Pages

Friday, November 16, 2012

குருவே சரணம்

 

ஒருவருக்கு வாழ்வில் என்ன கிடைக்கிறதோ இல்லையோ குரு கிடைக்க வேண்டும்.

நம் வாழ்வில் அம்மாவே முதலில் எல்லாம் கற்றுக்கொடுக்கிறார். பின் தந்தை. அதன் பின் பள்ளியில் ஆசிரியர்கள் உலகாயத வித்தை கற்றுத்தருவர். நாமே பலரைப்பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்வோம். இதெல்லாம் லௌகீக சமாசாரங்கள்.

நாம் உலகில் பிறப்பது கர்மாவை தீர்த்து, ஆன்மீகத்தில் முன்னேறவே. அப்படி முன்னேறுவதையே சரியான முன்னேற்றம் என்று சொல்லலாம். நமக்கு ஏற்படும் மற்ற வசதிகள் - நல்ல வேலை, பணம் காசு, வீடு என்றெல்லாம் அமைவது இந்த முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கவே. இது ஏணிதான். ஏணியிலேயே யாரும் உட்கார்ந்து கொள்வார்களா என்ன? அதன் உதவியுடன் மேலே போக வேண்டிய இடத்துக்கு போக வேண்டும். அது போல கிடைக்கும் இந்த வசதிகளை அனுபவிப்பதிலேயே நம் வாழ்க்கையை கழித்து விடக்கூடாது. ஆன்மீக நிலையில் மேலே போக பார்க்க வேண்டும்.
இந்த பயணத்தில் வேதங்களையோ, சாத்திரங்களையோ, அல்லது நாம் நடந்து கொள்ள வேன்டிய முறைகளையோ சொல்லித்தருபவர் ஆசான், ஆசார்யன். அதன் படி நாம் நடந்து வரும் போது சில சமயம் சரியான நேரத்திற்கு ஒரு வழி காட்டி வந்து இப்படி போ என்று சொல்லிவிட்டு போய்விடுவார். அத்துடன் அவர் வேலை முடியும். இவர் வழிகாட்டி, மார்க்க தர்சி. ஆனால் கடைசியாக கூடவே இருந்து முக்திக்கு வழி காட்டுபவரே உண்மையான குரு.

எல்லோருக்கும் ஒவ்வொரு குரு இருப்பார். அவரை கண்டு பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லையானால் ஆன்மீக முன்னேற்றத்தை அதிகம் பெற இயலாது. திருப்பித் திருப்பி பிறந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். குரு அருள் பெறாதவர்களுக்கு அவர் உலகின் மறு கோடியில் இருப்பார் என்பார்கள். அந்த மறு கோடி எது? உலகை ஒரு சுற்று சுற்றினால் அடைவது நம் முதுகு பக்கத்தைதான் என்றார் விஷயம் தெரிந்த ஒரு குழந்தை! அதாவது நம் பார்வை அவரை விட்டு எதிர் திசையில் போய் விடுகிறது! ஆனால் அவரோ நம்மை பார்த்துக்கொண்டே இருக்கிறார். சினிமா போல கவர்ச்சியான இந்த உலக வாழ்க்கையிலேயே உழன்று கொண்டு இருந்தால் குரு கவலையுடன் பார்த்துக்கொண்டு இருப்பார். எப்போது அதை விட்டு ஆன்மீகம், இறைவன், குரு என்று பார்வையை திருப்புகிறோமோ அப்போது சந்தோஷமாக நமக்கு உதவி செய்ய ஆரம்பித்துவிடுவார். அவரிடம் முழுக்க சரண் அடைந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்; அப்புறம் பிரச்சினையே இல்லை. நமக்கு வேண்டியதை அவரே பார்த்துக்கொள்வார். ஆனால் இந்த பூரண சரணாகதி என்பதுதான் ரொம்பவே கஷ்டம்!

