Pages

Friday, April 20, 2018

ஆத்ம குணங்கள் -10






மங்கலம் பற்றிய பதிவில் கைகேயி பற்றி எழுதக்கேட்டிருந்தேன் இல்லையா? சகோதரி கீதா சாம்பசிவம் எழுதி அனுப்பி இருக்கிறார். அவருக்கு நம்  நன்றி!


தம்பி தி.வா. அவர்கள் ஆத்ம குணங்கள் என்னும் தன் பதிவில்  https://anmikam4dumbme.blogspot.in/2018/04/7.html   மங்களங்கள் என்னும் தலைப்பில் எழுதிய கீழ்க்கண்ட விஷயங்கள் தான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது. மங்களங்களைப் பற்றி எழுதியவர் கடைசியில் கைகேயி தசரதரை வழிக்குக் கொண்டுவரச் செய்தது குறித்தும் யாரையானும் எடுத்துக் காட்டும்படி சொல்லி இருந்தார். நமக்குத் தான் கையும், வாயும் சும்மா இருக்கிறது இல்லையே! அதிலும் ராமாயணம் என்றால் பாய்ஞ்சுண்டு போக மாட்டோமா! கம்பராமாயணத்தில் குறிப்புக்களைக் கண்டெடுத்தேன். இரண்டு நாட்கள் ஆகின்றன. ஆனால் எழுத முடியலை. இன்னிக்கு எப்படியானும் முடிச்சுடணும்னு உட்கார்ந்தேன்.

ராமனுக்குப் பட்டம் கட்டப் போகும் செய்தி தெரிந்த மந்தரை என்னும் கூனி ஏற்கெனவே ராமன் மேல் கோபம் கொண்டிருந்ததாகவும் கம்பர் சொல்கிறார்.  உண்டி வில்லால் ராமன் தன்னைத் தாக்கியதை நினைவு கூர்ந்ததாகவும் சொல்கிறார். 

"தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில் மேல்
மண்டினாள்--வெகுளியின் மடித்த வாயினாள்;
பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்துள் உள்ளுவாள்."

என்பது கம்பர் வாக்கு. இது வால்மீகியில் காணப்படாதது. எனினும் கூனிக்கு ராமனிடம் கோபம், பொறாமை இருந்தது என்னமோ உண்மை தானே. உடனே அவள் கைகேயியிடம் போய் ராமனுக்குப் பட்டாபிஷேஹம் என்னும் செய்தியைச் சொல்ல முதலில் மகிழ்ந்த கைகேயி அவளுக்குத் தன் பரிசாக ஒரு மணிமாலையைப் பரிசாக அளிக்கிறாள். 

"ஆய பேர் அன்பு என்னும் அளக்கர் ஆர்த்து எழ
தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற,
தூயவள் உவகை போய் மிக சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள்."

இப்படிக் குணவதியாக இருந்த கைகேயி தான் மந்தரையின் சூழ்ச்சி நிறைந்த வார்த்தைகளால் மனம் மாறுகிறாள். தசரதன் மேல் கோபம் கொண்டு கோபாக்ருஹம் சென்று தரையில் படுக்கிறாள். அதுவும் எப்படி! கிழிந்த உடையை உடுத்திக் கொள்கிறாள். தலையை விரித்துப் போட்டுக் கொள்கிறாள். (தம்பி முக்கியமாய் இதற்காகவே சொல்லி இருக்கிறார் என நம்புகிறேன்.) ஆபரணங்களை எல்லாம் கழட்டி மூலைக்கு ஒன்றாகத் தரையில் வாரி வீசுகிறாள். தரையில் படுத்துக் கொண்டு கோபத்துடன் பெருமூச்சு விடுகிறாள். இதைக் கம்பர் சொல்வது எப்படி எனில்

கூனி போன பின், குலமலர்க் குப்பை நின்று இழிந்தாள்
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை,
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல்,
தேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள்.1


விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்னக்
கிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத்துடைப் பாள் போல்
அளக வாள் நுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள்.


தாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,
நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்
காவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். 3


நவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன,
'கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்' என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை. 4

கூனியை வெளியே அனுப்பிய கைகேயி அழகான சப்ரமஞ்சக் கட்டிலில் மலர்கள் தூவப்பட்டுப் படுத்திருந்தவள் இறங்கிக் கீழே விழுந்து கொண்டு தலையில் சூடி இருந்த பூக்களைப் பிய்த்து எறிந்து, இடையில் அணிந்திருந்த மேகலையை அறுத்து வீசி,க் கால்களின் ஒலி எழுப்பும் சலங்கை ஒலிகளைக் கொண்டக் கிண்கிணிகள், மற்றும் கைவளையல்கள் ஆகியவற்றையும் கழற்றி எறிந்த்தோடு நிற்கவில்லையாம். நெற்றிச் சிந்தூரத்தையும் அழித்துக் கொண்டு தலையை விரித்துப் பரத்தித் தரையில் படும்படி படுத்துக் கொண்டு அழுத வண்ணம் அழகு, மங்கலம் அனைத்தையும் நீக்கிப் பின்னால் தனக்கு வரப்போகும் கைம்மைக் கோலத்தை முன் கூட்டியே மேற்கொண்டதாகக் கம்பர் சொல்கிறார்.

வால்மீகி சொல்லுவதென்ன எனில் விஷம் பொருந்திய அம்பால் தாக்கப்பட்ட கின்னரப் பெண்களைப் போல் கைகேயி கீழே விழுந்தாளாம். தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நன்கு தீர்மானித்தவளாக நிதானமாக மந்தரையிடம் அதை விளக்கி விட்டுத் தனக்கு மகிழ்ச்சியைத் தரும் அந்தக் காரியத்தைச் செய்வதற்கான முன்னேற்பாடுகளில் மூழ்கிய கைகேயி அப்போது கடும் விஷம் உள்ள பெண் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவதைப் போல் காட்சி அளித்தாள் என்கிறார். 

தன் புருவங்களை நெரித்துக் கொண்டு கோபத்துடன், விம்மிக் கொண்டும் பெருமூச்சு விட்டுக் கொண்டும் கிடந்தாளாம் கைகேயி. அவளால் கீழே வீசி எறியப்பட்ட ஆபரணங்களிலிருந்து கிளம்பிய ஒளி அந்த அறையின் அந்தகாரத்தில் நக்ஷத்திரங்களைப் போல் சுடர் விட்டதாம்.  தன் தலையை ஒற்றை முடிச்சாகப் போட்டுக்கொண்டு மண்ணால் நாசம் அடைந்த துணிகளை அணிந்து கொண்டு ஓர் இறந்த கின்னரப் பெண்ணைப் போல் காட்சி அளித்தாளாம்.

இதைப் படிக்கும்போதே தெரியவரும். தலையை விரித்துப் போட்டுக் கொள்ளுதல், பூக்களை ஒதுக்குதல், நெற்றித் திலகம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது, வளையல்களைப் போடாமல் இருப்பது, போன்றவை நம் நாட்டுப் பெண்களுக்கு ஏற்றது அல்ல என்பது. இது தான் அந்தக்குறிப்பிட்ட பதிவில் திரு தி.வா. சொல்ல நினைத்தது.

No comments: