Pages

Saturday, May 7, 2011

சந்தியாவந்தனம் 2



9. சந்தியா வந்தனம் செய்தா பலன் இல்லைன்னு ரொம்ப விஷயம் தெரிஞ்ச ஒத்தர் சொன்னாராமே?
ம்ம்ம்ம் ..... தினசரி செய்ய வேண்டிய சில காரியங்களை ஆஹ்னிகம் ன்னு சொல்கிறாங்க. அந்த லிஸ்ட்லே சந்த்யாவும் இருக்கு. இதெல்லாம் செய்தா நாம இருக்கிறபடி இருப்போம். (அதாவது இயற்கையா நோய் நொடி இல்லாம.) செய்யாம இருந்தா கெடுதல் ஏற்படும். குளிக்காம இருந்தா நோய் வரும். அதுக்காக குளிக்கிறதுல ப்ரயோசனம் இல்லை என்கலாமா? அது போலத்தான் இவை எல்லாம். கெடுதல் வராம இருக்கிறதே ஒரு நல்ல பலன் இல்லையா? மேலும் சாஸ்திரம் ஸ்ம்ருதி, வேதம் சொன்னதை யோசித்து பார்க்கவும்.

10. இந்த சந்த்யாவந்தனம் பக்தியா. கர்மாவா?
இது பக்தி, கர்மா, யோகம், ஞானம் எல்லாமே சேர்ந்தது.
ஸவிதா என்கிற தேவதையை உபாசிக்கிறோம். இது பக்தி மார்க்கம்.
பெரும்பாலான படிகள் செயல் ஆகும். கர்ம மார்க்கம்.
ஜபத்துக்கு முன் செய்யும் ப்ராணாயாமம் யோகமாகும்.
இந்த சூரியன் போல நானும் ப்ரஹ்மம் என்ற த்யானம் ஞான மார்க்கமாகும்.

11. நீங்க இதை யோகம்ன்னு சொல்கிறது ஆச்சரியமாக இருக்கு!
ஏன்? அஷ்டாங்க யோக மார்க்கத்தில் படிகளை யோசித்து பாருங்க.
யமம், நியமம்: உள் சுத்தி, வெளி சுத்தி
ஆசனம்
ப்ராணாயாமம்
ப்ரத்யாஹாரம்
தாரணை
த்யானம்
ஸமாதி
உள் சுத்தி எப்போதும் இருக்க வேண்டியது. இந்த சந்த்யா காலத்திலேயாவது கெட்ட விஷயங்களை நினைக்கமல் இருக்க வேண்டும் என்று நினைத்து உறுதி கொள்கிறோம்.
வெளி சுத்திக்காக குளிக்கிறோம். ஸ்நானம் இல்லாமல் கர்மா பயனில்லாது போகும்.
நின்று கொண்டோ சுகமாக உட்கார்ந்து கொண்டோ ஜபம் செய்கிறோம்.
ப்ராணாயாமம் செய்து மனதை நிலை நிறுத்துகிறோம்.
ஜபம் தவிர வேறு விஷயத்தில் மனம் போகக்கூடாது என்று சங்கல்பம் செய்து கொள்கிறோம். அவ்வாறே இந்திரியங்களை அடக்கி அலையும் மனதை இழுத்து கட்டிப்போடுகிறோம். (ப்ரத்யாஹாரம்)
மனதின் அசைவுகளை காயத்ரியை சுற்றியே சுழல விடுகிறோம். காயத்ரியை த்யானிக்கிறோம்.
என்றோ ஒரு நாள் ஸமாதி கைகூடினாலும் கூடலாம்!

12. ம்ம்ம்ம்.. என்னை மாதிரி ஆசாமிங்க செய்யணும்; ஆனா ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவங்க இதை செய்ய வேண்டாம் இல்லையா?
அப்படி இல்லை. எல்லோரும் செய்வர். புராணங்கள் இதிஹாஸங்களை ஆராய்ந்து பார்த்தால் பல முனிவர்கள், தேவர்கள் செய்தனர் என்கிறார்கள். ப்ரும்மா, விஷ்ணு, சிவன் செய்கிறார்கள்; அவதாரங்களான க்ருஷ்ணன், ராமன் செய்கிறார்கள்; ரிஷிகளான வஸிஷ்டர், காச்யபர், அத்ரி, ஆங்கீரசர், ப்ருகு, கௌதமர், பாரத்வாஜர் செய்கிறார்கள். தர்ம சாஸ்திரம் எழுதிய மனு, யாக்ஞவல்கியர், பராசரர் போன்றோர்; சூத்திரக்காரர்களாகிய ஆபஸ்தம்பர், போதாயனர், ஆஸ்வாலாயனர் எல்லோரும் செய்தனர்.
ராமாயணத்தில் பல இடங்களில் வால்மீகி சந்த்யையை புகழ்கிறார். மஹா பாரதத்தில் இது சொல்லப்படுகிறது. இரவும் போர் என்று தீர்மானித்த போது மாலையில் போரை நிறுத்திவிட்டு போர் களத்திலேயே ஆயுதபாணியாக சந்த்யையை செய்ததாக எழுதி இருக்கிறது. காளிதாசன் பல இடங்களில் இதை சொல்லுகிறான். பரம சிவன் செய்த சந்த்யா குறித்து குமார சம்பவம் பேசுகிறது.

13. சரி, சரி, தீட்டு எதுவும் இல்லை என்றால் சந்த்யா செய்ய வேண்டும் இல்லையா?
அப்படி இல்லை.
ஆ!
அதாவது தீட்டு இருந்தால் கூட விடாமல் செய்ய வேன்டிய கர்மா இது. ப்ரேத சம்ஸ்காரம் செய்ய வேண்டிய சமயத்தில் சந்த்யா காலம் வந்தால், சம்ஸ்காரத்தை நிறுத்தி, சந்த்யாவந்தனம் முடித்தே பித்ரு கார்யத்தை செய்ய வேண்டும் .

14. சந்த்யா வந்தனம் செய்ய வேண்டிய நேரம் எது?
காலை சூர்ய உதயத்துக்கு முன்னும், நடுப்பகலில் தலைக்கு மேல் சூரியன் இருக்கும்போதும், மாலை சூர்ய அஸ்தமனத்துக்கு முன்னும் செய்ய வேண்டும்.

15. அப்போ வெளியே கிளம்பணும்ன்னா சாயந்திரம் நாலு மணிக்கு செய்யலாமா?
இல்லை, குறித்த வேளைக்கு ஒரு மணி நேரம் முன் செய்யலாம். அதற்கு முன் செய்வது இல்லை.

16.ஏதோ பிரச்சினை; ஒரு வேளை செய்ய முடியாமல் போய் விட்டது. என்ன செய்வது?
விட்டுபோனதை அடுத்த சந்த்யா நேரத்துக்கு முன் செய்தே, அடுத்த வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.

3 comments:

yrskbalu said...

ji,

can you explain some breathing exercise?

திவாண்ணா said...

post on pranayamam will appear in due course.

Geetha Sambasivam said...

விட்டுபோனதை அடுத்த சந்த்யா நேரத்துக்கு முன் செய்தே, அடுத்த வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்...

இது புதிய செய்தி. தெரியாது.