Pages

Thursday, April 19, 2018

ஆத்ம குணம் - 9 - அஸ்ப்ருஹா





அஸ்ப்ருஹா’ என்பது அஷ்டகுணத்தில் கடைசி. ‘ஸ்ப்ருஹா’ என்றால் பற்று. ‘அஸ்ப்ருஹா’ என்றால் பற்றின்மை, ஆசையின்மை. பல பிரச்சினைகளின் மூல காரணம் ஆசைதான். ஆனால் அதை அடியோடு வெட்டறதுதான் ரொம்பவும் அசாத்தியமாயிருக்கு.
தன் பொருளா இருந்தாலும் சரி, மத்தவங்க பொருளா இருந்தாலும் சரி அதுல பற்று வைக்கக்கூடாது. எது நமக்கு கிடைச்சு இருக்கோ அதை வைத்துக்கொண்டு சந்தோஷமா இருக்கணும். தனக்கோ தன்னை சார்ந்தவங்களுக்கோ பணக்குறைவு வசதிக்குறைவு அதனால கஷ்டம் - இதால எல்லாம் இது கிடைச்சா நல்லா இருக்குமே என்பது போல ஆசையை வளத்துக்கக்கூடாது. மத்தவங்ககிட்ட இருக்கற ஒரு பொருளைப்பாத்து இது அழகா இருக்கே, நல்லா இருக்கே இது போல எனக்கும் வேணும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது.
ஸம்ஸ்காரங்களைப் பண்ணி பண்ணி, அவற்றோடு அஷ்ட குணங்களையும் சேர்த்துச் சேர்த்து பயிற்சி பண்ணிக் கொண்டு போகும்போது கடேசில இந்த ஆசையின்மை, பற்றின்மை, ‘அஸ்ப்ருஹா’ என்பது பூர்த்தியாக அநுபவத்தில வரும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்கிறது திருக்குறள்.
இப்படி ஈச்வரன் என்ற பற்றற்றானைப் பற்றிக் கொண்டு மற்றப் பற்றுகளை விட்டுவிட்டா மட்டும் போறாது. அப்புறம் ஒரு ஸ்டேஜ்ல அந்த ஈச்வரனுடனும் பற்றைக் கத்தரிச்சு விடணும்’ன்னு இன்னும் ஒருபடி மேலே போய்ட்டார் திருமூலர்:
ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்
இந்த குணங்கள் உசந்தது என்கிறதால தேவ குணம்ன்னு சொல்லலை. ஆத்ம குணம்ன்னே சொல்லி இருக்கு. அதனால இதை எல்லாம் கிடைக்கப்பண்ணிக்கொண்டால் ஆத்ம சொரூபத்தை அடைய ஹேதுவா ஆகும்; இதெல்லாம் ஆத்மாவுக்கு இயற்கையா அமைஞ்சு இருக்கு என்பது தெரியறது.

No comments: