Pages

Saturday, August 6, 2022

காஶி யாத்திரை - 36 குடல்வால்





குடல்வால்? அதாங்க அபெண்டிக்ஸ்! :-)
சொல்ல நினைத்த சில விஷயங்கள் விட்டுப்போயின. எதுக்கும் சொல்லிடலாம்ன்னு...
முதலாவது நிவேதனம் குறித்து. முன்னேயே எழுதி இருக்கிறேன். இந்த காசி வாத்தியார் நிறைய கற்றவர். அப்படிப்போன்றவர்கள்தான் வழக்கமாக பையரின் நண்பர்கள். ஆச்சரியமில்லை.
பிண்ட பிரதானம் முடித்து பித்ருக்களுக்கு வடை அப்பம் அதிரசம் என்று நிவேதனம் செய்யச்சொல்லி இருக்கிறது, வழக்கத்தில் இருக்கிறது. இந்த இடத்தில் வாத்தியார் மற்றவர்கள் போலவே ப்ராணாய ஸ்வாஹா என்று ஆரம்பித்தார். முதல் முறை சரி என்று அது போல் செய்துவிட்டேன். இரண்டாம் முறை 'கொஞ்சம் இருங்க. நீங்க சம்ஸ்க்ருதம் படிச்சவர். நிவேதனம்ன்னா என்ன அர்த்தம்ன்னு உங்களுக்குத்தெரியும்தானே? பின்ன இந்த ப்ராணாய ஸ்வாஹா எல்லாம் எங்கே வந்தது?’ என்று கேட்டேன். அவர் 'நீங்க சொல்லறது கரெக்ட்தான். ஆனா பெரியவர்கள் செஞ்சு கொண்டு வந்ததை மாத்த எனக்கு தைரியம் இல்ல. நீங்க உங்க விருப்பப்படி செய்ங்க.’ என்றார். னும் அதிலிருந்து என் வழக்கப்படி நிவேதயாமி என்று காட்டுவதுடன் நிறுத்திக்கொண்டேன்.
இரண்டாவது ... ப்ரயாகை போனதில் இருந்து வயிற்றுப்போக்கு ஆரம்பித்து இரண்டு வாரம் சென்று கடலூர் திரும்பி வேறு மருந்து ஒரு வாரம் சாப்பிட்டுத்தான் சரி ஆயிற்று என்று சொல்லி இருந்தேன். பின்னே இவ்வளவு காரியம் செய்ய எங்கிருந்து சக்தி வந்தது என்று கேள்வி. சரியான கேள்வி!
காலை குடிக்கும் காபி அரை மணியில் வெளியே வந்துவிடும். மதிய உணவும் இரவு உணவும் அப்படியேதான். அந்த அரை மணியில் உடம்பால் என்ன எடுத்துக்கொள்ளப்பட்டதோ அவ்வளவுதான். நிச்சயமாக போறாது.
29-3-2014 இல் கோவையில் ஸ்வாமி ஓங்காரின் ப்ராணக்ரியா பயிற்சி பெற்றேன். உடலில் ப்ராண சக்தியை கூட்டுவதற்கன பயிற்சி அது. திரும்பும் போது அவர் என்னை பஸ்ஸ்டாண்டில் கொண்டு விடுவதாக சொல்லி இருந்தார். அதற்கு அவர் வந்தபோது பேச்சு எப்படியோ ப்ராண சக்தி இருந்தால் உணவு அவசியமா என்று திரும்பியது. அந்த சுவாரசியமான பேச்சில் ஏறத்தாழ பஸ்ஸை கோட்டை விட்டேன்!
இந்த காஶி பயணத்தின் போது நேரடியாக அதை அனுபவித்தாயிற்று. அறுவை சிகிச்சை இரு முறை செய்து கொண்ட நாட்கள் தவிர பயிற்சியை நிறுத்தியதே இல்லை. ‘அது இல்லாமல் என்னால் ஒரு காரியமும் எந்த நாளும் செய்ய முடியாது' என்று சொல்லும் ஒரு நண்பர் எனக்கு இருக்கிறார்.
இந்த ப்ராணக்ரியாதான் எனக்கு தேவையான சக்தியை கொடுத்தது என்றே நம்புகிறேன். ஸ்வாமி ஓங்காருக்கு நன்றி!
அடுத்து ஸ்வாமி ஓங்கார் காஶியில் இயற்கையாகவே மூச்சு இரு நாசிகளிலும் சமமாகப் போய் வரும் என்று சொல்லி இருந்தார். அதை உறுதிப்படுத்திக்கொள்ள நானும் ஆர்வத்துடன் இருந்தேன். முதல் நாளே உண்மைதான் என்று தெரிந்தது. என் ஆச்சரியம் அது கயாவிலும் தொடர்ந்தது. ஸ்வாமிக்கு செய்தி அனுப்பினேன். இல்லை, அது சாத்தியம் இல்லை. காஶியில் அவருடைய ஆட்சிக்கு உட்பட்ட வட்டாரத்தில் மட்டுமே கால பைரவர் அதை அனுமதிப்பார் என்று பதில் வந்தது. ஆனாலும் தொடர்ந்தது. கடலூர் திரும்பிய அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் தியேட்டருக்குள் காஶிக்கயிறை கழட்டிய பின் மாலையில் மூச்சு பழைய படி இருப்பதை உணர்ந்தேன்!
பதிவுகளில் நிறையவே என் மோசமான உடல்நிலை குறித்து புலம்பி இருக்கிறேன் என்று தோன்றுகிறது. மன்னிக்க!

அவ்ளோதான்.
இப்போ நிஜமாகவே...
ஶுபம்!

No comments: