Pages

Friday, October 29, 2010

மோக்ஷம்:



विवेकख्यातिरविप्लवा हानोपायः ।।26।।

விவேகக்²யாதிரவிப்லவா ஹாநோபாய​: || 26||

விவேகக்²யாதி: = ப்ரக்ருதி சம்பந்தமில்லாத புருஷனை சாக்ஷாத்கரிப்பது; அவிப்லவா = (மித்யாக்ஞான வாசனையால்) தடை செய்யப்படாத; ஹாந உபாய​: = மோக்ஷத்துக்கு காரணமாகிறது.
ப்ரக்ருதி வேறு புருஷன் வேறு என்று அறிவதே விவேகக்யாதி. இது சாஸ்திர அப்யாஸத்தால் உண்டாகும். இருப்பினும் வெகு கால பழக்கத்தால் இது நாசமாக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே விவேக க்யாதி ஏற்பட்டதும் இதை அடிக்கடி மனனம் செய்து நிலைநாட்டி விட்டால் எல்லா விஷயங்களிடத்திலும் வைராக்கியம் ஏற்படும். புருஷன் பால் ஈர்க்கப்பட்ட சித்தம் அதையே ஆவ்ருத்தி செய்து வளர்த்துவரும். இந்த த்யான மகிமையால் இயங்கு சக்தியான புருஷ பிரதி பிம்பத்தை அனுபவிக்கலாம். இது வாசனைகளால் ஏற்படும் பொய்யறிவை நாசமாக்கும். பிராரப்தமான சரீரம் தொலைந்து போகும். இனி துக்கமே ஏற்படாத மோக்ஷம் கிடைக்கும்.

Thursday, October 28, 2010

ஹேயத்தின் ஹானம் என்கிற மோக்ஷம்:



तदभावात् संयागाभावे हानं तद्दृशेः कैवल्यम् ।।25।।

தத³பா⁴வாத் = ஸம்°யாகா³பா⁴வே ஹாநம்° தத்³த்³ரு«ஶே​: கைவல்யம் || 25||

தத³பா⁴வாத் = அது நிகழ்வதால் (வாசனையுடன் கூடிய அவித்யை நாசமாவதால்) ஸம்°யாக³= புத்தி புருஷன் சம்பந்த ரூபமான ஹேயத்துக்கு; அபா⁴வ: = நாசம்; ஹாநம்° தத்³ = அந்த ஹானமே த்³ரு«ஶே​: = புருஷனுக்கு; கைவல்யம்= முக்தி ஆகிறது.

வாசனையுடன் கூடிய அவித்யை விவேக - க்யாதியால் நாசமடைகிறது. அவித்தையால் ஏற்பட்ட புத்தி சம்பந்தமும் விலகிவிடுகிறது. அப்போது புருஷன் எத்தகைய சம்பந்தமும் இன்றி தன் சொரூபத்தில் இருப்பான். இதுவே கைவல்யம் என்கிற முக்தி.

Wednesday, October 27, 2010

ஸம்யோகத்துக்கு காரணம்:




  तस्य हेतुरविद्या ।।24।।

தஸ்ய ஹேதுரவித்³யா || 24||

தஸ்ய =அதன் (முன் சொன்ன த்ருச்ய-த்ரஷ்டா ஸம்யோகத்தின்) ஹேது = காரணம்; அவித்³யா = அஞ்ஞானம்.
அந்த காரணம் என்னவென்றால் அஞ்ஞானம்.
புருஷனுக்கும் ப்ரக்ருதிக்கும் நான் என்ற வேறுபாடு தோன்றும் போது அது பிரமை (பிரமம்)[பிரம்மம் இல்லை!] ஆகிறது. இந்த பிரமை உள்ள சித்தம் ப்ரலய காலத்தில் ப்ரக்ருதியில் ஒடுங்கும் (லயமாகும்). சிருஷ்டி காலத்தில் வெளிப்பட்டு புருஷனின் நுகர்பொருள் (போக்யம்) ஆகிறது. இப்படி ஸம்யோகம் ஆகும்போது அவிவேகிக்கு பந்தம் ஏற்படுகிறது. அவித்தை விலகி, அதனால் ஏற்பட்ட ஸம்யோகமும் விலகின விவேகிக்கு பந்தம் ஏற்பட காரணம் இல்லை. அதனால் முக்தி அடைகிறான். அவிவேகிக்கு பந்தம் உள்ளதால், அவித்யையின் வாசனை இருப்பதால் ப்ரக்ருதியில் லயமானாலும் முக்தி ஏற்படாது. விவேகக்யாதி, தர்மமேக ஸமாதி ரூபத்தை அடையும் போதுதான் சித்தம் வறுபட்ட விதை மீண்டும் முளைக்காதது போல வாசனைகள் நீங்கி வளர்ச்சி அடைதலை நீங்கும். அப்போது புருஷன் மட்டுமே இருப்பதால் அந்நிலை மோக்ஷம் ஆகும்.

