Pages

Monday, April 30, 2018

கிறுக்கல்கள் - 195





எப்படி சந்தோஷமா இருக்கறது?

என்ன கிடைக்குதோ அதை வெச்சுக்கொண்டு திருப்தியா இருக்க கத்துக்கொள்வதன் மூலம்.

அப்படின்னா ஒத்தர் எல்லாத்துக்கும் ஆசைப்படக்கூடாதா?

படலாமே! நான் ஒரு முறை பிரசவ வார்ட்ல சந்திச்ச ஆசாமி மாதிரி மனப்பாங்கு இருந்தா ஆசைப்படலாம். அவர்கிட்ட தாதி சொன்னாங்க: "நீங்க பையனுக்கு ஆசைப்பட்டீங்க. ஆனா பெண் குழந்தை பிறந்திருக்கு.”

இவர் சொன்னார் "ஓ பரவாயில்ல. ஆண் குழந்தை பிறக்காட்டா பெண் குழந்தை பிறக்கட்டும்ன்னு எதிர் பார்த்தேன்!”

Monday, April 23, 2018

அந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை




சாஸ்திரம் அறிந்தவன் உலர்ந்த வஸ்திரத்துடன், பூமியில் தர்ப்பங்களை பரப்பி தர்ப்பணம் செய்ய வேண்டும். தில தர்ப்பணம் வீட்டுக்கு வெளியேதான் செய்ய வேண்டும் என்கிறார் ஹாரீதர். சக்தி அற்றவனானால் பாத்திரத்தில் எள்ளை போட்டு இன்னொரு பாத்திரத்தில் செய்யலாம். ஆனால் மண் பாத்திரம் கூடாது. நிஷித்த காலமானாலும் அரிசி கலந்த ஜலத்தால் செய்யலாம்.
தேவர்களும் பித்ருக்களும் இந்த ஜல அஞ்சலியை விரும்புகிறார்கள். அதிகாரியாக உள்ளவர்கள் இதை செய்யாவிட்டால் நிராசையுடன் திரும்புகிறார்கள். இவர்களது சாபங்களுக்கு பாத்திரமாவான் எனக்கருத்து.
தேவ பூஜை
பூஜை செய்ய சா¢யான காலம் அவரவர் சாகையில் சொல்லப்பட்ட நித்ய கர்மாக்களை செய்து
அக்னிஹோத்ரம் முடித்த காலம். அதாவது ஸந்த்யாவந்தனம், ஔபாஸனம், ப்ரஹ்ம யக்ஞம், ஸூர்ய நமஸ்காரம் முடித்த பிறகு எங்கிறார் ஹாரீதர்.
விக்ஞானேஸ்வரர் மாத்யான்ஹிகத்தில் தர்ப்பணம் முடித்து, சந்தனம் புஷ்பம் அக்ஷதை ஆகியனவற்றை சேகரித்துக்கொண்டு அவரவர் பக்திக்கு தகுந்தபடி ப்ரஹ்மா விஷ்ணு சங்கரன் இவர்களுள் ஒருவரை வேத மந்திரங்களாலும் நான்காம் வேற்றுமையுடன் நம: நம: என்ற சப்தத்துடன் ஆஸனம் முதலிய உபசாரங்களுடன் பூஜிக்க வேண்டும் என்கிறார். ஆகவே காலையிலோ மாத்யான்ஹிக வேளையிலோ பூஜை செய்யலாம். ஸூர்யனிடத்தில் இருந்து ஆரோக்கியத்தையும் அக்னியிடமிருந்து செல்வத்தையும் சங்கரனிடமிருந்து ஞானத்தையும் விஷ்ணுவிடமிருந்து மோக்ஷத்தையும் வேண்டி பெற வேண்டும். தன் விருப்பப்படி ஒருவரையோ பலரையோ வைத்து பூஜை செய்யலாம்.

Sunday, April 22, 2018

திருமணம்




விஷயம் தெரிஞ்சுக்கறதுல பெரிய பிரச்சினை இருக்கு! மாறா நடக்கறப்ப கஷ்டமா இருக்கும். சில மாதங்களாவே கல்யாணம் கார்த்தின்னு போறதை தவிர்த்துட்டேன். அங்க நடக்கற விஷயங்கள் சங்கடமா இருக்கு! இன்னைக்கு காலை ஒரு திருமணம். வரலைன்னுதான் சொன்னேன். வூட்டம்மிணி அதெல்லாம் கெடயாது; போய்த்தான் ஆகணும்ன்னு பிடிவாதம். முன்னேயாவது கொஞ்சம் மறுக்கறது கஷ்டம்; இப்பத்தான் நல்ல எஸ்க்யூஸ் இருக்கேன்னு சொல்லியும் கேட்கலை.

