Pages

Friday, September 25, 2009

சீவன்முத்தரின் அனுபவ நிலை.144.
பலகலையு முணர்ந்தகுரு மொழிந்தபடி யிவனுமநு பவம் விடாமல்
பலமலரின் மதுப்போல சச்சிதா நந்த மொன்றாம் பரமார்த் தத்தைப்
பலபொழுதுங் கண்மூடிச் சமாதியிருந் தான்விழித்துப் பார்த்தபோது
பலவடிவாஞ் சராசரசித் திரங்களெலாந் தோன்றுமொரு படமா னானே

பலகலையும் உணர்ந்த குரு மொழிந்தபடி இவனும் அநுபவம் விடாமல், பல மலரின் மதுப்போல (பல மலர்களிலிருந்தும் வந்த மது ஒருமித்தது போல) சச்சிதாநந்தம் ஒன்றாம் பரமார்த்தத்தைப் பல பொழுதும் கண்மூடி [ஸ்வரூப] சமாதியிருந்தான். [ஞான விழியால்] விழித்துப் பார்த்தபோது, பல வடிவாம் சராசர சித்திரங்கள் எல்லாம் தோன்றும் ஒரு படமானானே.
--
சீடன் குரு சொன்னபடி சச்சிதானந்த நிலையில நீண்ட நேரம் சமாதியில இருக்கிறார்.
கடலில் அலை, திவலை நுரைகள் தோன்றுவது போல இந்த சராசர பிரபஞ்சம் பிரம்மத்தில ஆரோபமா இருக்கு. ப்ரபஞ்சத்தை சித்திரத்தில இருக்கிற பல பொருட்களாகவும் பிரமத்தை படம் (படசீலை) ஆகவும் கூறியுள்ளது. அதுவே அகண்டாகார (இரண்டற்ற) நிலை. சீவன்முத்தரின் அனுபவ நிலை.

சுழுத்தியில் அறிவு அவித்தையாகிய அஞ்ஞான இருளை எதிர் கொண்டு அறிகிறது. தூக்கத்தில் இல்லாமல் ஜாக்ரத் நிலையில் அதே போல மனம் ஒடுக்கி அறிவு மயமாக விளங்குவதே சீவன் முத்தி நிலை. இது நினைவில் சுழுத்தி எனவும் சொல்லப்படும். இந்த அனுபவ நிலையில் எல்லாம் அகண்ட பிரம சொரூபமாக விளங்கும்.

கண்ட அறிவுதனைக் கொண்டுன்னைக் கண்மறைத்த
பண்டை யிருளைநீ பார்த்துக்கா ணென்றானோ
- தத்துவராயர் தாலாட்டு.
இதை நினைவில் சுழுத்தி என்பாங்க.

தன் மயமாய் நின்றநிலை தானேதா னாகிநின்றால்
நின்மயமா யாவும் நிகழும் பராபரமே
தாயுமானவர்
மேனியிற் புறத்தி னுள்ளின் மேலொடு கீழிறக்கில்
வானில்வை யகத்தி லெங்கும் யானன்றி மற்றொன் றில்லை
யானிலா விடமு மில்லை யெனதிடத் திலாது மில்லை
தானிகழ் பொருள்வே றில்லை சச்சிதா நந்த மென்றான்
வாசிட்டம் - கசன் கதை

உயிர் அசைவதுதான் மனதை அசைக்கிறது. மனம் ஜடம். ஆன்மா இல்லாம மனம் அசைய முடியாது. ஆன்மா உற்று பாத்தால் அந்த உண்மை வெளிப்படும். ஆன்மா தன்னை மறக்காமல் தன் நிலையில் நின்று மனம் எங்கேன்னு பார்த்தால் மனதுக்கு தன்னைத்தவிர வேறு இருப்பிடம் இல்லைன்னும், இதையே மாயை என்கிறது உண்மைன்னும் தெரியவரும். இந்த மனதின் அசைவை வளர விடாம அடக்கி சுழுத்தியில் அது எப்படி சாட்டை இல்லாத பம்பரம் போலவும் காற்றில்லாத காற்றாடி போலவும் அடங்கிக்கிடந்ததோ அப்படி சுழுத்தி இல்லாத ஜாக்கிரத்திலேயே அதை இருக்கச் செய்தா ஆன்ம பிரகாசம் தோன்றும்.

உண்டாகி யெவ்விடத்து முற்ற போத
முயிரசைவா லுணர்வுறுமப் போதந் தன்னை
மண்டாமற் றடுக்கைபெரு நன்மை யாகும்
வளர்போதங் காண்பவற்றை மருவு மாலாற்
றண்டாத காண்பவையே மனதிற் கென்றுந்
தவிராத துயராமத் தனிப்போ தந்தான்
மிண்டாத சுழுத்தியிற்போ தம்போ னிற்கில்
வீடதுபே றதுவிமல பதம்வே றில்லை
வாசிட்டம்
உண்டாகி எவ்விடத்தும் உற்ற போதம் உயிர் அசைவால் உணர்வுறும். அப்போதந் தன்னை மண்டாமல் தடுக்கை பெரு நன்மையாகும். வளர் போதம் காண்பவற்றை மருவுமாலால் அண்டாத காண்பவையே மனதிற்கு என்றுந் தவிராத துயராம். அத் தனிப்போதம்தான் மிண்டாத சுழுத்தியில் போதம் போய் நிற்கில் வீடது பேறது விமல பதம் வேறில்லை.


Post a Comment