Pages

Monday, March 30, 2009

இந்த உடம்பு நானா?



முதலிலேஇந்த உடம்பு (அன்ன மய கோசம்) நானா?”ன்னு கேக்கணும்.
இல்லை அது ப்ரம்மத்தின் நிழலில் உள்ள வெறும் பஞ்சீகிருதம் செஞ்ச தமோ குண ஐம்பூதங்களால ஆனது ன்னு புரியும். (அப்பாடா! சுலபமா ஸ்தூல பஞ்ச பூதங்களால ன்னு சொல்லி இருக்கலாமோ?) அப்ப நான் அது இல்லை. இந்த உடம்பு பிணமாகி ஒரு நாள் அழிஞ்சு போயிடும்.

சரி, பிராண சக்திகள் இந்த உடம்பில ஓடுகிறதாலதானே நான் இருக்கேன்? (ப்ராண மய கோசம்) அப்ப அதான் நானா? இல்லை. அது ப்ரம்மத்தின் நிழலில் உள்ள ராஜச குண சமஷ்டியா இருக்கிறது. அதனால அதுவும் நான் இல்லை.

மனசே நான். நான் நினைக்கிறேன். அதனால நான் இருக்கிறேன் ன்னு ஒருத்தர் சொன்னார். ஆனால் ஆராய்ஞ்சு பாத்தா நமக்கு தெரியும்- மனசு, புத்தி இப்படி இருக்கிறதெல்லாம் (மனோ மய கோசம், விஞ்ஞான மய கோசம்) அந்தக்கரணம்தான். அது ப்ரம்மத்தின் நிழலில் உள்ள சூக்ஷ்ம பூத சத்வ குண சமஷ்டி.

ஆஹா! புரிஞ்சு போச்சு! மீதி இருக்கிறது ஆனந்த மய கோசம் ஒண்ணுதான். அதான் நான்! இல்லை, அதுவும் இல்லை!
அது அவித்தை அல்லது அஞ்ஞானமாகிய தமோ குணம்.
என்னப்பா இது எல்லாத்தையுமே இல்லை இல்லைனா என்ன பண்ணறது?

67.
வாச்சியார்த்தத்தை நீக்குவது எப்படி:

பிறிவதெப்படியென்றக்காற் பிணமாகுமுடனானென்னும்
அறிவினைக் கொல்லல் வேண்டு மைம்பூத விகாரமன்றோ
வெறியதோர் துருத்தி மூக்கின் விடுவது போலுன் மூக்கால்
எறிபிரா ணனுநீ யல்லை யிராசதகுணவி காரம்.

பிறிவதெப்படி என்றக்கால் (வாச்சியார்த்தத்தில் நின்று நான் வேறுபடுவது எப்படி என்றால்) பிணமாகும் உடல் (அன்னமய கோசத்தை) நான் என்னும் (பிராந்தி) அறிவினைக் கொல்லல் வேண்டும். [ஏனென்னில் அது] ஐம் பூத விகாரம் (பஞ்சீ கிருதம் செய்யப்பட்ட பஞ்ச பூதங்களால் ஆனது) அன்றோ. வெறியது (வெறுமையான) ஓர் துருத்தி மூக்கின் விடுவது போல் உன் மூக்கால் எறி[யும்] பிராணனும் (பிராணமய கோசம்) நீ அல்ல. [அது பஞ்சீ கிருதம் செய்யப்படாத பூதங்களின்] இராசத குண விகாரம். (காரியம்)

68
கரணமா மனது புத்தி கருத்தாவா மவையான் மாவோ
தரமுள விரண்டு கோசஞ் சத்துவ குணவி காரம்
வரமறு துயிலா னந்த மயனையு நானென் னாதே
விரவிய தமவஞ் ஞான விருத்தியின் விகார மாமே

கரணமா[கிய] மனது, கருத்தாவாம் (கர்த்தா = செய்பவன் ஆகிய) புத்தி அவை ஆன்மாவோ? தரமுள இரண்டு கோசம் (சங்கற்ப ரூபம், நிச்சய ரூபம் என தாரதம்மியம் உள்ள மனோமய, விஞ்ஞானமய கோசங்கள்) சத்துவ குண விகாரம்.
வரமறு (உயர்வில்லாத) துயில் ஆனந்த மயனையும் (சுழுத்தியில் உள்ள ஆனந்த மயனையும்) நான் என்னாதே. விரவிய (பொருந்திய) தம (தமோ ரூபமான) அஞ்ஞான விருத்தியின் விகாரமாமே.
(ஆக 5 கோசங்களையும் ஆன்மா அல்ல என நிராகரித்தார்.)

ஆன்மா அழியாதது; அறிவே வடிவமானது; எப்பவும் ஆனந்தமா இருக்கிறது.



3 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

ரொம்ப அனுபவிச்சு, நிதானமா எழுதறீங்க! ஒவ்வொரு வார்த்தையும் பொருத்தமா வந்தமைய கொடுத்து வச்சிருக்கீங்க ஐயா! நமஸ்காரம்.

Geetha Sambasivam said...

ஆன்மா அழிவற்றது என்பது வரை புரிஞ்சுக்க முடியுது. அப்புறம் பார்க்கலாம் மத்தது!

திவாண்ணா said...

கி.மூ ஐயா நன்றீ!

கீதா அக்கா சந்தோஷம்! :-))