Pages

Monday, August 15, 2022

ஶ்ராத்தம் - 54 பிண்ட பித்ரு யக்ஞம் -1





இந்த இழையின் கடைசியில் பிண்ட பித்ரு யக்ஞம். இத்துடன் பதிவுகள் முடியும்.
இதுவும் அமாவாசை தர்ப்பணமும் செய்தால் அந்த மாதன் ஒருவன் செய்ய வேண்டிய ஶ்ராத்த காரியங்கள் வேறெதுவும் இல்லை என்கிறார்கள். (வருஷாப்திகம் தவிர). நீளம் கருதி கொஞ்சம் தந்தி பாஷை.
இதை ஆஹிதக்னியோ ஔபாசனம் செய்பவரோ செய்யலாம்.
தந்தை ஜீவித்து இருப்பவருக்கு கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது.
காலம்: பிண்டபித்ருயஜ்ஞ காலம் -
நல்ல பஞ்சாங்கங்களில் பிண்ட பித்ரு யஜ்ஞம் என்று அமாவாஸ்யை அல்லது அதற்கு அடுத்த நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அமாவாஸ்யை இன்றும் இருந்து நாளை காலையிலும் சிறிது இருந்தால் நாளை செய்யவேண்டும். மற்றபடி அமாவாஸ்யை அன்றே செய்யவேண்டும்.
பிற்பகல் வேளையிலோ ஸாயம் ஔபாஸனத்திற்கு முன்பு ஸூர்ய ரச்மிகள் மரங்களின் உச்சிகளைத் தொடும் நேரம் வந்தவுடனோ செய்யவேண்டும்.
ப்ராசீனாவிதியாகி ஸங்கல்பம் செய்யவும் - பிண்டபித்ருʼயஜ்ஞேன யக்ஷ்யே .
வித்யுதஸி இல்லை
ப்ராசீனாவீதியாக அடிப்பகுதியுடன் கூடிய தர்பைகளைக் வெட்டி கொண்டுவரவும் - (அபாம் மேத்யம்) (இது ஜீவபிதாக்களுக்குக் கிடையாது.)
ஔபாஸன அக்னிக்கு/ தக்‌ஷிணாக்னிக்கு அப்ரதக்ஷிணமாக பரிஸ்தரணம் போடவும். கிழக்கிலும் மேற்கிலும் தர்பைகளின் நுனி தெற்கு புறம். வடக்கிலும் தெற்கிலும் கிழக்கு புறம். அக்னிக்குத் தெற்கே சில தர்பைகளைப் போட்டு அவைகளின் மேல் பாத்ரங்களை ஒவ்வொன்றாக வைக்கவும். பாத்ரங்களின் நுனி தென்கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.
பாத்ரங்களாவன - மரக்கரண்டி, ஆஜ்யஸ்தாலீ, சருஸ்தாலீ, அரிசி எடுக்க கிண்ணம், உபஸ்தரணாதிகளுக்கு தர்வீ, மண்பாத்ரம், ஒரு தொன்னை.
உபவீதி
மண் பாத்திரத்தில் தர்ப்பை ஒன்று வைத்து அரிசி இடவும். - பித்ருப்யோ வோ ஜுஷ்டம் நிர்வபாமி.
இதை சரு ஸ்தாலியில் சேர்க்கவும்.
ப்ராசீனாவீதியாக அக்னியில் அரைவேக்காடு சருவாக்கி இறக்கவும்.
‘அபஹதா அஸுரா ரஷாகும்ஸி பிஶாசா வேதிஷத:’ ஸ்ப்யத்தால் தென் கிழக்காக கோடு போட்டு அப உப...
ஶுந்ததாம் பிதர என்று நீரால் அவோக்‌ஷணம்.
ஆயந்து பிதரோ மனோ ஈஜவஸ: என்று அபிமந்த்ரணம்.
ஸக்ருதாச்சின்னம்* சானுகைஸ்ஸஹ தென்கிழக்காக தர்பைகளை வேதியில் பரப்புக.
ப்ரதான ஹோமம்:
சருவில் அபிகாரம். பின் வேதியில் இறக்கி வைக்கவும். சரு ஸ்தாலீ, மேக்‌ஷணம் சாதனம்.
உபச்சாரத்திற்காக வேதிக்கு தெற்கே படுக்கை, தலையணை, கண்மை, எண்ணை, ஜலகும்பம் ஆகியன வைக்கவும்.
உபவீதியாகி வலது காலை ஊன்றி குத்திட்டு அமர்ந்து ...
மேக்‌ஷணத்தில் உபஸ்தீர்ய. சரு எடுத்து மேலே அபிகாரம் பாதி மட்டும் ஹோமம். மீதியை தொன்னை/ மண் பாத்திரத்தில் சேமிக்கவும்.
ஹோமம் ஸோமாய பித்ருபீதாய ஸ்வதா நமஹ. இதம்
அதே போல் - யமாயாங்கிரஸ்வதே பித்ருமதே ஸ்வதா நமஹ. இதம்.
உபஸ்தரணம் அபிகாரம் இல்லாமல் இந்த சேமித்த மீதியை எடுத்து ஹோமம்: அக்னயேகவ்யவாஹனாய ஸ்வதா நமஹ. இதம்.
மந்திரமில்லாமல் மேக்‌ஷனத்தையும் அக்னியில் இடுக.
(இதுவரையில் தான் ஜீவபிதாக்களுக்கு முக்கிய ப்ரயோகம். இதன்பிறகு ப்ராயச்சித்தாதிகள் மட்டும் உண்டு. அவைகளுக்குக் கடைசியில் பார்க்கவும்.)
அடுத்து பிண்டப்ரதானம்.
 

Sunday, August 14, 2022

ஶ்ராத்தம் - 53




 


முன் பதிவுகளில் ஒரு விஷயம் விட்டுப்போயிற்று. (இதை பின்னால் மின் நூலாக்கும்போது சரியான இடத்தில் சேர்த்து விடுகிறேன்.)

இந்த ஶ்ராத்தத்திற்காக ஸ்நானம் செய்தோம் இல்லையா? அப்போது ஈர வஸ்திரத்தை பிழியாமல் வைத்திருந்தோம். அதை மந்திரம் சொல்லி இப்போதுதான் பிழிய வேண்டும். இது எல்லா ஸ்நானங்களுக்கு பின் செய்யக்கூடியது. பூணூலை இடம் செய்து கொண்டு… 
 
மேல் வஸ்திரத்தை பிழிய மந்திரம்: யே கே சாஸ்மத்குலே ஜாதா அபுத்ரா கோத்ரஜா ம்ருதா: தே க்ரஹ்ணந்து மயா தத்தம் வஸ்த்ரம் நிஷ்பீடனோதகம். பொருள்: என் குலத்திலோ கோத்ரத்திலோ புத்ரனற்று எவர் இறந்தனரோ அவர்கள் என்னால் கொடுக்கப்பட்ட வஸ்திரத்தை பிழிந்த ஜலத்தை க்ரஹித்துக் கொள்ள வேண்டும்.

கீழ் வஸ்த்ரத்தை பிழிய மந்திரம்:உச்சிஷ்ட பாகினோ தாஸா யே ம்ருதாஸ்தேத்வமந்த்ரகா: துப்யந்து தருதாம் ப்ராப்தா மம ஸம்பந்தினோ ம்ருதா: - பொருள்: ஶ்ராத்தத்தில் உச்சிஷ்டத்தை அடைபவர்களான தாஸர்களும் மந்திரமில்லாமல் எவர் இறந்தவர்களோ அவர்களும் பாபத்தால் மரத்தன்மையை அடைந்தவர்களும் என்னைச்சேர்ந்தவர் எவர் இறந்தனரோ அவர்களும் த்ருப்தி அடையட்டும்.

பிறகு பூணூலை வலம் செய்து கொண்டு ஆசமனம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு பிரம்ம யக்ஞம் செய்ய வேண்டும்.
 

