Pages

Thursday, November 15, 2012

விதியா மனித முயற்சியா?

 
ஒரு நாள் மாலை ஒரு சீடர் ஸ்வாமிகளின் உபதேசங்கள் சிலதை பெற அவரை அணுகினார். ஆனால் எப்படி பேச ஆரம்பிப்பது என்று புரியவில்லை. ஸ்வாமிகள் அவர் மீது கருணை கொண்டு தானே பேச்சை ஆரம்பித்தார்.

ஸ்வாமிகள்: வேதாந்த பாடங்களை தொடர்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

சீடர்: தினமும் நியமமாக படிப்பதாக சொல்ல முடியவில்லை, அவ்வப்போது படிக்கிறேன்.

படிக்கும்போது பல சந்தேகங்கள் ஏற்பட்டு இருக்குமே?

அதற்குக்கூட அவ்வளவு ஆழமாக புரிந்து படிப்பதாக சொல்ல முடியவில்லை.

சாத்திர சம்பந்தமான சந்தேகங்களை சொல்லவில்லை. யாரும் எந்த விஷயம் குறித்தும் தீவிரமாக யோசிக்கும் போது சில சந்தேகங்கள் ஏற்படும், இல்லையா?

ஆமாம். அந்த மாதிரி சந்தேகங்கள் நிறையவே இருக்கின்றன.

அதில் ஏதாவது ஒன்றை சொல்லுங்களேன். அதை எப்படி தீர்க்க முயற்சி செய்தீர்கள் என்றும் சொல்லுங்கள்.

அத்தகைய சந்தேகம் ஒன்றை சொல்லுகிறேன். அது அடிக்கடி என் மனதில் எழுகிறது. அதற்கு தீர்வு ஏதுமெனக்கு புலப்படவில்லை. தாங்கள் அதை தீர்த்து வைக்க முடியுமானால் நன்றி உடையவனாக இருப்பேன்.

தயை செய்து அதை சொல்லுங்கள்.

அது ஒன்றுமில்லை. விதி, மனித முயற்சி குறித்த தீராத விரோதம்தான். இவற்றின் வீச்சு எதுவரை? இவற்றின் மோதலை எப்படி தவிர்க்கலாம்?

இது மிகப்பெரிய பிரச்சினைதான். நீங்கள் கேட்கும் விதத்தில் கேட்டால் பெரிய பெரிய நபர்களின் புத்திக்கும் இதன் விடை புலப்படாது!

ஏன்? நான் கேட்கும் விதத்தில் என்ன தவறு? உண்மையில் என் பிரச்சினையை மட்டுமே சொல்லி இருக்கிறேன். அதை தீர்ப்பதில் இருக்கும் கஷ்டத்தைப்பற்றி இன்னும் சொல்லவே இல்லையே?

உங்கள் சந்தேகத்தை சொல்வதிலேயே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது!

எப்படி?

மோதல் என்பது இரு வெவ்வேறு விஷயங்கள் இருந்தால்தானே ஏற்பட முடியும்? ஒரே ஒரு விஷயம் இருந்தால் மோதல் எப்படி ஏற்பட முடியும்?

ஆனால் இங்கே விதி, மனித முயற்சி என்று இரண்டு விஷயங்கள் இருக்கின்றனவே?

சரிதான், இந்த அனுமானம்தான் மனதில் சந்தேகம் எழக்காரணம்!

அது என் அனுமானம் இல்லையே! அவற்றின் இருப்பை நான் ஒப்புக்கொள்கிறேனோ இல்லையோ அவை தனித்தனியா இருக்கின்றனவே!

அங்கேதான் தவறு இருக்கிறது.

எப்படி?

சனாதன தர்மத்தை பின் பற்றுவராக இருந்தால் விதி என்பது தன்னிலும் வேறல்ல என்று தெரிய வேண்டுமே? அது போன ஜன்மத்தில் நீங்கள் செய்த செயல்களின் மொத்த வடிவமேயாகும். கடவுள் இவற்றை வழங்குபவர் மட்டுமே. விதிக்கு காரணம் உங்கள் செயல்களே. அவை கடவுள் உருவாக்கியனவல்ல. மனித முயற்சி என்பது இப்போது நீங்கள் செய்யும் செயல்களாகும்.

இன்னும் அவை எப்படி இரண்டு வெவ்வேறு விஷயங்கள் அல்ல என்பது புரியவில்லை.

இப்படி பாருங்கள். விதி என்பது முந்தைய கர்மா, மனித முயற்சி என்பது இப்போதைய கர்மா. இரண்டும் உண்மையில் ஒரே விஷயம்தான், காலத்தில் மட்டுமே வேறுபடுகின்றன. உண்மையில் ஒன்றாகவே இருப்பதால் மோதல் இருக்க முடியாது.

