாழ்கிறோம். யாரான சந்தோஷமா இருக்க வேண்டாம்ன்னு நினைக்கிறாங்களா? சிலருக்கு என்ன இருக்கோ இல்லையோ சந்தோஷம் இருந்தா போதும் ன்னு புரிஞ்சு நிறைவா வாழறாங்களே! வாழ்க்கையிலே ஆனந்தம் இல்லைனா சீ என்ன வாழ்க்கை இது என்கிறோம். கடைசியிலே போகும்போது அப்பாடா இந்த தொல்லை பிடிச்ச வாழ்க்கை முடிஞ்சதுன்னு ஆனந்தமா போறோம்!
அப்ப ஆனந்தமே பிரம்மம்!

இப்படி ஒவ்வொண்ணா விசாரிச்சு இதுவே பிரம்மம்ன்னு முடிவுக்கு வருவதற்கு பார்கவீ வாருணீ வித்யைன்னு பெயர்.
இது தைத்திரீய உபநிஷத்திலே வருகிறது. [கொஞ்சம் சொந்த சரக்கும் இருக்கு இதிலே!]

இங்கே கூட விசாரம் பூர்த்தி ஆகலை.





Posted by Picasa