25. எந்த பக்கம் பார்த்து செய்ய வேண்டும்?
சூரியன் உள்ள திசையை பார்த்து செய்ய வேண்டும். காலையில் கிழக்கு பார்த்து. மாலையில் வடக்கில் துவக்க வேண்டும்; ஜபம், அர்க்கியம் ஆகியன மேற்கு பார்த்து செய்யவேண்டும். மத்தியானம் செய்யும் நேரத்தில் சூரியன் எங்கே இருக்கிறான் என பார்த்து செய்ய வேண்டும்.
26. எப்படி ஆரம்பிப்பது?
கை கால்கள் சுத்தி செய்து கொண்டு அவரவர் குல ஆசாரப்படி நெற்றிக்கு இட்டுக்கொண்டு சுத்தமான நீரை பஞ்ச பாத்திர உத்தரணியில் எடுத்துக்கொண்டு சரியான திசையை நோக்கி அமர்ந்து ஆரம்பிக்க வேண்டும்.
27. கால்களை சம்மணமிட்டுக்கொண்டுதானே உட்கார வேண்டும்?
இல்லை. பல கர்மாக்களும் இரண்டு முழங்கால்களுக்கு இடையில் செய்ய வேண்டும். ஆசமனம், தர்ப்பணம் போன்றவை. ஆகவே குக்குடாசனம் - இரண்டு கால்களையும் தரையில் ஊன்றிக்கொண்டு உட்கார வேண்டும். கால்களை அகட்டி வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் முட்டிகளுக்கு நடுவில் கொண்டு வந்து ஆசமனம் முதலியவற்றை செய்ய வேண்டும். (தற்கால உதாரணத்துக்கு கிரிக்கெட்டில் விக்கட் கீப்பர் மாதிரி - ஆனால் பாதம் முழுதும் தரையில் படிய உட்கார வேண்டும்.)
28. ஆசமனம் என்பது கையில் தண்ணீர் நிறைய எடுத்து குடிப்பதுதானே?
இல்லை. வலது கையை குவித்துக் கொண்டு, அதில் மத்தியில் உள்ள இரண்டு ரேகைகளும் முழுகும்படி (உளுந்து மூழ்குமளவிற்கு என்றும் சொல்வதுண்டு) நீர் எடுத்துக்கொண்டு, பிறகு சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் இவற்றை நீட்டி கையை குவித்துக்கொண்டு உறிஞ்சுகின்றபோது ஒலி எழாமல், மணிக்கட்டை வாய் அருகில் படாமல் வைத்து கையை விரல்கள் மேலே போகும்படி உயர்த்தினால் நீர் வாய்க்குள் போய்விடும். இதுவே ஆசமனம் எனப்படும். இப்படி 3 முறை மந்திரம் கூறி நீர் பருக வேண்டும். பிறகு உதடுகளை வலதுகை பெருவிரலின் அடியால் இரண்டு தடவை துடைத்து, பின் இது எச்சில் என்பதால் கையால் நீரை தொட்டுக்கொள்ள வேண்டும்.
29. எந்த தண்ணீரானாலும் பரவாயில்லையா, ஆசமனம் செய்யலாமா?
அப்படி இல்லை. முடிந்த வரை சுத்தமான நீரே வேண்டும். வென்னீர், நுரை உள்ள நீர், உப்பு கலந்த நீர் ஆகியன கூடாது. குளித்தபின் கிணற்றில் எடுப்பதோ ஆற்றில் ஓடும் தண்ணீரில் எடுப்பதோ உசிதம். கடல் தண்ணீரில் எப்போதும் ஆசமனம் செய்யக்கூடாது. (ஆனால் தனுஷ்கோடியில் செய்யலாம் என்று அனுமதி இருப்பதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.)
30. ஆற்றிலோ கிணறு, குளத்திலோ செய்வதானால்?
ஆற்றில் முழங்கால் மறையும் அளவு நீரில் நிற்க வேண்டும். இடது கையால் நீரை தொட்டுக்கொண்டு வலது கையால் நீர் எடுத்து ஆசமனம் செய்ய வேண்டும். உட்கார்ந்து, குக்குடாசனம் என்ற விதிகள் இங்கே பொருந்தாது. குளம் கிணறு எனில் வலது காலை பூமியில் வைத்துக்கொண்டு இடது காலை நீரில் விட்டுக்கொண்டு ஆசமனம்.
31. தண்ணீரை குடித்துவிட்டு ஏதேதோ விரல்களால முகத்தில எங்கெங்கோ தொடறாங்க. சுட்டு போட்டாலும் இது எனக்கு வராது.
:-)) எல்லாம் பழக்கம்தான். ஆரம்பத்தில மெதுவாகவே செய்யலாம். எழுதி வைத்துகொண்டு பார்த்தே செய்யலாம். நாளாகாக சுலபமாக பழகிவிடும்.
லிஸ்ட் இதோ:
ஜோடி ஜோடியாக மந்திரம் இருக்கு. முதலில் வலது பக்கம்; அப்புறம் இடது பக்கம்.
கேசவா, நாராயணா = கட்டைவிரலால் கன்னம்
மாதவா, கோவிந்தா =மோதிர விரலால் கண்கள்
விஷ்ணூ, மதுசூதனா = ஆள் காட்டி விரலால் மூக்கின் இரண்டு பக்கங்கள்
த்ரிவிக்ரமா, வாமனா = சுண்டு விரலால் காதுகள்
ஸ்ரீதரா, ஹ்ருஷீகேசா = நடுவிரலால் தோள்கள்
பத்மநாபா, தாமோதரா = எல்லா விரல்களாலும் மார்பிலும் உச்சந்தலையிலும்.
32. இன்னும் நிறைய செய்து பார்த்திருக்கேனே. வித்தியாசமாவும் பார்த்திருக்கேனே!
ஆமாம். ஆந்திரர்களுக்கு எப்போதுமே மந்திரங்களும், செய்கைகளும் அதிகம். அவர்கள் 24 நாமாக்கள் சொல்லி செய்கிறார்கள். சில குடும்பங்களில் வழக்கத்தில் சில மாறுதல்கள் இருக்கலாம். அவரவர் குல ஆசாரப்படியே செய்ய வேண்டும். அது என்ன என்று தெரியாத போது மேற்கூறியவாறு செய்யலாம்.
33. சரி அப்புறம்?
வினாயகரை வேண்டி குட்டிக்கொண்டு, ப்ராணாயாமம் செய்து, பின் சங்கல்பம். வலது தொடை மீது இடது கையை மேல் நோக்கி வைத்து அதை வலது கையால் மூடிக்கொண்டு சங்கல்பம்.
மந்திரங்கள் எதையும் இங்கே சொல்லவில்லை. அவற்றை குரு முகமாக நேரில் தெளிவாக கேட்டு செய்க.