Friday, August 12, 2022

ஶ்ராத்தம் - 52




ஆசனத்தில் வைக்கப்பட்ட அன்னம் முதலியன; காலால் தொடப்பட்டவை;; அசுத்தமான இடங்களில் இருந்து வந்தவர்கள் தொட்டவை, பழையது, இரண்டு முறை சமைக்கப்பட்டது, முன்னால் சாப்பிடப் பட்டது; சுக்கான், ரோமம், புழுக்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது; அதிக உப்பு உள்ளது, முந்தைய நாளில் தயார் செய்யப்பட்ட பக்ஷணங்கள், தோஷமுள்ளவர்கள் தொட்டது துணியால் விடப்பட்டது ஆகியவை விலக்க தக்கன. அன்னம் சூடாக இருக்க வேண்டும் என்று அதை மீண்டும் அடுப்பின் மேல் வைக்கலாம், தவறில்லை.
போக்தா சாப்பிடும் முன் அதிலிருந்து எவரும் எடுத்து சாப்பிட்டு விட்டால் அது சிரார்த்தத்துக்கு உதவாது. உப்பை பிரத்யட்சமாக வைக்கக்கூடாது. ஆன்ஹிக காண்டத்தில் தினசரி உணவில் எது தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறதோ அதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். சமையலுக்காக அரிசியை பாயி போடுவது முதல் போஜனம் பூர்த்தி ஆகும் வரை உணவை மது அருந்துபவன், வியபசாரி,ஆகியவர்கள் பார்க்கக்கூடாது. பன்றி, கோழி, நாய், பூனை, வீட்டு விலக்கான பெண்கள், பிரசவம் ஆகி தீட்டு கழியாதவர்கள், தீட்டு உடையவர்கள் பெண்ணின் சம்பாத்தியத்தில் ஜீவனம் நடத்துபவர்கள், பணத்தை வட்டிக்கு விட்டு ஜீவனம் நடத்துபவர்கள், அங்கஹீனம் உள்ளவர்கள், காரணமில்லாமல் சடை உள்ளவர்கள், மொட்டை அடித்துக் கொண்டவர்கள், மகாபாதகம் செய்தவர்கள், அலி - இவர்கள் சாப்பிடும் பிராமணர்களை பார்க்கக்கூடாது. கஷாயம் அணிந்தவர்கள் குஷ்டரோகம் உடையவர்கள் பதிதன் கர்ப்பத்தை கொன்றவர்கள் கலப்பு திருமணம் செய்த பிராமணர்கள் இவர்களும் விலக்கத் தக்கவர்கள்.
அப்படி பார்த்துவிட்டால் அன்னத்துக்கு சுத்தி சொல்லப்பட்டுள்ளது. ஹோமம்,ப்ராம்ஹண போனம், பிண்டப்ரதானம் ஆகிய உக்கிய காரியங்களுக்கு வேறு அன்னம் தயார் செய்ய வேண்டும். பக்குவமான ஹவிஸுகளை தள்ள சக்தி இல்லை என்றால் மண்ணுடன் கூடிய தண்ணீரால் ப்ரோக்ஷணம் செய்யவும். வெண்கடுகு கருப்பு எள் ஆகியவற்றையும் இறைக்க வேண்டும் குரு சூரியன் அக்னி ஆடு இவற்றை அவசியம் தரிசனம் செய்யவேண்டும். சுத்தவதிகள் கூஶ்மாண்டிகள் பாவமானிகள் தரத்ஸமங்கள் என்ற மந்திரங்களால் அபிமந்த்ரணம் செய்த ஜலத்தை தர்ப்பைகளால் தெளித்தும் சுத்திகரிக்கச் செய்யலாம் ரோமம் முதலியவற்றால் அசுத்தம் ஆனால் எவ்வளவு எடுத்து எறிய முடியுமோ அதை விலக்கி விட்டு மீதியை காயத்ரியால் ப்ரோக்‌ஷித்து அல்லது நெய் சேர்த்து பயன்படுத்தலாம்.
 

Wednesday, August 10, 2022

ஶ்ராத்தம் - 51




 
இன்னும் சமையல் சமாசாரங்கள் பாக்கி இருக்கிறது.

கருப்பு உளுந்து, எள், யவை, நெல், கோதுமை, பயறு, கடுகு ஆகியவை ஶ்ராத்தத்தில் பயன்படுத்தலாம். எள் உளுந்து பயறு தவிர்த்த மற்ற கருப்பு தானியங்களை பயன்படுத்தக்கூடாது. கோதுமை, உளுந்து இரண்டையும் அவசியம் பயன்படுத்த வேண்டும்.

வில்வம் நெல்லி திராட்சை பலா மாதுளை இவற்றின் பழங்கள்; குங்குமப்பூ கருவேப்பிலை எலுமிச்சை வாழை இலந்தை திப்பிலி மிளகு புடலை எல்லாவிதமான இனிப்புகள் தரமானவை. சுக்கு ஆகியவை ஏற்றுக் கொள்ளத் தக்கன. பாகற்காய் புடலங்காய் சிலாக்கியம். பசுவின் பால் நெய் காய்கறிகள் தேன் கரும்பு ரசம் வெல்லம் தும்பைப்பூ சிறுகீரை இவை கொடுக்கப்படவேண்டும். இவை அனைத்தும் பித்ருக்களுக்கு திருப்தி தருபவை. பாலுடன் கூடிய சர்க்கரை அவல் அளவற்ற திருப்தி கொடுக்கும். நெய் நிறைய விட வேண்டும். காட்டில் உண்டாகும் பழங்கள் கிழங்குகள் ஆகியவற்றை கொடுப்பது பித்ருக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தரும். முள்ளு கத்தரிக்காய் மிகவும் சிறந்தது.