அது வரை அவர் சொல்லுகிற வேலைகளை முழு முயற்சியுடன் செய்து வர வேண்டும். அது நம் புத்திக்கு என்னதான் 'சில்லி' யாக தோன்றினாலும், என்னதான் முடியவே முடியாது என்று தோன்றினாலும்! நாம் கடை தேர ஒரே நிச்சய வழி இதுவே!
--

ஆரம்ப காலத்தில் வலை உலகில் வலைப்பூக்களை மேய்ந்த போது சோகமே மிஞ்சியது. ஒரே அடிதடியைத்தான் பார்க்க முடிந்தது. இது பற்றி விவாதித்துக்கொண்டு இருந்த போது மா.சிவகுமார் "ஏன் மற்றவர்களை குறை சொல்ல வேண்டும்? இதற்கு மாற்று நல்ல விஷயமாக நீங்களே எழுதுவதுதான்” என்றார். அப்போது நானும் எழுதுகிறேன் பார் என்று எழுத ஆரம்பித்து நல்ல சேதியிலிருந்து ஆன்மீகத்துக்கு மாறி விளையாட்டாக 1007 பதிவுகளைத்தாண்டி 1008 ஆம் பதிவில் நிற்கிறேன்.

ஆன்மீகம் தெரிந்ததால் எழுதவில்லை. அதை தெரிந்து கொள்ளவே எழுத ஆரம்பித்தேன். புரிந்து கொள்ளாமல் எழுத முடியாது என்பதால், படித்ததை என் மொழியில் எழுதினால் ஒரு தெளிவு கிடைத்தது. ஒரு விஷயம் பற்றி எழுதி முடித்ததும் அடுத்ததற்கு தானாக விஷயம் வந்து சேர்ந்தது. ஒரு புத்தகம் பார்வைக்கு வரும்; யாரேனும் ஒரு கேள்வி கேட்பார்கள். இப்படி ஏதோ ஒன்று எழுத எடுத்துக்கொடுத்தது. அந்த ஏதோ ஒன்று இறைவனே என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை!

ஆன்மீகம் பார் டம்ப்மீஸ் என்று எழுதக்காரணம் வெகு பிரபலமான கணினி சார் வெளியீடுகளான … for dummies புத்தகங்களே. அதாவது அடிப்படை தெரியும் என்று நினைக்காமல் எல்லோருக்கும் புரியும் படி அடிப்படையிலிருந்து சொல்லிக்கொடுப்பது. அப்படி எழுதவே முயற்சி செய்தேன். மிகவும் சவாலாக இருந்தது ஞான மார்கம் குறித்து எழுதியதுதான்.

இப்படியே தொடர்ந்து ஓரளவு வெற்றியும் பெற்று விட்டேன் என்றால் அதற்கு காரணம் குருவருளும் பெரியவர்கள் ஆசீர்வாதமும்தான். ஆரம்பத்தில் ஆன்மீகம் யார் படிக்கப்போகிறார்கள் என்று நினைத்தாலும் எழுதுவதன் நோக்கம் வேறாக இருந்ததால் பிரச்சினை இருக்கவில்லை. இருந்தாலும் 1008 பதிவுகளும் 110 பாலோயர்களும் தினசரி சுமார் 100 பேஜ்ஹிட்டும் ஆன்மீகம் படிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகின்றன. அது சீரியஸாக படிக்கீறார்களோ, சும்மா படிக்கிறார்களோ, தெரிந்து கொள்ள படிக்கிறார்களோ வேறு எதற்கோ! இருந்துவிட்டு போகட்டுமே! அது என்றோ ஒரு நாள் வேலை செய்யும்!

நல்ல விஷயங்கள் புரிகிறாற்போல இருந்திருந்தால் அது இறை அருள். புரியாமல், சரியாக எழுதாமல் இருந்திருந்தால் அது என் குறை.

நன்றி!

Thursday, November 15, 2012

விதியா மனித முயற்சியா?

 
ஒரு நாள் மாலை ஒரு சீடர் ஸ்வாமிகளின் உபதேசங்கள் சிலதை பெற அவரை அணுகினார். ஆனால் எப்படி பேச ஆரம்பிப்பது என்று புரியவில்லை. ஸ்வாமிகள் அவர் மீது கருணை கொண்டு தானே பேச்சை ஆரம்பித்தார்.

ஸ்வாமிகள்: வேதாந்த பாடங்களை தொடர்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

சீடர்: தினமும் நியமமாக படிப்பதாக சொல்ல முடியவில்லை, அவ்வப்போது படிக்கிறேன்.

