Pages

Wednesday, September 30, 2009

மீதி 3 அஞ்ஞான பூமிகள்



148.
உண்டுறங்கி மனோராச்சி யஞ்செயல்சொப் பனமெனும்பே ருடையதாகும்
பண்டுகனாக் கண்டுமறந் ததைமீண்டு நினைப்பதுசொ ப்பனநனாவா
மண்டுமிருண் மூடுவது சுழுத்தியா மஞ்ஞான வகைகள் சொன்னோம்
விண்டு நிறை முத்திதரு ஞானபூ மிகளேழும் விளம்பக்கேளாய்

உண்டு உறங்கி மனோராச்சியம் செயல் (அனுபவித்ததை அனுபவிக்காததை உறக்கத்தில் நினைப்பது) 5.சொப்பனம் எனும் பேர் உடையதாகும்.
பண்டு (பழைய காலத்தில்) கனாக் கண்டு மறந்ததை மீண்டும் நினைப்பது சொப்பன நனாவாம். [6.ஸ்வப்ன ஜாக்ரம்] மண்டும் (பிரபஞ்சம் அடங்கி இருக்கும் அஞ்ஞான) இருள் மூடுவது (ஏழாம் பூமியாகிய) 7. சுழுத்தியாம். அஞ்ஞான வகைகள் சொன்னோம். விண்டு (நீங்கி) நிறை (பரி பூரணமான) முத்தி தரும் ஞான பூமிகள் ஏழும் விளம்பக்கேளாய்.
--
5.சொப்பனம்: சாக்கிரத்தில் அனுபவித்தவை, அனுபவிக்காதவை ஆகியவற்றை தூக்கத்தில காண்பது. கனவு காணும்போது நம்ம வாழ்க்கையில முன்னே நடந்ததே வரலாம்; அதே நபர்கள், இடங்கள் இப்ப இல்லைன்னா கூட வரலாம்; புது நபர்கள் இடங்கள் .. நனவில நம்மால செய்ய முடியாதது - பறக்கிறது போல - வரலாம்.

6. சொப்பன சாக்கிரம்: முன்பு கண்ட சொப்பனத்தை மீண்டும் சாக்கிரத்தில் காண்பது. அதாவது நாம் கண்ட கனவை நடந்தபடியே திருப்பி நினைவுக்கு கொண்டு வரது. நம்ம ஜீவா வெங்கட்ராமன் இப்படி செஞ்சு சுவையான பதிவுகள் எழுதி இருக்கார்.

7. சுழுத்தி: மேற்கண்ட 6 அவஸ்தைகளும் இல்லாது கருவி கரணங்கள் எல்லாம் ஒடுங்கி அஞ்ஞான இருள் மூடி இருக்கும் நிலை.

நாம் தூங்கப்போகு முன் இந்த நிலைகளை கடந்தே போகிறோம். அதே போல இவற்றை கடந்தே விழிப்புக்கு வருகிறோம். அவை தானியங்கியாக நடப்பதால் நமக்கு புலப்படவில்லை.


Tuesday, September 29, 2009

முதல் 4 அஞ்ஞான பூமிகள்



147.
முந்தவகண் டத்தெழுமோ ரறிவுமாத் திரமதுதான் முதல்வித்தாகு
மிந்தவறி விற்பண்டில் லாவகந்தை முளை போலா மிதுந னாவாம்
வந்துவந்து பிறவிதொறு மகமமதை வளருமது மகாந னாவாம்
நந்துமகங் கொடுநனவின் மனோராச்சி யஞ்செயலே நனாக்க னாவே.

முந்த (முன்பு) அகண்டத்து (பிரமத்திலிருந்து) எழும் ஓரறிவு மாத்திரம் அதுதான் முதல் வித்தாகும். [1.பீஜ ஜாக்ரம்=வித்து சாக்கிரம்]. இந்த அறிவில் பண்டில்லா (முன்பில்லாத) அகந்தை முளை போலாம். [2.ஜாக்ரம்=சாக்கிரம்] இது நனாவாம். (ஜாக்ரத்).வந்து வந்து பிறவிதொறும் அகம் மமதை (நான் எனது எனும் நினைப்பு) வளரும். அது மகா நனாவாம். [3.மஹா ஜாக்ரத்]
நந்தும் அகங் கொடு (எழுகின்ற மனத்தினால்) நனவில் மனோ ராச்சியஞ் செயலே நனாக்கனாவே. [4.ஜாக்ரத் ஸ்வப்னம்]
--
நாம தூங்கப்போகும் போது படிப்படியா கருவி கரணம் எல்லாம் கழண்டே தூங்கப்போகிறோம். படுத்தோம் பட்டுன்னு தூங்கிட்டோம் அப்படின்னு இல்லை. அதே போல தூக்கத்திலிருந்து வெளியே வரப்ப திடுதிப்புன்னு வரதில்லை. படிப்படியாதான் வெளியே வரோம். அது சில கணங்களா இருந்தாக்கூட தனித்தனியா பிரிக்கலாம்.