முன்ன்ன்ன்னே ப்ரொசீஜர் சொல்லவும் நடத்தி வைக்கவும்தான் வைதீகர். மாப்பிள்ளைக்கே மந்திரம் தெரியும். இப்பல்லாம் அதுக்கு சான்ஸே இல்லை என்கிறதால வாத்தியார் சொல்லி வெச்சு கர்மா நடக்கிறது. 30- 40 வருஷம் முன்னேயாவது பரவாயில்லை. 'மம' ன்னு சொல்லிக்கோங்கோ ன்னு சொல்வார். இப்பல்லாம் அதுவும் இல்லை. வாத்தியாரே 'மம தர்ம பத்னியா ஸஹ' ன்னு சொல்லிடறார். அவரா செய்யறார்? இல்லை அவரோட தர்ம பத்னி இன்வால்வ் ஆறாங்களா? எல்லாம் அனர்த்தமா போயிண்டு இருக்கு!

இப்ப லேடஸ்ட் புரோகிதர் மைக்ல மந்திரம் சொல்லறது! ஒரு மந்திரத்தை உத்து கேட்டா மனசில அது ரிபீட் ஆகாம இராது. திருமண நேரத்தில இப்படி பலர் சொல்லறது அபத்தம் இல்லையா?
விழாவில வாத்தியம் வாசிக்கறதுக்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கும்ன்னு தோணறது! கிட்டே இருக்கறவங்க காதுல மட்டும் விழட்டும்; மாப்பிள்ளை மட்டும் திருப்பிச்சொல்லட்டும். மத்தவங்களுக்கு வாத்திய சப்தத்திலே காதுல விழாம இருக்கட்டும்! மைக்கிலே சொல்லறப்ப இது எல்லாம் வ்யக்தமா போச்சு. போதாததுக்கு மந்திரங்கள் சொல்லும் போது அரங்கத்தில இருந்த நாதஸ்வர க்ரூப்பை சைகை காட்டி நிறுத்துன்னு சொல்லிட்டாங்க!

எந்த ஹோமத்துக்கும் ஹோமகுண்டத்துக்கும் பூமிக்கு சம்பந்தம் இருக்கணும். அப்படி இல்லாம ஹோமம் செய்யறதுல பலன் இல்லை. இப்ப கட்டுற பல கல்யாண மண்டபங்களில கீழே டைனிங். முதல் மாடிக்கு கார் போறா மாதிரி ராம்ப் போட்டு அங்கேதான் கல்யாணம். இதுல பூமி சம்பந்தம் போயிடும்.

முதன் முதல்ல சுமார் 20 வருஷங்கள் முன்னே ஒரு இனிஷியேடிவ் எடுத்து 'தாலி கட்டின உடனே எல்லாரும் கவரைத்தூக்கிண்டு கை குலக்க வர வேணாம். ஸப்தபதிதான் கல்யாணத்தை உறுதி செய்யறது. மாங்கல்ய தாரணம் இல்லே. ப்ரொசீஜர் முடியற வரைக்கும் காத்திருக்கவும். இவங்களே கீழே இறங்கி வருவாங்க'ன்னு சொல்ல ஏற்பாடு பண்ணினேன். அது நல்லா நடந்துது. ஆச்சரியமா அது எப்படி பரவித்துன்னே தெரியலை. என்னைப்போல இனும் சிலரும் யோசிச்சு இருக்கலாம். இப்பல்லாம் தவறாம அது போல அறிவிப்பு இருக்கு! இன்னைக்கு பொண்ணு பிள்ளைகள் கை குலுக்க வேணாம். அவா அப்பாக்கள்தானே செலவு செய்யறா? இவங்க தலையில் அட்சதையை போட்டுட்டு அவங்க கையில் கவரை கொடுங்கன்னு சொன்னாங்க! பரவாயில்லை.

Friday, April 20, 2018

ஆத்ம குணங்கள் -10






மங்கலம் பற்றிய பதிவில் கைகேயி பற்றி எழுதக்கேட்டிருந்தேன் இல்லையா? சகோதரி கீதா சாம்பசிவம் எழுதி அனுப்பி இருக்கிறார். அவருக்கு நம்  நன்றி!