Tuesday, October 26, 2010

ஸம்யோகம்



स्वस्वामिशक्त्योः स्वरूपोपलब्धिहेतुः संयोगः ।।23।।

ஸ்வஸ்வாமி ஶக்த்யோ​: ஸ்வரூபோபலப்³தி⁴ ஹேது​: ஸம்°யோக³​: || 23||

ஸ்வ (சக்தி) = த்ருஷ்யமாக இருக்கும் தன்மை; ஸ்வாமி ஶக்த்யோ​: = த்ரஷ்டாவாக இருக்கும் தன்மை (இவற்றுக்குரிய யோக்யதை உடைய); ஸ்வரூப = பற்பல வடிவமான புத்தியின் த்ருஷ்ய சொரூபம் , ஸ்வாமியின் த்ரஷ்டா சொரூபம்; உபலப்³தி⁴ = போகம், முக்தி (அபவர்க்கம்) இரண்டின் தோற்றத்துக்கு; ஹேது​: = காரணமாக இருப்பது; ஸம்°யோக³​: = ஸம்யோகம் ஆகும்.

இதுவே பலவாறாக ஸ்வ-ஸ்வாமி பாவம், த்ருஷ்யமாயும், த்ரஷ்டாவாயும் இருத்தல்; போக்யமாயும்- போக்தாவாகவும் இருத்தல் எனப்படுகிறது.

ப்ரக்ருதிக்கோ அதனால் ஏற்பட்ட புத்திக்கோ சுயமாக யோக்யதை ஏதுமில்லை. அவை ஜடமாகும். புருஷன் தன் அருகில் உள்ள புத்தியால் காண்பிக்கப்படும் விஷயங்களை பிரகாசப்படுத்துகிறான். (வெளிச்சம் போட்டுக்காட்டுகிறான்) அதனால் அவற்றுக்கு ஒரு யோக்யதை உண்டாகிறது. அவை நுகர் பொருட்கள் (போகம்) ஆகின்றன. இவற்றால் - இந்த போகங்களால், புருஷன் நுகர்வோன் (போக்தா) ஆகிறான். எப்படி எனில் நுகர்தல் (போகம்) ஏற்பட்டதே புருஷனின் சக்தியால்தான். இப்படி பரஸ்பரம் ஒரு யோக்யதை உண்டாக்கப்படுகிறது. இப்படி எது உண்டாக்குகிறதோ, அந்த காரணமே ஸம்யோகம் ஆகும்.

Friday, October 22, 2010

ஒருவன் முக்தி அடைந்துவிட்டால் ...



कृतार्थ प्रति नष्टमप्यनष्टं तदन्यसाधारणत्वात् ।।22।।
க்ரு«தார்த²ம் ப்ரதி நஷ்டமப்ய நஷ்டம்° தத³ந்ய ஸாதா⁴ரணத்வாத் || 22||

த்ருஷ்யமானது, க்ருதார்த்தம் =முக்தி அடைந்த ஒருவனைக்குறித்து; நஷ்டமபி = நாசமானாலும்; தத³ந்ய = அவனைவிட வேறான; ஸாதா⁴ரணத்வாத் = சாமான்யர்களுக்கு; அநஷ்டம்° = நாசமாகாமல் ஆகும்.

த்ரஷ்டா இருப்பதால்தான் த்ருஷ்யம் இருக்கிறது என்றால் ஒருவன் முக்தி அடைந்துவிட்டால் அவன் பார்த்த பொருட்கள் எல்லாம் அழிந்துவிடும் என்றில்லை. ப்ரக்ருதி ஒன்றுதான் என்றாலும் சீவர்கள் அனேகர். எவன் அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவித்துவிட்டானோ, எவன் முக்தியை அடைந்து விட்டானோ அவனுக்கு ப்ரக்ருதியால் ஆக வேண்டியது ஏதுமில்லை. அதனால் அவனைப்பொறுத்த வரை மட்டுமே அவை நாசமாகின்றன. மற்றவர்களுக்கு அவை இருக்கவே இருக்கும். அவர்களுக்கு ப்ரக்ருதி செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருக்கும். முக்தனை பொறுத்த வரை அதனால் பிரயோசனம் ஒன்றுமில்லை.