படிக்கும்போது பல சந்தேகங்கள் ஏற்பட்டு இருக்குமே?

அதற்குக்கூட அவ்வளவு ஆழமாக புரிந்து படிப்பதாக சொல்ல முடியவில்லை.

சாத்திர சம்பந்தமான சந்தேகங்களை சொல்லவில்லை. யாரும் எந்த விஷயம் குறித்தும் தீவிரமாக யோசிக்கும் போது சில சந்தேகங்கள் ஏற்படும், இல்லையா?

ஆமாம். அந்த மாதிரி சந்தேகங்கள் நிறையவே இருக்கின்றன.

அதில் ஏதாவது ஒன்றை சொல்லுங்களேன். அதை எப்படி தீர்க்க முயற்சி செய்தீர்கள் என்றும் சொல்லுங்கள்.

அத்தகைய சந்தேகம் ஒன்றை சொல்லுகிறேன். அது அடிக்கடி என் மனதில் எழுகிறது. அதற்கு தீர்வு ஏதுமெனக்கு புலப்படவில்லை. தாங்கள் அதை தீர்த்து வைக்க முடியுமானால் நன்றி உடையவனாக இருப்பேன்.

தயை செய்து அதை சொல்லுங்கள்.

அது ஒன்றுமில்லை. விதி, மனித முயற்சி குறித்த தீராத விரோதம்தான். இவற்றின் வீச்சு எதுவரை? இவற்றின் மோதலை எப்படி தவிர்க்கலாம்?

இது மிகப்பெரிய பிரச்சினைதான். நீங்கள் கேட்கும் விதத்தில் கேட்டால் பெரிய பெரிய நபர்களின் புத்திக்கும் இதன் விடை புலப்படாது!

ஏன்? நான் கேட்கும் விதத்தில் என்ன தவறு? உண்மையில் என் பிரச்சினையை மட்டுமே சொல்லி இருக்கிறேன். அதை தீர்ப்பதில் இருக்கும் கஷ்டத்தைப்பற்றி இன்னும் சொல்லவே இல்லையே?

உங்கள் சந்தேகத்தை சொல்வதிலேயே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது!

எப்படி?

மோதல் என்பது இரு வெவ்வேறு விஷயங்கள் இருந்தால்தானே ஏற்பட முடியும்? ஒரே ஒரு விஷயம் இருந்தால் மோதல் எப்படி ஏற்பட முடியும்?

ஆனால் இங்கே விதி, மனித முயற்சி என்று இரண்டு விஷயங்கள் இருக்கின்றனவே?

சரிதான், இந்த அனுமானம்தான் மனதில் சந்தேகம் எழக்காரணம்!

அது என் அனுமானம் இல்லையே! அவற்றின் இருப்பை நான் ஒப்புக்கொள்கிறேனோ இல்லையோ அவை தனித்தனியா இருக்கின்றனவே!

அங்கேதான் தவறு இருக்கிறது.

எப்படி?

சனாதன தர்மத்தை பின் பற்றுவராக இருந்தால் விதி என்பது தன்னிலும் வேறல்ல என்று தெரிய வேண்டுமே? அது போன ஜன்மத்தில் நீங்கள் செய்த செயல்களின் மொத்த வடிவமேயாகும். கடவுள் இவற்றை வழங்குபவர் மட்டுமே. விதிக்கு காரணம் உங்கள் செயல்களே. அவை கடவுள் உருவாக்கியனவல்ல. மனித முயற்சி என்பது இப்போது நீங்கள் செய்யும் செயல்களாகும்.

இன்னும் அவை எப்படி இரண்டு வெவ்வேறு விஷயங்கள் அல்ல என்பது புரியவில்லை.

இப்படி பாருங்கள். விதி என்பது முந்தைய கர்மா, மனித முயற்சி என்பது இப்போதைய கர்மா. இரண்டும் உண்மையில் ஒரே விஷயம்தான், காலத்தில் மட்டுமே வேறுபடுகின்றன. உண்மையில் ஒன்றாகவே இருப்பதால் மோதல் இருக்க முடியாது.

காலத்தால் வேறுபாடு என்பதை உதாசீனம் செய்ய முடியாதே! அது மிக முக்கியமானதில்லையா?