1.தனி வித்துச் சாக்கிரம் (பீஜ சாக்கிரம்): தூக்கத்தில் இருந்து விழிப்புக்கு வரும்முன் மாயையோடு சம்பந்தப்பட்டு இருந்த ஆத்ம சைதன்யம்; அதில் இருந்து எழும் சித் ஆபாசத்துடன் கூடிய அறிவு மட்டும் உள்ள நிலை.
இதில இன்னும் நான் என்கிற நினைப்பு வரலை. சுசுப்தில சுத்த அறிவா இருந்தது இப்ப கொஞ்சம் நிலை குலைஞ்சு ஆபாசமானது. அவ்வளவே.

2.சாக்கிரம்: மேற் கண்ட அறிவில் முன்பு இல்லாத நான் என்னுடையது என்றவை சூக்ஷ்மமாக உண்டாவது. இது நம்ம உடம்பு இடம் நேரம் போன்ற விஷயங்கள் மட்டும் தெரியும். நாங்க மயக்கம் கொடுத்த நோயாளி இந்த நிலைக்கு வந்ததும் கூட இருக்கிறவங்க உஷார் வந்திடுச்சும்பாங்க!

3. மகா சாக்கிரம்: நான் எனது என்பவை திடமாகவும் விரிவாகவும் உதிப்பது. இது சாதாரணமா நாம இருக்கிற நிலை.

4. சாக்கிர சொப்பனம்: சாக்கிரத்தில் இருந்து கொண்டு நாம் அறிந்தவை அறியாதவைகளை கொண்டு "மனக்கோட்டை" கட்டுதல். நிறைய பணம் சம்பாதிப்பேன். வீடு கட்டுவேன். கார் வாங்குவேன். பிசினஸ் பண்ணி பணத்தை பெருக்கி ஊர்லேயே பெரிய பணக்காரன் ஆகிடுவேன். இப்படி எல்லாத்தையும் கற்பனை செய்கிறதே சாக்கிர கனவு. இதை பின்னால வர கனவு சாக்கிரத்தோட குழப்பிக்கக்கூடாது.


Monday, September 28, 2009

துரியாதீதம், ஏழாம் பூமி இதெல்லாம் என்ன?




145.
துரியாதீத ஏழாம் பூமி முக்கியமென்றது ஏன் எனவும் அதில் இன்ன வகை எனவும் கூற வேண்டுமென்றது.

இதயமொத்த சற்குருவே நமக்கிதுவே வினோதமன்றி யினிவே றுண்டோ
அதையுரைத்து மதைநினைத்து மிருப்பதன்றோ ஞானிகளுக் கானநீதி
முதலுரைத்த துரியாதீ தமுமேழாம் பூமியுமுக் கியமாமென்ற
பதமுமதன் வகையுமெனக் கெளிதாகத் தெளியும்வண்ணம் பணித்தி டீரே

இதயம் ஒத்த சற்குருவே! நமக்கு இதுவே வினோதம் அன்றி இனி வேறுண்டோ? அதை உரைத்தும், அதை நினைத்தும் இருப்பது அன்றோ ஞானிகளுக்கான நீதி? [ஆகவே] தாங்கள் முதல் (முன்பு) உரைத்த துரியாதீதமும் ஏழாம் பூமியும் முக்கியமாம் என்ற பதமும் அதன் வகையும் எனக்கு எளிதாகத் தெளியும் வண்ணம் பணித்திடீரே.

சமாதியிலிருந்து வெளி வந்த சீடர் மேலே கேள்வி கேட்கிறார்.