தம்பி தி.வா. அவர்கள் ஆத்ம குணங்கள் என்னும் தன் பதிவில்  https://anmikam4dumbme.blogspot.in/2018/04/7.html   மங்களங்கள் என்னும் தலைப்பில் எழுதிய கீழ்க்கண்ட விஷயங்கள் தான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. மங்களங்களைப் பற்றி எழுதியவர் கடைசியில் கைகேயி தசரதரை வழிக்குக் கொண்டுவரச் செய்தது குறித்தும் யாரையானும் எடுத்துக் காட்டும்படி சொல்லி இருந்தார். நமக்குத் தான் கையும், வாயும் சும்மா இருக்கிறது இல்லையே! அதிலும் ராமாயணம் என்றால் பாய்ஞ்சுண்டு போக மாட்டோமா! கம்பராமாயணத்தில் குறிப்புக்களைக் கண்டெடுத்தேன். இரண்டு நாட்கள் ஆகின்றன. ஆனால் எழுத முடியலை. இன்னிக்கு எப்படியானும் முடிச்சுடணும்னு உட்கார்ந்தேன்.

ராமனுக்குப் பட்டம் கட்டப் போகும் செய்தி தெரிந்த மந்தரை என்னும் கூனி ஏற்கெனவே ராமன் மேல் கோபம் கொண்டிருந்ததாகவும் கம்பர் சொல்கிறார்.  உண்டி வில்லால் ராமன் தன்னைத் தாக்கியதை நினைவு கூர்ந்ததாகவும் சொல்கிறார். 

"தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில் மேல்
மண்டினாள்--வெகுளியின் மடித்த வாயினாள்;
பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்துள் உள்ளுவாள்."

என்பது கம்பர் வாக்கு. இது வால்மீகியில் காணப்படாதது. எனினும் கூனிக்கு ராமனிடம் கோபம், பொறாமை இருந்தது என்னமோ உண்மை தானே. உடனே அவள் கைகேயியிடம் போய் ராமனுக்குப் பட்டாபிஷேஹம் என்னும் செய்தியைச் சொல்ல முதலில் மகிழ்ந்த கைகேயி அவளுக்குத் தன் பரிசாக ஒரு மணிமாலையைப் பரிசாக அளிக்கிறாள். 

"ஆய பேர் அன்பு என்னும் அளக்கர் ஆர்த்து எழ
தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற,
தூயவள் உவகை போய் மிக சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள்."

இப்படிக் குணவதியாக இருந்த கைகேயி தான் மந்தரையின் சூழ்ச்சி நிறைந்த வார்த்தைகளால் மனம் மாறுகிறாள். தசரதன் மேல் கோபம் கொண்டு கோபாக்ருஹம் சென்று தரையில் படுக்கிறாள். அதுவும் எப்படி! கிழிந்த உடையை உடுத்திக் கொள்கிறாள். தலையை விரித்துப் போட்டுக் கொள்கிறாள். (தம்பி முக்கியமாய் இதற்காகவே சொல்லி இருக்கிறார் என நம்புகிறேன்.) ஆபரணங்களை எல்லாம் கழட்டி மூலைக்கு ஒன்றாகத் தரையில் வாரி வீசுகிறாள். தரையில் படுத்துக் கொண்டு கோபத்துடன் பெருமூச்சு விடுகிறாள். இதைக் கம்பர் சொல்வது எப்படி எனில்

கூனி போன பின், குலமலர்க் குப்பை நின்று இழிந்தாள்
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை,
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல்,
தேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள்.1


விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்னக்
கிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத்துடைப் பாள் போல்
அளக வாள் நுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள்.


தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,
நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்
காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். 3


நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன,
'கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்' என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை. 4

கூனியை வெளியே அனுப்பிய கைகேயி அழகான சப்ரமஞ்சக் கட்டிலில் மலர்கள் தூவப்பட்டுப் படுத்திருந்தவள் இறங்கிக் கீழே விழுந்து கொண்டு தலையில் சூடி இருந்த பூக்களைப் பிய்த்து எறிந்து, இடையில் அணிந்திருந்த மேகலையை அறுத்து வீசி,க் கால்களின் ஒலி எழுப்பும் சலங்கை ஒலிகளைக் கொண்டக் கிண்கிணிகள், மற்றும் கைவளையல்கள் ஆகியவற்றையும் கழற்றி எறிந்த்தோடு நிற்கவில்லையாம். நெற்றிச் சிந்தூரத்தையும் அழித்துக் கொண்டு தலையை விரித்துப் பரத்தித் தரையில் படும்படி படுத்துக் கொண்டு அழுத வண்ணம் அழகு, மங்கலம் அனைத்தையும் நீக்கிப் பின்னால் தனக்கு வரப்போகும் கைம்மைக் கோலத்தை முன் கூட்டியே மேற்கொண்டதாகக் கம்பர் சொல்கிறார்.