அதை நீங்கள் உதாசீனம் செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. அதை இன்னும் ஆழ்ந்து பாருங்கள் என்கிறேன். நிகழ் காலம் உங்கள் முன் இப்போது இருக்கிறது; உங்கள் மனித முயற்சியால் அதை வடிவமைக்க முயற்சி செய்யுங்கள் என்கிறேன். கடந்த காலம் கடந்துவிட்டது. அது உங்கள் முன் இப்போது இல்லை, காண முடியாது. அதனால்தான் அதற்கு அத்ருஷ்டம் - பார்க்க முடியாதது - என்று பெயர். இரண்டும் உங்கள் முன் இல்லாததால் அவற்றில் எது பலமானது என்று ஆராய முடியாது. நாமே வரையறுத்தபடி மனித முயற்சி என்னும் நிகழ் கால கர்மா நம் முன் இருக்கிறது. கடந்த கால கர்மாவை காண முடியவில்லை. இரண்டு மல் யுத்த வீரர்கள் நம் முன் உட்கார்ந்திருக்கும் போதே நம்மால் யார் பலசாலி என்பது சரியாக நிச்சயமாக அனுமானிக்க முடியாமல் இருக்கிறது. ஒருவருக்கு எடை கூடுதலாக இருக்கும், மற்றவரால் சுறுசுறுப்பாக செயல் பட முடியலாம். ஒருவர் நல்ல சதை பிடிப்புடன் இருக்கலாம், மற்றவர் மனதில் உறுதியுடன் இருக்கலாம். ஒருவர் நிறைய பயிற்சி செய்து இருக்கலாம், மற்றவர் நிதானமாக கலக்கமற்ற முடிவு எடுப்பவராக இருக்கலாம். இதே போல பல விஷயங்கள் இருக்கும். மல் யுத்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இவற்றைக் கொண்டு முடிவில்லாமல் விவாதித்துக்கொண்டே இருக்கலாம். நடப்பு என்னவென்றால் எதை பலம் என்று நினைக்கிறோமோ அது போட்டி நேரத்தில் பலகீனமாகக் கூட ஆகிவிடலாம்! இவற்களில் யார் வெற்றி பெறுவார் என்று அறிய ஒரே நிச்சயமான வழி இருவரையும் போட்டியில் இறக்குவதுதான். இப்படி இருக்கும் போது எப்படி மனித முயற்சிக்கும் காணமுடியாத விதிக்கும் இடையே மோதல் என்று, எது நடக்கும் என்பதற்கு விவாதம் மூலம் தீர்வு காண முயல்கிறீர்கள்?

அப்படியானால் இதற்கு தீர்வே இல்லையா? 

இருக்கிறதே! மல் யுத்த வீரர்கள் மோதிப்பார்ப்பதே தீர்வு. யார் பலசாலி என்று தெரிந்துவிடும்!

அதாவது மோதலின் முடிவில்தான் யார் பலசாலி என்று தெரியும். அப்போது தெரிந்து என்ன ஆகப்போகிறது? அதற்கு வேலையே இல்லாமல் போய்விடும்.

ஆமாம். மோதலே முடிந்துவிடும்.

ஆகவே, மோதலுக்கு முன் தீர்வை கண்டு பிடிக்க முடியாது; மோதலுக்குப்பின் தீர்வை கண்டு பிடிக்க அவசியமே இல்லை. அதனால் பிரச்சினைக்கு தீர்வே இல்லை.

ஆமாம். எப்படியும் விதி, மனித முயற்சிகளுக்கு இடையே எது வலிமையானது என்று விசாரிப்பதில் அர்த்தமே இல்லை!

சரிதான்! நீங்கள் அப்படியானால் விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிடச் சொல்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. மாற்றாக நீங்கள் முழுக்க முழுக்க மனித முயற்சியில் ஈடு பட வேண்டும்.

அதெப்படி

Wednesday, November 14, 2012

சுக சாதனம் - 6

 
தலைவர்: ஆனால் அந்த மூன்றாம் வழி என்ன?

ஸ்வாமிகள்: அது வேறொன்றும் இல்லை, மன சஞ்சலத்துக்கு இடம் கொடாமல் இருப்பதே!