பசுவின் பால் பாயசம் ஆகியவற்றால் ஒருவருஷம் வரை பித்ருக்கள் திருப்தி அடைகின்றனர். கொடுக்கப்படும் நெல் உளுந்து கிழங்குகள் பழம் ஆகியவற்றால் ஒரு மாதம் வரை அவர்கள் திருப்தி அடைகின்றனர் கருவேப்பிலை தேன் அளவற்ற திருப்தி கொடுக்கின்றன. கொடுக்கப்படும் நெய் ஒரு வருஷம் வரை திருப்தி கொடுக்கிறது. கோதுமை மூன்று வருடங்கள் வரை திருப்தி கொடுக்கும்.

மாமிசம் கொடுப்பது ஷத்திரியர்களுக்கு என்று அறியவும். இந்தப் பட்டியல்களில் மீன் மாம்சம் ஆகியனவும் சொல்லப்பட்டுள்ளன. மேலும் கலியுகத்தில் தடை செய்யப்பட்ட சில பல விஷயங்களில் சிராத்தத்தில் மாமிசம் கொடுப்பதும் ஒன்று.

இவை சிராத்தத்தில் விலக்க வேண்டியவை என்று ஒரு பட்டியலை பார்க்கலாம். எதாக இருந்தாலும் அதை சம்பாதிக்க பயன்பட்ட பணமானது லஞ்சம் முதலியவற்றால் அடையப்பட்டது, பதிதனால் சம்பாதிக்கப்பட்டது, அநியாயமாக சம்பாதிக்கப்பட்டது, பெண்ணை விட்டு கிடைத்தது என்று இருந்தால் சாதுக்கள் இப்படி சம்பாதிக்கப்பட்டவற்றை விலக்க வேண்டும்,

வேதத்தை விற்று சம்பாதிக்கப்பட்டது பெண்கள் சம்பாதித்தது கழுதையால் சம்பாதிக்கப்பட்டது ஆகிய தனமும் கொடுக்க தகுந்தது இல்லை.

கொள்ளு, வரகு - ஶ்ராத்தத்துக்கு உகந்ததல்ல. பெருங்காயம் - சில ரிஷிகள் அதை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்றும் சில ரிஷிகள் விலக்கு என்றும் சொல்லியிருக்கிறார்கள் ஆகவே எப்படி செய்தாலும் தவறில்லை.

கருப்பு, பச்சை நிறமில்லாத பயறு, மொச்சை, துவரை ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற த்விதளங்களை (dicotyledons, இரண்டாக உடைபடும் தான்யங்கள்) கொடுக்கலாம் . முருங்கையும் மிளகாயும் சிராத்தத்தில் கூடாது. பூசணி, சுரைக்காய், கத்தரி, சிறுகீரை, பூண்டு வகைகள் எருமைப்பால்/ தயிர் ஆகியவையும் விலக்க தக்கன.

தாமிர பாத்திரத்தில் வைத்த/ உப்பு சேர்ந்த பால் கூடாது.

ராத்திரி எடுக்கப்பட்ட தண்ணீர் கூடாது. காலையில் எடுத்தே பயன்படுத்த வேண்டும்.


 