சீவன் முத்தருக்கு என்ன வேலை? மனமில்லாத போது பிரம்மத்தில திளைக்கிறதும் மனம் இருக்கும் போது பிரம்மத்தைப்பத்தி யோசிக்கிறதும்தானே. நமக்கு இத்தானே வேலைங்கிறார் சீடர். கவனிங்க. நமக்கு.

முன்ன துரியாதீதம் ஏழாம் பூமி இதெல்லாம் முக்கியம் ன்னு சொன்னீங்களே அது என்ன? முன்ன மாதிரி சுலபமா புரிய வையுங்க.

146.
வினவுமிடத் தஞ்ஞான பூமிகளேழ் ஞானபூமிகளே ழென்பார்
இனியவற்று ளஞ்ஞான பூமிகளே ழையுமுந்தி யியம்பக் கேளாய்
தனிவித்துச் சாக்கிரஞ்சாக்கிரமகா சாக்கிரஞ்சாக் கிரத்தைச் சார்ந்த
கனவுகனாக் கனவுசாக் கிரஞ்சுழுத்தி யென்றெழுபேர் கணித்தார் மேலோர்

வினவுமிடத்து அஞ்ஞான பூமிகள் ஏழ், ஞானபூமிகள் ஏழ் என்பார். இனி அவற்றுள் அஞ்ஞான பூமிகள் ஏழையும் முந்தி இயம்பக் கேளாய். தனி, வித்துச் சாக்கிரம், சாக்கிரம், மகா சாக்கிரம், சாக்கிரத்தைச் சார்ந்த கனவு, கனாக் கனவு, சாக்கிரஞ் சுழுத்தி என்று ஏழு பேர் (பெயர்கள்) கணித்தார் மேலோர்.

பூமின்னா ஏதோ நிலப்பரப்புன்னு இல்லை. அது ஒரு நிலை. அவ்வளோதான். கொஞ்சம் சுலபமா விஷயங்களை புரிஞ்சுக்க ஒரு பாகுபாடு செய்கிறாங்க. ஞான பூமிகள் ஏழு அஞ்ஞான பூமிகள் ஏழுன்னு பிரிக்கிறாங்க.

Friday, September 25, 2009

சீவன்முத்தரின் அனுபவ நிலை.



144.
பலகலையு முணர்ந்தகுரு மொழிந்தபடி யிவனுமநு பவம் விடாமல்
பலமலரின் மதுப்போல சச்சிதா நந்த மொன்றாம் பரமார்த் தத்தைப்
பலபொழுதுங் கண்மூடிச் சமாதியிருந் தான்விழித்துப் பார்த்தபோது
பலவடிவாஞ் சராசரசித் திரங்களெலாந் தோன்றுமொரு படமா னானே

பலகலையும் உணர்ந்த குரு மொழிந்தபடி இவனும் அநுபவம் விடாமல், பல மலரின் மதுப்போல (பல மலர்களிலிருந்தும் வந்த மது ஒருமித்தது போல) சச்சிதாநந்தம் ஒன்றாம் பரமார்த்தத்தைப் பல பொழுதும் கண்மூடி [ஸ்வரூப] சமாதியிருந்தான். [ஞான விழியால்] விழித்துப் பார்த்தபோது, பல வடிவாம் சராசர சித்திரங்கள் எல்லாம் தோன்றும் ஒரு படமானானே.
--
சீடன் குரு சொன்னபடி சச்சிதானந்த நிலையில நீண்ட நேரம் சமாதியில இருக்கிறார்.
கடலில் அலை, திவலை நுரைகள் தோன்றுவது போல இந்த சராசர பிரபஞ்சம் பிரம்மத்தில ஆரோபமா இருக்கு. ப்ரபஞ்சத்தை சித்திரத்தில இருக்கிற பல பொருட்களாகவும் பிரமத்தை படம் (படசீலை) ஆகவும் கூறியுள்ளது. அதுவே அகண்டாகார (இரண்டற்ற) நிலை. சீவன்முத்தரின் அனுபவ நிலை.

சுழுத்தியில் அறிவு அவித்தையாகிய அஞ்ஞான இருளை எதிர் கொண்டு அறிகிறது. தூக்கத்தில் இல்லாமல் ஜாக்ரத் நிலையில் அதே போல மனம் ஒடுக்கி அறிவு மயமாக விளங்குவதே சீவன் முத்தி நிலை. இது நினைவில் சுழுத்தி எனவும் சொல்லப்படும். இந்த அனுபவ நிலையில் எல்லாம் அகண்ட பிரம சொரூபமாக விளங்கும்.