அதை எப்படி செய்வது?

நோயை உண்டு பண்ணும் விஷயம் எதற்கும் மனிதன் இடம் தராமல் இருக்கும் வரை ஆரோக்கியமாக இருப்பான் அல்லவா?

ஆமாம்.

அதே போல தன் மன சமநிலையை பாதித்து துன்பம் தரும் எதற்கும் அவன் இடம் தராமல் இருந்தால் சுகமாக இருக்கலாம். வரு முன் காப்போன் என்கிற சொலவடைதான் இங்கே பயன்படுகிறது. உங்களை சுத்தமாக இருப்பதாக சொல்லிக்கொள்ள கைகளை சேற்றில் தோய்த்துவிட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது புரிகிறது. உண்மையான சுகம் என்பது பொருட்களை விரும்புவது வெறுப்பது ஆகியவற்றில் இருந்து வருவதல்ல. அவற்றுக்கு சம்பந்தமே இல்லாமல் மன சம நிலையில் இருப்பதே.

அப்படியேதான்.

ஆனால் அப்படிப்பட்ட சம மன நிலையை விருப்பு வெறுப்புகள் உண்டாக்கும் விஷயங்கள் ஏராளமாக இருக்கும் இந்த உலகத்தில் எப்படி பெற்று நிலை நிறுத்துவது?

எப்படியும் விருப்பு வெறுப்புகள் நிரம்பிய கிடங்கில் உள்ளவற்றை தீர்த்துவிட்டு சுகத்தை அடைவது என்பதைவிட, இது நடக்கக்கூடிய சாத்தியம் அதிகம்தான்.

அது அசட்டுத்தனமாக தோன்றினாலும் நீங்கள் சொல்வது நடைமுறை சாத்தியம் இல்லாதது போல இருக்கிறதே?

ஏன் அப்படி? ஒரு வேளை உங்களிடம் இருபது பொருட்கள் இருப்பதாக வைத்துக்கொள்ளலாம். அவற்றில் ஒன்றை பார்த்தாலும் உங்களுக்கு எரிச்சல் வருகிறது. எது சுலபம்? அவற்றை ஒவ்வொன்றையும் துணி போட்டு மூடுவதா, இல்லை உங்கள் கண்களை மூடிக்கொள்வதா?

சந்தேகமில்லை. கண்களை மூடிக்கொள்வதுதான்.

அதே போலத்தான் உலகத்தில் உள்ள கணக்கற்ற, உங்களை பாதிக்கும் விஷயங்களை கட்டுப்படுத்தவோ, மாற்றவோ அழிக்கவோ, உருவாக்கவோ உங்களால் முடியாது. ஆனால் நீங்கள் உங்கள் மனதை மெதுவாக கட்டுப்படுத்தி இவற்றால் சஞ்சலமடையாமல் இருக்க பயிற்சி கொடுத்துவிட முடியும். அது நம்மால் முடியக்கூடியதுதான். உங்கள் முன்னோர்கள் சுகமாக இருந்ததற்கு காரணம் அவர்களுக்கு இன்னும் அதிக சந்தோஷத்தைத்தரும் வசதிகள் இருந்ததோ அல்லது துக்கத்தை தருவன குறைவாக இருந்ததோ இல்லை. அவர்களால் மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள முடிந்தது. அது ஓய்வு, அமைதி, போதுமென்ற மனத்தையும் அதனால் சுகத்தையும் கொடுத்தது. வெளி விஷயங்கள் சந்தோஷத்தை தர அவர்கள் அவற்றை சார்ந்திருக்கவும் இல்லை; அவை துக்கத்தை தர அனுமதிக்கவும் இல்லை. அவர்களது அமைதியும் சாந்தமும் திருப்தியும் இயல்பானது, இயற்கையானது, ஆரோக்கியமானது. ஆகவே அது இன்னும் அதிக நாள் நிலை நிற்பதாக இருந்தது. நீங்கள் சுகமாக இருக்க விரும்பினால் அத்தகைய மன நிலையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக அந்தணர்களுக்கு அத்தகைய மன நிலை உடன் பிறந்தது; உள் நிறைந்தது. அதை உதாசீனம் செய்துவிட்டு வெளி உலகில் அவன் சுகத்தை தேடுவானேயானால் அவன் அதை அடுத்த பிறவியிலும் பெறுவது துர்லபமே! ஏனெனில் கொடுத்த ஒரு வெகுமதியின் பெருமை உணர்ந்து சரியாக பயன்படுத்தாவிட்டால் அடுத்த பிறவியில் அந்த வெகுமதியை கடவுள் கொடுக்க மாட்டார். உங்கள் பிறப்புரிமையான திருப்தி என்ற ஸ்வபாவத்தை விட்டுக்கொடுக்காதீர்கள். உங்கள் ஸ்வதர்மங்களை - கடமைகளை மறக்காதீர்கள். உங்களுக்கு உதவ கடவுள் வருவார் என்ற நம்பிக்கையுடன் ப்ராம்மண்யத்தை மீண்டும் தேடிப்பெற்று நிலைநிறுத்துங்கள்.

