Pages

Wednesday, September 30, 2009

மீதி 3 அஞ்ஞான பூமிகள்



148.
உண்டுறங்கி மனோராச்சி யஞ்செயல்சொப் பனமெனும்பே ருடையதாகும்
பண்டுகனாக் கண்டுமறந் ததைமீண்டு நினைப்பதுசொ ப்பனநனாவா
மண்டுமிருண் மூடுவது சுழுத்தியா மஞ்ஞான வகைகள் சொன்னோம்
விண்டு நிறை முத்திதரு ஞானபூ மிகளேழும் விளம்பக்கேளாய்

உண்டு உறங்கி மனோராச்சியம் செயல் (அனுபவித்ததை அனுபவிக்காததை உறக்கத்தில் நினைப்பது) 5.சொப்பனம் எனும் பேர் உடையதாகும்.
பண்டு (பழைய காலத்தில்) கனாக் கண்டு மறந்ததை மீண்டும் நினைப்பது சொப்பன நனாவாம். [6.ஸ்வப்ன ஜாக்ரம்] மண்டும் (பிரபஞ்சம் அடங்கி இருக்கும் அஞ்ஞான) இருள் மூடுவது (ஏழாம் பூமியாகிய) 7. சுழுத்தியாம். அஞ்ஞான வகைகள் சொன்னோம். விண்டு (நீங்கி) நிறை (பரி பூரணமான) முத்தி தரும் ஞான பூமிகள் ஏழும் விளம்பக்கேளாய்.
--
5.சொப்பனம்: சாக்கிரத்தில் அனுபவித்தவை, அனுபவிக்காதவை ஆகியவற்றை தூக்கத்தில காண்பது. கனவு காணும்போது நம்ம வாழ்க்கையில முன்னே நடந்ததே வரலாம்; அதே நபர்கள், இடங்கள் இப்ப இல்லைன்னா கூட வரலாம்; புது நபர்கள் இடங்கள் .. நனவில நம்மால செய்ய முடியாதது - பறக்கிறது போல - வரலாம்.

6. சொப்பன சாக்கிரம்: முன்பு கண்ட சொப்பனத்தை மீண்டும் சாக்கிரத்தில் காண்பது. அதாவது நாம் கண்ட கனவை நடந்தபடியே திருப்பி நினைவுக்கு கொண்டு வரது. நம்ம ஜீவா வெங்கட்ராமன் இப்படி செஞ்சு சுவையான பதிவுகள் எழுதி இருக்கார்.

7. சுழுத்தி: மேற்கண்ட 6 அவஸ்தைகளும் இல்லாது கருவி கரணங்கள் எல்லாம் ஒடுங்கி அஞ்ஞான இருள் மூடி இருக்கும் நிலை.

நாம் தூங்கப்போகு முன் இந்த நிலைகளை கடந்தே போகிறோம். அதே போல இவற்றை கடந்தே விழிப்புக்கு வருகிறோம். அவை தானியங்கியாக நடப்பதால் நமக்கு புலப்படவில்லை.


2 comments:

Geetha Sambasivam said...

பதிவு முழுசாத் திறக்கறதுக்குள்ளே பாட்டு மட்டும் வந்தது. அர்த்தமும் புரியுது. ஆனால்?????????

திவாண்ணா said...

என்ன சஸ்பென்ஸ் வைக்கிறீங்க?
இப்ப போன 3 பகுதிகளையும் சேத்து படிச்சு பாருங்க.