காலத்தால் வேறுபாடு என்பதை உதாசீனம் செய்ய முடியாதே! அது மிக முக்கியமானதில்லையா?

அதை நீங்கள் உதாசீனம் செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. அதை இன்னும் ஆழ்ந்து பாருங்கள் என்கிறேன். நிகழ் காலம் உங்கள் முன் இப்போது இருக்கிறது; உங்கள் மனித முயற்சியால் அதை வடிவமைக்க முயற்சி செய்யுங்கள் என்கிறேன். கடந்த காலம் கடந்துவிட்டது. அது உங்கள் முன் இப்போது இல்லை, காண முடியாது. அதனால்தான் அதற்கு அத்ருஷ்டம் - பார்க்க முடியாதது - என்று பெயர். இரண்டும் உங்கள் முன் இல்லாததால் அவற்றில் எது பலமானது என்று ஆராய முடியாது. நாமே வரையறுத்தபடி மனித முயற்சி என்னும் நிகழ் கால கர்மா நம் முன் இருக்கிறது. கடந்த கால கர்மாவை காண முடியவில்லை. இரண்டு மல் யுத்த வீரர்கள் நம் முன் உட்கார்ந்திருக்கும் போதே நம்மால் யார் பலசாலி என்பது சரியாக நிச்சயமாக அனுமானிக்க முடியாமல் இருக்கிறது. ஒருவருக்கு எடை கூடுதலாக இருக்கும், மற்றவரால் சுறுசுறுப்பாக செயல் பட முடியலாம். ஒருவர் நல்ல சதை பிடிப்புடன் இருக்கலாம், மற்றவர் மனதில் உறுதியுடன் இருக்கலாம். ஒருவர் நிறைய பயிற்சி செய்து இருக்கலாம், மற்றவர் நிதானமாக கலக்கமற்ற முடிவு எடுப்பவராக இருக்கலாம். இதே போல பல விஷயங்கள் இருக்கும். மல் யுத்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இவற்றைக் கொண்டு முடிவில்லாமல் விவாதித்துக்கொண்டே இருக்கலாம். நடப்பு என்னவென்றால் எதை பலம் என்று நினைக்கிறோமோ அது போட்டி நேரத்தில் பலகீனமாகக் கூட ஆகிவிடலாம்! இவற்களில் யார் வெற்றி பெறுவார் என்று அறிய ஒரே நிச்சயமான வழி இருவரையும் போட்டியில் இறக்குவதுதான். இப்படி இருக்கும் போது எப்படி மனித முயற்சிக்கும் காணமுடியாத விதிக்கும் இடையே மோதல் என்று, எது நடக்கும் என்பதற்கு விவாதம் மூலம் தீர்வு காண முயல்கிறீர்கள்?

அப்படியானால் இதற்கு தீர்வே இல்லையா? 

இருக்கிறதே! மல் யுத்த வீரர்கள் மோதிப்பார்ப்பதே தீர்வு. யார் பலசாலி என்று தெரிந்துவிடும்!

அதாவது மோதலின் முடிவில்தான் யார் பலசாலி என்று தெரியும். அப்போது தெரிந்து என்ன ஆகப்போகிறது? அதற்கு வேலையே இல்லாமல் போய்விடும்.

ஆமாம். மோதலே முடிந்துவிடும்.

ஆகவே, மோதலுக்கு முன் தீர்வை கண்டு பிடிக்க முடியாது; மோதலுக்குப்பின் தீர்வை கண்டு பிடிக்க அவசியமே இல்லை. அதனால் பிரச்சினைக்கு தீர்வே இல்லை.

ஆமாம். எப்படியும் விதி, மனித முயற்சிகளுக்கு இடையே எது வலிமையானது என்று விசாரிப்பதில் அர்த்தமே இல்லை!

சரிதான்! நீங்கள் அப்படியானால் விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிடச் சொல்கிறீர்களா?

நிச்சயமாக இல்லை. மாற்றாக நீங்கள் முழுக்க முழுக்க மனித முயற்சியில் ஈடு பட வேண்டும்.

அதெப்படி

3 comments:

Geetha Sambasivam said...

ரொம்பத் தெளிவாகப் புரியும் வண்ணம் இருக்கிறது. அடுத்ததுக்குக் காத்திருக்கேன். என்னோட மண்டையிலே கூட ஏறுகிறது.

வடுவூர் குமார் said...

இதெல்லாம் ராத்திரி 10 மணிக்கு படிக்கும் பதிவல்ல.நிதானமாக வருகிறேன்.

திவாண்ணா said...

குமார்!
:-)))))