நாங்கள் எங்களால் முடிந்த வரை அப்படி செய்யப்பார்க்கிறோம். ஆனாலும் இது ப்ராம்மணர்களுக்கு போதாத காலம்தான்.

மோசமான நாட்கள் எப்போது தோன்றின? அதையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்தணர்கள் ஆசாரம் தர்மங்களை கைவிட்டுவிட்டு உலக சமாசாரங்களில் போட்டி போட ஆரம்பித்த போதுதான் அது துவங்கியது. அவர்கள் தாம் யார் என்பதை மறந்து, கொஞ்சமும் நன்றியில்லாமல் காலங்காலமாக வந்த பாரம்பரியத்தை துஷ் பிரயோகம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த பந்தயத்தில் பின்னே தள்ளப்பட்டவர்கள் முதலில் ஆச்சர்யத்துடனும் பின் பொறாமையுடனும் இப்போது வெறுப்புடனும் பார்க்க ஆரம்பித்தார்கள். அந்தணர்கள் இந்த பந்தயங்களில் இருந்து வெளியே போகட்டும்; அவர்களுக்கு உரிய மரியாதையை பழையபடி அவர்கள் திரும்பப்பெறுவார்கள். அவர்கள் பெற்ற மரியாதை மற்றவர்களைவிட அவர்கள் பலமாக இருந்ததாலோ அல்லது பணக்காரர்களாக இருந்ததாலோ இல்லை. மாறாக அவர்களது திருப்தியாக இருக்கும் ஸ்வபாவமே அதை கொடுத்தது. அவர்களது தர்மமே அவர்களை பலமான மற்றவர்களை விட வலிமையுள்ளவர்கள் ஆக்கிற்று. போதாத காலம் என்று நாம் சொல்வதை நாமேதான் உருவாக்கினோம். ஆகவே எப்போது வேண்டுமானாலும் நாமே அதை முடிக்க முடியும். எளிய நம்பிக்கை, நேர்மையான வாழ்கைக்கு திரும்பினால் போதும். நம் முன்னோர்களுக்கு இருந்த தெய்வ ஈடுபாடும், திருப்தியால் ஏற்பட்ட அமைதியும் இருந்தால் போதும். அந்தணர்கள் ஆதர்ச நிலையில் இருந்து எவ்வளவு கீழே விழுந்துவிட்டார்கள் என்பதை சரியாக உணர்த்துமானால் போதாத காலம் அவ்வளவு கெட்டதாக இல்லாமல் நல்லதாகவே முடியும்.
நிறைந்தது.

Tuesday, November 13, 2012

சுக சாதனம் - 5


அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்! மின் தடை விரைவில் நீங்கி எல்லார் வாழ்விலும் ஒளி ஏற்றட்டும்!


அப்படியானால் எப்படித்தான் அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுவது?

ஆரோக்கியமாக இருக்க அதற்கு முன் ரோகியாக இருக்க வேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா?

நிச்சயமாக இல்லை!

நோய் ஒன்றுமில்லாத போது ஒருவன் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லப்படுகிறான். அவன் முன்னால் நோய்வாய்ப்பட்டு இருக்க வேண்டும் என்று ஒன்றுமில்லையே?

இல்லை!

