Pages

Monday, November 12, 2012

சுக சாதனம் - 4



தலைவர்: ஆனால் இப்போதும் சிலர் நீங்கள் சொல்கிற படி சிரத்தையுடனும் தர்மத்தை கடைபிடித்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றும் எங்களை விட சுகமாக இருப்பதாக தெரியவில்லையே?

ஸ்வாமிகள்: அது சரியில்லை. மற்றவர்களைப் போல அவர்கள் செல்வச் செழிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கும் சுகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றுதான் பார்த்தோமே! சுகம் என்பது மனதின் ஒரு நிலை. அதை வெளியே தோன்றும் பொருட்களின் தனமையாவது எண்ணிக்கையாவது உறுதி செய்ய முடியாது. ஒருவன் மூவுலகத்தின் அதிபதியாகக் கூட இருக்கலாம். அவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று சொல்ல முடியாது;.அவன் எல்லோரையும்விட துக்கியாகக் கூட இருக்கலாம். அதே போல் பரம ஏழையாக இருக்கும் ஒருவன் அவனைப்போல சந்தோஷமானவன் இல்லை என்று சொல்லும்படியும் இருக்கலாம்.

உண்மைதான். அப்படியானால் சுகம் எதை சார்ந்து இருக்கிறது?

சாதாரணமாக நாம் ஏங்கிக்கொண்டு இருக்கும் ஒரு விஷயம் கையில் கிடைத்தால் சந்தோஷப்படுகிறோம்.

ஆம்.

ஒரு விஷயத்துக்கு ஆசை பட்டுக்கொண்டு இருந்த வரை துக்கம் இருந்தது. அது கிடைத்தவுடன் சுகம் வந்துவிட்டது. சஞ்சலமாக இருந்த மனது அமைதியாகிவிட்டது.

ஆமாம்.

அதே போல நமக்கு மிகவும் பிடிக்காத, அருவருப்பான விஷயத்தை விலக்கிவிட்டாலும் சந்தோஷமடைகிறோம்.

ஆமாம்.

ஒரு விஷயத்தை வெறுக்கும் போது நம் மனம் சஞ்சலத்தில் இருக்கிறது. அதை விலக்கியவுடன் மனது அமைதியாகிவிட்டது.

ஆமாம்.

எப்படியானாலும் சந்தோஷம் என்பது மனதின் அமைதிதான் போலிருக்கிறது. அதன் உடனடி காரணம் எதுவானாலும் - அது விரும்பியது கிடைத்ததோ அல்லது வெறுத்தது விலகியதோ ஏதானாலும். மனதின் சஞ்சலம் நீங்கும் போது சுகம் தோன்றுகிறது.

அது உண்மைதான்.

அதே போல மன சஞ்சலம் எப்படி நீங்குகிறது என்பது ஒரு பொருட்டல்ல. ஆசை பட்டதை கிடைக்கச்செய்வதோ அல்லது அருவருப்பதை நீக்குவதோ சாதாரண வழிகளாகும். ஆனால் வேறு எந்த வழியும் இருந்து அதாலும் அதை செய்ய முடியுமானாலும் நிச்சயமாக சுகம் விளையும்.

சரிதான்.

நமக்கு ஆசையை தூண்டும் விஷயங்கள் உலகில் எண்ணற்றன. ஆசைப்பட்ட ஒன்று கிடைத்தால் அதனால் ஏற்பட்டு இருந்த மன சஞ்சலம் நீங்கிவிடும்தான். ஆனால் உடனேயே இன்னொரு ஆசையால் மனச்சஞ்சலம் துவங்கி விடுகிறது. ஆசை வைக்கக்கூடிய விஷயங்கள் எண்ணிக்கை இல்லாதன; ஆகையால் இப்படி ஒன்றின் பின் ஒரு ஆசை முடிவில்லாமல் வந்துகொண்டேதான் இருக்கும்.
ஆகவே ஆசைகளை பூர்த்தி செய்து மனச்சஞ்சலம் இல்லாமல் இருப்பது என்பது நடை முறை சாத்தியமில்லை.
அதே போல நமக்குப் பிடிக்காத விஷயங்களும் அனேகமாக இருக்கின்றன. ஒன்றை நீக்கினால் கொஞ்ச நேரத்திலேயே இன்னொன்று நம்மை தொந்திரவு செய்கிறது. நமக்கு தொந்திரவு செய்யக்கூடிய விஷயங்களும் எண்ணிக்கையில்லாதன. ஆகையால் இதற்கும் முடிவே இல்லை. ஆகவே தொந்திரவு செய்யக்கூடிய விஷயங்களை நீக்கி மனச்சஞ்சலம் இல்லாமல் இருப்பது என்பதும் நடை முறை சாத்தியமில்லை.

ஆனால் நமக்கு நிம்மதி வேண்டி இருக்கிறதே!

உண்மைதான். அதற்காகத்தான் மனசு கேட்பதை கொடுத்தும், மனசு வெறுப்பதை நீக்கியும் மனசுக்கு அமைதி தரப்பார்க்கிறோம். ஆனால் இப்படி செய்தால் அமைதியை தேடிக்கொண்டே இருக்க வேன்டியதுதான். நாம் விரும்பிய போது ஒரு விஷயத்தை பெறுவதோ அல்லது ஒரு விஷயத்தை விலக்குவதோ முழுதும் நம்கைகளில் இல்லை என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.உண்மையில் சுகத்துக்கு சூழ்நிலைகளை நம்பி இருந்தால் நாம் அதன் அடிமைகள் ஆகிவிடுவோம்.

அப்படியானால் எப்படித்தான் அமைதியையும் சந்தோஷத்தையும் பெறுவது?

2 comments:

sury siva said...

Happy Deepavali

subbu rathna Sharma.

திவாண்ணா said...

நமஸ்காரம் சார்! கங்கா ஸ்னானம் ஆச்சா?