கண்ட அறிவுதனைக் கொண்டுன்னைக் கண்மறைத்த
பண்டை யிருளைநீ பார்த்துக்கா ணென்றானோ
- தத்துவராயர் தாலாட்டு.
இதை நினைவில் சுழுத்தி என்பாங்க.

தன் மயமாய் நின்றநிலை தானேதா னாகிநின்றால்
நின்மயமா யாவும் நிகழும் பராபரமே
தாயுமானவர்
மேனியிற் புறத்தி னுள்ளின் மேலொடு கீழிறக்கில்
வானில்வை யகத்தி லெங்கும் யானன்றி மற்றொன் றில்லை
யானிலா விடமு மில்லை யெனதிடத் திலாது மில்லை
தானிகழ் பொருள்வே றில்லை சச்சிதா நந்த மென்றான்
வாசிட்டம் - கசன் கதை

உயிர் அசைவதுதான் மனதை அசைக்கிறது. மனம் ஜடம். ஆன்மா இல்லாம மனம் அசைய முடியாது. ஆன்மா உற்று பாத்தால் அந்த உண்மை வெளிப்படும். ஆன்மா தன்னை மறக்காமல் தன் நிலையில் நின்று மனம் எங்கேன்னு பார்த்தால் மனதுக்கு தன்னைத்தவிர வேறு இருப்பிடம் இல்லைன்னும், இதையே மாயை என்கிறது உண்மைன்னும் தெரியவரும். இந்த மனதின் அசைவை வளர விடாம அடக்கி சுழுத்தியில் அது எப்படி சாட்டை இல்லாத பம்பரம் போலவும் காற்றில்லாத காற்றாடி போலவும் அடங்கிக்கிடந்ததோ அப்படி சுழுத்தி இல்லாத ஜாக்கிரத்திலேயே அதை இருக்கச் செய்தா ஆன்ம பிரகாசம் தோன்றும்.

உண்டாகி யெவ்விடத்து முற்ற போத
முயிரசைவா லுணர்வுறுமப் போதந் தன்னை
மண்டாமற் றடுக்கைபெரு நன்மை யாகும்
வளர்போதங் காண்பவற்றை மருவு மாலாற்
றண்டாத காண்பவையே மனதிற் கென்றுந்
தவிராத துயராமத் தனிப்போ தந்தான்
மிண்டாத சுழுத்தியிற்போ தம்போ னிற்கில்
வீடதுபே றதுவிமல பதம்வே றில்லை
வாசிட்டம்
உண்டாகி எவ்விடத்தும் உற்ற போதம் உயிர் அசைவால் உணர்வுறும். அப்போதந் தன்னை மண்டாமல் தடுக்கை பெரு நன்மையாகும். வளர் போதம் காண்பவற்றை மருவுமாலால் அண்டாத காண்பவையே மனதிற்கு என்றுந் தவிராத துயராம். அத் தனிப்போதம்தான் மிண்டாத சுழுத்தியில் போதம் போய் நிற்கில் வீடது பேறது விமல பதம் வேறில்லை.


Thursday, September 24, 2009

சத் சித் ஆனந்தமா இருந்து பழகுப்பா!



142
வீயாத சத்துமுன்னம் விளங்குவது தன்னாலோ வேறொன்றாலோ
வாயால்வே றெனிலதுவு மசத்தோசத் தோவசத்தேன் மலடி மைந்தன்
பேயாகா ரியஞ்செயுமோ சத்தெனவிப் படியதையும் பிரித்துச்சொன்னால்
ஓயாத வவத்தையாங் குதர்க்கவிகற் பங்களைவிட் டொழித்திடாயே.