வால்மீகி சொல்லுவதென்ன எனில் விஷம் பொருந்திய அம்பால் தாக்கப்பட்ட கின்னரப் பெண்களைப் போல் கைகேயி கீழே விழுந்தாளாம். தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நன்கு தீர்மானித்தவளாக நிதானமாக மந்தரையிடம் அதை விளக்கி விட்டுத் தனக்கு மகிழ்ச்சியைத் தரும் அந்தக் காரியத்தைச் செய்வதற்கான முன்னேற்பாடுகளில் மூழ்கிய கைகேயி அப்போது கடும் விஷம் உள்ள பெண் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவதைப் போல் காட்சி அளித்தாள் என்கிறார். 

தன் புருவங்களை நெரித்துக் கொண்டு கோபத்துடன், விம்மிக் கொண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டும் கிடந்தாளாம் கைகேயி. அவளால் கீழே வீசி எறியப்பட்ட ஆபரணங்களிலிருந்து கிளம்பிய ஒளி அந்த அறையின் அந்தகாரத்தில் நக்ஷத்திரங்களைப் போல் சுடர் விட்டதாம்.  தன் தலையை ஒற்றை முடிச்சாகப் போட்டுக்கொண்டு மண்ணால் நாசம் அடைந்த துணிகளை அணிந்து கொண்டு ஓர் இறந்த கின்னரப் பெண்ணைப் போல் காட்சி அளித்தாளாம்.

இதைப் படிக்கும்போதே தெரியவரும். தலையை விரித்துப் போட்டுக் கொள்ளுதல், பூக்களை ஒதுக்குதல், நெற்றித் திலகம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது, வளையல்களைப் போடாமல் இருப்பது, போன்றவை நம் நாட்டுப் பெண்களுக்கு ஏற்றது அல்ல என்பது. இது தான் அந்தக்குறிப்பிட்ட பதிவில் திரு தி.வா. சொல்ல நினைத்தது.

Thursday, April 19, 2018

ஆத்ம குணம் - 9 - அஸ்ப்ருஹா





அஸ்ப்ருஹா’ என்பது அஷ்டகுணத்தில் கடைசி. ‘ஸ்ப்ருஹா’ என்றால் பற்று. ‘அஸ்ப்ருஹா’ என்றால் பற்றின்மை, ஆசையின்மை. பல பிரச்சினைகளின் மூல காரணம் ஆசைதான். ஆனால் அதை அடியோடு வெட்டறதுதான் ரொம்பவும் அசாத்தியமாயிருக்கு.
தன் பொருளா இருந்தாலும் சரி, மத்தவங்க பொருளா இருந்தாலும் சரி அதுல பற்று வைக்கக்கூடாது. எது நமக்கு கிடைச்சு இருக்கோ அதை வைத்துக்கொண்டு சந்தோஷமா இருக்கணும். தனக்கோ தன்னை சார்ந்தவங்களுக்கோ பணக்குறைவு வசதிக்குறைவு அதனால கஷ்டம் - இதால எல்லாம் இது கிடைச்சா நல்லா இருக்குமே என்பது போல ஆசையை வளத்துக்கக்கூடாது. மத்தவங்ககிட்ட இருக்கற ஒரு பொருளைப்பாத்து இது அழகா இருக்கே, நல்லா இருக்கே இது போல எனக்கும் வேணும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது.
ஸம்ஸ்காரங்களைப் பண்ணி பண்ணி, அவற்றோடு அஷ்ட குணங்களையும் சேர்த்துச் சேர்த்து பயிற்சி பண்ணிக் கொண்டு போகும்போது கடேசில இந்த ஆசையின்மை, பற்றின்மை, ‘அஸ்ப்ருஹா’ என்பது பூர்த்தியாக அநுபவத்தில வரும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்கிறது திருக்குறள்.
இப்படி ஈச்வரன் என்ற பற்றற்றானைப் பற்றிக் கொண்டு மற்றப் பற்றுகளை விட்டுவிட்டா மட்டும் போறாது. அப்புறம் ஒரு ஸ்டேஜ்ல அந்த ஈச்வரனுடனும் பற்றைக் கத்தரிச்சு விடணும்’ன்னு இன்னும் ஒருபடி மேலே போய்ட்டார் திருமூலர்:
ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்
இந்த குணங்கள் உசந்தது என்கிறதால தேவ குணம்ன்னு சொல்லலை. ஆத்ம குணம்ன்னே சொல்லி இருக்கு. அதனால இதை எல்லாம் கிடைக்கப்பண்ணிக்கொண்டால் ஆத்ம சொரூபத்தை அடைய ஹேதுவா ஆகும்; இதெல்லாம் ஆத்மாவுக்கு இயற்கையா அமைஞ்சு இருக்கு என்பது தெரியறது.