ஆகவே ஆரோக்கியமான மனிதன் யார் என்றால் நோய்வாப்பட்டு இருந்து இப்போது சுகமாக இருக்கும் ஒருவன் என்று சொல்ல வேண்டியதில்லை. அவன் சுகமாக இருப்பதாக சொல்லலாம். ஆனால் அவனைத்தான் சுகமாக இருப்பதாக சொல்ல முடியும் என்றில்லை. நோய் இல்லாமல் இருப்பதே ஆரோக்கியம்; முன்னால் நோய் இருந்து இப்போது இல்லாமல் இருப்பதல்ல.

சரிதான். ஆனால் எனக்கு இதன் சம்பந்தம் புரியவில்லை.

அதே போல சுகமாக இருப்பது என்றால் துக்கம் இல்லாமல் இருப்பது. முன்னால் துக்கமாக இருந்து இப்போது இல்லை என்றால்தான் சுகம் என்று இல்லை. ஏதேனும் ஆசையாலோ, வெறுப்பாலோ ஒருவருடைய மன சமநிலை தவறினால் ஆசையை பூர்த்தி செய்தோ அல்லது வெறுத்ததை நீக்கியோ அந்த சம நிலையை திரும்பப்பெறுவதே சுகம். ஆனால் சுகமாயிருக்க இப்படி ஒரு சஞ்சலமான மன நிலை தேவை என்று சொல்வது முட்டாள்தனமாகும்.

ஆமாம்.

முன்னால் நோய் இருந்து மீண்டால்தான் ஆரோக்கியம் என்றில்லாமல் இருப்பது போல முன்னால் துக்கம் இருந்து மீண்டால்தான் சுகம் என்றும் இல்லை. உண்மையில் நோயிலிருந்து மீண்டு கிடைக்கும் ஆரோக்கியத்தைவிட, நோய் வராமல் இருக்கும் ஆரோக்கியம் இன்னும் இயற்கையானது; நிலையானது; உண்மையானது. ஒரு மன சஞ்சலம் வராமலே இருக்கும் சந்தோஷம் இன்னும் இயற்கையானது, உண்மையானது, நீடித்து இருப்பது.

அப்படித்தானே இருக்கும்? ஆனால் அத்தகைய சந்தோஷத்தை எப்படி பெறுவது? சாதாரணமாக நமக்கு கிடைப்பது சுகத்தை தேடியும் துன்பத்தை விலக்கியும் கிடைப்பதுதானே?

உண்மைதான். ஆனால் மூன்றாவதாக ஒரு வழி சுகத்தை தேடிப்போகும் தொல்லை இல்லாமலும் அல்லது துன்பத்தை விலக்கும் தொல்லையும் இல்லாமல் இருக்குமானால், அது இன்னும் பூரணமானது, நிலையானது என்று நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையா?

அப்படித்தான். ஆனால் அந்த மூன்றாம் வழி என்ன?

Monday, November 12, 2012

சுக சாதனம் - 4



தலைவர்: ஆனால் இப்போதும் சிலர் நீங்கள் சொல்கிற படி சிரத்தையுடனும் தர்மத்தை கடைபிடித்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றும் எங்களை விட சுகமாக இருப்பதாக தெரியவில்லையே?

ஸ்வாமிகள்: அது சரியில்லை. மற்றவர்களைப் போல அவர்கள் செல்வச் செழிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கும் சுகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றுதான் பார்த்தோமே! சுகம் என்பது மனதின் ஒரு நிலை. அதை வெளியே தோன்றும் பொருட்களின் தனமையாவது எண்ணிக்கையாவது உறுதி செய்ய முடியாது. ஒருவன் மூவுலகத்தின் அதிபதியாகக் கூட இருக்கலாம். அவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று சொல்ல முடியாது;.அவன் எல்லோரையும்விட துக்கியாகக் கூட இருக்கலாம். அதே போல் பரம ஏழையாக இருக்கும் ஒருவன் அவனைப்போல சந்தோஷமானவன் இல்லை என்று சொல்லும்படியும் இருக்கலாம்.

உண்மைதான். அப்படியானால் சுகம் எதை சார்ந்து இருக்கிறது?

சாதாரணமாக நாம் ஏங்கிக்கொண்டு இருக்கும் ஒரு விஷயம் கையில் கிடைத்தால் சந்தோஷப்படுகிறோம்.