வீயாத (மூன்று காலங்களிலும் நசியாத) சத்து முன்னம் (ஆதியில்) விளங்குவது (பிரகாசிப்பது) தன்னாலோ? வேறொன்றாலோ?
வாயால் வேறு எனில் அதுவும் அசத்தோ? சத்தோ? அசத்தேல் (அசத்து எனில்) மலடி மைந்தன் பேயா(க) காரியஞ் செயுமோ? சத்தென இப்படி அதையும் பிரித்து (வேறொன்றாக) சொன்னால், ஓயாத வவத்தையாம் (அனவஸ்தா தோஷம் உண்டாகும். ஒரு தீபம் மற்றொரு தீபத்தினால் பிரகாசிக்கிறது எனில் அந்த வேறொரு தீபம் எப்படி பிரகாசிபிக்கிறது? அது மற்றொரு தீபத்தினால் பிரகாசம் பெற்று பிரகாசிபிக்கிறது என வரிசையாக முடிவில்லாமல் போகும்) குதர்க்க விகற்பங்களை (வேறுபாடுகளை) விட்டொழித்திடாயே.
--
சத் எப்போதுமே இருந்து விளங்குகிறது. அதை விளக்க வேற ஒண்ணம் வேண்டாம். தேவை ன்னுஒரு வாதத்திற்காக எடுத்துக்கொண்டால் அதை விளங்கச்செய்வது எது? இன்னொரு சத்தா? அசத்தா?
அசத்து சத்தை விளங்கச் செய்ய முடியாது. அதாவது இல்லாத ஒண்ணு இருக்கிறதை சுட்டிக்காட்ட முடியாது.
சத்தா இருந்தால் அந்த சத்தை எது விளங்கச்செய்வது? இன்னொரு சத்து. அதை விளங்கச்செய்வது? இப்படி முடிவில்லாத கேள்விகள் எழும். அதனால அது தவறு.

143.
சுருதியுத்தி யொத்ததுபோல நுபவமுங் கேள்சுழுத்திச் சுகவாநந்தம்
மிருதிவடி வாதலிலவ் வாநந்த மேயறிவாம் வேறங் கில்லை
கருதுபிர ளயஞ்சுழுத்தி யிரண்டிலுநீ யிருந்திருளைக் காண்கிறாயே
இருதயத்திப் படிநோக்கி யேக பரிபூரணமா யிருந்தி டாயே

சுருதி யுத்தி ஒத்தது போல் அநுபவமும் (அநுபவ பிரமாணமும்) கேள். சுழுத்தி சுகவாநந்தம் (ஆனது) ஸ்மிருதி (நினைப்பு) வடிவு. (நித்திரையில் அஞ்ஞானத்தை அறிந்து ஒன்றையும் அறியாதிருந்தேன் என்ற நினைப்பு வெளிப்படுமாதலால்) ஆதலில் அவ்வாநந்தமே அறிவாம். வேறு அங்கில்லை. கருது[கின்ற] பிரளயம் சுழுத்தி இரண்டிலும் (2 அவஸ்தையிலும்) நீ [சத்தாக] இருந்து இருளைக் காண்கிறாயே. [ஆகவே சித்தான ஆநந்தமே சத்து] இருதயத்து இப்படி நோக்கி ஏக பரிபூரணமாய் இருந்திடாயே.
--
சுழுத்தியிலும் பிரலயத்திலும் ஆநந்தமே அஞ்ஞானத்தை அறிகிறது. அறிவது அதுவே ஆகையால் அதுவே சித்து. இருந்தே அறிய வேண்டுமாதலால் அதுவே சத்து.

அனுபவத்தால அறிந்து கொள்ள வழி சொல்கிறார்.
நல்லா தூங்கி சுழுத்தில ஆனந்தம் அனுபவிக்கிறோம். தூங்கி எழுந்ததும் ஆனந்தமா தூங்கினதா நினைக்கிறோம். இப்படியா ஆனந்தம் அறிவா ஆயிடுத்து. அதெப்படி ன்னா சுழுத்தில ஆனந்தத்தைத்தவிர விளக்கி வைக்க ஒண்ணும் இல்லையே.
அப்படி உணர்ந்ததும் நாமே. பின்னால் அதை நினைப்பதும் நாமே. அப்படின்னா இருப்பு அப்பவும் இருந்தது. இப்பவும் இருக்கு. ஆக சத் இருக்கு. ஆக நாம் சத் சித் ஆனந்தம். இந்த சத் சித் ஆனந்தமே பிரம்மம் என்பதால நாம் பிரம்மம்.
ஜாக்ரத்திலேயும் இதே போல சத் சித் ஆனந்தமா இருந்து பழகுப்பா என்கிறார்.
அதாவது விழிப்பிலேயும் சுழுத்தில இருக்கிறாப்போல அகண்ட பரிபூரணமாக இருப்பாயாக என்கிறார்.