Saturday, August 6, 2022

காஶி யாத்திரை - 36 குடல்வால்





குடல்வால்? அதாங்க அபெண்டிக்ஸ்! :-)
சொல்ல நினைத்த சில விஷயங்கள் விட்டுப்போயின. எதுக்கும் சொல்லிடலாம்ன்னு...
முதலாவது நிவேதனம் குறித்து. முன்னேயே எழுதி இருக்கிறேன். இந்த காசி வாத்தியார் நிறைய கற்றவர். அப்படிப்போன்றவர்கள்தான் வழக்கமாக பையரின் நண்பர்கள். ஆச்சரியமில்லை.
பிண்ட பிரதானம் முடித்து பித்ருக்களுக்கு வடை அப்பம் அதிரசம் என்று நிவேதனம் செய்யச்சொல்லி இருக்கிறது, வழக்கத்தில் இருக்கிறது. இந்த இடத்தில் வாத்தியார் மற்றவர்கள் போலவே ப்ராணாய ஸ்வாஹா என்று ஆரம்பித்தார். முதல் முறை சரி என்று அது போல் செய்துவிட்டேன். இரண்டாம் முறை 'கொஞ்சம் இருங்க. நீங்க சம்ஸ்க்ருதம் படிச்சவர். நிவேதனம்ன்னா என்ன அர்த்தம்ன்னு உங்களுக்குத்தெரியும்தானே? பின்ன இந்த ப்ராணாய ஸ்வாஹா எல்லாம் எங்கே வந்தது?’ என்று கேட்டேன். அவர் 'நீங்க சொல்லறது கரெக்ட்தான். ஆனா பெரியவர்கள் செஞ்சு கொண்டு வந்ததை மாத்த எனக்கு தைரியம் இல்ல. நீங்க உங்க விருப்பப்படி செய்ங்க.’ என்றார். னும் அதிலிருந்து என் வழக்கப்படி நிவேதயாமி என்று காட்டுவதுடன் நிறுத்திக்கொண்டேன்.
இரண்டாவது ... ப்ரயாகை போனதில் இருந்து வயிற்றுப்போக்கு ஆரம்பித்து இரண்டு வாரம் சென்று கடலூர் திரும்பி வேறு மருந்து ஒரு வாரம் சாப்பிட்டுத்தான் சரி ஆயிற்று என்று சொல்லி இருந்தேன். பின்னே இவ்வளவு காரியம் செய்ய எங்கிருந்து சக்தி வந்தது என்று கேள்வி. சரியான கேள்வி!
காலை குடிக்கும் காபி அரை மணியில் வெளியே வந்துவிடும். மதிய உணவும் இரவு உணவும் அப்படியேதான். அந்த அரை மணியில் உடம்பால் என்ன எடுத்துக்கொள்ளப்பட்டதோ அவ்வளவுதான். நிச்சயமாக போறாது.
29-3-2014 இல் கோவையில் ஸ்வாமி ஓங்காரின் ப்ராணக்ரியா பயிற்சி பெற்றேன். உடலில் ப்ராண சக்தியை கூட்டுவதற்கன பயிற்சி அது. திரும்பும் போது அவர் என்னை பஸ்ஸ்டாண்டில் கொண்டு விடுவதாக சொல்லி இருந்தார். அதற்கு அவர் வந்தபோது பேச்சு எப்படியோ ப்ராண சக்தி இருந்தால் உணவு அவசியமா என்று திரும்பியது. அந்த சுவாரசியமான பேச்சில் ஏறத்தாழ பஸ்ஸை கோட்டை விட்டேன்!
இந்த காஶி பயணத்தின் போது நேரடியாக அதை அனுபவித்தாயிற்று. அறுவை சிகிச்சை இரு முறை செய்து கொண்ட நாட்கள் தவிர பயிற்சியை நிறுத்தியதே இல்லை. ‘அது இல்லாமல் என்னால் ஒரு காரியமும் எந்த நாளும் செய்ய முடியாது' என்று சொல்லும் ஒரு நண்பர் எனக்கு இருக்கிறார்.
இந்த ப்ராணக்ரியாதான் எனக்கு தேவையான சக்தியை கொடுத்தது என்றே நம்புகிறேன். ஸ்வாமி ஓங்காருக்கு நன்றி!
அடுத்து ஸ்வாமி ஓங்கார் காஶியில் இயற்கையாகவே மூச்சு இரு நாசிகளிலும் சமமாகப் போய் வரும் என்று சொல்லி இருந்தார். அதை உறுதிப்படுத்திக்கொள்ள நானும் ஆர்வத்துடன் இருந்தேன். முதல் நாளே உண்மைதான் என்று தெரிந்தது. என் ஆச்சரியம் அது கயாவிலும் தொடர்ந்தது. ஸ்வாமிக்கு செய்தி அனுப்பினேன். இல்லை, அது சாத்தியம் இல்லை. காஶியில் அவருடைய ஆட்சிக்கு உட்பட்ட வட்டாரத்தில் மட்டுமே கால பைரவர் அதை அனுமதிப்பார் என்று பதில் வந்தது. ஆனாலும் தொடர்ந்தது. கடலூர் திரும்பிய அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் தியேட்டருக்குள் காஶிக்கயிறை கழட்டிய பின் மாலையில் மூச்சு பழைய படி இருப்பதை உணர்ந்தேன்!
பதிவுகளில் நிறையவே என் மோசமான உடல்நிலை குறித்து புலம்பி இருக்கிறேன் என்று தோன்றுகிறது. மன்னிக்க!

அவ்ளோதான்.
இப்போ நிஜமாகவே...
ஶுபம்!