ஆன்மா அழியாதது; அறிவே வடிவமானது; எப்பவும் ஆனந்தமா இருக்கிறது.
ஆனா அன்ன கோசமான இந்த ஸ்தூல உடம்பு பஞ்சீகிருதம் பண்ண பஞ்ச மகா பூதங்களிலேந்து வந்தது. என்னிக்காவது ஒரு நாள் அழிஞ்சே தீரும். அதனால அநித்தியம். மேலும் சடம். அதுக்கா ஒண்ணும் தெரியாது. ஆன்மா இருந்தாதான் அதால எதுவும் செய்ய முடியும். செத்து போன பிறகு ஆன்மா அந்த உடம்பை விட்டு போயிடும். அப்ப அதுக்கு ஒண்ணும் தெரியலை இல்லையா? ஒத்தர் இறந்த பிறகு ¨அப்பா எங்களை விட்டு போயிட்டியே¨ ன்னு அழலை? உடம்பு அங்கேயேதானே இருக்கு? அப்ப போய்விட்டது நாம், உடம்பு இல்லை. அதனால நாம் உடம்பு இல்லை. இந்த நாம் உடம்பை விட்டு போய் வேற உடம்பு எடுப்போம். ஒரு நாள் அதுவும் போய் இன்னொரு உடம்பு. இப்படி உடம்புகள் போகப்போக வேற உடம்பு கணக்கில்லாத வந்துண்டே இருக்கும்!
இதை என் உடம்பு ன்னு சொல்கிறப்பவே உடம்பு நானில்லைன்னு புரிஞ்சுடுத்து. குடத்தை பார்க்கிறவன் இருக்கும்போது அவன் குடம் ஆகமாட்டான் என்பது போலே தேகத்தை காண்கிறவன் தேகமாக ஆகமாட்டான்.
உடம்பு நானில்லை சரி, ஆனா உடம்பு என்னுதுதானா? :-))
அப்படி சொல்கிறது வியவகார சத்தியம்.
மண்ணிலேந்து வந்தது மண்ணுக்கே என்கிறபடி....
உடம்புக்கு சாத்திரங்கள் படி அக்னியோ பூமியோதான் சொந்தக்காரன். கொஞ்ச நாளுக்கு நம்ம இச்சையிலே விட்டு வெச்சு இருக்கு. உயிர் பிரிந்ததும் குல வழக்கப்படி புதைக்க அல்லது பெரும்பாலும் அக்னியில் எரிக்கத்தான் வேண்டும். இதனாலேயே உடல் உறுப்புகளை தானம் செய்கிறது சாத்திர சம்மதமில்லை.
தயானந்த சரஸ்வதிகள் சிரிச்சுண்டே தமாஷ் பண்ணுவார். இந்த உடம்பு என்னுதுன்னு நினைக்கிறோம். ஆனா இதிலே நாம மட்டும் இல்லையே? கோடானு கோடி பாக்டீரியாக்கள் இருக்கு. குடல் புழுக்கள், அமீபா.... அமீபாக்கள் சொல்கிறனவாம், ¨எத்தனை தலை முறை தலை முறையா நாங்க இங்கேயே இருக்கோம்! இந்த உடம்பு எங்களுக்கு சொந்தம்! ¨ :-))
மீதி 4 கோசங்களிலே பிராண, மனோ, விஞ்ஞான கோசங்கள் ஆன்மா அவ்வப்போது பிராணங்கள், அந்தக்கரணங்களோட கூடி நிற்கிற நிலைமைதான்.
அந்தக்கரணமோ சூக்ஷ்ம பூத சத்வ குண சமஷ்டி. அது நம் தினசரி வாழ்க்கையிலே தூங்குகிற போது இல்லாமலும் போகும். அப்ப அநித்தியம்தானே? பூரண அறிவோட பிரகாசம் இல்லாம இவற்றுக்கு ஒண்ணும் தெரியாது. அதனால இவை சடமே! மனதோட செயல்களும் புத்தியோட செயல்களும் பல சமயம் துக்கத்தை கொடுக்கின்றன.
ஆக இவையும் ஆன்மா ஆகாது.
ஆன்மாவால அறியப்படுகிற எதுவும் ஆன்மா ஆகாது.
கண்டனவல்ல வன்றே கழித்திடும் இறுதிக்கண்ணே
கொண்டது பரமானந்தக் கோதிலா முத்தியதால்....
உள்ளது மில்லது மாய்முன் - உற்ற
உணர்வது வாயுன் னுளங்கண்ட தெல்லாந்
தள்ளெனச் சொல்லிஎன் ஐயன் - என்னைத்
தானாக்கிக் கொண்ட சமர்த்தைப்பார் தோழி - சங்கர 8.
பாராதி பூதநீ யல்லை-உன்னிப்
பாரிந் திரியங் கரணநீ யல்லை
ஆராய் உணர்வுநீ என்றான் -ஐயன்
அன்பாய் உரைத்த சொல் லானந்தந் தோழி - சங்கர 9.
(தாயுமானவர்: 56. ஆனந்தக்களிப்பு)
இந்த அந்தக்கரணத்தை நாம அறிஞ்சு நீக்கணும். என் மனம் என் புத்தி என் சித்தம் ன்னு சொல்கிறதாலே இவை வேறதானே?
அந்தக் கரண மறிந்து துறப்பார்க்குப்
பந்த மிறந்ததென் றுந்தீபற
பாழ்வெளி யுள்ளதென் றுந்தீபற
மீதி இருக்கிறது ஆனந்தமய கோசம். அது காரண சரீரம். அனுபவத்தில அது தூக்கம். ஆழ் தூக்கத்திலே கருவி கரணங்கள் எல்லாம் அடங்கி ஆன்மா அவித்தையான அந்தகாரத்திலே அமிழ்ந்து கிடக்கும். (ignorence is bliss?) எப்படி ஆன்மா ஸ்தூல சூக்ஷ்ம உடல்களோட சம்பந்தப்பட்டு ஜாக்ரத், ஸ்வப்பன (கனவு) நிலைகளை அனுபவிக்கிறதோ அப்படி காரண உடலோட சம்பந்தப்பட்டு சுசுப்தி யை அனுபவிக்கும். இந்த சுசுப்தியே ஆனந்த கோசம். ஆக இதுவும் நாமில்லை.
No comments:
Post a Comment