ஆம்.

ஒரு விஷயத்துக்கு ஆசை பட்டுக்கொண்டு இருந்த வரை துக்கம் இருந்தது. அது கிடைத்தவுடன் சுகம் வந்துவிட்டது. சஞ்சலமாக இருந்த மனது அமைதியாகிவிட்டது.

ஆமாம்.

அதே போல நமக்கு மிகவும் பிடிக்காத, அருவருப்பான விஷயத்தை விலக்கிவிட்டாலும் சந்தோஷமடைகிறோம்.

ஆமாம்.

ஒரு விஷயத்தை வெறுக்கும் போது நம் மனம் சஞ்சலத்தில் இருக்கிறது. அதை விலக்கியவுடன் மனது அமைதியாகிவிட்டது.

ஆமாம்.

எப்படியானாலும் சந்தோஷம் என்பது மனதின் அமைதிதான் போலிருக்கிறது. அதன் உடனடி காரணம் எதுவானாலும் - அது விரும்பியது கிடைத்ததோ அல்லது வெறுத்தது விலகியதோ ஏதானாலும். மனதின் சஞ்சலம் நீங்கும் போது சுகம் தோன்றுகிறது.

அது உண்மைதான்.

அதே போல மன சஞ்சலம் எப்படி நீங்குகிறது என்பது ஒரு பொருட்டல்ல. ஆசை பட்டதை கிடைக்கச்செய்வதோ அல்லது அருவருப்பதை நீக்குவதோ சாதாரண வழிகளாகும். ஆனால் வேறு எந்த வழியும் இருந்து அதாலும் அதை செய்ய முடியுமானாலும் நிச்சயமாக சுகம் விளையும்.

சரிதான்.

நமக்கு ஆசையை தூண்டும் விஷயங்கள் உலகில் எண்ணற்றன. ஆசைப்பட்ட ஒன்று கிடைத்தால் அதனால் ஏற்பட்டு இருந்த மன சஞ்சலம் நீங்கிவிடும்தான். ஆனால் உடனேயே இன்னொரு ஆசையால் மனச்சஞ்சலம் துவங்கி விடுகிறது. ஆசை வைக்கக்கூடிய விஷயங்கள் எண்ணிக்கை இல்லாதன; ஆகையால் இப்படி ஒன்றின் பின் ஒரு ஆசை முடிவில்லாமல் வந்துகொண்டேதான் இருக்கும்.
ஆகவே ஆசைகளை பூர்த்தி செய்து மனச்சஞ்சலம் இல்லாமல் இருப்பது என்பது நடை முறை சாத்தியமில்லை.
அதே போல நமக்குப் பிடிக்காத விஷயங்களும் அனேகமாக இருக்கின்றன. ஒன்றை நீக்கினால் கொஞ்ச நேரத்திலேயே இன்னொன்று நம்மை தொந்திரவு செய்கிறது. நமக்கு தொந்திரவு செய்யக்கூடிய விஷயங்களும் எண்ணிக்கையில்லாதன. ஆகையால் இதற்கும் முடிவே இல்லை. ஆகவே தொந்திரவு செய்யக்கூடிய விஷயங்களை நீக்கி மனச்சஞ்சலம் இல்லாமல் இருப்பது என்பதும் நடை முறை சாத்தியமில்லை.

ஆனால் நமக்கு நிம்மதி வேண்டி இருக்கிறதே!

உண்மைதான். அதற்காகத்தான் மனசு கேட்பதை கொடுத்தும், மனசு வெறுப்பதை நீக்கியும் மனசுக்கு அமைதி தரப்பார்க்கிறோம். ஆனால் இப்படி செய்தால் அமைதியை தேடிக்கொண்டே இருக்க வேன்டியதுதான். நாம் விரும்பிய போது ஒரு விஷயத்தை பெறுவதோ அல்லது ஒரு விஷயத்தை விலக்குவதோ முழுதும் நம்கைகளில் இல்லை என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.உண்மையில் சுகத்துக்கு சூழ்நிலைகளை நம்பி இருந்தால் நாம் அதன் அடிமைகள் ஆகிவிடுவோம்.

அப்படியானால் எப்படித்தான் அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுவது?