147.
முந்தவகண் டத்தெழுமோ ரறிவுமாத் திரமதுதான் முதல்வித்தாகு
மிந்தவறி விற்பண்டில் லாவகந்தை முளை போலா மிதுந னாவாம்
வந்துவந்து பிறவிதொறு மகமமதை வளருமது மகாந னாவாம்
நந்துமகங் கொடுநனவின் மனோராச்சி யஞ்செயலே நனாக்க னாவே.
முந்த (முன்பு) அகண்டத்து (பிரமத்திலிருந்து) எழும் ஓரறிவு மாத்திரம் அதுதான் முதல் வித்தாகும். [1.பீஜ ஜாக்ரம்=வித்து சாக்கிரம்]. இந்த அறிவில் பண்டில்லா (முன்பில்லாத) அகந்தை முளை போலாம். [2.ஜாக்ரம்=சாக்கிரம்] இது நனாவாம். (ஜாக்ரத்).வந்து வந்து பிறவிதொறும் அகம் மமதை (நான் எனது எனும் நினைப்பு) வளரும். அது மகா நனாவாம். [3.மஹா ஜாக்ரத்]
நந்தும் அகங் கொடு (எழுகின்ற மனத்தினால்) நனவில் மனோ ராச்சியஞ் செயலே நனாக்கனாவே. [4.ஜாக்ரத் ஸ்வப்னம்]
--
நாம தூங்கப்போகும் போது படிப்படியா கருவி கரணம் எல்லாம் கழண்டே தூங்கப்போகிறோம். படுத்தோம் பட்டுன்னு தூங்கிட்டோம் அப்படின்னு இல்லை. அதே போல தூக்கத்திலிருந்து வெளியே வரப்ப திடுதிப்புன்னு வரதில்லை. படிப்படியாதான் வெளியே வரோம். அது சில கணங்களா இருந்தாக்கூட தனித்தனியா பிரிக்கலாம்.
1.தனி வித்துச் சாக்கிரம் (பீஜ சாக்கிரம்): தூக்கத்தில் இருந்து விழிப்புக்கு வரும்முன் மாயையோடு சம்பந்தப்பட்டு இருந்த ஆத்ம சைதன்யம்; அதில் இருந்து எழும் சித் ஆபாசத்துடன் கூடிய அறிவு மட்டும் உள்ள நிலை.
இதில இன்னும் நான் என்கிற நினைப்பு வரலை. சுசுப்தில சுத்த அறிவா இருந்தது இப்ப கொஞ்சம் நிலை குலைஞ்சு ஆபாசமானது. அவ்வளவே.
2.சாக்கிரம்: மேற் கண்ட அறிவில் முன்பு இல்லாத நான் என்னுடையது என்றவை சூக்ஷ்மமாக உண்டாவது. இது நம்ம உடம்பு இடம் நேரம் போன்ற விஷயங்கள் மட்டும் தெரியும். நாங்க மயக்கம் கொடுத்த நோயாளி இந்த நிலைக்கு வந்ததும் கூட இருக்கிறவங்க உஷார் வந்திடுச்சும்பாங்க!
3. மகா சாக்கிரம்: நான் எனது என்பவை திடமாகவும் விரிவாகவும் உதிப்பது. இது சாதாரணமா நாம இருக்கிற நிலை.
4. சாக்கிர சொப்பனம்: சாக்கிரத்தில் இருந்து கொண்டு நாம் அறிந்தவை அறியாதவைகளை கொண்டு "மனக்கோட்டை" கட்டுதல். நிறைய பணம் சம்பாதிப்பேன். வீடு கட்டுவேன். கார் வாங்குவேன். பிசினஸ் பண்ணி பணத்தை பெருக்கி ஊர்லேயே பெரிய பணக்காரன் ஆகிடுவேன். இப்படி எல்லாத்தையும் கற்பனை செய்கிறதே சாக்கிர கனவு. இதை பின்னால வர கனவு சாக்கிரத்தோட குழப்பிக்கக்கூடாது.
3 comments:
/சாக்கிர கனவு. இதை பின்னால வர கனவு சாக்கிரத்தோட குழப்பிக்கக்கூடாது./
அப்போ வரப்போற குழப்பத்துக்கு இப்போதே சொல்லி வைப்பது இது தானா:-(
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் என்னமோ பூமினதும் என்னமோ நினைச்சேன், இது இன்னும் குழப்புதே! அது என்ன சாக்கிர கனவு? கனவு சாக்கிரம்?? வித்தியாசத்தைச் சொல்லி இருக்கலாமோ??? :(((((((
@கிருஷ்ணமூர்த்தி.
ஒரு எச்சரிக்கை கொடுக்கலாம்ன்னு நினைச்சேன். :-))
@ கீதா அக்கா
அடுத்து வர பகுதியில் சரி ஆகிடும்.
Post a Comment